சடங்குகள் என்பவை சமூகம், மதம், கலாசாரம் சார்ந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவரும் ஒழுங்குமுறை செயல்பாடுகளாகும். இந்தச் சடங்குகளும் அதன் செயல்பாடுகளும் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடலாம். ஆனால் சடங்கு எனும் பொதுப்பார்வையில், பெரும்பான்மையான சமூகங்களால் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அதிலும் இறுதிச் சடங்கு, சமூகக் கலாசாரத்தைத் தாண்டி மனிதநேயக் கோணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவருக்கு நாம் மரியாதை கொடுப்பதுபோல, இறந்த பிறகும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற மனிதநேயக் கருத்தின் வெளிப்பாடுதான் இறுதிச்சடங்கு. குடும்பத்தினர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தவும் அவரது பிரிவை ஏற்றுக்கொள்ளவும் இந்தச் சடங்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இது மதத்திற்கு மதம் மாறுபடுகிறது. இந்து சமயத்தில் பெரும்பாலும் தகனம் செய்யவும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவச் சமயங்களில் அடக்கமும் செய்யப்படுகிறது. திபெத்திய பௌத்த மதத்தில் வானடக்கம் எனப்படும் விசித்திரமான முறையும் பின்பற்றப்படுகிறது. இறந்தவரின் உடல் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த உடல் இயற்கையிடம் ஒப்படைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுப் பின் கழுகுகளும் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்படுகிறது. இப்படி உடலைப் பிற உயிரினங்களுக்குத் தானமாக வழங்குவது கருணையின் செயலாக அந்த மக்களால் பார்க்கப்படுகிறது.
இப்படிப் பல்வேறு மதங்களும் சமூகங்களும் மாறுபட்ட இறுதிச் சடங்கு முறைகளைப் பின்பற்றினாலும், அவை அனைத்தின் நோக்கமும் இறந்தவரின் உடலைக் கண்ணியமாகவும் மரியாதையுடனும் இயற்கையுடன் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஆதரவின்றி இறந்தவர்களுக்கும் உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையோரம் இறந்து கிடப்பவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி ஆதரவின்றி இறந்து கிடப்பவர்களுக்கான இறுதிச்சடங்கைச் செய்து முடித்து அவர்களின் இறுதிப் பயணத்தை நிறைவுற வைக்கும் மாமனிதன் பெயர்தான், ‘ஷெரீப் சாச்சா’ என்று பிரபலமாக அறியப்படும் முகமது ஷெரீப்.
இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டம், பைஸாபாத்தில் வசிக்கும் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 4 மகன்கள். அங்குள்ள சப்ஜி மண்டி (காய்கறி சந்தை) பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தார். எல்லோரையும்போல் மிகவும் இயல்பான வாழ்க்கையைத்தான் இவரும், இவரைப் போன்றே அயோத்தி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள இஸ்லாமியர்களும் வாழ்ந்து வந்தார்கள்; அந்த ஒரு நாள் வரும் வரை. அந்த நாள் அயோத்தியின் பெரும்பான்மையான பகுதிகள் பதற்றமாக இருந்தன. பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டுப் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
அந்த நாள் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய கலவர நாளாக இடம்பெறும் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். 6 டிசம்பர் 1992, காலை நேரம், அயோத்தியில் சுமார் 2 லட்சம் கரசேவகர்கள், இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகக் கருதப்பட்ட பாபர் மசூதி நோக்கிச் சென்றனர். காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு வளையங்களை அமைத்திருந்தனர். துணை ராணுவப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் இருந்த சிலர் தடுப்புகளை மீறி மசூதியை நோக்கிச் சென்றனர். சிலர் மசூதியின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் குவிமாடங்கள்மீது ஏறத் தொடங்கினர். அவர்கள் கைகளில் இருந்த சுத்தியல், இரும்புக் கம்பி, கோடாரி போன்ற கருவிகளால் கட்டடத்தைத் தாக்கத் தொடங்கினர். முதலில் மசூதியின் மேற்பகுதிகள் சேதமடைந்தன. பின்னர் ஒரு குவிமாடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து பல மணிநேரம் இத்தாக்குதல் நடந்தது. மேலும் பலர் கட்டடத்தை உடைக்கும் செயலில் ஈடுபட்டனர். மாலை வரை நீண்ட இந்த நடவடிக்கையின்போது மற்ற இரண்டு குவிமாடங்களும் இடிக்கப்பட்டன. இறுதியில் முழுக் கட்டடமும் தரைமட்டமாக்கப்பட்டது. இடிப்பு முடிந்த பிறகு அந்த இடத்தில் தாற்காலிக வழிபாட்டு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மதக் கலவரங்கள் வெடித்தன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி இந்தியா முழுவதும் அந்தக் கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000. அந்தக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சுல்தான்பூர். இது அயோத்தியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள நகரமாகும்.
சுமார் 22 வயதான முகமது ரயீஸ் கான் எனும் இளைஞன், சுல்தான்பூர் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடையாளமற்ற நிலையில் தண்டவாளத்தின் ஓரம் கிடந்தது. பல நாட்களாக யாரும் உரிமை கோரவில்லை. அந்த உடல் தெரு விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுக் கிடந்தது. உடலின் சட்டை காலரில் இருந்த தையல்காரரின் முகவரியை வைத்து விசாரணை செய்தே காவல்துறையினரால் அவரை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமில்லை; முகமது ஷெரீபின் மகன்தான். தன் மகனின் உடல்கூட முழுவதுமாகக் கிடைக்காத நிலையில், முறையான இறுதிச் சடங்குகள்கூட செய்ய முடியாத நிலையில், இனி இதுபோன்ற அவலம் வேறு யாருக்கும் நேரக்கூடாது; ஆதரவற்றவர்களின் இறுதிப்பயணம் கண்ணியமாக நடைபெற வேண்டும் என்று முடிவு செய்தார் ஷெரீப் சாச்சா.
பொதுவாக அடையாளம் தெரியாத அல்லது உரிமை கோரப்படாத உடல்களின் உறவினர்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறை அறிவிப்புகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட காலம் வரை யாரும் உரிமை கோரவில்லை என்றால், அந்த உடலின் இறுதிச் சடங்கை நடத்தக் காவல்துறை அல்லது உள்ளூர் நிர்வாகம் அனுமதி வழங்கும்.
ஷெரீப் சாச்சா காவல்துறையுடன் தொடர்பிலிருந்து, உரிமை கோரப்படாத உடல்களைப் பற்றிய தகவலை அறிந்து அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இறந்தவர்களின் மதத்தை அறிந்து அவர்களது மதத்திற்கு ஏற்ற முறையில் சடங்குகளைச் செய்து உடலை அடக்கமோ தகனமோ செய்தார். இவர் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் அவர்கள் மதச் சடங்குகளின்படி இறுதி மரியாதை செய்தார். இதற்கான செலவுகளைத் தனது வருமானத்திலேயே சமாளித்து வந்தார். சில நேரங்களில் தனது நெருங்கிய நட்பு வட்டத்திலும் சில புரவலர்களிடமும் உதவிகளைப் பெற்றுள்ளார். பெரும்பாலும் தனது மிதிவண்டியில் வைத்தே அந்த உடல்களை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இவர் இறுதி மரியாதை செய்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிணவறைகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களிலிருந்து, உரிமை கோரப்படாத உடல்களைத் தேடிச் சென்று பெற்று அவற்றை நல்லடக்கம் செய்துள்ளார். இதுவரை 25000க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். அதுவரை வெளியில் பரவலாகத் தெரியப்படாத ஷெரீப் சாச்சா, நடிகர் ஆமிர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்தியமேவ ஜெயதே’ எனும் பிரபலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் பிரபலமானார். அவரது சேவை அனைவரது கவனத்திற்கும் சென்றது.
இவரது சேவையைப் பாராட்டி இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விருது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 8 நவம்பர் 2021 அன்றுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது.
அதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமடைந்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷெரீப் சாச்சா. அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆதரவற்ற உடலுக்குக் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு செய்த ஷெரீப் சாச்சா, மருத்துவ செலவுக்குச் சிரமப்பட்டார். இந்தச் செய்தி நாடு முழுவதும் கவனம் பெற்ற பிறகு, பல தரப்பிலிருந்து உதவிகள் கிடைத்தன. பின்னர் அவரது உடல்நிலை ஓரளவு மேம்பட்டு பத்மஸ்ரீ விருதினை நேரில் பெற்றுக்கொண்டார்.
தன் மகன் மத வெறியால்தான் இறந்தான் என்று ஷெரீப் நம்பியபோதும், உரிமை கோரப்படாத உடல்களிடம் மதத்தின் அடிப்படையில் அவர் எந்தப் பாகுபாடும் கட்டவில்லை. இறந்தவர்களில் இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்று அவர் பிரித்துப் பார்த்ததில்லை. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை ‘மதத்தைவிட மனிதநேயம் உயர்ந்தது. வாழும்போது மட்டுமல்ல மரணத்திற்குப் பிறகும் மனிதனின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்’.
(தொடரும்)

