நின்று ஆற்றத்தான் தெரியாது, அமர்ந்து எழுதவாவது செய்யலாம் என்றால் இந்த நன்றியுரை எனும் துள்ளும் மீன் நழுவி, நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என் கரங்களிலிருந்து.
நீ எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறாய் என்று என்னிடம் யாராவது இயல்பாகக் கேட்டால்கூட, அதை சாக்ரடீஸ் கேள்வியாக மாற்றிக்கொண்டு மெய்யியல் தேடலில் இறங்கிவிடுவது என் வழக்கம். இத்தனை என்று எல்லாரையும்போல் ஓர் எண்ணை என்னால் இதுவரை சரியாக எவருக்கும் அளிக்க முடிந்ததில்லை. நினைவுக்கோளாறு (அதுவும்கூட உண்டுதான்) மட்டுமல்ல இது. எந்த அடிப்படையில் என் நூல்களைக் கணக்கிடுவது எனும் ஐயத்திலிருந்து மூண்ட மயக்கமே காரணம்.
நண்பர்களோடு இணைந்து ஆரம்பத்தில் நான் எழுதிய ஒன்றிரண்டு நூல்களைத் தனியே நான் சொந்தம் கொண்டாட முடியாது என்பதால் அவற்றை நான் எங்கும் சேர்த்துக்கொண்டதில்லை. காஸ்ட்ரோ, சே, மாவோ, லெனின், ஸ்டாலின் தொடங்கி பொது வாசகர்களுக்காக நான் எழுதியவற்றைக் கணக்கிடலாம் என்றால் எடுக்கவா, கோக்கவா குழப்பம் தோன்றிவிடுகிறது. இவற்றில் என்னென்ன நூல்கள் என் இதயத்துக்கு இப்போதும் நெருக்கமானவையாக இருக்கின்றன, எவையெவை எனக்கு நிறைவை அளிக்கின்றன, எவற்றை நான் என் நூல்கள் என்று உயர்த்திக் காட்ட முடியும் என்று யோசித்தால் சிலவற்றை என் பட்டியலிலிருந்து தனியே பிட்டு எடுத்து வைக்க வேண்டியிருக்கும். அவையெல்லாம் காந்தி கணக்கில் வரும்.
இதே நூல்களை அளவு சுருக்கி, மேலும் எளிமைப்படுத்தி மாணவர்களுக்கான குறுநூல்களாக ‘ப்ராடிஜி’ எனும் தனிப்பிரிவின்கீழ் கொண்டுவந்தோம். ஆனால், பெரிய நூல்களையே இரக்கமின்றிக் கீழே உருட்டிவிடும்போது குட்டிப்புத்தகங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அப்படியொன்றும் மாபாதகச் செயலல்ல அல்லவா?
இளம் வாசகர்களுக்கான எனது நூல்களை இந்து தமிழ் திசை, பட்டர்ஃபிளை புக்ஸ், வானம் ஆகிய மூன்றும் வெளியிட்டிருக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்தால் எவ்வளவு வரும் என்பது அடிக்கடி எனக்கு மறந்துவிடும் என்பதால், யாரேனும் குறிப்பிட்டுக் கேட்டால் அப்போது தோன்றும் எண்ணிக்கையைச் (கூடக்குறைய இருக்கும்) சொல்வேன்.
சிறு வயதில் நான் ஒரு சிவப்புக் கம்பளிச் சட்டை வைத்திருந்தேனாம். வெயில் கொளுத்தினால்கூட அதைத்தான் போட்டுக்கொள்வேன் என்று அடம்பிடிப்பேனாம். அதைத் துறப்பதற்கு எனக்கு நீண்டகாலம் எடுத்தது என்று அம்மா சொல்வார். கடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் யாரோ ஒருவர் என்னுடைய ரொமிலா தாப்பரை எடுத்துவந்து, என்னையும் அடையாளம் கண்டு நெருங்கி, இதற்கு முன்னால் என்னென்ன எழுதியிருக்கிறீர்கள் என்று விசாரித்தபோது வரலாறு எனும் கற்பனை, அசோகர், ஹிட்லர், வதைமுகாம்கள், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை என்று சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டேன். பத்துப் புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டபோது இருக்கும் என்றேன்.
கால ஓட்டத்தில் நூலும் விரியும், சுருங்கும். விரிந்து பார்த்ததில்லை, என் நூல் சுருங்குவதை உணர்ந்திருக்கிறேன். நான் வளர்ந்துவிட்டேன் என்பதல்ல பொருள். நான் இயங்கும் துறை குறித்த புரிதல் அதிகரித்திருப்பதால், திருத்தமாகச் சில அரசியல் பார்வைகள் மாறியிருப்பதால், உள்ளடக்கம் மட்டுமல்லாமல் எழுதும் முறையும் மாறியிருப்பதால் நேரும் விளைவு இது.
