Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

தமிழகத் தொல்லியல் வரலாறு

உலகில் மனித இனம் தோன்றிப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் முதன்முதலில் மனித இனம் தோன்றியது என்பதற்கு இதுவரை சரியான ஆதாரப்பூர்வமான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. உலகெங்கும் வாழும் மனித இனங்கள் தங்களின் பழமையை உணர்த்தப் பல்வேறு சான்றுகளைத் தந்து தாங்கள் தான் உலகின் முதல் மனித இனங்கள் என்பதைக் கூறி வருகின்றனர்.

பண்டைய காலத்தில் மானுட உருவாக்கம் என்பது நதிகளின் கரைகளில் அவர்கள் தங்களின் குடியிருப்புகளை உருவாக்கி வாழத் தொடங்கினர் என்பதைப் பல ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. நீரைச் சார்ந்தே மானுடக் குழு வாழத் தொடங்கின. அந்த வரிசையில் தமிழகத்தில் எங்கெல்லாம் மானுடக் குடியிருப்பு சிறந்து விளங்கியது என்பதற்கு நமக்குப் பல்வேறு இலக்கியத் தரவுகள் கிடைத்தாலும், அறிவியல் பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக அகழாய்வு செய்து நம் பெருமையை நமக்கு அடையாளப்படுத்திய தமிழகத்தின் தொல்லியல் சிறப்புகளை இப்பகுதியில் அகழாய்வு செய்து அறிவோம்.

தமிழகத்தில் திணை சார்ந்த வாழ்வியலை உருவாக்கி, ஊர்களை உருவாக்கி, குடியிருப்புகள் அமைத்து வாழ்வியலை வாழ்ந்த தமிழர்களின் அடையாளத்தை அறியப்படுத்திய அகழாய்வு மற்றும் தொல்லியல் சான்றுகளே நமக்கான வரலாறாகத் திகழ்கின்றன.

‘வடவேங்கம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனர் கூறிய சொற்கள் நமக்கு இன்னும் உயிர்ப்போடு, உணர்வோடு இருந்து வருகின்றது. தமிழகத்தின் வரலாறு எந்தப் பகுதியில் இருந்து தொடங்குகிறது என்பதை ஆராய்ந்தால் ஆதிச்சநல்லூர், ஆனைமலை, கோவலன் பொட்டல், திருத்தங்கல், தேரிருவேலி, கொடுமணல், கீழடி,மாங்குடி ஆகிய அகழாய்வுகள் நமக்கு முக்கியமான பல சான்றுகளை அளிக்கின்றன. குறிப்பிட்ட ஒரு பகுதி என்று இல்லாமல் இன்றைய தமிழகத்தின் பரந்த சமூகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவற்றுள் மேலே கண்ட ஏழு அகழாய்வுகளில் அதிக முறை அகழாய்வுக்கு உட்படுத்திய பகுதியாக நொய்யல் நதியின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் என்னும் பகுதி அடையாளப்படுத்தப்பட்டு இன்றும் அகழாய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கொடுமணல் நெடுங்கல்
கொடுமணல் நெடுங்கல்

தமிழகத்தின் நொய்யல் நதியின் கரையில் கொடுமணல் பகுதியைத் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்திப் பல சிறப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது. அவற்றுள் மிக முக்கியமான சிறப்புகளாக நாம் அடையாளப்படுத்துவது, இந்தப் பகுதியில் மிகப் பண்டைய காலத்தில் உருக்குத் தொழில் மேலோங்கி இருந்ததையும், வணிகத்தில் சிறந்து விளங்கியதையும் எடுத்துக் கொள்ளலாம்.

கொடுமணல் நகரத்தின் சிறப்பு என்னவெனில் சோழநாட்டின் கிழக்குக் கடற்கரை நகரங்களையும், சேர நாட்டின் (இன்றைய கேரளா) கடற்கரை நகரங்களையும் இணைத்த ஒரு வணிகத் தளமாகவும் பண்டைய காலத்தில் கொடுமணல் திகழ்ந்துள்ளது. சங்க இலக்கியங்களில் இதற்குச் சான்றாக

‘கொடுமணம் பட்ட …… நன்கலம்’ (பதிற்று; 67) எனக் கபிலரும்,

‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ (பதிற்று ; 74)

என்னும் இலக்கிய வரிகள் பதிவு செய்கின்றது.

இன்றைய ஊடகங்கள் கீழடியை எவ்வாறு கொண்டாடுகின்றதோ அதே காலத்திற்கு ஒப்பாக அல்லது நிகரான காலப்பெருமையும் வரலாற்றுத் தடங்களும் உள்ளடக்கிய சிறப்பான பகுதியாகக் கொடுமணல் திகழ்ந்துள்ளது. பெரும் வணிகக் குழுக்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பை உருவாக்கி அணிகலன் செய்யும் தொழிலிலும், இரும்புத் தொழிலிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது இந்தப் பகுதி அகழாய்வு மூலம் புலப்படுகிறது.

எகிப்து நாட்டின் வணிகர்கள் மற்றும் ஐரோப்பிய நாட்டு வணிகர்கள் சேர நாட்டின் கடற்கரைத் துறைமுகங்கள் வாயிலாக வருகைபுரிந்து இராசகேசரிப் பெருவழிப் பாதையில் பயணித்து (இந்தப் பாதை இன்றைய வணிகப் பாதையாகவும் திகழ்கின்றது) ஈரோடு மாவட்டம் கொடுமணல் நகரத்தின் அணிகலன்களையும், இரும்புப் பொருள்களையும் கொள்முதல் செய்துள்ளனர் என்பதற்கும் கொடுமணல் பகுதி அகழாய்வுப் பொருள்கள் சான்றாக உள்ளன. ரோமானியக் காசுக் குவியல்கள் இந்தப் பகுதியில் குவியலாகத் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கொடுமணல் ஊரைச் சுற்றி உபதொழில் ஊர்களாகவும், நொய்யல் ஆறு பயணிக்கும் ஊர்களாகவும்,பயணப் பாதை ஊர்களாகவும் உள்ள வெள்ளலூர், சூலூர், வேலந்தாவனம், பேரூர், போளுவாம்பட்டி ஆகிய இடங்களிலும் இதற்குச் சான்றாக அணிகலன்களும் பிறநாட்டின் காசுகளும் கிடைத்துள்ளன.

கொடுமணல் அன்றைய காலத்தில் தமிழகத்தின் மையப்பகுதி வணிக நகரமாகவும், கிழக்குக் கடற்கரை, மேற்குக் கடற்கரை ஆகியவற்றை இணைக்கும் வணிகத் தளமாகவும் இருந்தது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கொடுமணலில் மிக முக்கியமாக நாம் கருத வேண்டியது, எந்தப் பேரரசுச் சான்றுகளும் முதன்மை ஆவணங்களாகக் கிடைக்கப்பெறாமல் வணிக நகரமாக இருந்தமைக்கான சான்றுகளே மிகுதியாகக் கிடைக்கின்றன. இதன்மூலம் வணிகர்கள் தங்களுக்குக் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை அல்லது விற்பனை வரியை மூன்று பேரரசுகளுக்கும் தங்கக் காசுகளாக, அணிகலன்களாகச் செலுத்தியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.

கொடுமணல் அகழாய்வில் குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை கொண்டு குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறியமுடிகிறது. மத்தியத் தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாகக் குதிரைகள் ஏராளமாகச் சேர நாட்டின் துறைமுகங்களில் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இரும்பை உருக்கும் தொழிற்சாலைகள், அணிகலன்கள் செய்யும் தொழில்கள் எனப் பல்வேறு தொழிற்சாலைகள் இந்தப் பகுதியைச் சுற்றிலும் இருந்துள்ளன என்பது கொடுமணல் அகழாய்வு மூலம் நமக்குக் கிடைக்கின்றது.

19ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கொடுமணல் பகுதியை ஆங்கிலேயர்கள் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குக் காரணிகள் பலவாக இருக்கலாம். 1950 களில் சீனிவாச தேசிகர் என்பவர்தான் கொடுமணல் பகுதியில் முறையாக அகழாய்வை மேற்கொண்டார் . சீனிவாச தேசிகர் மேற்கொண்ட ஆய்வில் மிகப்பழைய காலத்து கல்லறை ஒன்றையும், சங்க மணிகள் சிலவற்றையும் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார். அதன் பின்னர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தினர் இந்தப் பகுதியை ஆய்வு செய்தனர்.

தொல்லியல் ஆய்வுகளில் பல சிக்கல்களும் முரண்களும் நமக்கு இருந்தாலும் இந்தத் தொழிற்சாலை நகரத்தின் தொன்மைச் சிறப்புகளைத் திரு. சீனிவாச தேசிகர், திரு. செ.இராசு, திரு. நாகசாமி, திரு. பூங்குன்றன், திரு. இராஜன் ஆகியோர் வெளிப்படுத்திய சான்றுகள் இந்தப் பகுதியின் தொன்மையை அறியச் செய்கின்றன. சங்க இலக்கியச் சான்றுகளை மையமாக வைத்து தொல்லியல் ஆய்வாளர் செ. இராசு அவர்கள், சங்க கால கொடுமணம் என்ற ஊர் தான் இன்றைய கொடுமணல் என்பதையும் நிறுவினார்.

கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் எழுத்துகள் கொடுமணல் பகுதியில் சான்றுகளாக, ஆவணங்களாக அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்தப் பகுதியில் கிடைத்த மண்பாண்டங்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் இந்தப் பகுதி மக்கள் அன்றைய காலத்திலேயே மிகச் செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதும் இந்த அகழாய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

கொடுமணல் மண்பாண்டங்கள்
கொடுமணல் மண்பாண்டங்கள்

கொடுமணல் பகுதிகளில் கிடைத்த மண்பாண்டங்களில் ஆதன், குதிரன், சம்பன் ஆகிய பெயர்கள் கிடைத்தன. இப்பெயர்கள் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பெயர்களாக அல்லது அந்தப் பகுதி வணிகக் குழுவின் தலைவர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகின்றது. ஓடுகள் வைத்து செம்மையான முறையில் வீடுகளும், பொருள்கள் செய்யும் ஆலைகளும் அமைத்த இந்தப் பகுதிக்கு இந்தக் காலத்தில் அவ்வூர் மக்கள் வழங்கும் பெயர் என்ன தெரியுமா? அகழாய்வுகள் அதிகமாக நடைபெற்றமையால், அங்குள்ள ஓடுகளைச் சுத்தம் செய்தமையாலும் அந்தப் பகுதியை ஓடு கழுவுற எ(இ)டம் என்றே வழங்கி வருகின்றனர்.

கொடுமணல் ஆய்வோடு தொடர்புடைய ஊராக நாம் கருதவேண்டியது வேலாந்தாவளம் என்னும் ஊர். ஆம் அயல் நாட்டு வணிகர்கள் தங்கும் சத்திரங்கள் மிகுந்திருந்த பகுதியாக இந்தத் தாவளம் என்ற பெயருடைய ஊர்கள் இருந்ததை அறிய முடிகின்றது. இந்தப் பகுதிகளில் ரோமானியக் காசுகளும் கிடைத்துள்ளதைக் கொண்டு அதை உறுதியாக அறிய முடிகின்றது.

1950களில் கொடுமணல் பகுதியை ஆய்வுக்கு உட்படுத்திய சீனிவாச தேசிகர் தொடங்கி செ. இராசு வரை மூன்று வகையான கல்லறைகளை அடையாளப் படுத்தி உள்ளனர். குத்துக்கல் கல்லறை, வட்டக்கல் கல்லறை, முதுமக்கள் தாழி என்பனவாக அமைந்த இந்தக் கல்லறைகள் சமூகப் பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.

தமிழகத்தில் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே கல்வி அறிவில், வணிக அறிவில், தொழில் அறிவில், பண்பாட்டு அறிவில் சிறந்த மானுடர்கள் வாழ்ந்த கொடுமணலை இன்னும் கொஞ்சம் ஆராயலாம்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

7 thoughts on “தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்”

  1. சிறப்பான பதிவு. வேளாந்தாவலம் அருகே யானை பாறை ஓவியங்கள் கிடைக்கிறது

    1. ஆழமான ஆய்வுக் கட்டுரை பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  2. இந்த கட்டுரை எழுதிய தம்பி்ன் அயராத உழைப்பு அகழ்வாராய்ச்சியின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் வெளிப்படுகிறது.
    இந்தக் கட்டுரை படித்து முடிக்கும் வேளையில் காலப் பாதையில் பின்னோக்கி பயணித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.

  3. Kuppuraj Ramasamy

    காவிாிப் பூம்பட்டினத்தின் மற்றொரு பெயா் – காகந்தி என ஒரு போட்டித் தோ்வு வினாத்தாளில் பாா்த்தேன். அதன் ஆதாரத்தை தேட முயன்ற போது தங்களின் தொல்லியல் தொடா்பான கட்டுரைகளை காண நோ்ந்தது.
    அற்புதமான தகவல்கள் ஆராய்ந்து தந்த தங்களின் உழைப்பிற்கு என் வாழ்த்துக்கள். இது புத்தகமாக வெளிவரும் போது தகவல் கொடுங்கள். வாங்கி அனைவருக்கும் பாிசளிக்க உகந்த வரலாற்றுப் பெட்டகம்.
    நன்றி

    1. vaidehi

      தமிழகத் தொல்லியல் வரலாறு புத்தகத்தை…

      *ஆன்லைனில் வாங்க*
      https://www.amazon.in/dp/B0DQGQRZTG
      https://dialforbooks.in/products/9788198356369_

      *போன் மூலம் வாங்க*
      டயல் ஃபார் புக்ஸ் ✆ 94459 01234 | Whatsapp 95000 45609 |✆ 044 49595818 | ✆ 044 42009603
      (டயல்ஃபார்புக்ஸை அழைத்தால், கால் டைவர்ட் ஆகி, ரிங் சத்தம் கேட்கும்வரை காத்திருக்கவும்).

Comments are closed.