Skip to content
Home » சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன் முதல் முறையாக வரவேற்றபோது, என்னை ஏன் அழைக்கிறார், அதுவும் பேசுவதற்கு என்று குழம்பியது இப்போதும் நினைவிலிருக்கிறது. மேடை இருக்காது; மணிக்கணக்கில் உரை நிகழ்த்தவேண்டிய தேவையில்லை; பேசுபொருளும் எனக்குப் பிடித்தமானதுதான்; பேசப்போவது மாணவர்களிடம். இருந்தும், அதோ, இதோ என்று சாக்கு சொல்லிக்கொண்டே இருந்தேன். சாக்குப் பை காலியானதும் தயக்கத்தை உதறி, துணிச்சலைத் திரட்டிக்கொண்டு ஒரு வழியாக திருச்சி வண்டியைப் பிடித்துவிட்டேன்.

சைபர் செக்யூரிட்டி, அனலடிக்ஸ், ஏ.ஐ., ரோபோடிக்ஸ் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் இன்றைய மாணவர்களிடம் நிஜமாகவே ஹைதர் அலியைக் கொண்டுவந்து நிறுத்தினால் அவர்கள் கில்லட்டினை அல்லவா தேடுவார்கள்? தகவல் தொழில்நுட்பம் முடித்தால் அமெரிக்கா பறக்கலாம். உயிரியல் படித்தால் நீட் பக்கம் நகரலாம். வணிகவியல் படித்தால் பெரும் நிறுவனங்களை நிர்வகிக்கலாம். பானிபட் போரையும் பிரெஞ்சுப் புரட்சியும் படித்தால் கால் காசுக்குப் பிரயோஜனம் உண்டா? எதிர்பார்த்த இருக்கைகள் கிடைக்காமல் போகும்போது இலக்கியமும் பொருளாதாரமும் படிக்கக்கூட ஒரு சிலர் தியாக உணர்வோடு முன்வரக்கூடும். பெரும் புயல் அடித்தாலும் வரலாற்றுக் கூரையின்கீழ் ஒதுங்க மாட்டார்கள் அல்லவா? அதனால்தானோ என்னவோ வரலாற்றுடனான தொடர்பு பலருக்கும் பத்தாம் வகுப்போடு முடிந்துவிடுகிறது. மிஞ்சிப்போனால் பதினொன்றாம் வகுப்போடு. இந்நிலையில், ஏன் வரலாறு அவசியம் என்பதை இவர்களுக்கு உணர்த்த முடியுமா? அதுவும் என்னால்?

நான் எடுத்த முதல் வகுப்பின் தொடக்கத்திலேயே சில உறுதிமொழிகளை அளித்தேன். பாடப்புத்தகங்களிலுள்ள எதையும் பேச மாட்டேன். தேதிகளையும் ஆண்டுகளையும் பட்டியலிட மாட்டேன் (நானே அவ்வப்போது மறந்துவிடுவேன் என்பது தனிக்கதை). ஹைதர் அலியை நினைவுபடுத்த மாட்டேன். ஈ.ஹெச். கார், கார்டன் சைலட், எட்வர்ட் கிப்பன் என்று அச்சுறுத்த மாட்டேன். நான் உங்களோடு வரலாறு குறித்து உரையாடப்போகிறேன். எளிய உரையாடலாக இது இருக்கும். வரலாற்றைக் கதைபோல் விவாதிக்கமுடியும்தான் ஆனால் அதையே சாக்காகக் கொண்டு கதைவிடக்கூடாது. ‘ஒருமுறை அசோகர் சாலையோரம் மரம் நட்டுக்கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக வந்த…’ வகையிலான பட்டிமன்ற வேடிக்கை வரலாறாகாது. அதை எனக்குச் சொல்லவும் வராது.

நான் முன்னெடுக்கப்போவது ஓர் உரையாடல். ஒருவருக்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டால்தான் அது உரையாடல் என்பதால் நீங்களும் பங்கேற்கப்போகிறீர்கள். நான் உங்களிடம் கேட்கப்போவதுபோல் (அஞ்சவேண்டாம், நீங்கள் மனப்பாடம் செய்த எதிலிருந்தும் நான் கேட்கப்போவதில்லை) நீங்களும் என்னிடம் கேள்வி கேட்கப்போகிறீர்கள். தப்பு, சரி அச்சமின்றி இயல்பாகப் பேசுவோம். வேறெந்தத் துறையையும்விட வரலாற்றில்தான் கேள்விகள் அதிகம் இருக்கும். விடைகள் கிடைக்கின்றனவோ இல்லையோ, விவாதக் கதவுகள் நிறையவே திறக்கும். இணைந்து பயணிப்போம்.

