இந்தியாவில், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் துறையில் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ‘லக்மே ஃபேஷன் வீக்’. இந்திய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவித்து அவர்களுக்குச் சர்வதேச மேடை அமைத்துத் தருவதற்காக உருவாக்கப்பட்ட ‘ஃபேஷன் டிசைனிங் கவுன்சில் ஆஃப் இந்தியா’என்கிற அமைப்பும், ‘லக்மே’ என்கிற இந்தியாவின் முன்னணி அழகுச் சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து நடத்தும் நிகழ்வு இது.
2000 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின், புதிய ஆடை தொகுப்புகள், அழகு சாதனப் பொருட்கள், காலணிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. கைத்தறி, பழங்குடியினர் கைவினை போன்ற பாரம்பரிய வடிவங்களும், உலகத் தரத்திலான நவீன வடிவங்களும், ஒரே மேடையில் இடம்பெறும். தொழில்முறை மாடல்களும், பிரபல நடிகர், நடிகைகளும் டிசைனர் ஆடைகளை அணிந்து ராம்பில் நடந்து அவற்றைக் காட்சிப்படுத்துவர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்வில் ராம்பில் நடந்த முதல் ஆட்டிசம் கொண்ட மாடல் என்கிற பெருமை பெற்றவர் பிரணவ் பக்ஷி.
2000ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் பிறந்தவர் பிரணவ் பக்ஷி. அவருக்குப் பேச்சுத் திறன் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டது. அதிகப் பதற்றம், சில உணர்வுகளை உணர்வதில் சிரமம், உடல் ஒருங்கிணைப்பில் சிரமம், போன்ற சவால்களை எதிர்கொண்டார். மேலும் எக்கோலாலியா எனப்படும் ஒரு மருத்துவக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். பொதுவாகச் சிறு குழந்தைகள், மற்றவர்கள் கூறும் புதிய சொற்களையோ வார்த்தைகளையோ தாமாகப் புரிந்து பதில் கூறுவதற்குப் பதிலாக, அந்தக் கேள்விகளைத் திரும்பச் சொல்வார்கள். இந்த நிலை வயதாக வயதாக மாறும். ஆனால் வயதான பின்பும் இந்த நிலை நீடித்தால் அதற்கு ‘எக்கோலாலியா’ என்று பெயர். நரம்பியல் அல்லது வளர்ச்சிக் குறைபாட்டின் காரணமாகவோ அல்லது ஆட்டிசத்தின் காரணமாகவோ இது நிகழலாம். இதன் மூலம் பிரணவ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டது விரைவில் கண்டறியப்பட்டது.
இதனால், சமூக தொடர்பில் இடையூறு, உணர்வு சார்ந்த பிரச்னைகள், ஹைபர் ஆக்டிவாகச் செயல்படுதல் போன்ற பல சவால்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. இத்தகைய நிலையில் அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய தாயார் அனுபமா பக்ஷி. பிரணவின் தாயார் ஒரு கல்வியாளர். பல ஆண்டுகள் கல்வித்துறையில் பணியாற்றிய அவர், தன் மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பின் அது குறித்து நிறையப் படித்து, அது தொடர்பான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். தன் மகனை மாற்ற முயற்சி செய்வதற்குப் பதிலாக, அவனுடைய தனித்துவத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற முறையில் அவனை வளர்த்தார் அனுபமா பக்ஷி. பிரணவ் உடற்பயிற்சியில் ஈடுபடவும், தன்னம்பிக்கை மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கவும் அவர் தொடர்ந்து ஊக்கமளித்தார்.
உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம்கொண்டவர் பிரணவ். பளுதூக்குதல், கார்டியோ போன்றவற்றைத் தினசரி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இசை கேட்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ‘லத்தீன் பாப் இசையின் மன்னன்’ என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் பாடகர் என்ரிக்கே இக்லேசியஸின் பாடல்களை அவர் விரும்பிக் கேட்பார். அவரது அதிகாலையும் வார இறுதி நாட்களும் இசையால் நிறைந்திருக்கும். இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளிலும் கலந்துகொள்வார். இசை அவரை அமைதியாகவும் பதற்றமின்றியும் இருக்க உதவியது. விளையாட்டுகளில் அவருக்குப் பிடித்தது கோல்ஃப். அதை விளையாடுவதற்கு அவர் நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இதேபோல் புகைப்படம் எடுப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.
