இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு,பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெறுபவர் தனிநபராக இருப்பின் 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். அமைப்பாக இருப்பின் 2 லட்சம் ரூபாயும் சான்றிதழும் வழங்கப்படும். இவ்விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
மார்ச் 8, 2015 அன்று 2014ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது 8 தனி நபர் சாதனையாளர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களால் வழங்கப்பட்டது. அதில் மிகவும் முக்கியமானவர் தமிழகத்தைச் சேர்ந்த கௌசல்யா பெரியசாமி.
இன்றைய யுகம் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திய யுகமாக மாறிவிட்டது. ஏஐ தொழில்நுட்பம் இன்று எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. மனிதன் செவ்வாய் கிரகத்தில் நீரைத் தேடிச் சென்றுவிட்டான். ‘நிலவின் முகமும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா?’ என்று இனி கவிஞர்கள் பாடமுடியாது. மனிதன் நிலவின் முகத்தையும் காணச் சென்றுவிட்டான். இப்படி அறிவியல் தனது உச்சத்தைத் தொட்டுள்ள இந்தக் காலத்திலும், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை இந்தச் சமூகத்தில் சமமாகப் பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மனித இனமும் அதன் மனமும் தயாராக இல்லை. எச்ஐவி பற்றிய புரிதலில் தற்கால மனிதன் இன்னமும் கற்கால மனிதனே. அப்படி இருக்கையில் 1995லேயே, இந்தியாவிலேயே முதல்முறையாகத் தனக்கு எச்ஐவி பாசிடிவ் என்பதை வெளிப்படையாக மிகவும் தைரியத்துடன் அறிவித்த பெண், தமிழகத்தைச் சேர்ந்த கௌசல்யா பெரியசாமி.
இவர் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் போடிநாயக்கன்பட்டியில் பிறந்தவர். 2 வயதாக இருக்கும்போது இவரது தாய் இறந்துவிட்டார். தந்தையும் வேறு ஒரு திருமணம் செய்ததால், தனது பாட்டியிடம், அதாவது அம்மாவின் அம்மாவிடம் வளர்ந்தார். 12ஆம் வகுப்பு வரை நாமக்கல்லில் படித்த கௌசல்யா, தனது 21வது வயதில் அருகில் உள்ள பொட்டிரெட்டிபட்டி எனும் கிராமத்தில் உள்ள சொந்த அத்தை மகனுக்கு விருப்பமின்றித் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். திருமணமான 3வது மாதத்தில் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்தபோதுதான் தனக்கு எச்ஐவி தோற்று இருப்பது தெரியவந்தது. அதைவிடப் பேரதிர்ச்சி என்னவென்றால் அது அவரது கணவரிடம் இருந்துதான் அவருக்குப் பரவியுள்ளது.
அவரது கணவர் ஒரு லாரி டிரைவர். அன்றைய சூழ்நிலையில் பல இடங்களுக்குப் பயணம் செய்யும் லாரி டிரைவர்களுக்குப் பரவலாக எச்ஐவி தோற்று இருந்து வந்துள்ளது. இது அவரது கணவருக்குத் திருமணத்திற்கு முன்னாடியே தெரிந்திருந்தும் அதை மறைத்து கௌசல்யாவைத் திருமணம் செய்தார்.
எச்ஐவி தொற்றுக்கு இருவரும் தனித்தனியாக மருந்து எடுத்துக்கொண்ட போதிலும், 7 மாதத்திற்குப் பிறகு அவரது கணவர் இறந்துபோனார். தனது கணவரின் மரணத்திற்குக் காரணம் தெரியாத கௌசல்யா, அதில் சந்தேகம் இருப்பதாகக் கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கணவனின் இறப்பு குறித்து புகார் கொடுக்க வந்தபோதுதான், அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவரைப் பற்றி விசாரித்து அவரது கதைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். இதைப் பற்றி வெளியே தெரிந்தால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று நினைத்த அந்தப் பத்திரிகையாளர், இதைப் பற்றி தாங்கள் வெளியே சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கௌசல்யா மறுத்துவிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் எய்ட்ஸ் ஓர் உயிர்க்கொல்லி நோய் என்பதுகூட அவருக்குத் தெரியாது. என்ன செய்வதென்றே தெரியாமல் கௌசல்யா தவித்தார். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் மருத்துவர்களுக்கே எச்ஐவி பற்றிய முழுப் புரிதல் இல்லை. ஒவ்வொரு மருத்துவர்களும் ஒவ்வொரு தீர்வினைச் சொன்னார்கள். ஒரு மருத்துவர் உங்களது கர்ப்பப்பை எடுத்துவிட்டால் இந்தப் பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடையலாம் என்றுகூடச் சொன்னார். இதுதான் எச்ஐவி குறித்தான அந்தக் காலகட்டத்துப் புரிதல்.
அந்தக் குழப்பமான காலத்தில்தான் கௌசல்யா ஓர் உண்மையைப் புரிந்துகொண்டார். தனது ஊரில் தன்னைப் போன்றே பல பெண்கள் திருமணமான சில நாட்களிலேயே தங்களது கணவர்களால் எச்ஐவி தொற்றுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று. இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று எண்ணினார். இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வு என்று எண்ணிய கௌசல்யா, உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி ‘தனக்கு எச்ஐவி பாசிட்டிவ்’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.
