Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

புன்சுக் வாங்குடு. இந்தித் திரைப்படங்களை நீங்கள் அதிகமாகப் பார்ப்பவராக இருந்தால் இந்தப் பெயர் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும். ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது. கல்வியில் சீர்திருத்தம் செய்யக்கூடிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இறுதியில் புதுமையான பள்ளி ஒன்றை உருவாக்கி நடத்துவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தக் கதாபாத்திரம் சோனம் வாங்சுக் என்ற பொறியாளரின் வாழ்க்கையை உந்துதலாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது.

செப்டம்பர் 1, 1966இல் காஷ்மீரில் உள்ள லடாக்கில் உலேடொக்போ எனும், பள்ளிக்கூடமே இல்லாத கிராமத்தில் பிறந்தவர்தான் சோனம் வாங்சுக். அதனால் 9 வயது வரை தனது இல்லத்திலேயே கல்வி கற்றார். அவருக்கு ஆசிரியராக இருந்து தாய் மொழியாகிய லடாக்கியில் பாடம் சொல்லிக்கொடுத்தது அவரது தாய். அவரது தந்தை அப்பகுதியின் பிரபல அரசியல்வாதி. பின் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார். 1975இல் வாங்சுக்குக்கு 9 வயது இருக்கும்போது அவரது குடும்பம் ஸ்ரீநகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு ஒரு பள்ளியில் முறையான கல்வி கற்பதற்காக சோனம் சேர்க்கப்படுகிறார். அதுவரை தனது தாய் மொழியில் மட்டுமே பயின்று வந்த சோனம் வாங்சுக்கிற்கு, ஸ்ரீ நகரில் பரவலாக பேசப்பட்ட காஷ்மீரியில் பாடம் எடுத்தது புரியவில்லை. இதனால் பாடத்தில் கவனம் இல்லாமலும், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லாமலும் இருந்து வந்ததால் ஆசிரியர்களும் உடன் இருந்தவர்களும் சோனமை முட்டாள் என்று கருதினார்கள்.

இதனால் விரக்தி அடைந்த சோனம், வீட்டிற்குத் தெரியாமல் தனியாக டெல்லி சென்றார். பின்பு டெல்லியில் உள்ள விஷேஷ் கேந்திர வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு சோனம் வாங்சுக்கின் தாய்மொழி தெரிந்ததால் அவரது பிரச்னையை உணர்ந்து அவர் படிப்பதற்கு உதவி செய்தார். அவரது உந்துதலின் பெயரில் சோனம் நன்றாகப் படித்து பின்பு 1987இல் ஸ்ரீ நகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிடெக் மெக்கானிக்கலில் பொறியியல் பட்டமும் பெற்றார்.

பள்ளிகளே இல்லாத கிராமத்தில் பிறந்து, பள்ளியில் பாடம் எடுக்கும் மொழியைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டு, தன் கடின உழைப்பாலும் முயற்சியாலும் பொறியாளரான சோனம் வாங்சுக், தன் பகுதியில் கல்வியில் ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணினார். நவீனக் கல்வி முறையால் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களுக்கு ஏற்படும் கலாச்சார குழப்பங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக ஒரு கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதற்காக 1988இல் லடாக்கின் லே பகுதியில் Student’s Educational and Cultural Moment of Ladakh (SECMOL) என்ற அமைப்பை உருவாக்கினார். SECMOL என்பது ஒரு தனித்துவமான கல்விச்சூழலையும் புதுமையான கல்வியையும் வழங்கும் அமைப்பு. அரசுப் பள்ளிகளின் கல்வி முறையில் சீர்திருத்தத்தை உண்டாக்குதல், ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்விக்காக உதவி புரிதல், நடப்புக் கல்வி முறை மாணவர்களின் உணர்வுகளுக்குப் பொருந்தும் வகையில் திட்டங்களைத் தயாரித்தல், அது தொடர்பான காணொளிகளை உருவாக்குதல் போன்றவை இந்த அமைப்பின் செயல்பாடுகளாகும்.

1998இல் SECMOL தனக்கான சொந்த பள்ளிக்கூட வளாகத்தைக் கட்டியது. இது லே பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் சிந்து பள்ளத்தாக்கில் லே எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தை தலாய் லாமா திறந்து வைத்தார். SECMOL முறைசாரா கல்விமுறையைப் பின்பற்றுகிறது. இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கான முதல் தகுதி நீங்கள் 10ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

இந்த வளாகத்தினுள் மாணவர்கள் தங்குவதற்கான விடுதி, முகாமில் பங்கு பெறுபவர்கள் தங்குவதற்கான அறை, பெரிய வகுப்பறை, நூலகம், உணவு சமைக்கும் சமையல் கூடம், உணவு அருந்தும் பகுதி ஆகியவை உள்ளன. மேலும் காய்கறித் தோட்டம், 1000க்கும் மேற்பட்ட மரங்கள், பசுமை வீடுகள், பசுமாடுகள் போன்றவை உள்ளன. இங்குள்ள மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்றவற்றை இவர்களே உற்பத்தி செய்கின்றனர். இங்குள்ள மாணவர்களே தோட்டங்களையும், பசுக்களையும் பராமரிக்கின்றனர்.

SECMOL அமைந்துள்ள வளாகம் சூரிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் உணவு, நீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்குச் சூரிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துகிறது. சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய அடுப்பைப் பயன்படுத்தி உணவு சமைக்கப்படுகிறது. சூரிய வெப்பமூட்டியின் மூலம் நீர் சூடாக்கப்படுகிறது. இந்த வளாகம் சூரிய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதாலும் இங்கு உள்ளவர்களின் உணவுக்குத் தேவையான காய்கறிகளை இவர்களே உற்பத்தி செய்வதாலும் இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவதற்கான செலவு குறைகிறது. இதனால் இந்த அமைப்புக்குப் பெருமளவில் நிதி உதவி தேவைப்படுவதில்லை.

கல்வியில் புரட்சி செய்த சோனம், அடுத்ததாக ஒரு சூழலியல் புரட்சி செய்தார். லடாக் ஒரு குளிர் பாலைவனமாகும். எனவே இங்கு குளிர்காலத்தில் விவசாயம் செய்யப்படுவதில்லை. வசந்த காலத்தில்தான் விதைக்கப்படுகிறது. 2 அங்குலத்திற்கும் குறைவாக மழை பொழிவதால் லடாக்கின் விவசாயம் முழுவதும் பனியிலிருந்து உருகும் நீரைச் சார்ந்துள்ளது. இப்பகுதியில் கோடைக்காலத்தில் அதிகமான வெப்பநிலை நிலவுவதால் மிக விரைவில் பனி உருகிவிடும். இதனால் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஆகும்.

இதற்குத் தீர்வு காண எண்ணிய சோனம், கோடைக்காலத்தில் ஒருநாள் பாலத்தின்கீழ் பனி படர்ந்திருப்பதைக் கவனித்தார். அதிக வெப்பமாக இருந்தும் பாலத்தின்கீழ் நேரடிச் சூரிய ஒளி படாததால் பனி உருகாதிருந்தது. நேரடி சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து நிழல் கொடுத்தால் பனி நீண்ட காலம் நீடிக்கும் என்பதை சோனம் உணர்ந்தார். ஆனால் மிகப்பெரிய நீர் நிலைகளைச் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பது சாத்தியமில்லாதது. எனவே நீரை உறைய வைத்துக் கூம்பு வடிவில் கோபுரம்போல் சேமிக்க நினைத்தார் சோனம் வாங்சுக். இது அதிகளவு நீரைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அதேநேரத்தில் சூரிய ஒளியிடமிருந்து நிழல் கொடுப்பதும் எளிது.

2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லே பகுதியில் சூரிய ஒளி படாத இடத்தில் 1,50,000 லிட்டர் தண்ணீரை உறைய வைத்து 20 அடி உயரத்திற்கு ஒரு பனி ஸ்தூபியை உருவாக்கினார். இது 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வரை உருகாமலிருந்தது. இத்தகைய பனிப்பாறைகள் லடாக் பகுதியின் விவசாயத்திற்குத் தேவையான நீர் பற்றாக்குறையை போக்குகின்றன. இதற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி ரோலக்ஸ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெரும் 2வது இந்தியர் சோனம் வாங்சுக்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி லடாக் நகரம் முழுவதும் கலவரம் சூழ்ந்தது. சட்டமன்றம் இல்லாமல் நேரடியாக மத்திய அரசின்கீழ் யூனியன் பிரதேசமாக விளங்கும் லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்புச் சட்டத்தில் 244வது பிரிவின்கீழ் 6வது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்கக் கோரியும் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10ஆம் தேதி 35 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 22 காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும் லே நகரில் இருந்த ஆளும் கட்சியின் கட்சி அலுவலகத்திற்கு இளைஞர்கள் தீ வைத்தனர். இந்தக் கலவரத்தைத் தூண்டியதாகவும், பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குற்றம் சாட்டப்பட்டு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் சோனம்.

அவரது கைதை உள்ளூர் மக்களும், அரசியல் கட்சிகளும் கண்டித்தனர். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரது கைதுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தன. அவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடுத்தார். சுமார் 6 மாதக் காலச் சிறைவாசத்திற்குப் பின்பு அவர் மீது போடப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தினை மத்திய அரசு ரத்து செய்தது. லடாக்கில் அமைதியான சூழ்நிலை உருவாக்கவும், பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காகவும் இந்த முடிவெடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மார்ச் 14, 2026 அன்று ஜோத்பூர் மத்தியச் சிறையிலிருந்து சோனம் வாங்சுக் விடுவிக்கப்பட்டார்.

ஒரு மனிதன் கல்வியில் சீர்திருத்தத்தை உண்டு பண்ணி, தான் பிறந்து வாழ்ந்த சூழலில் சீர்திருத்தத்தை உண்டு பண்ணி, பின்பு தான் வாழ்ந்த பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி ஆளும் வர்க்கத்துடன் போராடி, அதன் அடக்குமுறைக்கு ஆளாகி, தான் பிறந்த மண்ணுக்கும் அங்கு வாழும் மக்களுக்காகவும் இன்று வரை போராடி வருகிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *