நகர அமைப்புகள் ஆற்றின் கரையிலேயே அமைக்கப்படும் என்பதுபோல வேகவதி ஆற்றின் கரையிலும், பாலாற்றின் கரையிலும் பண்டைய நகர அமைப்புகள் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. பல்லவ வரலாறுகளிலும் சோழ வரலாறுகளிலும் கொண்டாடப்பட்ட காஞ்சிபுரம், தொல்லியல் சுவடுகள் நிறைந்த ஊர்.
தஞ்சாவூர் திருக்கோயில் கல்வெட்டில் ‘பொன் மாளிகை துஞ்சிய தேவர்’ என்று சுந்தர சோழர் பற்றிய பதிவுகள் பதிவு செய்திருப்பர். சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் தன் தந்தையை காஞ்சி பொன் மாளிகைக்கு வரச்சொல்லி வற்புறுத்தியதையும், ஆதித்த கரிகாலன் மரணத்திற்குப் பிறகு சுந்தர சோழர் காஞ்சி பொன் மாளிகை சென்றதையும் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.
காஞ்சிபுரம் திருமால்புரத்தில் உள்ள மணிக்கண்டிசுவரர் கோயிலில் ஆதித்த கரிகாலன் பொன் மாளிகை கட்டிய செய்திகள் இடம்பெறுவதோடு, அந்தக் கோயிலில் விளக்கு எரிப்பதற்கான உதவிகளை காஞ்சி பொன் மாளிகையிலிருந்து வழங்குகிறேன் என்று சுந்தர சோழர் குறிப்பிடும் கல்வெட்டும் இதனை உறுதி செய்கின்றன.
காஞ்சிபுரம் பகுதியில் தொல்லியல் துறையால் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பொன் மாளிகை இருந்த இடம் பற்றிய உறுதியான தரவுகள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், பாலி மேடு என்று அழைக்கப்படும் பல்லவமேடு, பண்டைய கால அரண்மனை இருந்த இடமாகக் கருதப்படுகின்றது. 1944ஆம் ஆண்டு இந்தப் பல்லவமேடு பற்றி எழுதிய இராசமாணிக்கனார், இந்தப் பல்லவமேட்டை முறையாக ஆராய்ந்தால் பல்லவ, சோழர் சரித்திரங்கள் சில பல கூடுதல் வரலாற்றுத் தரவுகளின் திறவுகோளாக அமையும் என்று குறிப்பிட்டார்.
இராசமாணிக்கனார் விரும்பியதைப்போல 1953ஆம் ஆண்டு பல்லவமேடு பகுதியை மேற்புறமாக மட்டும் தொல்லியல் துறை ஆராய்ந்ததில் எந்தவிதச் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை இப்பகுதியில் அப்துல் மஜித், தாமோதரன் தலைமையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது.
பல்லவ மேடு பகுதியை அகழ்வாய்ந்ததில் கட்டுமானச் சுவர்கள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணிகள் மட்டுமில்லாமல் மிகவும் ஆழத்தில் வட்ட உறைகிணறு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கோயில் அல்லது அரண்மனை போன்ற தோற்றமுடைய கட்டிட எச்சங்களும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அதே பகுதிகளில் மிக அதிக அளவில் பானை ஓடுகளும் பிற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதில், மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுள் கிடைக்கப்பெறுகின்றன. இந்தப் பொருட்களின் மூலம் கி.பி 600 முதல் 900 வரையிலான கிட்டத்தட்ட 300 ஆண்டு கால மக்கள் வசிப்பிடத்தை இந்த அகழாய்வு உறுதி செய்கின்றது.
பல்லவமேடு பகுதிக்கு மிக அருகில் வேகவதி ஆறு ஓடியதும், ஏதேனும் வெள்ளம் அல்லது பிற காரணிகளால் இப்பகுதி மாறுதலுக்கு உட்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை பதிவுகள் குறிப்பிடுகின்றன.
பல்லவமேடு பகுதிக்கு மிக அருகில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் பௌத்த சமயச் சின்னங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக, தமிழ் பிராமி எழுத்துருவில் ஒரு மண்பாண்டம் கண்டெடுக்கப்பட்டது. அதில் ‘புதலதிச’ என்ற பெயர் கண்டறியப்பட்டதை வைத்து இந்தப் பெயர் பௌத்தத் துறவியின் பெயராக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
வேகவதி ஆற்றின் கரையில் பல்லவமேடு பகுதி இருப்பதால் இப்பகுதியில் நிச்சயம் அரச குடியிருப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக இராசமாணிக்கனார் குறிப்பிடுவது இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது.
தொல்லியல் துறையால் காஞ்சிபுரம் பத்தாம் நூற்றாண்டுக் கட்டிடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வாழ்ந்த காலமும் பொன் மாளிகை பற்றிய மணிக்கண்டிசுவர் கோயில் கல்வெட்டுகளும் இதனை உறுதி செய்கின்றன. ஆனால் இன்று இப்பகுதி தொல்லியல் துறையின் கவனத்தை விட்டுச் சென்றமையால் மக்களின் வசிப்பிடமாக, தொல்லியல் சான்றுகள் அழியும் இடமாக இருந்து வருகின்றது.
‘நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப்
பிடித்த படைத்திறல் பல்லவர் கோன்’
என்று திருமங்கை ஆழ்வார் பாசுரம் குறிப்பிடுவதும், இப்பகுதியில் நிலையான அரசு செலுத்தி வந்ததையும் உறுதி செய்கின்றன.
வேகவதி ஆற்றின் கரையில் பல கட்டுமானங்கள் இன்றளவும் கிடைக்கப்பெறுகின்றன. சாளுக்கியர் பட்டயம் ஒன்றில் ‘உட்செல்ல முடியாத உயரமான கோட்டைக்குள் சென்றான்’ என்ற குறிப்புக் காணப்படுவதும் இந்தப் பகுதியின் தொன்மையை உறுதி செய்கின்றன. திருமுறைப் பாடல்களில் ‘மதிற் கச்சி’ என்று குறிப்பிடுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 19 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 2ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன என்று தொல்லியல் துறை பதிவுகள் உறுதி செய்கின்றன.
மிகப் புகழ் பெற்ற பயணியான யுவான் சுவாங் தமது பயணக்குறிப்பில் காஞ்சி பற்றிக் குறிப்பிடுவதும், அவரது சிலை காஞ்சியில் கோயில் சிலைகளில் இருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை மீண்டும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு இப்பகுதியின் தொன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
(தொடரும்)
மிக்க நன்று.