உலகின் மிக உயரமான சிகரம் எது என்று கேட்டால், பலருக்கும் அதற்கான பதில் தெரியும். அது எவரெஸ்ட் சிகரம். இது நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில், இமயமலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரமுள்ளது இந்தச் சிகரம். மலையேற்றத்தில் மிகவும் கடினமானது எவரெஸ்டில் ஏறுவதுதான். காரணம், 8,000 மீட்டருக்கு மேல் காற்றில் கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அதிகமாகச் சோர்வு ஏற்படும். உடலால் நீண்டநேரம் இயல்பாகச் செயல்பட முடியாது. எவரெஸ்டில் ஏறுவதற்கு நல்ல உடல் தகுதி மட்டும் போதாது. மனவலிமையும் வேண்டும். நீங்கள் எவரெஸ்டில் ஏற வேண்டும் என்று திட்டமிட்டால் அதற்குச் சில ஆண்டுகாலப் பயிற்சியும் தயாரிப்பு முறையும் தேவை.
முதல் 3 மாதங்கள், உங்கள் உடலைத் தயார் செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, நடை அல்லது ஓட்டப் பயிற்சி, கார்டியோ பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அடுத்த 4 முதல் 6 மாதங்கள், 10 முதல் 15 கிலோ எடையுடன் நடக்கப் பழகுதல், ஏற்றம் இறக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நடக்கப் பழகுதல், நீண்டதூரம் மலையேறத் தொடங்குதல் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்து 7 முதல் 12 மாதங்கள், 5,000 முதல் 6,000 மீட்டர் அளவிலான உயரமுள்ள மலைகளில் ஏறி அனுபவம் பெற வேண்டும். பனியில் பயன்படுத்தப்படும் காலணிகள், கோடாரிகள், கயிறுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மலையேறப் பழக வேண்டும். அடுத்த 12 முதல் 24 மாதங்கள், மேற்கூறிய பயிற்சிகளுடன் கடுமையான குளிர் மற்றும் பனிக்காற்றில் செயல்பட வேண்டும். நடுநடுவே மருத்துவப் பரிசோதனை மற்றும் மலையேறுவதற்கான உடல் தகுதி மதிப்பீடு போன்றவற்றையும் செய்ய வேண்டும்.
நல்ல திடகாத்திரமான உடல்நிலையில் இரண்டு கைகள், இரண்டு கால்கள் உள்ள நபர் எவரெஸ்டில் ஏற வேண்டும் என்றாலே இவ்வளவு கடுமையான பயிற்சிகளையும் சோதனையையும் கடந்து வர வேண்டும். ஆனால் ஒரு ரயில் விபத்தில் தனது இடது காலை இழந்த பெண்மணி ஒருவர் 2013ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற சாதனையைப் படைத்தார். அவருடைய பெயர் அருணிமா சின்ஹா.
இவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள அம்பேத்கர் நகரில் 20 ஜூலை 1988இல் பிறந்தார். இவரது தந்தை ஹரேந்திர குமார் சின்ஹா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். தாயார் கியானி பாலா, ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். அருணிமாவுக்கு லட்சுமி சின்ஹா என்கிற அக்காவும், ராகுல் சின்ஹா என்கிற தம்பியும் உள்ளனர். இவருடைய இளவயதில் தந்தை இறந்துபோனார். அதன்பின்னர், அக்கா லட்சுமியின் கணவர் ஓம் பிரகாஷின் ஆதரவில் வளர்ந்தார்.
விளையாட்டில் ஆர்வம்கொண்ட அருணிமா, தனது கல்லூரிக் காலத்தில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடியிருக்கிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்று, பின் சட்டம் படித்த அருணிமா, அக்காவின் கணவர் ஓம் பிரகாஷ் ஆலோசனையின்படி, துணை ராணுவப் படையில் வேலைக்குச் சேர முடிவு செய்தார். ஆனால் பல முயற்சிகள் செய்தும் அந்த வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. 2011ஆம் ஆண்டு மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலர் பதவிக்கு விண்ணப்பித்தார். அதற்கான அழைப்புக் கடிதம் வந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவரது பிறந்த தேதி தவறாக அச்சிடப்பட்டிருந்தது. ஒரு நிலையான பணியில் சேர வேண்டும் என்று பல ஆண்டு காலம் போராடி, இறுதியாகக் கிடைத்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அருணிமா, அந்தப் பிழையைச் சரி செய்வதற்காக டெல்லிக்குச் செல்ல முடிவு செய்தார். அவருடைய அந்த டெல்லி பயணம்தான் அவரது வாழ்க்கையில் மிக மோசமான பயணமாகவும், அவரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பயணமாகவும் அமைந்தது.
