Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #17 – பாலம் கல்யாணசுந்தரம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #17 – பாலம் கல்யாணசுந்தரம்

26 டிசம்பர் 2004. தமிழ்நாட்டின் மிகத் துயரமான நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தைத் தமிழ்நாட்டில் நிகழ்த்திய நாள். நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

27 மே 2005 அன்று, சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பார்வையிட, ஐ.நா.வின் சுனாமி மீட்பு சிறப்புத் தூதராக இருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் இரண்டு நபர்களைச் சந்திக்க அவர் விரும்பினார். ஒருவர், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மற்றொருவர், திருநெல்வேலி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம்.

அமெரிக்காவின் அதிபர் எங்கே கடைக்கோடியில் பிறந்த மனிதரை ஏன் சந்திக்க விரும்ப வேண்டும்? யார் இந்தக் கல்யாணசுந்தரம்?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான கிராமம் மேலக் கருவேலங்குளம். இந்தக் கிராமத்தில் 10 மே 1940 அன்று வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். தந்தை பால்வண்ணநாதன், தாயார் தாயம்மாள். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ‘எவ்வளவு வசதி இருந்தாலும் பணத்தின் மீது ஆசை கொள்ளாமல், பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்’ என்று சொல்லியே இவரது தாய் இவரை வளர்த்தார். அதனால், சிறுவயதிலேயே பிறரின் வறுமையை உணர்ந்து, அவர்களுக்கு உதவத் தொடங்கினார் கல்யாணசுந்தரம். பள்ளியில் படிக்கும்போது, கைச்செலவுக்காகக் கொடுக்கப்படும் பணத்தைச் சேமித்து, உடன் படிக்கும் மாணவர்களுக்கு உதவினார்.

‘நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்’ என்பது ஔவையின் வாக்கு. இதற்கேற்ப, கல்யாணசுந்தரத்தின் உதவும் குணமும் அவரது தந்தையிடம் இருந்து வந்தது. அவரது தந்தை பால்வண்ணநாதன் கோவில் ஒன்றில் அறங்காவலராக இருந்தார். ஒருமுறை, அந்தக் கோவில் பணியாளர் ஒருவர் கோவில் வளாகத்தில் இருந்த பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்துச் சென்று, பால்வண்ணநாதனின் வீட்டில் கொடுத்தார். அதை கல்யாணசுந்தரமும் அவரது தாயாரும் சாப்பிட்டுவிட்டதால், அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, அதற்குப் பரிகாரமாகத் தன்னுடைய ஒரு வயலை அந்தக் கோவிலுக்கு எழுதி வைத்தார் பால்வண்ணநாதன். இதைப் பார்த்து தந்தையைப்போல் வாழ வேண்டும் என்று கற்றுக்கொண்டார் கல்யாணசுந்தரம்.

சிறுவயதிலிருந்தே தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கல்யாணசுந்தரம், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலைத் தமிழ்ப் பட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். இவர் மட்டுமே அந்த வகுப்பில் ஒரே மாணவராக இருந்ததால், வேறு படிப்பைத் தேர்ந்தெடுக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால், தமிழ் மொழி மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக, தனது முடிவில் பிடிவாதமாக இருந்து, தொடர்ந்து படித்து, தமிழில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதன்பிறகு, 1963ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகவியல் பட்டப்படிப்பை முடித்து, அதில் தங்கப் பதக்கம் பெற்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்யாணசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் இந்திய–சீனப் போர் மூண்டது. நாட்டின் பாதுகாப்புக்காகப் பொதுமக்கள் நிதியுதவி செய்ய வேண்டுமென அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார். மாணவராக இருந்த கல்யாணசுந்தரம், தன்னிடம் இருந்த எட்டரைப் பவுன் தங்கச் சங்கிலியைப் பாதுகாப்பு நிதிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரிடம் வழங்கினார்.

கல்வியை முடித்த பின்னர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குமரகுருபரர் கலைக்கல்லூரியில் 25 ஆகஸ்ட் 1963 அன்று நூலகராகப் பணியில் இணைந்தார் கல்யாணசுந்தரம். நூலகராகத் தனக்குக் கிடைத்த சம்பளத்தை ஏழைகள், ஆதரவற்றோர் நலனுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் வழங்கத் தொடங்கினார். இந்த உதவியைத் தனது பணிக்காலம் முழுவதும், அதாவது சுமார் 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தார். நூலகராகப் பணியாற்றிய காலத்தில் கிடைத்த சம்பளம் முழுவதுமாக சுமார் 30 லட்சத்தை சமூக சேவைக்காக மட்டுமே வழங்கினார். அதிலிருந்து ஒரு ரூபாயைக்கூடத் தன் சொந்தச் செலவுக்காக அவர் பயன்படுத்தியதில்லை. தன் தனிப்பட்ட செலவுக்குத் தேவைப்பட்ட பணத்துக்காக இரவு நேரங்களில் ஓட்டல்களில் சப்ளையராக வேலை பார்த்தார்.

நூலகர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார் கல்யாணசுந்தரம். கல்வி, மருத்துவம், உணவு, உடை போன்ற அடிப்படை உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக, 1998ஆம் ஆண்டில் ‘பாலம்’ என்கிற அமைப்பை நிறுவினார். பாலம் என்பது இரண்டு கரைகளை இணைப்பது. அதேபோல், உதவி செய்ய விரும்புகிறவர்களையும் உதவி தேவைப்படுபவர்களையும் இணைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். ஒருவர் பணம், ஆடைகள், உணவுப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றைக் கொடையாக வழங்க விரும்புவார். இன்னொருவருக்கு அவை தேவைப்படும். இந்த இரு தரப்பினரையும் இணைப்பதுதான் பாலத்தின் நோக்கம். ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியத் தொகையையும்கூட பிறருக்கு உதவுவதற்கே பயன்படுத்தினார் பாலம் கல்யாணசுந்தரம்.

இதைத்தவிர பூர்வீகச் சொத்தாக அவருக்கு வந்து சேர்ந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்தையும் தொண்டு பணிகளுக்காகவே வழங்கினார்.

பணியில் கிடைத்த சம்பளம், பணி ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியத் தொகை எனத் தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உதவி செய்த பாலம் கல்யாணசுந்தரத்தின் சமூக சேவையைப் பாராட்டி, 1999ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று அவருக்கு ‘மேன் ஆஃப் மில்லினியம்’ என்னும் விருதை அளித்துச் சிறப்பித்தது. இந்த விருது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். இந்த விருதுடன் அவருக்குச் சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் 30 கோடி ரூபாய். அந்தப் பணம் முழுவதையும் அவர் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக வழங்கினார்.

பாலம் கல்யாணசுந்தரத்தை உலகின் உன்னதமான ஆளுமைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து, ‘ஏ மோஸ்ட் நோட்டபில் இன்டலெக்சுவல் இன் தி வேர்ல்ட்’ என்று அறிவித்தது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். மேலும், நூலகத் துறைக்கென்று நோபல் விருது வழங்குவதாக இருந்தால், அதை இவருக்குத்தான் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அவரை அந்தப் பல்கலைக்கழகம் பெருமைப்படுத்தியது.

இவரது சேவையைப் பாராட்டி, 2012ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திர திருமண மண்டபத்தில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார். அவ்விழாவில், ‘எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா மட்டும் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை என் தந்தையாகத் தத்தெடுத்துக்கொள்கிறேன்’ என்று கூறிய ரஜினிகாந்த், இவரைத் தனது தந்தையாகத் தத்தெடுத்து, தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பாலம் கல்யாணசுந்தரம், ‘என்னிடம் உதவி கேட்டு வருபவர்கள் இங்கு வந்து என்னைப் பார்ப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், நான் மீண்டும் என்னுடைய இடத்திற்கே சென்றுவிடுகிறேன்’ என்று ரஜினியிடம் எடுத்துக்கூறி, மீண்டும் தன்னுடைய வசிப்பிடத்துக்குத் திரும்பினார்.

சாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைவர் அரிமா லியோ முத்து, தனது லியோ ஹௌசிங் என்கிற நிறுவனத்தின் மூலம், சென்னை நகரின் மையப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை ஒன்றை, பாலம் கல்யாணசுந்தரத்துக்குப் பரிசாக வழங்க முனைந்தார். ஆனால், தன்னுடைய கொள்கைக்கு அது முரணானது என்று கூறி, மிகவும் பணிவுடன் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

பாலம் கல்யாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் 2011ஆம் ஆண்டு வாழ்நாள் சேவையாளர் விருதும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 2012ஆம் ஆண்டு சிறந்த நூலகருக்கான விருதும் வழங்கப்பட்டன. மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய மகுடம் விருதுகள் 2022 நிகழ்விலும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேலும், இவரது சமூக சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை 2023இல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவருக்கு வழங்கினார். ஐநா அமைப்பு இவரை 20ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அறிவித்துக் கௌரவித்தது.

ஒருகட்டத்தில் பாலம் கல்யாணசுந்தரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவச் செலவுக்காக அவருக்குப் பணம் தேவைப்பட்டது. வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உதவி செய்த அவர், தன்னுடைய மருத்துவச் செலவுக்காக ஒரு ரூபாய் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோள் சாதாரண மக்களிடம் மட்டுமல்லாமல், முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ்நாட்டின் பொதுமக்களும், சபாநாயகர், முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்டோரும், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் தலா ஒரு ரூபாயை அவருக்கு அனுப்பி வைத்தனர். பூரண குணமடைந்த பின்னர், அதில் மீதமிருந்த தொகை முழுவதையும் ஏழை மக்களுக்கே அவர் செலவிட்டார்.

அவருடைய சமூக சேவையையும் வாழ்க்கை முறையையும் மையமாகக் கொண்டு ‘பாலம் கல்யாணசுந்தரம்’ என்கிற ஆவணப்படத்தை சுபாஷ் கலியன் என்பவர் இயக்கினார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 3வது நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில், சிறப்புத் திரையிடலுக்கு அந்த ஆவணப்படம் தேர்வு செய்யப்பட்டது.

தன் வாழ்க்கை, மனைவி, மக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழும் இன்றைய சமூகத்தில், பாலம் கல்யாணசுந்தரம் ஓர் அதிசயப் பிறவி. 50 லட்சம் மதிப்பிலான தன்னுடைய பூர்வீகச் சொத்துகள், 35 ஆண்டுகள் நூலகராகப் பணியாற்றிச் சம்பாதித்த சுமார் 30 லட்சம் ரூபாய், பணி ஓய்விற்குப் பின் கிடைத்த ஓய்வூதியத் தொகை பல லட்சம் ரூபாய், விருதுகள் மூலம் தனக்குக் கிடைத்த பணம் எனத் தன் வாழ்நாளில் கிடைத்த அத்தனை பணத்தையும் ஆதரவற்றோரின் நலனுக்காகவும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் வழங்கிய பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை, பணம் மற்றும் புகழைக் காட்டிலும் மனிதநேயமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும்தான் உயர்ந்தவை என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *