Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எலங்கடை அப்துல்காதர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, பறக்கை சாலை வழியாக கோட்டார் சந்திப்புப் பகுதிக்கு வரும். இது மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. அதன்பிறகு அங்கிருந்து வடசேரி பேருந்து நிலையத்தை வந்தடையும். இதுவும் மிகவும் பரபரப்பான சாலை. கடைகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் அதிகம் இருக்கும் பகுதி. வடசேரியைத் தாண்டி பாலமோர் சாலை வழியாகச் செல்லும் பேருந்து புத்தேரியை வந்தடையும்.

நாகர்கோவில் பகுதியில் மிகவும் கடினமான பேருந்து வழித்தடமாக அறியப்படுவது அப்துல்காதர் மருத்துவமனை முதல் புத்தேரி வரையிலான இந்த வழித்தடம். மிகவும் அனுபவம் வாய்ந்த ஆண்களே ஓட்டுவதற்குச் சிரமப்படும் பேருந்து வழித்தடம் இது. ஆனால் 1993ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு பெண் இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்தை இயக்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவின் முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் என்று பெயர்பெற்ற அந்தப் பெண்ணின் பெயர் திருமதி வசந்த குமாரி.

கன்னியாகுமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே உள்ளது எளவுவிளை கிராமம். இது நாகர்கோவிலிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமம். இந்தக் கிராமத்தில் பிறந்தவர்தான் வசந்த குமாரி. இவருக்கு ஒன்றரை வயதாகும்போதே தாய் இறந்துவிட்டார். இவரது தாயின் மறைவிற்குப் பிறகு தந்தை மறுமணம் செய்துகொண்டதால், இவரது மூத்த தாய்மாமா ராமலிங்கம் என்பவரிடம் வசந்த குமாரி வளர்ந்தார். 10ஆம் வகுப்பு வரை படித்த இவர், அதன் பின் படிப்பைத் தொடர முடியாமல்போக, தனது 14வது வயதில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார். இவருடைய உறவினரான டி.தங்கராஜ் என்பவர்தான் இவருக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். முதலில் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்த பின், அம்பாசிடர் கார் இயக்கக் கற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் மினி லாரி, லாரி போன்ற கனரக வாகனங்களையும் வசந்த குமாரி ஓட்டக் கற்றுக்கொண்டார். தனது 19வது வயதில் கட்டுமான தொழிலாளியான செபாஸ்டியன் என்பவரோடு இவருக்குத் திருமணம் நடந்தது. ஏற்கெனவே செபாஸ்டியனுக்கு 4 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இது அவருக்கு இரண்டாவது திருமணம். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. திருமணத்திற்குப் பிறகு கட்டுமான தொழிலாளியான இவரது கணவரின் வருமானம் போதுமானதாக இல்லாததால், குழந்தைகளுக்குச் சாப்பாடுகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் வறுமையைப் போக்க தானும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தீர்மானித்தார்.

1990 காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மகளிர் மன்றங்கள் உருவாகின. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், மகளிர் எழுச்சிக்கும் இதுபோன்ற மன்றங்கள் பெருமளவில் பங்காற்றின. அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரீதாபுரம் தேவாலய மகளிர் மன்றத்தில் வசந்த குமாரி செயலாளராக இருந்தார். மன்றத்தின் உதவியோடு கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றார். கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு 1989ஆம் ஆண்டு அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. ஒருநாள் மகளிர் மன்ற கூட்டத்தில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மன்ற உறுப்பினர்கள், ‘நீங்கள் நன்றாக வாகனம் ஒட்டுகிறீர்கள்; பேருந்து ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பியுங்கள்’ என்று இவரை ஊக்குவித்தனர்.

கனரக வாகனம் நன்கு இயக்கத் தெரியும் என்பதால் இவரும் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தார். ஆனால் ‘இந்த வேலை பெண்களால் செய்யமுடியாது’ என்று இவரது விண்ணப்பம் பல முறை போக்குவரத்துக் கழக நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டது. பின் பல இடர்ப்பாடுகளுக்குப் பிறகு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்துத் தன் கோரிக்கையை முன்வைத்தார். ஜெயலலிதா தலையீட்டின் பேரில், இவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி ஒதுக்கப்பட்டு, 30 மார்ச் 1993 அன்று அரசுப் பேருந்து ஓட்டுநருக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

நாகர்கோவில் நகரத்தில் மிகக் கடினமான வழித்தடமாக அறியப்படும் அப்துல்காதர் மருத்துவமனை முதல் புத்தேரி வரையிலான பேருந்து வழித்தடத்தில் இவருக்கு முதல் பணி ஒதுக்கப்பட்டது. மிகவும் குறுகலான சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த வழித்தடத்தில் 6 வருடங்கள் எந்த விபத்தும் இல்லாமல் மிகவும் திறமையாகப் பேருந்தை இயக்கினார். அதன்பின் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் வழித்தடத்தில் பேருந்து இயக்கினார். இரு மாநிலங்களுக்கு இடையேயான மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் இதுவும் ஒன்று. இந்த வழித்தடம் சுமார் 75 கி.மீ. நீளமுடையது. அலுவலக ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பாதை. இந்த வழித்தடத்தில் நகரப் போக்குவரத்துடன் நீண்ட தூரப் பயணிகளுக்கான போக்குவரத்தும் இருப்பதால், பேருந்து ஓட்டுநருக்குக் கூடுதல் கவனம் தேவைப்படும். இந்த வழித்தடத்தில் எவ்வித விபத்தும் இல்லாமல் 12 வருடங்கள் பணியாற்றினார்.