சிவப்புக் கம்பளிச்சட்டையைப் போட்டுக்கொண்டு, கண்களைப் பாதி மூடியபடி அப்பாவின் கையைப் பிடித்தபடி நிற்கும் என் சிறு வயது படத்தைப் பார்க்கும்போது அது நான்தான் என்றும் நானில்லை என்றும் ஒரேநேரத்தில் தோன்றுமல்லவா? அப்படித்தான் என் ஆரம்பக்கால நூல்களை எங்காவது காண நேர்ந்தால், யாரேனும் அது குறித்து நல்லவிதமாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தால், ஆம் நான் எழுதியது, இல்லை நான் எழுதவில்லை என்று ஒரே நேரத்தில் தோன்ற, அசட்டு நாணம் பிடுங்கித் தின்ன ஆரம்பித்துவிடும். தயாராக இருக்கும் சமாளிப்புப் புன்னகையோடு அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவேன்.
ஆனால் கடந்த ஜூன் 4 அன்று எனது ஐம்பதாவது பிறந்தநாளை முன்வைத்து என் நூல்கள் குறித்துப் பலரும் உரையாடியதைச் சிறு எதிர்ப்புமின்றி அமர்ந்து, கேட்க வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டது. ‘இருள் என்பது குறைந்த ஒளி’ என்பதை எழுத்துக் கோட்பாடாக மட்டுமல்ல, வாழ்க்கைக் கோட்பாடாகவும் வரித்துக்கொண்டிருக்கும் ஒருவனின் வானில் நூறு கதிரவன்கள் ஒரே நேரத்தில் தோன்றினால் தாங்குமா? நாற்பத்தொன்பது குட்டிப்பாம்புகளைத் தாவித் தாவி வந்தவன், ஐம்பதாவது பெரிய பாம்பில் சிக்கிக்கொண்டுவிட்டேன். ஏற்புரை என்று சுஜாதா அழைத்தபோது என் மனத்துக்குள் மறுப்புரைதான் ஓடிக்கொண்டிருந்தது. சொன்னதை இருமுறை சொன்னேன். சொல்ல நினைத்ததை மறந்தேன்.
ஜூலியஸ் சீஸரைச் சொல்லாமல் குத்தினார்கள். என் நண்பர்கள் வாழும் வள்ளலார்கள் என்பதால் நல்ல நேரம் பார்த்து, தேதி குறித்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இடம்பிடித்து, எல்லாருக்கும் சொல்லியனுப்பி, வெளியூரிலிருந்தும் அழைத்து வந்து, வடையும் கொழுக்கட்டையும் பாதாம்பாலும் வளைத்து வளைத்துப் பரிமாறி, ஒரே மாதிரியான புதுச் சட்டையெல்லாம் எடுத்துக்கொடுத்து, நேரில் வர இயலாதவர்களின் கரங்களை முறுக்கி அவர்களிடமிருந்து காணொளி வாழ்த்துகள் பெற்று… பிறகு நிதானமாகக் குத்தினார்கள். சீஸருக்கு முதுகில். எனக்கு நேரடியாக இதயத்தில்.

அதே இதயத்திலிருந்து நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. வள்ளிதாசன் தன்னை இயன்றவரை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தைக் குறுகிய காலத்தில் சொல்லிக்கொளும்படியாக வளர்த்தெடுத்தவர் என்றாலும் திரைக்குப் பின்னால் அமைதியாக இயங்குவதையே விரும்புபவர். இச்சதிச் செயலுக்கான செயல்திட்டம் அவர் வகுத்தது என்பதை அறிய நேர்ந்தபோது, புரூட்டஸ்தான் நினைவுக்கு வந்தார். நன்றி, வள்ளி.
ஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன், நான் மூவரும் 2004ஆம் ஆண்டு, ஒரு மழைக்காலப் பொழுதில் முதல்முறையாகக் கல்கி அலுவலகத்தில் சந்தித்து புன்னகைத்துக் கொண்டோம். மூவரையும் ஒரே நேரத்தில் நேர்காணல் செய்து, ஒரே நேரத்தில் பகுதிநேரப்பணியில் இணைத்துக்கொண்டார் ஆசிரியர் சீதா ரவி. இணைப்பிதழை ஒருங்கிணைக்கும் பொறுப்புக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த முகில் எங்களோடு இணைந்து நால்வரானார். கையோடு எஸ். சுஜாதாவும் எங்கள் வளையத்துக்குள் சிக்கிக்கொள்ள, நாங்கள் ஐவரானோம். முகில் மேடையில் குறிப்பிட்டதுபோல் நடந்து முடிந்தது எங்கள் ஐவருக்குமான விழா.
கல்கி குழுமத்தில் முழுநேரப் பணியில் இருந்தவர் சுஜாதா ஒருவர்தான். கோகுலத்தின் பொறுப்பாசிரியர். சென்னை ஸ்கேனில் எழுதத் தொடங்கிய என்னை கோகுலத்தில் எழுதவைத்ததன்மூலம் இளம் வாசகர்களுக்கான உலகின் கதவை எனக்காக அவர் திறந்துவைத்தார். இந்து தமிழ் திசைக்கு அவர் குடிபெயர்ந்தபோது சாமான் செட்டுகளோடு சேர்த்து என்னையும் கொண்டு சென்றதன் விளைவாக 175 கட்டுரைகளை மாயா பஜாரில் எழுதினேன். ஏழு நூல்களாக அவை அங்கே வெளிவந்தன. அவற்றில் பெண்களின் குரல்களை மட்டும் தொகுத்து ஒரு நூலாகவும் (உன் உலகம், என் உலகம், நம் உலகம்) லூனாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் இன்னொரு நூலாகவும் (How To Humanize God?) அன்று வெளியிடப்பட்டன. பட்டர்ஃபிளை புக்ஸ் வெளியீடுகள். பிறந்தநாள் புலிமீது போர்த்தப்பட்ட பசுந்தோல் இந்த வெளியீடு.
ஒரே நேரத்தில் தீவிர வாசகராகவும் தீவிர நண்பராகவும் ஒருவரைப் பெற்றிருப்பதன் சாதக, பாதகங்களை வேறெவரையும்விட அதிகம் அறிந்தவன் நான். நான் மறக்கவும் மறைக்கவும் விரும்பும் தொடக்ககால எழுத்துகள் தொடங்கி முந்தாநாள் முகநூலில் எழுதிப்போட்ட இரட்டை வரிகள்வரை அனைத்தையும் நினைவுகளில் சேகரித்து வைத்திருப்பவர் சுஜாதா. உலகைத் தெரிந்துகொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றன. என்னைப் பற்றி இரண்டு பத்தி யாராவது திடீரென்று கேட்டால் என்ன சொல்வது? படம் அனுப்புங்கள் தோழர், அழைப்பிதழ் தயார் செய்ய வேண்டும் என்று யாராவது அழைத்தால் எங்கே சென்று தேடுவது? உங்கள் நூல் பட்டியல் வேண்டும், 2 விநாடிகளில் அனுப்ப முடியுமா என்று ஏதோ ஓர் அமைப்பு உறக்கத்திலிருக்கும் என்னை எழுப்பிக் கேட்டால் யாரிடம் ஓடுவது? இந்தக் குழப்பம் எனக்கு இதுவரை தோன்றாததற்குக் காரணம் சுஜாதா. என் நூல்களில் பிழைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்குக் காரணமும் அவர்தான். சுஜாதாவுக்கு நன்றி.
எப்படி என் வீட்டார் அனைவரையும் அவருக்குத் தெரியுமோ, அதேபோல் (ஆனால் அதே அளவல்ல) அவர் வீட்டாரையும் நான் அறிவேன். அவர்களில் பலர் தாமாகவே என்னை வாசிப்பவர்களா அல்லது இவர் கட்டாயத்தின்பேரிலா என்று தெரியாது. ஆனால் அனைவருமே என்மீது அன்பைப் பொழிபவர்கள். அம்மாவின் வாழ்த்துச் செய்தியைக் காணொளியில் கண்டேன். நன்றி அம்மா. சுஜாதாவின் அப்பாவையும் (தோழர் சுத்தானந்தம்) இந்நேரம் நினைத்துக்கொள்கிறேன்.
எப்படி அமைந்ததோ தெரியாது ஆனால் கல்கியில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தோம். முத்து அரசியலை அணைத்துக்கொண்டாரா அல்லது அரசியல் முத்துவை இங்கே வா என்று இழுத்துக்கொண்டுவிட்டதா என்று தெரியவில்லை. நான் முதலில் நெருங்கியது முத்துவிடம். தேவநேயப் பாவாணர் நூலகம், மூர் மார்க்கெட், ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி என்று தொடங்கி நாங்கள் கூட்டாக நடத்திய புத்தக வேட்டையை டிராகுலாவாலும் கற்பனை செய்ய முடியாது. இன்றுவரை எங்கள் உரையாடலில் நூல்களுக்கென்று ஒரு தனித்த இடம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட், திரைப்படம், இசை என்று தொடங்கி பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்றாலும் முத்துவின் வாசிப்பின், எழுத்தின், சிந்தனையின் மையமாக அன்றுமுதல் இன்றுவரை திராவிட இயக்கம் திகழ்வதைக் காண்கிறேன்.
நுட்பமான ஒரு நூலக அறை முத்துவின் மூளைக்குள் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும். உள்நுழையும் ஒவ்வொரு தரவும் அதனதன் அடுக்குகளில் சென்று அமர்ந்துகொள்ளும். தேவைப்படும்போது வரவழைத்துக்கொள்ளும் ஆற்றல் முத்துவுக்கு உண்டு. நல்லதோர் அறிமுகவுரைக்கும் என் பொருட்டு கூடுதல் நேரம் செலவிட்டு விழா ஏற்பாடுகளை மேற்கொண்டதற்கும் நன்றி முத்து. தனது நூலொன்றில் என்னை உடன்பிறவாத அண்ணன் என்று முத்து குறிப்பிட்டிருப்பார். எனக்கும் முத்து அப்படித்தான். நாங்கள் சந்தித்து உரையாடும் ஒவ்வொரு முறையும் ஒன்று அவர் கை என் தோள்மீது இருக்கும் அல்லது என் கை அவர் தோள்மீது. மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட அந்த உணர்வு வந்துவிடுவது எப்படி என்று எனக்குப் புரிந்ததில்லை.
திரைப்படமும் விளையாட்டும் கண்ணனின் இரு கண்கள். அரசியல், சமூகம் குறித்த விரிவான பார்வையும் உண்டு. எதையும் தோண்டித்துருவி ஒரு வழி செய்துவிடுவதில் வல்லவர். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் எப்படியாவது பகிர்ந்துவிட வேண்டும் எனும் அவர் துடிப்பைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். எழுத்தார்வம் கொண்டவர்களை அமர வைத்துப் பேசிப் படிப்படியாக வழிநடத்துவதில் கண்ணன் தனித்துவமானவர். அறிவுரைபோல் தோற்றமளிக்காத அறிவுரையைத் தேவைப்படுவோருக்கு வழங்கிக்கொண்டே இருப்பார். அவற்றால் பலனடைந்தவர்களைக் கண்டிருக்கிறேன். டிஜிடல் இதழியில் துறையில் கண்ணனுக்கு இருக்கும் நிபுணத்துவத்தை மற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன், எனக்கு அதில் அனா ஆவன்னாகூடத் தெரியாது என்பதால் கேட்கும் ஒவ்வொருமுறையும் ஒரு நண்பனாக மகிழ்ந்திருக்கிறேன். நன்றி, கண்ணா.
ஒற்றை எழுத்துக் கவிதை நூல்களாக (‘ம்’, ‘ஆ’) இயற்றிக்கொண்டிருந்த முகில் கிழக்கில் இணைந்த பிறகு சரித்திரத்தில் நிலைகொண்டார். எங்களைவிட அதிகபட்சம் ஒன்றிரண்டு வாரங்கள் (தினங்களாகக்கூட இருக்கலாம்) சீனியர் என்னும் ஹோதாவில் முகில் கல்கி காலத்தில் போட்ட ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா? எஸ். ராமகிருஷ்ணனிடம் இரண்டு நாள் பேசி, இரண்டரை இரவுகள் கண் விழித்து, இருபத்தியெட்டுப் பக்கங்களில் நான் எழுதிக்கொடுத்த நேர்காணலை இரண்டு பத்திகளுக்குள் அடக்கிவிட்டு எனக்கும் எஸ்ராவுக்கும் இடையில் முதல் உலகப்போரையும் எஸ்ராவுக்கும் கல்கிக்கும் இடையில் இரண்டாம் உலகப் போரையும் ஒரே நேரத்தில் முகில் தொடங்கி வைத்தது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே!
ஆனால் முகில் யார் என்பதை உணர்த்தும் ஒற்றைச் சோற்றுப்பதம் அன்றைய நிகழ்விலேயே காணக்கிடைக்கிறது. பாரா ஒரு நிலையில் என்றால் முத்துராமன் இன்னொரு நிலையில், இன்னமும் நெருங்கி வந்து எங்கள் அனைவருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறார். நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே அருகிலிருந்து கவனித்து என் பிழைகளைப் பலமுறை திருத்தியிருக்கிறார். சில ஒற்றுப்பிழைகளை நான் களைந்ததற்கு அவரொரு காரணம். என் நினைவுகளில் எப்போதும் இருப்பார் என்றாலும் மேடையில் அன்று அவரைக் குறிப்பிட்டுப் பேசவேண்டும் என்று எங்களில் முகிலுக்கு மட்டுமே தோன்றியது. மறைந்த தனது நண்பனின் பெயரைச் சொல்லி முடிப்பதற்குள் முகிலின் கண்கள் நனைந்துவிட்டன. ஐவர் குழு உணர்வுபூர்வமாக ஒட்டியிருப்பதற்கு முகில் எனும் பசை அடிப்படையான காரணம். நன்றி முகில்.
நாங்கள் ஐவரும் அருகருகில் அமர்ந்து, உரையாடி, விவாதித்து, சண்டையிட்டு, கிண்டலடித்து ஒரு மாய உலகை உருவாக்கி அதற்குள் இன்றுவரை மூழ்கிக்கிடப்பதற்குக் காரணம் எங்களைத் தலைமை தாங்கி வழிநடத்திய, பாரா. எழுதக்கற்றுக் கொடுத்தவர். நூலாசிரியனாக என்னை மாற்றியவர். தலைமை ஆசிரியர் என்னும் அலுவல் வட்டத்தை உடைத்து வெளியேறி எங்களோடு கரம் கோத்துக்கொண்டவர். எங்களை எங்களைவிட அதிகம் அறிந்தவர். எப்போதும் அரவணைப்பவர். எப்போதும் இடித்துரைப்பவர். எப்போதும் எங்கள் நலன்கள்மீது அக்கறை கொண்டவர். பாராவுக்கு நன்றி சொல்லி மாளுமா என்ன?

எதை மன்னித்தாலும் மன்னிப்பேன், சலபதியை அழைத்து வந்து பேச வைத்த ஒரு குற்றத்தை மட்டும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டேன். அடுத்தமுறை முத்துவின் தோள்மீது கைபோடும்போது கூடுதலாகப் போட்டு அழுத்த வேண்டும். யாருடனாவது கைகுலுக்க நேர்ந்து நானும் அருகில் இருந்தால் என்னைத் தன் நண்பர் என்று மற்றவர்களிடம் அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருமுறையும், என்னது நான் இவர் நண்பரா என்று என் மனம் ஒரு கணம் துணுக்குற்ற பிறகே மகிழும். சில கணங்களுக்குப் பிறகே அமைதி கொள்ளும். என்னிடமுள்ளதில் அதிக விலை கொண்ட நார்டன் ஷேக்ஸ்பியர் இவர் அளித்த பரிசு. என்னுடைய அலமாரிகளில் நிரம்பி வழியும் நூல்களில் இவர் அளித்தவை கணிசமானவை. மிச்சமுள்ளவை அவர் கண் அயரும்போது அள்ளி வந்தவை என்று சொன்னால் அது மிகையாகா. சமூகக் கொள்ளை என்று எரிக் ஹாப்ஸ்பாம் இதனை வரையறுப்பார். (அப்படி அவர் வரையறுத்த நூலும் அக்கொள்ளையின் ஒரு பகுதியாக என்னிடம் வந்து சேர்ந்துவிட்டதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்).
விரிவும் ஆழமும் என்னும் தலைப்பில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வுலகம் குறித்து ஒரு கருத்தரங்கம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு ஒரு கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. எனக்குக் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாக அத்தருணத்தை நான் கருதும்போது, என் பொருட்டு அவரை அழைப்பது கற்பனைக்கெட்டாத கொடுங்குற்றம் அல்லவா? சலபதி தனது நன்றியுரைக்கு இட்டிருந்த தலைப்பும் நினைவுக்கு வந்து இம்சிக்கிறது. ‘இலுப்பைப்பூ’. (அவர் தன்னை இப்படி அழைத்துக்கொள்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கும் என்றால் என் நூல்களின் எண்ணிக்கை குறித்தும் தரம் குறித்தும் நான் கொண்டிருக்கும் சுயமதீப்பீட்டையும் அதே சமூகம் அங்கீகரிக்கத்தான் வேண்டும். இது வெற்றுத் தன்னடக்கம் அல்ல என்பதையும் உலகம் ஏற்கத்தான் வேண்டும், இல்லையா?) ரொமிலா தாப்பர் தொடங்கி வரிசையாக வரலாற்றாய்வாளர்களோடு நான் மேற்கொள்ளும் உரையாடலின் ஒரு பகுதியாக சலபதி இருக்கிறார். அவருடைய அறிமுகமோ ஆலோசனையோ அறிவுறுத்தலோ திருத்தலோ இன்றி எனது ஒரு நேர்காணல்கூட இதுவரை வெளிவந்ததில்லை. இனியும் வெளிவரும் என்று தோன்றவில்லை. சலபதிக்கு நன்றி.
திருத்தமான உரைக்கு நன்றி, இஸ்க்ரா. மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நல்ல வாசகர், நண்பர். பொதுமக்களுக்கான வரலாற்றாளர் என்று அவர் குறிப்பிட்டதை நான் இன்றிருக்கும் இடம் என்பதாக அல்லாமல் செல்லவேண்டிய தூரம் (மிக, மிகத் தொலைவிலிருக்கிறது) என்பதாகப் புரிந்துகொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் சந்தித்த நாள் முதல் இன்றுவரை மருத்துவ நண்பர் சரத்துடன் தொடர்ந்து உரையாடிவருகிறேன். ஒரு நல்ல எழுத்தாளராக அவர் வளர்ந்திருப்பது உள்ளபடியே பெருமிதம் அளிக்கிறது. நன்றி, சரத்.
இப்போதுதான் என் அணியில் இணைந்தது போலிருக்கிறது. அதற்குள் கடகடவென்று பல நூல்களை எழுதிமுடித்து ஆச்சரியப்பட வைக்கிறார் நன்மாறன். அறிவியல், அரசியல் இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் பயணிக்கும் மாறன் என் பொருட்டு வருகை தந்ததற்கும் உரையாற்றியதற்கும் நன்றி. கோவையில் தற்செயலாகச் சந்தித்த ராம் அப்பண்ணசாமி கிழக்கின் வலிமைமிக்க ஒரு தூணாக இன்று உயர்ந்திருக்கிறார். ஓர் எழுத்தாளராகவும் தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். இழுத்துப்போட்டுக்கொண்டு பல பணிகளை மேற்கொண்ட ராமுக்கு நன்றி. நாகூர் ரூமி தனது உள்ளார்ந்த அன்பை உரிமையோடு பகிர்ந்துகொண்டார். அவருக்கு நன்றி. வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும் பத்மினியின் கனிவான சொற்களுக்கு நன்றி.
எனக்குப் பேச வராது என்னும் எச்சரிக்கையோடுதான் எந்த மேடையிலும் ஏறுவேன். நானோர் அரிச்சந்திரன் என்பதை நான் வாயைத் திறந்த ஐந்து நொடிகளுக்குள் சபையினர் உணர்ந்துவிடுவர். மீனாவும் அப்படித்தான் அடக்கமாகத் தொடங்கினார் என்றாலும் அரிச்சந்திரனின் நிழலில்கூட அவர் ஒதுங்கியதுபோல் தெரியவில்லை. கதைகளால் வளர்க்கப்படுபவர், கதைகளால் வாழ்பவர் வேறெப்படி இருக்க முடியும், சொல்லுங்கள். மீனாவின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒட்டுமொத்த அரங்கும் ஆர்ப்பரித்ததைக் கண்டபோது ஏற்பட்ட சிலிர்ப்பு (சிரிப்பும்தான்) இன்னமும் அடங்கவில்லை. ’நீ இளம் வாசகர்களுக்காக என்னவோ எழுதுகிறயாமே, ஒரு கதை அனுப்பி வையேன் பார்ப்போம்’ என்று கண்ணன் முதல் முறையாக என்னிடம் கேட்டது மீனா பரிந்துரைத்த பிறகுதான். அன்பு மீனாவுக்கு நன்றியும் அன்பும். அவர் அனுப்பி வைத்திருக்கும் கதையை விரைந்து படிக்க ஏலியனோடு சேர்ந்து நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
எஸ்ஆர்வி பள்ளியை எனது இரண்டாவது வீடாக நான் கருதுவதற்குக் காரணம் அதன் ஆசிரியர்கள். ஒரு வாட்ஸ் அப் குழுவில் ஒரு குடும்பமாக நாங்கள் ஒன்றுதிரண்டு நிறைய விவாதித்துக்கொண்டிருக்கிறோம். மாணவராக இருந்து பிறகு அதே பள்ளியில் ஆசிரியராக மாறியிருக்கும் ரம்யா அனுப்பிய வாழ்த்துக் கவிதைக்கு நன்றி. தனது அன்பையும் வாழ்த்தையும் பதிவுசெய்து பகிர்ந்துகொண்டிருக்கும் நிமலாவேணிக்கும் தமிழாசிரியர் மகாலட்சுமிக்கும் நன்றி. சக எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர், தோழர் நிவேதிதா லூயிஸுக்கு நன்றியும் அன்பும். மேலும் பல உயரங்களை அவருடைய உழைப்பும் ஆற்றலும் அவருக்குப் பெற்றுத் தரும். வாழ்த்து அனுப்பிய நீண்டகால நண்பரும் அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான தோழர் மோகனாவுக்கு நன்றி.
அரசியலில் மட்டும்தான் பத்ரி எனக்கு எதிர் அணி. கடுமையாக வாதிட வேண்டிய தருணங்களில்கூட எப்போதும் அவரிடம் அன்பு மிகுந்திருப்பதையே பார்த்திருக்கிறேன். அவருடைய கனிவான வாழ்த்துச் செய்திக்கு நன்றி. அவரிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன். உங்கள் எழுத்துப் பணிக்குத் துணை நிற்பவர்களைக் குறித்துச் சொல்ல முடியுமா என்று சமீபத்தில் ஒரு நிகழ்வில் கேட்டபோது, பத்ரி குறித்துச் சில நிமிடங்கள் பேசினேன். (பத்ரி பார்த்திருந்தால் என்னப்பா இது, இதையெல்லாம் ஒரு விஷயமா சொல்லியிருக்கே என்று கிண்டலோடு கடந்திருப்பார்). கோயில் மாடு போல் அச்சமின்றி, சுதந்தரமாக அங்குமிங்கும் நான் சுற்றிக்கொண்டிருப்பதற்கும் இன்றுவரை கிழக்கு என் மனத்துக்கு நெருக்கமான ஒரு பணியிடமாக இருப்பதற்கும் காரணம் அவர்தான். நன்றி, பத்ரி.
நான் தொடர்ந்து எழுத்துத்துறையில் இயங்கிவருவதற்குக் காரணம் அம்மாவின் வாசிப்பு ஆர்வம். ஒரு பக்கம் சாய் பாபாவைப் பாராயணம் செய்துகொண்டே இன்னொரு பக்கம், இந்தி கத்திக்குத்துக் கதைகளை இன்றுவரை தொடர்ந்து படித்துவரும் அவருடைய ஆர்வம் அவர் வயதாகும்வரை நான் இருந்தால் எனக்கும் அப்படியே இருக்கும் என்றால் அது போதும் எனக்கு.
வித்யா இத்துறைக்கு வருவாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அவளுடைய மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி பொருட்படுத்திப் பேசுவதைக் கேட்ட பிறகுதான் எனக்கு அவள்மீது நம்பிக்கை வந்தது. வாசிப்பில் ஆர்வம் அதிகம். அதே சாய் பாபா. ஆனால் இந்திக் கத்திக்குத்துப் பதில் ஆங்கிலக் கத்திக்குத்து. வித்யாவோடு இருக்கும் அதே இறுக்கமான பிணைப்புதான் ஜெகனோடும் எனக்கு. என்னுடைய சில ஆரம்பக்கட்ட புத்தகங்களை அவர் வாசித்திருக்கிறார். நான் எழுத வராமல் இருந்திருந்தாலும் அவருக்கு என்னைப் பிடித்திருக்கும். நான் போகவேண்டிய செஞ்சீனாவுக்கெல்லாம் அவர் ஆறு மாதங்களுக்கொரு முறை சென்று வந்துகொண்டிருப்பதுதான் அவரிடம் எனக்கிருக்கும் ஒரே பஞ்சாயத்து.
நான் காஸ்ட்ரோ எழுதிக்கொண்டிருந்தபோது பிறந்த வ்ருத்திக்குதான் அந்நூலைச் சமர்ப்பணம் செய்திருந்தேன். எனது முதல் சமர்ப்பணம். என் குடும்பத்தின் முதல் குழந்தை. இன்றுவரை என் செல்லம். வ்ருத்தியின் கூர்மையான மொழித்திறனைப் பார்க்கும்போது எங்கள் அனைவரையும் உடைத்து நொறுக்கி எழுத்துலகை ஒரு கலக்கு கலக்குவாள் என்று தோன்றுகிறது. வ்ருத்திக்குக் கதை எழுதுவதில் ஆர்வமென்றால், அவள் தங்கை சாய் ஸ்ரீக்குப் படம் வரைவதில். எதையும் கலைநயத்தோடு செய்பவள், ரசிப்பவள்.
தாடியும் மீசையுமான சத்யாவை என் தம்பி என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் கூடாது என்பதற்காக அச்சிடப்பட்ட அனைத்திடமிருந்தும் விலகியிருப்பவன். சிந்தனைகள் அல்ல, செயல்பாடுகள்தான் அவனுக்குப் பிடித்தமானது. கருவியோ புதிய தொழிலோ எதை உருவாக்கினாலும் நூறு சதவீதம் தன்னை ஒப்படைத்துவிடுபவன். சத்யாவின் மனைவி சந்தியாவும் அப்படித்தான். கிண்டல், வேடிக்கை ஆகியவற்றில் இன்னொரு தங்கை. விருது, விழா, புது நூல் எது வந்தாலும் ‘கலக்கறீங்க ப்ரோ’ என்று சொன்ன கையோடு மொபைலை எடுத்து அந்தப் பழைய பூமாலை நகைச்சுவையை (தட்டுனாங்க பாரு) எனக்காகப் போட்டுக் காட்டுவார். அவருக்கு மட்டுமல்ல, குழந்தைகள் தனுஜா, அபினவ் இருவருக்கும் நான் ‘ப்ரோ’. மாயா பஜாரில் நான் எழுதிய ’இடம் பொருள் மனிதர் விலங்கு’ தொடருக்கான தலைப்பை, உள்ளடக்கத்தை நான் பெற்றுக்கொண்டது தனுஜாவுடனான ஓர் இயல்பான உரையாடலிலிருந்து.
அனுஷா என்மீது கொண்டிருக்கும் காதல் அசாத்தியமானது. அதில் எத்தனை சதவீதம் தியாகம் கலந்திருக்கிறது என்பதை இதுவரை என்னால் கண்டறிய முடிந்ததில்லை. அனுஷா அளவுக்கு என்னை நம்பியேற்கும் இன்னொருவர் இல்லை. எங்கள் வாழ்வின் வண்ணம், லூனா. மொழிவளம், எழுத்து வேகம், வாசிப்பார்வம் என்று அனைத்திலும் மிஞ்சி நிற்பவள். என்னைவிட உயரம் என்றாலும் எனக்கென்னவோ குழந்தைதான்.

விழா ஆரம்பிக்கும் முன்பே வந்து காத்திருந்த நண்பர் பௌத்த அய்யனார், குடும்பத்துடன் வந்திருந்து புத்தகத்தைப் பரிசளித்த அக்களூர் இரவி, மூர்த்தி கிளாசிகல் நூலொன்றைப் பரிசளித்த நண்பர் ஏ.பி. ராஜசேகரன், இளங்கோவன் ராஜசேகரன், சோம. வள்ளியப்பன், சொக்கன், வீ.பா. கணேசன், பாஸ்கர் சக்தி, சந்துரு, சித்ரா பாலசுப்ரமணியம், ஜெ. ராம்கி, கி. ரமேஷ், ஜனனி ரமேஷ், வெண்பா, கார்குழலி, ஷோபனா நாராயணன், கார்த்திகா குமாரி, கே.ஆர். அதியமான், கார்த்திகேயன் புகழேந்தி, ஸ்ருதி டிவி கபிலன், குமரன், சைதை முரளி, முத்துகணேஷ், செலினா பிரபு, பூமா ப்ரியா, நந்தினி, பால சரவணன், ராஜேந்திரன், சுட்டி கணேசன், சுவாமிநாதன், சொக்கலிங்கம், பச்சக்கிளி, ரம்யா ராகவன், ஈஸ்வரி முகில், நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய அருந்ததி கதிரவன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்.
சிட்டுக்குருவிக்குத் துளிபோல் ஒரு கால் என்றார் பாரதி. நன்றி என்பதும் அதேபோல் சின்னஞ்சிறிய ஒரு துளிச்சொல்தான். கரங்களிலும் இதயத்திலும் சுமக்கமுடியாத கனத்தைச் சுமந்துகொண்டு அன்று வீடு போய்ச் சேர்ந்த என்னை மீட்டெடுத்துக்கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. அதுவே இந்தத் தாமதத்துக்குக் காரணம். இதில் நிச்சயம் விடுபடல்கள் இருக்கும். விழாவுக்கு வந்த ஒவ்வொருவரையும் அறிவேன். வர இயலாமல் அழைத்த ஒவ்வொருவரும் நெருக்கமானவர்கள்தாம்.
அன்பு. அளவிட முடியாத அளவுக்குப் பெருகி நிற்கும் அன்பு. வாழ்ந்தும், வாசித்தும், எழுதியும், எழுதாமலும் நான் சம்பாதித்தது அதுவொன்றுதான் என்பதை நண்பர்களின் விழா எனக்குப் புரியவைத்தது. ஈடாக அளிக்க எதுவுமில்லாவிட்டாலும் நான் பெற்றுக்கொள்ள விரும்புவது அதை மட்டும்தான். என் நினைவுகளில் என்றென்றும் அந்த அன்பு தேங்கி நிற்கும்.
0