உரையாடல் ஒன்றிரண்டு மணி நேரங்கள் நீண்டு சென்றது. நான் திட்டமிட்டுத் தயாரித்துச் சென்ற அனைத்துத் தலைப்புகளையும் பேசினேன் என்று சொல்லமுடியாது. அடித்துச் செல்லப்படும் வெள்ளத்தில் பலவற்றைத் தொலைத்துவிட்டேன். பாதகமில்லை. மாணவர்கள் என்னை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்பிவிட்டுக் கொண்டே இருந்தனர். இழுக்கும் இடத்துக்கெல்லாம் ஓடினேன்.

காந்தி அப்படியென்ன பெரிதாகச் செய்துவிட்டார்? அணுகுண்டு எல்லாம் வைத்திருக்கும் இன்றைய காலத்தில் வேட்டியை அரைகுறையாகக் கட்டிக்கொண்டு, தடியொன்றை ஏந்திக்கொண்டு அகிம்சை, அன்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா? அவர் பழைய காலத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியவர் அல்லவா? அம்பேத்கரோடு அவருக்கு என்ன தகராறு? உண்மையிலேயே காந்திதான் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தாரா? அவர் தோன்றாமல் இருந்திருந்தால் இந்தியா அடிமை நாடாகவே இருந்திருக்கும் என்கிறீர்களா?

ஹிட்லர் குறித்து நான் முன்வைத்த சித்திரம் அவர்களில் பலருக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் ஒழுங்கான, கண்டிப்பான தலைவராக இருந்தாரா, இல்லையா? யூத வெறுப்பு மட்டும்தான் அவரிடம் இருந்ததா, தேசபக்தி இல்லையா? அதை ஏன் யாரும் பேசுவதில்லை? இவ்வளவு லட்சம் பேரைக் கொன்றார் என்கிறீர்கள். அதற்கு அவரிடம் காரணம் இல்லாமலா இருக்கும்? இளம்வயதில் அவர் யூதர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இல்லையா? காந்தி, ஹிட்லர் இருவருடைய ‘இன்னொரு பக்கத்தையும்’ தெரிந்துகொள்ளவேண்டும் எனும் அவர்களுடைய விருப்பம் புரிந்தது. பின்னர் வேறொரு பள்ளிக்குச் செல்ல நேர்ந்தபோது, வேறு பல மாணவர்களைச் சந்தித்துப் பேசியபோது, அவர்களிலும் கணிசமானோர் ஹிட்லர் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணர்ந்தேன். அவர்கள் புழங்கும் தளங்கள்தாம் (ரீல்ஸ், கிராஃபிக் நாவல் தொடங்கி நெட்ஃபிளிக்ஸ்வரை) அதற்குக் காரணம் என்பதையும் உணரமுடிந்தது. பள்ளி முடிப்பதற்கு முன்பே வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்துக்கொண்டுவிட்டது.

அடுத்த வகுப்புக்கு அழைப்பு வந்தபோது, எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, மீண்டும் அதே தலைப்பைச் சொன்னேன். இந்த முறை அரசியல் தலைவர்களை எவ்வாறு அணுகவேண்டும், அவர்களை எவ்வாறு மதிப்பிடவேண்டும் என்பதைச் சுற்றி உரையாடலை அமைத்துக்கொண்டேன். வதைமுகாம்களுக்கு ஒரு மணி நேரம் அளித்தேன். காந்திமீதான விமரிசனம் தொடங்கி காழ்ப்புவரை (இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்த்துவது எளிதாக இல்லை) விவாதித்தேன். மன்னர்களைப்போல் தலைவர்களைப் புகழத் தேவையில்லை. காந்தி தொடங்கி மார்க்ஸ்வரை அனைவருடைய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விமரிசிக்கலாம். அதே நேரம், அவர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் பொருத்தி, அன்றைய அரசியல், சமூகப் பின்னணியோடு சேர்த்து ஆராயவேண்டும். அப்போதுதான் நம் மதிப்பீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தினேன். ஒரு வரலாற்றாளரின் பணியும் துப்பறிவாளரின் பணியும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றேன்.