சிறுவயதில் இருந்தே இசை, புகைப்படம் தொடர்பான விஷயங்களில் பிரணவுக்கு அதிக ஆர்வம் இருந்ததாலும், கிராபிக்ஸ் வடிவமைப்பை அவர் பயின்றாலும், படைப்பாற்றல் தொடர்புடைய அவருக்கான தளத்தைக் கண்டறிய வேண்டும் என்பதில் பிரணவின் பெற்றோர்கள் முனைப்புடன் இருந்தனர்.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12 முதல் 14 வரையில், ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலை, நடனம், உடல் அசைவு மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக ‘வேள்வி ஃபார் ஆட்டிசம்’ என்கிற சமூகக் கலை விழா மும்பையில் நடைபெற்றது. இதில் மூவ்மென்ட் தெரபி, நடனம், கலைப் பயிற்சிகள் மற்றும் பல படைப்பாற்றல்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவில், பிரணவ் பக்ஷி தனது தாயார் அனுபமா பக்ஷியுடன் கலந்துகொண்டார்.
அங்குதான் அவர் மூவ்மென்ட் தெரபி பயிற்சியைத் தீவிரமாகப் பெற்றார். அந்தப் பயிற்சியின் மூலம் அவரது உடல் நிலை, நடை, தன்னம்பிக்கை, தொடர்புத் திறன் ஆகியவை பெரிதும் மேம்பட்டன. அங்குதான் அவர் ராம்ப் வாக்கிற்குத் தேவையான உடல் அசைவுகள் மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றார். அந்த நிகழ்விற்குப் பின்னர்தான் பிரணவிற்கு மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகவும் புகழ்பெற்ற ஃபேஷன் மாடலான ஜான் கோர்டாஜரேனாவை தனது மாடலிங் முன்மாதிரியாக அவர் ஏற்றுக்கொண்டார்.
ஒருநாள் வணிக வளாகத்தில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்த பிரணவ், ‘நானும் மாடலாக வேண்டும்’ என்று தனது விருப்பத்தைத் தாயிடம் தெரிவித்தார். மாடலிங்கில் பிரணவின் ஆர்வத்தைக் கண்ட அவரது தாயார், அதற்கான வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அது தொடர்பாக நிறையப் படிக்க ஆரம்பித்தார். அந்த வாய்ப்பை எப்படி அடைவது என்பது தொடர்பாக இணையதளங்களில் அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார். அதுவரை மாடலிங் துறையில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றது கிடையாது என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. ஆனால் பிரணவின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவரைப்போல் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள், தங்களது விருப்பத்தை நிறைவேற்ற முனைப்புடனும் தன்னம்பிக்கையுடனும் போராடுவார்கள் என்று வலிமையாக நம்பினார் பிரணவின் தாய் அனுபமா.
பிரணவின் மாடலிங் ஆசை நிறைவேற்றுவதற்காகப் பல்வேறு மாடலிங் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தார் அவரது தாய். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அனைத்து நிறுவனங்களும் பிரணவின் திறமையைப் பார்ப்பதற்குப் பதிலாக அவரது ஆட்டிசத்தை வைத்தே அவரை மதிப்பிட்டனர். இறுதியாக அவரது திறமையை உணர்ந்து ‘நிஞ்சாஸ் மாடல் மேனேஜ்மென்ட்’ எனும் நிறுவனம் பிரணவிற்கு வாய்ப்பு வழங்கியது.
நிஞ்சாஸ் மாடல் மேனேஜ்மென்ட் என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு, 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னணி மாடலிங் நிறுவனமாகும். புதிய மற்றும் அனுபவமுள்ள மாடல்களைக் கண்டறிந்து, ஃபேஷன் துறை, விளம்பரங்கள், புகைப்படப் படப்பிடிப்புகள், ராம்ப் வாக் மற்றும் பிராண்ட் பிரச்சாரங்களுக்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது. அப்படித்தான் அந்நிறுவனம் பிரணவின் திறமையை உணர்ந்து அவருக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பே பிரணவின் தொழில்முறை மாடலிங் வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.
மாடலிங் துறையில் நுழைந்த பிறகு, பிரணவ் பக்ஷி தனது கனவை அடைய மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். ஒரு மாடலுக்குத் தேவையான உடல் கட்டமைப்பைப் பெற வெயிட் டிரெயினிங் மற்றும் கார்டியோ பயிற்சிகளைத் தவறாமல் செய்தார். உடல் ஆரோக்கியத்தையும் உடல் வடிவத்தையும் பராமரிக்கக் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினார். தினமும் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளைத் தனது தாயாருடன் சேர்ந்து திட்டமிட்டு, அதைத் தவறாமல் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கேமரா முன்பு இயல்பாக நிற்பது, முகபாவனைகளை வெளிப்படுத்துவது போன்ற திறன்களைத் தொடர்ந்து பயிற்சி செய்தார். அவரது மாடலிங் நிறுவனம் இதை அவரது பலமாகக் கருதியது. முதன்முதலில் மேடை ஏறும்பொழுது, மேடையில் எப்படி நுழைவது, எப்படி வெளியேறுவது என்பதை மனதில் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து அதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.
இப்படியாக மிகக் குறுகிய காலத்தில், மாடலிங் துறையில் முக்கியமான நபராக பிரணவ் மாறினார். அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது 2002ஆம் ஆண்டு நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக்கில், பிரபல வடிவமைப்பாளர் ஆசிஷ் சோனிக்காக ராம்ப் வாக் செய்ததுதான். இதன் மூலம் அவர் லக்மே ஃபேஷன் வீக்கில் நடந்த முதல் ஆட்டிசம் கொண்ட ஆண் மாடல் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். அதன் பின்னர் உலகத்தின் புகழ் வெளிச்சம் பிரணவின் மீது பட ஆரம்பித்தது. உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை நிறுவனமான ‘யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டன்’ நிறுவனத்தின் விளம்பரப் பிரச்சாரங்களில் மாடலாகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது அவர் ‘தாம்சன் ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் இணை டிஜிட்டல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தாம்சன் ராய்ட்டர்ஸ் உலகளாவிய செய்திகளைச் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கும் உலகின் முன்னணி நிறுவனம் ஆகும். இதன் மூலம் பிரணவ், மாடலிங் மட்டுமின்றி தொழில்முறை பணியையும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்கள் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் யோசனைகளைப் பகிர்வதற்காக ‘டெட்’ என்கிற நிறுவனம் ‘டெட் எக்ஸ்’ (TEDx) என்ற உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவு நிகழ்வை நடத்திவருகிறது. இந்த நிகழ்வில் பிரணவ் பக்ஷி கலந்துகொண்டு உரையாடினார். பிரணவின் டெட் எக்ஸ் சொற்பொழிவு அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. ‘ஆட்டிசத்தை ஒரு பின்னடைவாக அல்லாமல் பலமாகப் பார்ப்போம்’ என்ற தலைப்பில் அவர் உரையாடினார். சமூகம் ஆட்டிசத்தைப் பெரும்பாலும் ஒரு பலவீனமாகப் பார்க்கிறது. ஆனால், அதை ஒரு வித்தியாசமான சிந்தனை முறை மற்றும் தனித்திறன் என்று பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவருடைய சொற்பொழிவு ஒரு தனிப்பட்ட வெற்றிக் கதை மட்டுமல்ல; ஆட்டிசத்தைப் பற்றிய சமூகப் பார்வையை மாற்ற வேண்டும் என்ற அழைப்பாகவும் அமைந்தது. அவரது உரையின் மிகவும் பிரபலமான வாசகம் – ‘நான் ஆட்டிசத்தால் பாதிக்கப்படவில்லை. அதுதான் எனது அதி உன்னதமான சக்தி.’
(தொடரும்)