11 ஏப்ரல் 2011 அன்று இரவு, லக்னௌவில் இருந்து டெல்லிக்குச் செல்லும் பத்மாவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அருணிமா பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது சில கொள்ளையர்கள் அவரது அம்மா பரிசளித்த தங்கச் சங்கிலியை அவரிடமிருந்து பறிக்க முயன்றனர். அவர்களை எதிர்த்து நீண்டநேரம் போராடிய அருணிமா ஒரு கட்டத்தில் வலுவிழந்தார். அந்த இரயிலில் பயணம் செய்த யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்தக் கொள்ளையர்கள் ஓடும் ரயிலிலிருந்து அருணிமாவை வெளியே தூக்கி எறிந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு ரயிலின் மீது மோதி அடிபட்டு, அவர் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் இருந்த அருணிமாவின் இடதுகால் தண்டவாளத்தின் மேலிருந்தது. அதை நகர்த்தும் நிலையில் அப்போது அவர் இல்லை. அத்தகைய நிலையில், தண்டவாளத்தில் வந்த ஒரு ரயில் அவருடைய இடது கால் மீதேறிச் சென்றது. இதனால் ஏற்பட்ட வலியால் அலறித்துடித்த அருணிமா ஒரு கட்டத்தில் மயக்கமானார்.
மறுநாள் காலை அந்தப் பக்கம் சென்ற உள்ளூர் கிராமவாசியான பிண்டு காஷ்யப் என்பவர் அவரை மீட்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பரேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ரயிலில் அடிபட்டு அவர் அனுபவித்த வேதனை ஒரு ரணம் என்றால், மருத்துவமனையில் வேறு விதமான ரணத்தை அவர் அனுபவித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அக்கறையற்ற அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் பல மணிநேரம் சிகிச்சை தொடங்கப்படாமல் கிடத்தப்பட்டிருந்தார். இதனால் அவரது இடது கால் திசு அழுகத் தொடங்கியது. அழுகல் உடலின் பிற பாகங்களுக்குப் பரவுவதைத் தடுக்கவேண்டுமெனில், அவரது இடது முழங்காலுக்குக் கீழுள்ள பகுதியை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார். ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்க வேண்டிய மயக்க மருந்து தீர்ந்துபோயிருந்தது. இதனால் வேறு வழியில்லாமல் மயக்க மருந்து இல்லாமலே அறுவை சிகிச்சையைத் தொடருமாறு அருணிமா கூறிவிட்டார். அவர் முழு உணர்வுடன் இருந்தபோதே அவரது இடது கால் வெட்டி அகற்றப்பட்டது. அவருக்கு அளிப்பதற்கும் மருத்துவமனையில் போதுமான ரத்தம் இருக்கவில்லை. இறுதியில் அங்கு பணியாற்றிய மருத்துவர் பிசி யாதவ் என்பவர் அவருக்கு ரத்த தானம் செய்தார்.
இது நடந்தபோது அவருடைய வயது 23. ஒர் இரவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால், அவர் தனது ஒரு காலை இழந்து, அதனால் விளையாட்டு வாழ்க்கையையும் இழந்தார். மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையில் சேரும் அவருடைய கனவு கேள்விக்குறியானது. எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்கிற நிச்சயமற்ற நிலைக்கு அருணிமா தள்ளப்பட்டார்.
அருணிமா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்ட செய்தி ஊடகத்தில் பரவத் தொடங்கி, அந்தச் சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாகியது. அருணிமாவின் விபத்துக்கு யார் பொறுப்பு என்கிற கேள்விகள் அரசை நோக்கி எழத்தொடங்கியதும், பதவியில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அருணிமாவை பலிகடாவாக்கினார்கள்.
அவர் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்ததாகவும், பரிசோதகரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயிலில் இருந்து குதித்ததாகவும் செய்திகள் பரவத் தொடங்கின. பின்னர் அவர் பயணச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் நின்ற சிசிடிவி காட்சி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பின்பு அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக ரயிலில் இருந்து குதித்தார் என்கிற வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்று அவர் விளக்கம் கொடுத்தும், அதைப் பெரும்பாலான மக்கள் நம்பாமல் போனதுதான் அவர் அனுபவித்த வலிகளிலே மிகக் கொடுமையானது.
அப்போது மத்திய விளையாட்டு அமைச்சராக இருந்த அஜய் மேக்கன், அருணிமாவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். அதன்படி 18 ஏப்ரல் 2011 அன்று, மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ்க்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு 4 மாதங்கள் சிகிச்சைகாக அவர் தங்கி இருந்தபோது, டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அவருக்கு இலவசமாக ஒரு செயற்கைக் காலை வழங்கியது. அந்தக் காலகட்டத்தில் உடல் வலியைவிட மனவலி அவருக்கு அதிகமாக இருந்தது. ‘இனி என்னால் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்வி அவரைத் துரத்தியது. அந்தக் கேள்வியில்தான் அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவு உருவானது.
‘எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு 15 வெவ்வேறு வழிகள் உள்ளன. அதில் 14 வழிகளை ஏற்கெனவே மலையேறுபவர்கள் கண்டறிந்து அதை வரைபடமாக்கியுள்ளனர்’ என்கிற ஒரு செய்தியை அருணிமா செய்தித்தாளில் படித்தார். அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. இதைப் பற்றி தனது அக்கா கணவர் ஓம் பிரகாஷிடம் தெரிவித்தபோது, ‘இதுவரை காலை இழந்த எந்தப் பெண்ணும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததில்லை. நீ முயற்சி செய்து எவரெஸ்ட் ஏறினால், உலகின் முதல் மாற்றுத்திறனாளிப் பெண்ணாக எவரெஸ்ட் ஏறிய சாதனையை உன்னால் படைக்க முடியும்’ என்று உற்சாகப்படுத்தினார்.
அருணிமா, எளிதான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் தன்னம்பிக்கை அற்றவராக, தற்கொலைக்கு முயன்றவராகத் தன்னைச் சித்தரித்த இந்த உலகத்தில், தன்னை மீட்டெடுப்பதற்காக அவர் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். அவரது கனவை உலகம் ஏளனம் செய்தது. இது சாத்தியமற்றது என்று கூறி அவரது தன்னம்பிக்கையை நீர்த்துப்போக முயன்றது. ஆனால் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை அவருக்கு உந்துதலாக அமைந்தது. ‘புற்றுநோயை எதிர்த்து யுவராஜ் சிங் மீண்டு வந்தார் என்றால், தன்னாலும் எவரெஸ்ட் ஏற முடியும்’ என்று அவர் நம்பினார். பொதுவாக, உடலில் ஏதேனும் உறுப்பை இழந்தவர்கள், தங்களுக்குப் பொறுத்தப்பட்ட செயற்கை உறுப்புகளுக்குப் பழகுவதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகும். ஆனால் செயற்கைக் கால் பொறுத்தப்பட்ட 2 நாட்களில் அவர் எழுந்து நின்று நடக்கப் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
1984இல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் ‘பச்சேந்திரி பால்’. எவரெஸ்ட்டை ஏறுவதற்கான பயிற்சியைத் தனக்குக் கொடுப்பதற்கு இவர்தான் சரியானவர் என்று முடிவு செய்த அருணிமா, தன்னைப் பேட்டி எடுக்க வந்த ஒரு பத்திரிகையாளரின் உதவியுடன் பச்சேந்திரி பாலின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரைத் தொடர்புகொண்டார். பிறகு அருணிமா அவரைச் சந்தித்து தனது கனவைப் பற்றிக் கூறினார். அதன்பின்னர் பச்சேந்திரி பால் அவருக்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள நேரு மலையேற்ற நிறுவனத்தில் இணைந்து அடிப்படை மலையேற்றப் பயிற்சியை அருணிமா மேற்கொண்டார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டார். பின்னர் பச்சேந்திரி பாலின் வழிகாட்டுதலில் ‘டாட்டா ஸ்டீல் அட்வஞ்சர் பவுண்டேசன்’ வழங்கிய பயிற்சியிலும் கலந்துகொண்டார். அவருடையது சாதாரண மலையேற்றப் பயிற்சியாக இருக்கவில்லை. ஏனென்றால், ஒரு செயற்கைக் காலுடன் மலையேற்றம் செய்வதை உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அவர் கடுமையான உடற்பயிற்சிகளையும் மனப் பயிற்சிகளையும் மேற்கொண்டார். எவரெஸ்ட் ஏறுவதற்கு முன்னோட்டமாக 2012இல் அவர் நேபாளத்தில் உள்ள ஐலேண்ட் குன்றில் ஏறினார். அதன் உயரம் 6,189 மீட்டர். இந்த மலையேற்றம் எவரெஸ்ட் முயற்சிக்கான முக்கியமான முன்தயாரிப்பாக அமைந்தது.
1 ஏப்ரல் 2013 அன்று, அருணிமா சின்ஹா எவரெஸ்ட்டை ஏறும் முயற்சியைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு பெண், ஒரு கால் இல்லாமல், 2013இல் உலகின் மிக உயரமான மலையை நோக்கிப் புறப்பட்டார். எவரெஸ்ட் மலையேற்றம் பல கடுமையான சவால்கள் நிறைந்தது. அங்கு நிலவுகின்ற கடுமையான குளிர், ஆக்சிஜன் தட்டுப்பாடு, பனிப்பாறைகள் மற்றும் ஆபத்தான சரிவுகள் நிறைந்த பாதைகள், ஆகிய அனைத்தும் மலையேற்றத்தை கடுமையாக்கின. ஒரு செயற்கைக் காலுடன் இவற்றையெல்லாம் எதிர்கொள்வது அருணிமாவுக்கு சவாலாக இருந்தது. அவரது இடது தொடைப்பகுதி எஃகுத் தடியுடன் இணைக்கப்பட்டிருந்ததால், சிறிதளவு அழுத்தம் கொடுத்தாலும், கடுமையான வலி ஏற்படும். சில சமயங்களில் ரத்தம்கூட வரும். ஆனால் இன்னல்கள் அனைத்தையும் கடந்து, தொடர்ந்து அவர் முன்னேறினார்.
21 மே 2013, காலை 10:55 மணிக்கு மனித வரலாற்றில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. 51 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார் அருணிமா. உலக வரலாற்றில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் மாற்றுத்திறனாளிப் பெண் என்கிற சாதனையைப் படைத்தார்.
ஆனால் அருணிமாவின் சாதனை எவரெஸ்டுடன் முடிந்துவிடவில்லை. அதன் பின் அவர் உலகில் உள்ள உயரமான சிகரங்களை ஏறுவதைத் தன் கனவாக்கிக் கொண்டார். அதன்படி, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவில் உள்ள எல்பிரஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கொசியுஸ்கோ, தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா, வட அமெரிக்காவில் உள்ள டெனாலி ஆகிய சிகரங்களை ஏறிச் சாதனை படைத்தார்.
அவரது அசாதாரணச் சாதனைகளுக்காக இந்திய அரசு அவருக்கு 2015இல் பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்தது. அதே ஆண்டில் அவருக்கு ‘டென்சிங் நார்கே தேசியச் சாகச விருதும்’ வழங்கப்பட்டது. 1 நவம்பர் 2014 அன்று பென்குயின் இந்தியா பதிப்பகத்தின் மூலம் அருணிமா தனது சுயசரிதையை வெளியிட்டார். அதற்கு அவர் வைத்த பெயர் ‘Born again: On the Mountain’.
அருணிமாவின் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அவர் அனுபவித்த வலிகளை எண்ணிப் பார்ப்பதற்குக்கூட மனம் அஞ்சும். ரயிலில் இருந்து கீழே தூக்கி எறியப்பட்டு ஒரு காலை இழந்தவர், உலகத்தின் மிக உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தது முயற்சியின் விளைவுதான். எவரெஸ்ட் சிகரத்தை ஏறும்பொழுது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் பாதிக்கப்பட்டார். அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாகக் கீழே இறங்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டார்.
அதற்கு அருணிமா சின்ஹா சொன்ன வார்த்தைகள், ‘இப்போது நான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவில்லை என்றால், என் உயிரைக் காப்பாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை’.
(தொடரும்)

