மூன்றாம் பாலினம் என்பது ஆண் அல்லது பெண் என்கிற இரு பாலின அடையாளங்களுக்குள் தங்களை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குடைச்சொல். இதில் ஓர் அங்கமாகத் திகழ்கிறவர்கள்தான் திருநங்கைகள். இந்தியாவில் திருநங்கைகளுக்கென்று தனித்துவமான கலாசார மரபுகளும் சமூக அமைப்புகளும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற விழாக்களில் ஆசீர்வாதம் வழங்கும் பாரம்பரியப் பங்கினைச் சில திருநங்கைச் சமூகங்கள் வகித்து வருகின்றன.
இந்திய உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் மூலம் மூன்றாம் பாலின அடையாளத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் அவர்களின் உரிமைகள் வலுப்பெற்றன. தற்போதைய சூழலில் அரசு சேவை, தொழில்முனைவு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் முன்னோடிகளாக விளங்கும் திருநங்கைகள், சமூக மாற்றத்திற்கான முக்கியக் குரல்களாக உள்ளனர். எனினும் இன்றும் இந்தச் சமூகத்தில் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கோ அல்லது குறிப்பிட்ட துறையில் சாதிப்பதற்கோ திருநங்கைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
குடும்பங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் திருநங்கைகள், குடும்பத்திலிருந்து பிரிந்த பிறகு, வீடு வாடகைக்கு எடுப்பதே கடினமாக இருக்கிறது. பலருக்குப் பள்ளி அல்லது கல்லூரியில் ஏற்பட்ட அவமதிப்பினால் கல்வி இடைநிற்றல் ஏற்படுகிறது; இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் குறைகின்றன. மருத்துவமனைகளில் அவர்களின் பாலின அடையாளம் மதிக்கப்படாமை, மனநல ஆதரவு பற்றாக்குறை, முதிய வயதில் குடும்ப ஆதரவின்றி வாழ வேண்டிய நிலை என்பது போன்ற பல சிக்கல்களை இந்தச் சமூகத்தில் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வளவு இன்னல்களையும் தாண்டி தமிழ்நாடு காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை என்று பெயர் பெற்றவர் பிரித்திகா யாஷினி.
இவர் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கே.பிரதீப் குமார். இவரது தந்தை கலையரசன் ஒரு வேன் ஓட்டுநர். தாயார் சுமதி, தையல் தொழில் நடத்திவந்தார். சிறுவயதிலிருந்து காவல்துறையில் சேர வேண்டும் என்பது இவரது கனவு. சேலம் பழைய சூரமங்கலத்தில் அமைந்துள்ள நீலாம்பாள் சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 9ஆம் வகுப்பு படிக்கும்போதுதான், தன் உடலில் ஏற்படும் அந்த மாற்றத்தை அவர் உணர்ந்தார்.
ஒரு பையனைப்போல் அவர் தன்னை உணரவில்லை. ஓர் ஆணாக நடத்தப்படும்போது அசௌரியமாக உணர்ந்தார். பெண் என்கிற அடையாளம் மன நிறைவை அளித்தது. 12ஆம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து, பின்பு சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் பிசிஏ பட்டப்படிப்பை முடித்தார். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.
அதன்பிறகு, தான் ஓர் ஆண் அல்ல; திருநங்கை என்பதை அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார். தொடக்கத்தில் அவரைச் சரி செய்துவிடலாம் என்று நினைத்த பெற்றோர் அவரை மருத்துவரிடமும் ஜோதிடர்களிடமும் அழைத்துச் சென்றனர். ஆனால் ஒரு பெண்ணாக மாற விரும்புவதில் தெளிவாக இருந்தார் பிரித்திகா. அதனால் குடும்பத்தினர் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர். 2011ஆம் ஆண்டு சேலத்திலிருந்து சென்னை வந்தவருக்கு, இவரைப் போன்ற புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளான பானு, செல்வி, ஸ்மைலி, கிளாடி போன்றவர்களின் ஆதரவும் நட்பும் கிடைத்தது. அவர்களுடன் கிடைத்த வேலையைச் செய்து வந்த பிரித்திகாவிற்கு, ஒரு கட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்றில் காப்பாளர் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட பல அவமானங்களும் இன்னல்களும், சிறுவயது கனவான காவல்துறையில் சேருவதைப் பற்றி அவரைச் சிந்திக்கத் தூண்டியது.
2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணிக்குப் பிரித்திகா விண்ணப்பித்தார். ஆண், பெண் என்று இரு பாலினங்கள் மட்டுமே அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால், தன்னைப் பெண் என்று குறிப்பிட்டு அவர் விண்ணப்பித்திருந்தார். ஏற்கெனவே தேசிய சட்ட சேவைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவர்கள் அடிப்படை உரிமைகளுக்குத் தகுதி உடையவர்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்தும் மூன்றாம் பாலினத்தைக் குறிப்பிடுவதற்கான வாய்ப்பு அந்த விண்ணப்பத்தில் வழங்கப்படவில்லை.
மேலும் தனது பெயரை முறைப்படி பிரித்திகா யாஷினி என்று அரசிதழில் மாற்றி இருந்தார். எனினும், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களில் பிரதீப் குமார் என்று இருந்த காரணத்தாலும், பாலினத்தில் தன்னைப் பெண் என்று குறிப்பிட்டதன் காரணமாகவும் ஏற்பட்ட குழப்பத்தினாலும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பவானி சுப்பிரமணியம் என்பவரின் உதவியோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார் பிரித்திகா.
அவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அவர்களால் விசாரிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான இடமின்மையையும், உடற்தகுதித் தேர்வு விதிகள் திருநங்கைகளுக்கு ஏற்றதாக இல்லாததையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவரைத் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த நீதிபதிகள், அவருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை 28.5லிருந்து 25ஆக குறைக்க உத்தரவிட்டனர். மேலும், திருநங்கைகளுக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்கத் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பால், ஆட்சேர்ப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு, திருநங்கைகளுக்கும் தமிழ்நாடு காவல்துறையில் சம வாய்ப்பு கிடைக்க அது வழிவகுத்தது.
அந்தத் தேர்வில் கலந்துகொண்டு பிரித்திகா தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு நடந்த உடல் தகுதித் தேர்வில் 400 மீட்டர் நீளம் தாண்டுதல், எறிபந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். ஆனால் உடல் தகுதித் தேர்வின் ஒரு பகுதியாக நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 1.11 வினாடிகள் தாமதமாகக் கடந்ததால் அவர் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். மீண்டும் பிரித்திகா நீதிமன்றத்தை நாடினார். தேர்வின் வீடியோ ஆதாரங்களை வைத்து முடிவினை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை வைத்தார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட 1.11 வினாடி தாமதம், பிரித்திகாவின் விண்ணப்பத்தைத் தகுதி நீக்கம் செய்வதற்குப் போதுமான காரணமாக அமையுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இறுதியாக உடல் தகுதித் தேர்வில் 1.11 வினாடிகள் வித்தியாசம் அவரது பணி நியமனத்திற்குத் தடையாக அமையக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. எனவே, பிரித்திகாவை உதவி ஆய்வாளர் பதவிக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காவலர்கள் மத்தியில் திருநங்கை சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பிரித்திகாவின் தேர்வு, திருநங்கை சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதன்பிறகு உதவி ஆய்வாளருக்கான பயிற்சியை முடித்து தருமபுரியில் சிறப்பு உதவி ஆய்வாளராகச் சில காலம் பணிபுரிந்தார். தனது முழு பயிற்சியையும் நிறைவு செய்து சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியில் இணைந்தார். இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்கிற பெருமையைப் பெற்றார்.
2021ஆம் ஆண்டு ஆதரவற்ற குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கு முடிவு செய்து, மத்திய அரசின் தத்தெடுப்பு ஆணையத்தின் இணையதளத்தில் பிரித்திகா விண்ணப்பித்தார். பொதுவாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கென்று சில விதிமுறைகளை அரசாங்கம் வகுத்துள்ளது. தத்தெடுப்பு ஆணையத்தில் விண்ணப்பித்த பிறகு அவர்கள் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாநில அரசின் தத்தெடுப்பு வள ஆணையத்திலிருந்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள். தத்தெடுப்பவரின் சமூக மற்றும் பொருளாதார நிலை, குடும்பப் பின்னணி, வீடு மற்றும் புறச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து விசாரிப்பார்கள்.
பிரித்திகாவின் விண்ணப்பம் குறித்துக் கேட்டறிவதற்காக, நேரில் வருமாறு ஓர் ஆதரவற்ற இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரை நேரில் விசாரித்த பின்பு அவர் திருநங்கை என்பதால் தத்தெடுப்பதற்கு விதிகளில் இடமில்லை எனக் காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தினை அதிகாரிகள் நிராகரித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சஞ்சீவ்குமார் உதவியுடன் பிரித்திகா வழக்கு தொடுத்தார்.
வழக்கின் வாதத்தின்போது, ‘தத்தெடுப்பு தொடர்பான விதிமுறைகள், சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14ஐ மீறுவதாக உள்ளதாக’ வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் குறிப்பிட்டார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ் விவேகானந்தன், ‘சிறார் நீதிச் சட்டத்திலும், தத்தெடுப்பதற்கான விதிமுறைகளிலும் மூன்றாம் பாலினத்தவர்கள் தத்தெடுப்பதை அனுமதிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை. எனவே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டார்.
7 அக்டோபர் 2025 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ‘மனுதாரரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து 12 வாரங்களுக்குள் மத்திய அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ஒருவர் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினாலும், அதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் அவர் உட்பட்டவராக இருந்தாலும், உடனே குழந்தையைத் தத்தெடுத்துவிட முடியாது. அதற்கான வரிசைப்படி மூன்றாண்டுகள் வரை காத்திருக்க வேண்டி வரும். இந்தச் சமூகத்தில் திருநங்கைகளுக்காக மறுக்கப்பட்டு வரும் சமூக நீதியையும் சம உரிமையும் நீதிப் போராட்டத்தின் மூலம் தொடர்ந்து போராடி வெற்றிபெற்று வரும் பிரித்திகா, இந்தப் போராட்டத்திலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
கல்வி, தொழில், கலை எனப் பல துறைகளில் திருநங்கைகள் சாதனை புரிந்தாலும், இன்னும் அவர்களைப் பாலியல் தொழிலாளியாகப் பார்ப்பது இந்தச் சமூகத்தின் அவலம். அவர்களுக்கான சட்ட உரிமைகள் வழங்கப்பட்டாலும், அவர்களுக்குக் கல்வி வாய்ப்பு வழங்குவதற்கோ, வேலைவாய்ப்பு வழங்குவதற்கோ பொதுமக்கள் மத்தியில் இன்னும் தயக்கம் இருப்பதும், அவர்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதும்தான் அதற்குக் காரணம். பரவலான மக்கள் கல்வியறிவு பெற்று, தொழில்நுட்பம் அபார வளர்ச்சியடைந்த இக்காலத்திலும், திருநங்கைகளைச் சமமாகப் பார்ப்பதற்கும் அணுகுவதற்குமான மனப்பான்மை இன்னும் மக்களிடத்தில் தோன்றவில்லை என்பதுதான் நிதர்சனம். மக்களின் மனநிலை மாறும்போது அவர்களின் வாழ்க்கை நிலையும் தானாக மாறும்.
(தொடரும்)

