Skip to content
Home » தோழர்கள் #12 – இரு தோழர்கள்

தோழர்கள் #12 – இரு தோழர்கள்

இரு தோழர்கள்

1945ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி. மகாராஷ்டிரம் தல்வாடாவில் அன்று கோடிதாய் உரையாற்றப் போவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து என்றும் 1500 மைல் சதுரப்பரப்பில் வாழ்ந்த ஒர்லி பழங்குடியினருக்கு நிலப்பிரபுக்கள் பொய்ச்செய்தி அனுப்பிவிட்டு, அவர்கள் கலவரம் செய்யப்போவதாக போலீசுக்கும் தகவல் கொடுக்கின்றனர்.

உடனடியாக கோடித்தாயைப் பாதுகாப்பதற்காக 30000 பழங்குடியினர் தமது பாரம்பரிய ஆயுதங்களுடன் அங்கு குழுமி விட்டனர். அவர்களைக் கலைக்க சுற்றிச் சுற்றி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த, செங்கொடியை வீழ்த்த போலீஸ் முயற்சிப்பதாக நினைத்துத் தமது உயிரைக் கொடுத்துக் காத்தனர் பழங்குடி மக்கள். துப்பாக்கிக் குண்டுகள், உயிரிழப்புகள், படுகாயங்கள் அவர்களைக் கலைய வைக்க முடியவில்லை.

இது தவறான செய்தி என்றும் கலையுமாறும் செங்கொடித் தலைவர்கள் வந்து கூறிய பிறகுதான் அவர்கள் கலைந்து சென்றனர். அவர்களை இந்த அளவுக்கு உரமேற்றி வைத்திருந்தவர், கோடித்தாய் என்று அவர்கள் அன்புடன் அழைத்த கோதாவரி பருலேகர்.

1907 ஆகஸ்ட் 14 அன்று பூனே நகரில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல், சுதந்திரப் போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேவின் ஒன்றுவிட்ட சகோதரர். கோதாவரி பூனேவில் பர்குசான் கல்லூரியில் அரசியலும் பொருளாதாரமும் படித்தார். அவருடன் படித்த பலர் பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களாக இருந்த எஸ்.எம்.ஜோஷி, என்.ஜி.கோரே, அச்சுதராவ் பட்வர்தன் போன்றோர்.

கோதாவரி பருலேகர் சட்டம் படித்த மகாராஷ்டிராவின் முதல் பெண் என்ற பெருமை பெற்றவர். அவரை வக்கீலாக்கிவிட அவரது தந்தை முயன்றார். ஆனால் கோதாவரியோ அதை ஏற்காமல் சுதந்திரப் போராட்டத்தில் தம்மை வீரியமாக ஈடுபடுத்திக் கொண்டவர், 1932இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். சிறையிலிருந்து திரும்பியவரை மிதவாதியான அவரது தந்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்க, கோதாவரி மும்பை சென்று கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய இந்தியச் சேவையாளர்கள் சமூகத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த அமைப்பில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண்ணும் கோதாவரிதான்.

பின்னர் அவர் மணந்து கொண்ட ஷாம்ராவும் அதே அமைப்பில் இருந்தார். சிறிது சிறிதாக மார்க்சியத்தை உள்வாங்கத் தொடங்கிய கோதாவரியும், ஷாம்ராவும், மெதுவாக வர்க்க உணர்வைப் பெறத் தொடங்கினர். பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெறுவது மட்டும் போதாது, மாறாக அது பொருளாதார, சமூக, அரசியல் நீதியைப் உழைக்கும் மக்களுக்குப் பெற்றுத் தர வேண்டுமென்று அவர்கள் கருதினர். எனவே அது அவர்களை கீழ்த்தட்டு மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

கோதாவரியைப் பற்றிப் பேசும்போது, அவரது இணையரான ஷாம்ராவைப் பிரித்துப் பார்த்துப் பேசுவது கடினம். இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போன்று செயல்பட்டவர்கள்.

ஷாம்ராவ் பருலேகர் கர்நாடக மாநிலம் பிஜபூரைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதிபதியுமாவார். தந்தை அவரை இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அதை மறுத்த ஷாம்ராவ் பம்பாயில் சட்டம் பயின்றார். பிறகு முழுநேர ஊழியராக இந்திய சமூக சேவர்கர்கள் அமைப்பில் இணைந்து விட்டார். அவரது தந்தை எந்த சொத்தும் தரமாட்டேன் என்று மிரட்ட, தானே தனது சொத்துக்களை வேண்டாமென்று கூறி ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பிவிட்டார் ஷாம்ராவ்.

ஷாம்ராவ் முதலில் மும்பையில் ஜவுளித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்களிடையே பணி செய்தார். 1934-38 களில் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார் ஷாம்ராவ்.அப்போது அவர் அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937-39 காலகட்டத்தில் தவறான எடை, அதிக வாரம் போன்ற நிலப்பிரபுக்களின் கொடுமைகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வென்றது. ஷாம்ராவ் தலைமையில் ஷேத்காரி சங்கம் உருவானது.

விம்கோ தொழிற்சாலை போராட்டத்தில் ஷாம்ராவ் பேசியதால் கொதித்துப் போன உள்ளூர் தலைவர்கள் மகாத்மா காந்தியிடமே குற்றச்சாட்டை எழுதினர். அவரும் என்.எம்.ஜோஷியிடம் விளக்கம் கேட்க, அவர் ஷாம்ராவ் பேசியது சரியே என்று உறுதியாக பதில் கொடுத்து விட்டார்.

1930களின் மத்தியில் அவர் அண்ணல் அம்பேத்காரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அது அவரை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. பின்னர் அவர் வர்க்கப் போராட்டத்தில் குதித்து கம்யூனிஸ்ட் ஆகிவிட்டாலும், அண்ணலுக்கும், அவருக்கும் இடையேயான பிணைப்பு இறுதி வரை நீடித்தது. அம்பேத்கார் கட்சியின் சார்பில் அவர் பம்பாய் சட்டசபைக்கு 1937இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பம்பாய் சட்டசபையில் அண்ணல் அம்பேத்கார் கோட்டி (வெட்டி உழைப்பு) முறையை ஒழிக்குமாறு சட்ட முன்வடிவை சமர்ப்பித்தார். ஷாம்ராவ் அதற்கு ஆதரவாக 10,000 விவசாயிகளை ரத்னகிரியிலிருந்து திரட்டி சட்டசபைக்கு முன் பெரும் பேரணியை நடத்தினார். அது பின்னர் சட்டமாகி அந்த முறையை சட்டபூர்வமாக ஒழித்தது.

இங்கு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், அப்போராட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்கள் ஆர்.பி.மோரே, நாராயண் நாகு பாடில் ஆவர். அவர்களும் பின்னர் அம்பேத்கரின் கட்சியிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் ஆனவர்கள். மோரேதான் அண்ணலை மகத சத்யாகிரகிரகத்துக்கும், சவுதார் சத்யாகிரகத்துக்கும் அழைத்துச் சென்றவர். சிபிஐ(எம்)மின் வார ஏடான ஜீவன் மார்க்கை தொடங்கியவரும் அவரே. இறுதி வரை இவர்களுக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும் இடையே சிறந்த உறவு நிலவியது.

கோதாவரி மும்பையில் 1937-38இல் முதியோர் கல்விப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதுதான் அநேகமாக மகாராஷ்டிராவின் முதல் முறையான முதியோர் கல்வி இயக்கம். முதல்வர் அவரை மாநில முதியோர் கல்வித் துறை ஒன்றை அமைத்து அதன் தலைவராகுமாறு கோதாவரியை அழைத்தார். கோதாவரியோ, ‘விலை போகாத சிலரும் இருக்கிறார்கள்’ என்று கூறி மறுத்து விட்டார்.

பின்னர் கோதாவரி தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கினார். அது வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களின் இயக்கம். 1938இல் நவம்பர் 7 அன்று வீட்டுவேலை செய்பவர்கள் 10,000 பேரைத் தொழிலாளர் விரோத கருப்புச் சட்டத்தை எதிர்த்து ஒன்றுதிரட்டி மும்பை சட்டசபைக்கு முன்னால் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் அண்ணல் அம்பேத்கரின் கட்சியும் பங்கேற்றது. 1938-39இல் கோதாவரி கல்யாண், முர்பாட் தேசில்களில் விவசாயிகளை அணிதிரட்டுவதில் ஈடுபட்டார்.

மே 24, 1939இல் ஷாம்ராவ் பருலேகரை மணந்தார் கோதாவரி. அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது அந்த குறிப்பிடத்தக்க அரசியல், குடும்ப உறவு நீடித்தது.

போராட்டங்கள், இயக்கங்கள் கொடுத்த ஏராளமான அனுபவங்களின் மூலமாக, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டனர். பிற இயக்கங்களுக்கு வரம்புகள் உள்ளேயே இருப்பதை உணர்ந்ததால் அவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இரண்டாம் உலகப் போர் தொடங்கியது இந்திய சேவகர்கள் அமைப்புக்கு முடிவு கட்டியது.

பிரிட்டிஷின் போர் முயற்சியை கோதாவரியும், ஷாம்ராவும் கடுமையாக எதிர்த்தனர். போர் எதிர்ப்புப் போராட்டத்தில் களம் கண்டனர். விரைவில் அதற்காக ஷாம்ராவ் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் நடந்த ஜவுளித் தொழிலாளர் போராட்டத்தை கோதாவரியும், மற்ற தலைவர்களும் சேர்ந்து 40 நாட்கள் உறுதியாக நடத்தினர். சற்று காலத்தில் கோதாவரியும் போர் எதிர்ப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1940இலிருந்து 42 வரை அவர்கள் மற்ற கம்யூனிஸ்டுகளுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1942இல் விடுதலை செய்யப்பட்டதும், இருவரும் விவசாயிகளை அணிதிரட்ட முழுமையாக ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். உயிர் வாழ்ந்த வரை அதில் ஈடுபட்டனர். இந்நாட்டில் 70 சதம் விவசாயம் சார்ந்து மக்கள் இருப்பதால் அவர்களை கிசான் சபா, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். சீனாவில் மாவோ அப்படித்தான் செய்தார். விவசாயிகளை அரசியல் விழிப்புணர்வு பெறச் செய்யாவிட்டால் புரட்சி சாத்தியமல்ல என்பது அவர்களது வாதம்.

அகில இந்திய கிசான் சபா ஷாம்ராவை மகாராஷ்டிர மாநில கன்வீனராக நியமித்திருந்தது. 1942இல் ஷாம்ராவும், கோதாவரியும் பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகளின் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டினர்.

அகில இந்திய கிசான் சபாவின் ஏழாவது மாநாட்டில் ஷாம்ராவ் மத்திய கவுன்சிலுக்குத் தேர்வானார். எட்டாவது மாநாட்டில் பொருளாளராகத் தேர்வானார். பிறகு இணைச்செயலாளர் அல்லது துணைத் தலைவராக இறுதிவரை செயல்பட்டார். கோதாவரியும், ஷாம்ராவும் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா போன்ற தலைவர்களைச் சந்தித்து தமது வாழ்வில் இறுதிவரை நெருக்கமான உறவைப் பேணினர்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

1 thought on “தோழர்கள் #12 – இரு தோழர்கள்”

  1. தோழர்கள் ஷாம்ராவ்- கோதாவரி பருலேகர் ஆகியோர்களை இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழர். இரமேஷ் . தொடருங்கள்……

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *