இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே அது பெரும்பாலும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத்தான். இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கும் கிடைத்திருக்கும்.
டெல்லி – ஆக்ரா – ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய முக்கோண சுற்றுலா வழித்தடம்தான் வட இந்திய சுற்றுலாவுக்குத் திட்டமிடும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் முதல் விருப்பத் தேர்வு.
அத்துடன் அமிர்தசரஸ், ஹரித்வார், சிம்லா, குலு மணாலி, முசௌரி, ஜோத்பூர், வாரணாசி, அலஹாபாத், கயா, உஜ்ஜைனி உள்ளிட்ட புகழ்பெற்ற வட இந்திய சுற்றுலா மற்றும் ஆன்மிக தளங்கள் பலவும் டெல்லியில் இருந்து ஓர் இரவு பயண தூரத்தில்தான் அமைந்துள்ளன. இதனால் முதலில் டெல்லிக்குச் சென்று, அதன்பிறகு அதனுடன் சேர்ந்து இந்த இடங்களில் சிலவற்றைச் சுற்றிப் பார்ப்பவர்களும் உண்டு.
அந்த வகையில், டெல்லியையும் அதைச் சுற்றிலும் இருக்கும் பல மாநிலங்களில் அமைந்துள்ள பல்வேறு இடங்களையும் காணும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. சிறு வயதிலிருந்து நான் கேள்விப்பட்ட இடங்களை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தால் பயணிக்கத் தொடங்கினேன். அதற்கான வாய்ப்புகள் எனக்கு எளிதாக அமைந்தன.
ஆர்வத்தாலும் வாய்ப்புகளாலும் நாடு முழுவதும் பயணித்தேன். அந்தப் பயணங்கள் தந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் அலாதியானவை. பன்முகத்தன்மை அடங்கிய நம் நாட்டைப் புரிந்துகொள்ளவும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் இந்தப் பயணங்கள் எனக்குப் பெரிதும் உதவின. நம்மைச் சுற்றி நாமே அமைத்துக்கொண்டிருக்கும் வட்டத்தைத் தாண்டி இயங்கும் பரந்துவிரிந்த ஓர் உலகை அவை எனக்கு அறிமுகப்படுத்தின.
தனிப்பட்ட அனுபவங்களைத் தாண்டி இப்பயணங்கள் வழியாகப் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். முன்பின் தெரிந்திடாத நபர்களின் நட்பும் கிடைத்தது. அத்தகைய அனுபவங்களையும், விஷயங்களையும், நபர்களையும் கொஞ்சம் வரலாற்றுடன் இணைத்து இந்தத் ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ தொடரின் வழியாக உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்!
0
மாவீரன் அலெக்சாண்டரை எந்நாளும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு மறக்கமுடியாத ஒரு வாழ்நாள் அனுபவத்தைக் கொடுத்தது என் முதல் பயணம். அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பு ஒரு குட்டிக் கதை!
இரண்டாம் பிலிப்பின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் அலெக்சாண்டர் 336ஆம் ஆண்டில் கிரேக்க மன்னராகப் பொறுப்பேற்றார். அரியணையேறிய கையோடு, உலகத்தை வெற்றிகொள்வதைத் தனது வாழ்நாள் லட்சியமாகப் பற்றிக்கொண்டு அவர் வாளை ஏந்தினார். பாரசீகம், துருக்கி, சிரியா, எகிப்து எனக் கால்பதித்த பகுதிகளிலெல்லாம் அலெக்சாண்டருக்கு வெற்றி மட்டுமே கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாகத் தன் சிறு வயதிலிருந்து செவிவழிச் செய்தியாகக் கேட்டு வந்த கனவு தேசமான இந்தியாவை நோக்கி 327ஆம் ஆண்டில் பெரும்படையுடன் கிளம்பினார் அலெக்சாண்டர். வழியிலிருந்த ராஜ்யங்களிலும் பழங்குடியின பகுதிகளிலும் எழுந்த எதிர்ப்புகளைத் திறமையாகச் சமாளித்து முன்னேறியது அவரது தலைமையிலான கிரேக்கப் படை.
இந்தியத் துணைக் கண்டத்தின் வட நிலப்பரப்பில் அச்சமயம் நந்த சாம்ராஜ்யத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. பாட்னாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்த நந்தர்கள் படைபலம்மிக்கவர்களாக இருந்தனர். நந்தர்களைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டுமானால் முதலில் வடமேற்கு காந்தார பிரதேசத்தில் இருந்த குறுநில ராஜ்யங்களுடன் மோதி கிரேக்கப் படை வெற்றிபெறுவது அவசியம்.
காந்தாரத்தைச் சேர்ந்த தட்சசீலப் பகுதியை அம்பி என்கிற மன்னர் அச்சமயம் ஆட்சி செய்துகொண்டிருந்தார். சிந்து நதியைக் கடந்து படையுடன் அலெக்சாண்டர் வந்துகொண்டிருக்கும் தகவல் அம்பிக்குக் கிடைத்தது. கிரேக்கப் படையை எதிர்த்துப் போரிட அவர் துணியவில்லை. அலெக்சாண்டரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த அம்பி, தன்னுடைய படைவீரர்களை அளித்து அவருக்கு உதவி செய்தார்.
அம்பி சரணடைந்துவிட்டதால் அலெக்சாண்டரால் ஆசுவாசப்பட்டுவிட முடியாத சூழலே அச்சமயம் இருந்தது. ஏனென்றால் இந்திய நிலப்பரப்பின் மையப் பகுதிக்குள் நுழைய, இயற்கை அமைத்துத் தந்த தடுப்பு அரண்களாக இருந்த ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ் ஆகிய நதிகளை ஒவ்வொன்றாகக் கடக்கவேண்டும். மேலும், அவற்றை அப்படி வெறுமனே கடந்தால் மட்டும் போதாது. அப்பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குறுநில மன்னர்களிடமோ அங்கிருக்கும் பழங்குடியின குழுக்களிடமோ போரிடவும் வேண்டும். அதன்பிறகே நந்தப் படையை எதிர்கொண்டு இந்தியாவை வெற்றிகொள்ளும் கனவை ஈடேற்றிக்கொள்ள முடியும்.
தன்னுடைய கனவை நிறைவேற்ற இத்தனைத் தடைகள் இருப்பதை அலெக்சாண்டர் அறியாமலில்லை. ஆனால் எப்பாடுபட்டாவது அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வைராக்கியமும் வேட்கையும் அவரிடம் இருந்தன. அம்பியிடம் விடைபெற்றுக்கொண்டு கிரேக்கப் படை ஜீலம் நதியைக் கடந்தது.
அப்பகுதியின் ஆட்சியாளரான மன்னர் போரஸ் (புருஷோத்தமன்) படையுடன் நதியின் அக்கரையில் காத்துக்கொண்டிருந்தார். குறுநில மன்னர்தான் என்றாலும் அலெக்சாண்டரிடம் பணிந்துபோக அவர் விரும்பவில்லை. தன்னுடைய ஒட்டுமொத்த படையையும் திரட்டிக்கொண்டு வந்து தயாராக நின்றுகொண்டிருந்தார் போரஸ். அலெக்சாண்டர் வருகை தரவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைடாஸ்பெஸ் (ஜீலம் நதியின் கிரேக்கப் பெயர்) போர் அங்கு நடைபெற்றது.
இந்தப் போரில் கிரேக்கப் படை திணறியது. போரஸின் யானைப் படையும் காலாட் படையும் அதற்குக் கடுமையான சவாலை அளித்தன. அலெக்சாண்டர் பதவியேற்ற காலம் தொடங்கி அவரது தலைமையில் பங்கேற்று அதுவரை தோல்வியைக் காணாத கிரேக்கப் படை, அன்று தோல்வியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்ததுகொண்டிருந்தது. சொல்லப்போனால், இந்தச் சண்டையில் அலெக்சாண்டரின் விருப்பத்துக்குரிய குதிரையான பூசிஃபேலஸ் இறந்தேபோயிருந்தது.
பலவகையிலும் பின்னடைவைச் சந்தித்தாலும் அவ்வளவு லேசில் விட்டுக்கொடுக்க அலெக்சாண்டர் தயாராக இல்லை. வியூகங்களை மாற்றினார். கடுமையாகப் போராடினார். இறுதியில் வெற்றி கிரேக்கப் படை வசமானது. ஆனால் அலெக்சாண்டரால் இந்த வெற்றியை முழுமனதுடன் கொண்டாட முடியவில்லை.
ஒரு குறுநில மன்னரான போரசால் இவ்வளவு நெருக்கடியைக் கொடுக்க முடியும் பட்சத்தில், வட இந்திய நிலப்பரப்பை ஆளும் நந்தர்களின் படை எவ்வளவு வலிமையானதாக இருக்கக்கூடும் என்கிற யோசனையில் அவர் ஆழ்ந்தார். அந்த யோசனையின் முடிவில் இந்தியப் படையெடுப்பைக் கைவிட்டுவிட்டு நாடு திரும்ப அலெக்சாண்டார் முடிவெடுத்தார்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்கில் கிரேக்கப் படையால் அதுவரை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் கிரேக்க சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டன. அப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டு தன்னுடைய நாட்டுக்குக் கிளம்பினார் அலெக்சாண்டர். கிரேக்கத்துக்கு திரும்பிச் செல்லும் வழியில், புகழ்பெற்ற பண்டைய நகரமான பாபிலோனில் அவர் உயிரிழந்தார்.
0
பலரையும்போல் என்னுடைய பள்ளிக் காலத்தில் நான் படித்த அலெக்சாண்டரின் இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த இடத்தின் பெயர் மலானா!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மலைக்கிராமங்களில் ஒன்றுதான் மலானா. பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அக்கிராமத்தைச் சென்றடைய சாலைவசதி கிடையாது. குறிப்பிட்ட தூரம் வரை வாகனத்தில் பயணித்தபிறகு, தோராயமாக 4-5 கி.மீ. மலையேற்றத்தில் ஈடுபட்டுதான் மலானா கிராமத்தைச் சென்றடைய முடியும்.
மலைப்பிரதேசமான ஹிமாச்சலில் இப்படிப்பட்ட போக்குவரத்து வசதியற்ற கிராமங்கள் இருப்பது இயல்புதான் என்றாலும், மற்ற கிராமங்களைப்போல் அல்லாமல் மலானா மிகவும் தனித்துவமானது. ஏனென்றால் இந்தக் கிராமவாசிகள் தங்களை அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களாகக் கூறிக்கொள்கிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. ஏனென்றால் சூரிய குலம், சந்திர குலம், ராமரின் வம்சாவழி, கிருஷ்ணரின் வம்சாவழி என்றெல்லாம் கூறிக்கொள்ளும் பலப்பல சாதிகள் நம் நாட்டில் உண்டு. எனவே இதெல்லாம் பெரிதே அல்ல. ஆனால் தங்களை அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களாகக் கூறும் இம்மக்கள், வெளியாட்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதுகிறார்கள்.
இதை மேலும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், மலானா கிராமத்துக்குள் இந்தியர்கள், வெளிநாட்டினர் என வெளியாட்கள் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால் மலானா வாசிகளையோ அவர்களது வீடுகளையோ, உடைமைகளையோ அல்லது கோயிலையோ வெளியாட்கள் யாரும் தொடக்கூடாது. மீறித் தொடும் பட்சத்தில் அத்தகைய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட நபர் கிராமத்தைவிட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்.
வெளியாட்களுடான உடல் தொடர்பு தங்களுக்கு ஆன்மிக ரீதியிலான தூய்மையின்மையை ஏற்படுத்திவிடும் என மலானா வாசிகளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மலானா கிராமத்தின் புனிதத்தன்மையையும் தூய்மையையும் காப்பாற்ற இத்தகைய கட்டுப்பாடுகளை அவர்களது ஜம்லு தெய்வம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உள்ளாட்சி முறையான பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மலானாவில் கிடையாது. ஆனால் அவர்களுக்கான முடிவுகளை எடுக்க இரு சபைகளுடன்கூடிய பிரத்யேகமான ஒரு அமைப்பு உள்ளது. மலானா தொடர்புடைய முக்கிய விவகாரங்களில் இந்த அமைப்பில் வைத்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த அமைப்பை ஜம்லு தெய்வம் வழிநடத்துவதாக அம்மக்கள் நம்புகிறார்கள். இது உலகின் மிகப் பழமையான ஜனநாயக முறை என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.
பிற கிராமங்களைப்போன்ற உள்ளாட்சி அமைப்பு இல்லையென்றாலும், இந்த மக்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தல்களில் கலந்துகொண்டு இவர்கள் வாக்களிக்கிறார்கள்.
வெளியாட்கள் கிராமத்துக்குள் நுழைய அனுமதி உண்டு, ஆனால் தொடுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கிறார்கள். ஆனால் பஞ்சாயத்து ராஜ் முறை இல்லை. இப்படியெல்லாம் முரண்பாடுகளால் நிறைந்திருக்கும் இந்தக் கிராமத்துக்கு எதிர்பாராவிதமாகச் சென்ற எனக்கு, பல அனுபவங்கள் காத்திருந்தன.
(பயணிப்போம்)