இந்த ஆண்டுகளில் இதுவரை எத்தனை முறை ‘ஏன் வரலாறு?’ எனும் தலைப்பில் பேசியிருப்பேன் என்று நினைவில்லை. ஒவ்வொரு முறையும் தேவைக்கேற்ப விவாதப்பொருள் மாறும். திசைகள் மாறும். விவாதங்கள் கூர்மையடையும். முதன் முறையாக ஆசிரியர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு அமைந்தபோது ஆ.இரா. வேங்கடாசலபதியிடம் அது குறித்துப் பேசினேன். எப்படித் தயாரித்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்டபோது, ‘வரலாற்றெழுதியலுக்குக் கவனம் கொடுக்கப்போகிறேன். அனால் பள்ளி, சபால்டர்ன் பள்ளி, மார்க்சியப் பள்ளி என்று சிந்தனைகளைப் பிரித்து அறிமுகப்படுத்துவதே திட்டம்’ என்றேன். ‘கனமாகப் போயிடப்போகுது, பார்த்துக்கோங்க’ என்று அவர் சொன்னதன் பொருளை வகுப்பறையில் உணர்ந்தேன். பகல், இரவு (என்றால் எட்டு மணிவரை என்று பொருள்) அமர்ந்து செதுக்கிய பவர்பாயிண்ட்டைச் சில நிமிடங்களில் அணைத்துவிட்டு, மீண்டும் உரையாடல் வடிவத்துக்கே திரும்பினேன். அதன்பிறகுதான் இறுக்கம் குறைந்து (எனக்கும் ஆசிரியர்களுக்கும் சேர்த்தேதான் சொல்கிறேன்) இயல்புநிலை திரும்பியது.

ஆசிரியர்களுக்கும் அதே தலைப்புதான். மாணவர்களுக்கு அளித்த அதே உறுதிமொழிகள். அதே அணுகுமுறை. உள்ளடக்கத்தின் விரிவும் ஆழமும் மட்டும் வேறுபடும். ஒரு மணி நேரம், இரு மணி நேரம் என்று ஆரம்பித்து அரை நாள், முழு நாள் என்று விரிந்து சென்ற வாரம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பாடப்புத்தகங்களை முன்வைத்து (ஆனால் அவற்றிலிருந்து முழுக்க வெளியில் வந்து) அவர்களோடு விவாதித்தேன். பேசுவது என்றாலே பூனைபோல் ஒடுங்கிக்கொள்ளும் நானா இவ்வளவு மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் பேசியிருக்கிறேன்? இந்த மாற்றத்துக்கு நானல்ல; விழிப்போடும் துடிப்போடும்கூடிய அவர்களுடைய பங்கேற்புதான் காரணம்.

எஸ்.ஆர்.வி. பள்ளி ஆசிரியர்களுடன்

ரொமிலா தாப்பர் தொடங்கி ஆஷிஸ் நந்திவரை எவர் குறித்தும், எது குறித்தும் அவர்களோடு என்னால் உரையாடமுடிகிறது. நண்பர்களோடு இயல்பாகப் பேசுவதுபோல் அவர்களோடு பேசவும் பழகவும் முடிகிறது. வேறு பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறேன், கல்லூரியிலும் பேசியிருக்கிறேன் என்றாலும் எஸ்.ஆர்.வி. போன்ற சூழலை எங்கும் நான் உணர்ந்ததில்லை. எஸ்.ஆர்.வியில் நிலவும் அமைதியையும் ஒழுங்கையும் (உரையாடத் தொடங்கிய பிறகு தோன்றும் புயலும்) வேறெங்கும் கண்டதில்லை. தயக்கத்தோடு தொடங்கி, மெல்ல, மெல்ல வளர்ந்து, உறுதியோடு வளர்ந்து நிற்கும் பிணைப்பு இது. இந்த ஆசிரியர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. அவர்கள் வகுப்பெடுக்கும் முறை, வகுப்பறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், எந்தெந்த பாடங்கள் மாணவர்களுக்கு உகந்தவையாக இருக்கின்றன, எவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள், மாணவர்களின் உளவியல், அவர்களுடைய கனவுகள், அவர்கள் உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் குழப்பங்கள் என்று பலவற்றை அவர்களிடம் அமர்ந்து கற்றிருக்கிறேன்.

துளசிதாசனிடம் தென்படும் உற்சாகம், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கத் துடிக்கும் என்னைப் போன்றவர்ளைக்கூடப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. மோரோ, பாலோ அருந்திக்கொண்டிருக்கும்போது ஒருநாள் திடீரென்று ‘ரொமிலா தாப்பரை நம்ம பள்ளிக்குக் கூட்டிட்டு வரமுடியுமா?’ என்று கேட்டார். அவர் வயது, தள்ளாமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டாலும் அவருக்கு ஏன் அப்படியொரு அசாதாரணமான யோசனை தோன்றவேண்டும் எனும் கேள்விக்கான விடையை அடுத்தடுத்த சந்திப்புகள்மூலம் தெரிந்துகொள்ளமுடிந்தது. அவருடைய தர்க்கம் எளிமையானது. ரொமிலா தாப்பர் சிறந்த வரலாற்றாளர். நம் பள்ளிக்குச் சிறந்தவை அனைத்தும் கிடைக்கவேண்டும். நம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த அனுபவங்கள் வாய்க்கவேண்டும். எனவே தாப்பர் வந்தாகவேண்டும்.