அதன்பின் சில தொண்டு நிறுவனங்களில் தன்னை இணைத்துக் கொண்டு, நாமக்கல்லிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சேவை புரிந்தும், எச்ஐவி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டும் வந்தார். நவம்பர் 1999இல் 2வது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NACP II) தொடங்கப்பட்டது. எச்ஐவி பரவலைத் தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக உலக வங்கி அன்றைய மதிப்பில் சுமார் 827 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டாக்டர் சுந்தர்ராமன் என்பவரால் கவுசல்யா பெரியசாமி அனுப்பி வைக்கப்பட்டார். ‘எச்ஐவி தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் திருமணமான பெண்களிடம் இது அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வைப் பெண்களிடம் அதிகரிக்க வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் ‘நீங்கள் நிபுணரா?’என்ற கேள்வியை எழுப்பி அவரது கருத்தைத் திட்டக்குழு மறுத்தனர்.
தனியாக இருந்ததால்தான் தமது குரல் எடுபடவில்லை, இதுவே ஓர் அமைப்பாகச் செயல்பட்டால் தமது கருத்தை முன்வைக்க முடியும் என்று எண்ணிய கௌசல்யா, தன்னை போன்று அந்தக் கூட்டத்திற்கு வந்த ஜோன்ஸ், வரலட்சுமி, ஹேமலதா ஆகியோரோடு தென்னிந்திய அளவில் 18 பெண்களையும் சேர்த்து ‘பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்’ என்று தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆசியாவிலேயே பெண்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட முதல் எச்ஐவி பாசிட்டிவ் அமைப்பு இதுதான்.
பொதுவாக ஒரு அமைப்பு பதிவு செய்யப்பட்டு 2-3 ஆண்டுகளான பின்புதான் அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்க முடியும். ஆனால் பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்கிற்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் எல்லோரையும்போல் சாதாரணமாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பின்கீழ் திருவண்ணாமலையில் கேண்டின், திருநெல்வேலியில் 40 ஏக்கரில் இயற்கை வேளாண்மை, விழுப்புரத்தில் வீ பிராண்ட் என்ற துணிக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 13 மாநிலங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 58க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இதன்கீழ் இயங்குகிறது.
அதுவரை வெளியுலகத்தில் பரவலாக அறியப்படாத கௌசல்யாவின் முகம், தொழில் அதிபர் எம்.கே.டி பாலன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சிக்குப் பின்பு வெளியுலகத்திற்குத் தெரியவந்தது. அதன்பின்பு எச்ஐவி பாதிக்கப்பட்டோருக்காகச் செயல்பட்டு வரும் யுவன் பவுண்டேஷனின் யூத் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார்.
2002இல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் தலைமையின்கீழ் நடந்த ‘நேஷனல் அசம்பிலி பார் எச்ஐவி’இல் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை, அவர்களின் பிரச்னைகள், அதைத் தீர்ப்பதற்கான வழி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். அவரது கோரிக்கைக்குப் பின் அரசாங்கத்தில் எச்ஐவி சம்பந்தமான நிறையக் கொள்கைகள் மாற்றப்பட்டன.
உதாரணமாக, அதற்கு முன்பு வரை எய்ட்ஸ் நோயால் விதவையானவர்களின் வயது 45 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு விதவை பென்ஷன் வழங்கப்படும். ஆனால் அவரது கோரிக்கைக்குப் பின்பு அந்த வயது வரம்பு 18ஆக குறைக்கப்பட்டது. அதுவரை NACO எனப்படும் National Aids Control Organisation அமைப்பு, எச்ஐவி பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட அதன் பரவலைத் தடுப்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. NACOவின் நிதி பங்கீடு 80:20 என்ற விகிதத்தில்தான் இருக்கும். அதாவது அதன் நிதி ஒதுக்கீட்டில் 80% பரவலை தடுப்பதற்கும், 20% மட்டுமே எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவும் பயன்பட்டுவந்தது. எச்ஐவி பரவலைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும். எனவே கௌசல்யாவின் கோரிக்கைக்குப் பிறகு அந்த விகிதம் 50:50 என்று மாற்றப்பட்டது.
2002ஆம் ஆண்டு இந்தியாவின் 8 மாநிலங்களிலிருந்து, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 45 பெண்களைச் சென்னைக்கு வரவழைத்து எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 2003இல் நடந்த உலக நாடுகளுக்கான எச்ஐவி மாநாட்டில் ஏ.ஆர்.வி எனப்படும் ‘ஆன்டி ரெட்ரோ வைரல்’ மருந்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த மருந்து எச்ஐவி வைரஸின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. அந்தப் போராட்டத்தின் விளைவாக ஏ.ஆர்.வி மருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று 2003 டிசம்பரில் அப்போதைய மத்தியச் சுகாதார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டில் முதன்முறையாக 2004 டிசம்பரில் தாம்பரம் மருத்துவமனையில் ஏ.ஆர்.வி மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.
ஐநாவின் அன்றைய பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னான், நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களைச் சந்தித்து எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், அவற்றினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் உரையாடினார்.
கௌசல்யாவின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம், அப்போதெல்லாம் பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுக்கும்போது தனது முகம் தெரியக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரிலேயே பேட்டிகொடுப்பார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியில்தான் முதல்முதலில் தன் முகத்தைக் காட்டினார். அதுகூட தன் வீட்டுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில் தொலைக்காட்சியின் ஆண்டணா கம்பியை அறுத்துவிட்டார். இப்படித் தொடக்கத்தில் தன் முகம் தெரியக்கூடாது என்று வாழ்ந்த கௌசல்யாதான், இன்றைய எச்ஐவி பாதிக்கப்பட்ட பல பெண்களின் முகமாகத் திகழ்கிறார்.
(தொடரும்)