அதன்பின் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கினார். இவை பரபரப்பான சாலை வழித்தடங்களாகும். தொழிற்சாலைகள், துறைமுகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்குச் செல்லும் பயணிகள் இந்த வழித்தடங்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இவ்வாறு தான் பணியாற்றிய அனைத்தும் மிகவும் பரபரப்பான நெரிசல் மிகுந்த வழித்தடங்களாக இருந்தாலும், இதுவரை ஒரு விபத்தும் இல்லாமல் சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்கினார் வசந்த குமாரி.

இவர் தன் பணிக்காலத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துள்ளார். தொடக்கக் காலத்தில் சீருடை அணியக்கூடப் பணிமனையில் சரியான இடம் இல்லாமல் அவதியுற்றுள்ளார். ஆரம்பத்தில் பணிமனையில் உள்ள கழிவறைக்குச் சென்றுதான் புடவையை மாற்றி ஓட்டுநர்களின் சீருடையை அணிவார். அதன்பிறகு வீட்டிலிருந்து வரும்போதே சீருடை அணிந்துகொண்டு வரத் தொடங்கினார். ஆண் ஓட்டுநர்களைப் போலவே தன்னாலும் கனரக அரசுப் பேருந்துகளைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு இருந்தது. முதல் சில நாட்கள், பெண் ஓட்டுநர் என்று இவர் மேல் பயணிகள் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பேருந்தை இயக்கியதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

அதிகாலை முதல் இரவு வரை நீண்டநேரம் பணிபுரிவது, போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு வானிலை சூழல்களில் பேருந்தை இயக்குவது இவருக்குப் பெரும் சவாலாக இருந்துள்ளது. குடும்பக் கடமைகளையும், அரசுப் பேருந்து ஓட்டுநரின் நேரக் கட்டுப்பாடுகளையும் சமநிலைப்படுத்துவது இவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. தனது பணிக்காலத்தில் ஒரு சில பாலியல் ரீதியிலான தொந்தரவுகளையும் இவர் சந்தித்துள்ளார். இப்படிப் பல சவால்களை எல்லாம் கடந்து தன் பணியில் முழுக் கவனம் செலுத்திச் சாதித்துள்ளார்.

ஒருபுறம் பல இன்னல்களைக் கடந்துவந்திருந்தாலும், மறுபுறம் அவருக்கான ஆதரவும் இருக்கத்தான் செய்தது. அவரது முயற்சியைப் பல மகளிர் அமைப்புகளும், பொதுமக்களும் பாராட்டி ஊக்குவித்தனர். தொடக்கத்தில் பெண் ஓட்டுநர் என்று சந்தேகப்பட்டாலும், நாட்கள் செல்லச் செல்ல இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகத் தொடங்கியிருந்தது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இவரைப் பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்துகொண்டு இவர் செல்லும் வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்து இவருக்குக் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டுச் செல்வார்கள்.

தனது 50வது வயதில் முதுகு வலி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்து வசந்த குமாரி, தனக்கு இலகுவான பணி ஒதுக்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நிர்வாகம் இவரது கோரிக்கையை நிராகரித்தது. பின்னர் உயர்நீதிமன்றம் வரை சென்று அதற்கான ஆணையைப் பெற்றார். ஆனால் அந்த ஆணை இவர் பணி ஓய்வு பெற இருந்த கடைசி மாதத்தில்தான் கிடைத்தது. 24 ஆண்டுகள் அரசுப் போக்குவரத்துத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி, 30 ஏப்ரல் 2017 அன்று பணி ஓய்வு பெற்றார். இப்படித் தன் பணிக்காலத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை போராடியே இந்தத் துறையில் இவர் சாதித்துள்ளார்.

அந்தக் காலத்தில் பேருந்துகளில் ‘மகளிர் மட்டும்’ என்ற பலகை மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தத் தலைப்பில் 1994ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரிப்பில் பெண்களை மையப்படுத்தி ‘மகளிர் மட்டும்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராகவே கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பார் வசந்த குமாரி. பேருந்தை மையப்படுத்திய ஒரு தலைப்பில் அவர் நடித்திருப்பது மிகவும் சுவாரசியமான விஷயம். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு இவருக்கு 2000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தத் தொகை இவரது மாத ஊதியத்தைவிட அதிகம்.

முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் என்ற சாதனையைப் பாராட்டி பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் இவரைக் கௌரவித்து விருதுகள் வழங்கி உள்ளன. 24 ஆண்டுகள் அரசுப் பேருந்தை ஓட்டி, விபத்து ஏதுமின்றிச் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக ‘ஆசியச் சாதனைப் புத்தகத்தில்’ இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. பெண்கள் முன்வராத போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராகச் சாதித்ததற்காக ‘ரெயின்ட்ராப்ஸ் மகளிர் சாதனையாளர்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது சாதனைக்குப் பிறகு பெண்கள் பேருந்து ஓட்டுநர்களாக வர வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அதிகரித்தன. இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கும் அரசுத் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. எனினும், 1993லேயே வசந்த குமாரி பேருந்து ஓட்டுநராக ஆன போதிலும் அவருக்குப் பின் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் யாரும் வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *