உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது. மேரியின் முகம் அவளுக்கு இருப்பதாகக் கருதுகிறார். அவளும் தன்னையே பார்ப்பதுபோல் நினைத்துக் கொள்கிறார். இங்கு அவள் பார்ப்பது என்பதை கன்னிமேரியின் பார்வை தன்மீது படர்வதாகப் பாதிரியார் அர்த்தப்படுத்திக்கொள்கிறார். பாதிரியாரும் சமயத் துறவிகள் பற்றிய ஆவணமாக்கலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆள் இல்லாதபோது தேவாலயத்தில் வைக்கப்பட்ட அப்பத்தை (தேவனின் உடலை) சீலி எடுத்துத் திண்ணும் தருணத்தில் பாதிரியார் வந்தபோது மேனியெங்கும் அப்பத்துகள்களுடன் இருப்பதைப் பார்த்த பாதிரியார் அவளை நெருங்கி இச்சை கொள்கிறார். அவளுக்கு பாதிரியாரால் நிறைய அப்பங்கள் கிடைக்கின்றன. உறவின் உச்சநிலையில் தோள்பட்டையில் கடிக்கும் பழக்கம் கொண்டவள் சீலி. பாதிரியாருக்கு அவ்வாறான தடம் உள்ளது. ஒருமுறை கடித்தடம் பற்றிய உரையாடலில் சீலி அதனை ‘அத்தாட்சி’ என்கிறாள். தடம் ஆவணமாவதைக் கண்டு பிரஞ்ஞையடைந்து பாதிரியார், பணி ஓய்வுபெற்ற பள்ளிக்கூட தலைமையாசிரியரிடம் பாவ மன்னிப்புக்கோரி நிற்கிறார். ஊர் திரண்டு வந்து தாக்க வருகையில் முதிய தலைமையாசிரியர், கன்னிமேரியின் சாயலை சீலியிடம் பாதிரியார் கண்டதையும், அவள் கடித்தடம் பற்றியும் கூறும்போது சீலி உருவேறி மீண்டும் பாதிரியார் உள்ளிட்ட ஊரின் ஆண்களைக் கடித்துவிடுகிறாள்.
இங்கு கதை நீதி வழங்குவது இல்லை. மாறாக பாதிரியாரின் தரப்பிலிருந்து அணுகுகிறது. சீலியின் தரப்பும் சீலி, பாதிரியாருடன் உறவு கொள்ளவதை எவ்வாறு அவள் உணர்ந்தாள் என்பதும் பாதிரியார் வழியாகவே தெரிய வருகின்றன. பாலியல் சுரண்டலுக்கு ஆளான பெண்ணால் வழங்கப்பட்ட ஒரே ஆவணம் கடித்தடம்தான். ஆனால், கடித்தடமும் கன்னிமேரியின் அருட்கொடையாக அர்த்தப்படுத்தப்படுகிறது.
ஆவணமாக்குபவர்கள் ஒருபோதும் அதிகாரமற்றவர்களின் குரலின்மீது அக்கறைக் கொள்ளவில்லை. மாறாக தனக்கு எவ்வாறு அந்நிகழ்வு அர்த்தம் தருகின்றது என்பதையே பதிவு செய்திருக்கிறார்கள். இங்கு பாதிரியாரும் அவ்வாறே கதை சொல்கிறார். ஆகவே, சீலியின் கதையாக இல்லாமல் பாதிரியார் ஆவணப்படுத்திய சீலியின் கதையாகவே டி. தருமராஜ் மயக்கத்தை ஏற்படுத்தியிருகிறார். ஆனால், பாதிரியாரின் தரப்பிற்கு நியாயம் சேர்க்கும் குரலாக இல்லாமல், வாசகனின் சிந்தனைக்கூர்மையைச் சோதிக்கும் பாணியையே இதில் கையாண்டிருக்கிறார். அதனால்தான் பாதிரியாரின் அதிகார துஷ்பிரயோகம் பாவமாகச் சித்தரிக்கப்படுகிறது.
குற்றவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், பாதிரியார் தன் சமய அதிகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தால் நலிந்த, திருமணமான தலித் பெண்ணைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளார். அவளுடைய கணவனும் அங்கு பணிபுரிகிறான். அப்பத்தைக் கண்டு ஏங்குமளவிற்கான பொருளாதார வலுவற்று, கோவிலைச் சார்ந்திருந்த சீலியை, பாதிரியார் தொடர் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
ஆனால், கதை நவீன குற்றவியலின் குரல்களுக்குள் இல்லை. மாறாக மரபான சமூகங்கள் நீதிகோரும் முறையிலான பாணியைப் பேசுகிறது. ‘பாவம்’ என்பதே மரபான சமூகங்களின் குற்றத்தை அளக்கும் அடிப்படை அலகு. பாவத்திற்கான தண்டனையை வாழும்போது யாரும் அனுபவிப்பதில்லை. மரணத்திற்கு பின்பாக நரகத்திலோ அல்லது இறுதித் தீர்ப்பு நாளிலோதான் தண்டனை வழங்கப்படும். பாவம் பற்றிய உரையாடலைச் சமயம் வழியான சமூக ஒழுங்கைப் பேணுவதற்காகச் சமூகம் பயன்படுத்துகிறது.
பாவத்தின் தொகுப்பே இறைநிலை. மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும் அல்லது மனிதர்களின் பாவத்தால் துன்பப்பட்டவராகவே ஏசு கிறிஸ்து கற்பனை செய்யப்படுகிறார். நீதிகோரும் நபர்கள் இறைநிலையடைதல் என்பது மரபான சமூகத்தின் கதைப்பாடல் உத்தி. (நீதிகோரும் கண்ணகியும் இறைநிலையடைவதை மனதில் கொள்ளுங்கள்). இங்கு பாவம் செய்த பாதிரியார் இறைநிலை அடைவதில்லை. பாவத்தால் துன்பப்பட்ட சீலியே இறைநிலை அடைகிறாள்.
சீலி, கதையின் கடைசியில் துடியேறும் தருணம் கதைப்பாடல்களில் உச்சநிலையை ஒத்து இருக்கின்றது. அதாவது, கடவுளின் பிறப்பு, செயல்கள், இறப்பு என பாடும் நாட்டுப்புற கதைப்பாடலில் இறப்பைப் பாடும்போது பக்தர்கள் பரவசம் கொண்டு சாமியாடுவார்கள். சாமியாடத்தூண்டும் கதையின் தருணம் நாட்டுப்புறக் கதைப்பாடலில் இறப்பைப் பாடுதலாக இருக்கும்போது இங்கு பாவத்தைச் சொல்லுவதாக இருக்கிறது. பாதிரியார் சீலிக்கு செய்த பாவத்தைச் சொன்ன தருணம் சீலியினுள் கன்னிமேரி இறங்கி மெய்மறந்தாடுகிறாள். பாவப்பட்ட சீலியின் உடல் இறைநிலை அடைகிறது. இறைநிலை அடைதல் என்பது வலிமையற்ற சமூகங்களுக்குக் கிடைக்கும் முதலும் கடைசியுமான நீதி.
குற்றம் என்பது நவீன சமூகத்தின் யோசனை. அதாவது ஒவ்வொரு தனிநபரும் சமம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பிறந்தது. மரபான சமூகத்தில் குற்றம் இல்லை. அங்கு பாவம் மட்டுமே இருக்கிறது. பாவத்தின் அளவு, செய்யும் நபர், யாருக்குச் செய்யப்படுகிறது என்பதைப் பொருத்து கிடைக்கும் நீதி மாறுபடுகிறது. மரபான சமூகத்தின் பாவத்தின் பலனாக இறப்பிற்கு பின் நரகம் கிடைக்கும். நவீன சமூகமும் நரகத்தின் யோசனையுடனே குற்றத்திற்கான தண்டனை வழக்கும் இடமாக சிறைச்சாலையைக் கண்டடைந்திருக்கின்றன.
உயர்சாதி பெண்ணை காதல் செய்த மதுரைவீரன் மாறுகை மாறுகால் வாங்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தருணம், அருந்ததியின சமூகங்கள் மனக்குமுறலுக்கு உள்ளாயின. கொலைக்குக் காரணமான நாயக்கர்களும் கொலை செய்த கள்ளரும் இணைந்து மதுரைவீரனை இறைநிலை அடையச் செய்கின்றனர். மதுரைவீரன் இறைநிலை அடைந்ததில் அருந்ததியர்களின் பங்கு மனகுமுறலைத் தவிர வேறில்லை. கொலை என்னும் பாவத்தை செய்த சமூகங்கள் கொலையுண்டவனுக்கு இறைநிலை அளிக்கின்றன. பாவத்தின் தொகுப்பே இறைநிலை.
மரபான சமூகங்கள் அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட, நீதிகோரும் அதிகாரமற்ற குரல்களுக்கு இறைநிலையாவதையே தருகின்றன. வரலாறு இத்தனை நாட்கள் அதிகாரமற்றவர்கள் இறைநிலையடைதலால் நீதிபெற்றார்கள் என்றே சொல்கிறது.
நிறைய அர்த்த அடுக்குகளைத் தரும் பின்னலை இக்கதை ஏற்படுத்தியுள்ளது. கதையின் ஆசிரியர் டி.தருமராஜ் என்பதால் இத்தனை அர்த்தம் பிறக்கிறதா? என்ற கேள்வியையும் என்னுள் நான் கேட்டுக்கொள்கிறேன். பாதிரியாரின் தரப்பிலிருந்து சீலி அணுகப்பட்டதை எந்தத் தலித் சிறுகதையாசிரியரும் திட்டமிட்டு முன்வைக்க விரும்பமாட்டார்கள். தன்னியல்பாகப் பாதிக்கபட்டவர்களின் வலியைப் பேசவேண்டும் என்ற அணுகுமுறையுடன் சீலியை அழுது புலம்பச் செய்திருப்பர். கிட்டத்தட்ட தலித் சிறுகதையாசிரியர்கள் மாற்று ஆவணமாக்கலைச் செய்திருப்பார்கள். அதாவது பாதிரியார் எழுதிய வரலாற்றிற்கு மாற்று வரலாறு. ஆனால், இங்கு கதை பாதிரியாரின் ஆவணமாக்கலையும் இறைநிலையாக்கத்தையும் நீதிவழங்கும் காரணிகளாகப் பேசியதன் வழியாக மரபான வரலாறு வரைதலின் மோசடிகளை தருமராஜ் காட்டித்தருகிறார் என்பதை உணர்ந்தால் அந்த அரசியல் பகடியை நம்மால் விளங்கிக்கொள்ள இயலும். வாசகர் சற்று சறுக்கினாலும் இதையொரு இறையியல் கதையாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சிக்கலுக்கு உள்ளாவார். அதனாலேயே இதனை கூரிய வாசகரல்லாதவரை அம்பலப்படுத்தும் கதை எனலாம்.
0
ஆழமான திறனாய்வு