இன்னொருமுறை நான் இட்லியோ பொங்கலோ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அதே ஆரவாரத்தோடு முதுகைத் தட்டி, ‘சரி, தாப்பர் வேண்டாம். ராமச்சந்திர குஹாவை அழைத்து வரமுடியுமா?’ என்றார். ‘எல்லா வசதிகளும் செய்துவிடலாம். நல்ல கேமரா இருக்கு. பெரிய ஸ்க்ரீன் வைத்துவிடலாம். இரண்டாயிரம் மாணவர்களைத் திரட்டலாம். ஆசிரியர்கள் அனைவரும் இருக்கட்டும். இரண்டு மணி நேரம் கலந்துரையாடல். மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும், குஹா விவாதிக்கட்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குஹா போன்ற ஒருவரை அவர்கள் ஒருமுறை பார்க்கமுடிந்துவிட்டால் அதன்பிறகு அவர்கள் ஏன் வரலாற்றில் ஆர்வம் கொள்ளமாட்டர்கள்?’

இன்னொரு மாலை நேரம். அகண்டு விரிந்திருக்கும் விளையாட்டு மைதானத்தில் தொலைவில் துள்ளித் துள்ளி தாவிக்கொண்டிருந்த மயிலை வேடிக்கை பார்த்தபடி நடை பயின்றுகொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டேன். ‘நியூ யார்க் டைம்ஸ், நியூ யார்க்கர், கார்டியன் இப்படி என்னென்ன முக்கியமான இதழ்கள் வருகின்றன என்றொரு பட்டியலை உருவாக்கிக்கொடுக்கமுடியுமா? நம் நூலகத்துக்கு எல்லாவற்றையும் வரவழைப்போம். வாங்கி வைத்தால்தான், இது என்ன என்று எடுத்துப் பார்ப்பார்கள். நோட்டமிடுவார்கள். நான்கைந்து விஷயங்களாவது தெரிந்துகொள்வார்கள்.’

பெருமாள் முருகன், சலபதி, டி.எம். கிருஷ்ணா, ச. தமிழ்ச்செல்வன், சுகுமாரன், த.வி. வெங்கடேஸ்வரன், பாஸ்கர் சக்தி, ஆதவன் தீட்சண்யா, கவிஞர் வெய்யில் நாரயணி சுப்பிரமணியம், யுகபாரதி என்று தொடங்கி பல்துறை சார்ந்தவர்களை, நண்பர்களை இப்பள்ளியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பதற்காக வரவேற்கப்பட்டவர்கள் இவர்கள். ஓவியர் மருது எடுத்தவொரு வகுப்பில் ஆவென்று வாய் பிளந்து நின்று ஒரு மாலை நேரத்தை‌ அருமையாகத் தொலைத்திருக்கிறேன். எப்போதும், ஏதோவொன்றுக்காக, எதை நோக்கியாவது ஓடிக்கொண்டே இருக்கும் ஆசிரியர்கள் ரூபாவோடும் பரிமளாவோடும் இணைந்து ஓடி, பலவற்றை விவாதித்திருக்கிறேன். மாணவர்களின் எதிர்காலம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதுவே அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதிரிப் பள்ளியாக சமயபுரம் எஸ்.ஆர்.வியை வளர்த்தெடுக்கவேண்டும் எனும் பெருங்கனவை அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரும் ஏந்தி நிற்பதைக் காண்கிறேன். அந்தக் கனவு மெய்ப்படும். மெய்ப்படவேண்டும்.

எஸ்.ஆர்.வியில் ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் நான் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறேன். மாணவர்களும் ஆசிரியர்களும் எழுப்பிய கேள்விகள். நான் எடுக்கும் வகுப்புகள். ஒவ்வொருமுறையும் தோன்றும் விவாதங்கள். அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிப் பாடப்புத்தகங்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு மீள்வாசிப்பு செய்யும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தொடங்கி பட்டப்படிப்பு பாட நூல்கள்வரை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். கனவு வளர்ந்துகொண்டிருக்கிறது.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *