அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை அடகு வைத்துத் தன் தம்பியைப் படிக்க வைத்திருக்கும் அண்ணன். வறுமையான குடும்பம். தன் இளைய மகன் படித்துத் தலையெடுத்துக் குடும்பத்தை முன்னேற்றுவான் என்று காத்திருக்கும் தாய். மறுபுறம் முழுநேர ஊழியராகக் கட்சிக்கு வருமாறு கட்சியின் அழைப்பு. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது? அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்ற தோழர்.ஆர்.உமாநாத் எந்த முடிவை அன்று எடுத்தார் என்பது வெளிப்படை. பொதுவாழ்க்கைதான் இனி என் வாழ்க்கை. அதுதான் என் அரசியல். அதுதான் நான்.
மெல்லிய தேகம்; ஒளிவீசும் நிறம்; சுடர்விடும் கண்கள்; சுறுசுறுப்பான நடை; சூறைக்காற்று வீசுவது போன்ற பேச்சு; ஆரவாரமான சிம்மக்குரலில் வாயிற்கூட்டத்தில் அவர் பேசும்போது கோழையும் வீரனாவான். கையில் காகிதக் கோப்புகளோடு, அடுக்கடுக்கான புள்ளி விபரங்களோடு நிர்வாகத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தி அவர் பேசும்போது நிர்வாகம் நடுநடுங்கும். தொழிலாளர்களிடம் ஆவேசப்புயல் உண்டாகும். (டி.கே.ரங்கராஜன்).
இந்திய விடுதலைப் போரில் கொதித்துக் கொண்டிருந்த காலம் என்று1920களைச் சொல்லலாம். அப்போது அதன் மையமாகத் திகழ்ந்த காசர்கோடில் 1921 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ராமநாத் ஷெனாய்-நேத்ராவதி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தார் உமாநாத். மாப்ளா கலவரம் என்று அறியப்படும் விவசாயிகள் எழுச்சி நடந்த நாள் அது. மிகவும் ஆசாரமான பிராமணக் குடும்பம். பூர்வீகம் கொங்கிணி. ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரருடன் உமாநாத் கடைசி. மிகவும் வறுமையான குழந்தைப் பருவம் அவருடையது. ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்ற அவ்வையின் பாட்டுக்கு உதாரணம் அவரது இளமை வாழ்க்கை.
அவர் சிறுவனாக இருந்தபோதே அவரது தந்தையின் வியாபாரம் நொடித்ததால் அவர் மனநோயாளியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். ஒரே ஒருமுறைதான் உமாநாத் அவரைப் பார்த்திருக்கிறார். அப்போதும் அவரது முகத்தைப் பார்க்கவில்லை.
அவரது தாயார் அவரது தந்தை குணமாக வேண்டுமென்று முழுவதும் பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டார். அவரது வீடே பஜனை மடமாகிவிட்டது. அங்கு வரும் பக்தர்களின் காணிக்கையில் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்தது குடும்பம். உமாநாத் ஆர்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டு அம்மாவின் பஜனைக்கு உதவினார்.
எப்படியோ கஷ்டப்பட்டு மகள்களுக்கு மணமுடித்துவிட்டார் நேத்ராவதி. பஜனையில் வரும் வருமானம் வாழ்க்கைக்குப் போதவில்லை என்பதால் உமாநாத் வாழ்க்கை இங்குமங்குமாகப் பந்தாடப்பட்டது. தமது சகோதரிகள் ஒவ்வொருவரின் வீடாக அவர் சென்றார். அங்கு அவரது அக்கா கணவர்களின் துன்புறுத்தல், ஒரு வீட்டில் அக்காவே துன்புறுத்தியது, ஆணாதிக்கம் அனைத்தையும் கண்டு வெறுத்துப் போனார்.
மூத்த அக்கா கோழிக்கோட்டில் இருந்தபோது அங்கு சென்றார் உமாநாத். அங்குதான் அவர் விரும்பிய கல்வி தொடங்கியது. எனினும் வீட்டில் ஒரு வேலைக்காரனாகவே நடத்தப்பட்டார். இருந்தும் சகித்துகொண்டு பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
1930களில் விடுதலைப் போராட்டம் மாணவர்களைச் சுண்டியிழுத்தது. அந்நியத் துணி எரிப்புப் போராட்டத்தில் உமாநாத்தும் ஓடோடிக் கலந்து கொண்டார். அதேபோல் உப்பு சத்தியாகிரகமும், அதில் தொண்டர்களுக்கு விழுந்த அடியும் அவர் மனதில் காயத்தை உண்டாக்கியது.
வீட்டிலோ அக்கா கணவர் அவரை மிகவும் துன்புறுத்தினார். அவர் முதுகை அவர் தூங்கும் வரை மிதிக்க வேண்டும். சிறுவனான உமாநாத் ஒருநாள் இதைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட, அது அவர் மாமாவின் முதுகில் சூடாக விழுந்து அவரைக் கோபப்படுத்தியது. உமாநாத்தை அவர் துரத்திவிட்டார்.
அந்த நேரத்தில்தான் மார்க்சியம் அவருக்கு அறிமுகமாகிறது. அவரது அக்காவின் மூத்த மகன் திவாகருக்கு மார்க்சியம் அறிமுகமாக, அவர் அந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டுத் தான் புரிந்து கொண்டதை சிறுவனான உமாநாத்தையும் அவரது தம்பியையும் உட்கார வைத்துப் பேசுவார். இதை முதலில் வேண்டா வெறுப்பாகக் கேட்ட உமாநாத், நாளடைவில் அதில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். அவரது மனதில் சிவப்புச் சிந்தனை துளிர்விடத் தொடங்கியது.
இதற்கிடையில் அவரது பள்ளிப்படிப்பு முடிய, அவரது மூத்த சகோதரர் கேசவராவுக்கும் திருமணம் முடிய, தம் தாயிடமும், தன் சகோதரரிடமும் வந்து சேர்ந்தார் உமாநாத். அவரது மனதில் அடக்கப்பட்டுக் கிடந்த சுயமரியாதை உணர்வு வெளிவந்து உலாவரத் தொடங்கியது.
அடுத்ததாக கள்ளிக்கோட்டையில் உமாநாத் இண்டர்மீடியட்டில் சேர்ந்தார். தினமும் 4 கிலோமீட்டர் நடந்து வருவார். மதிய உணவு இல்லை. பக்கத்தில் இருந்த அக்கா வீட்டுக்குச் செல்வதை சுயமரியாதை தடுத்தது. இதைக் கவனித்த கல்லூரி முதல்வர் அவருக்கு இலவச மதிய உணவை ஏற்பாடு செய்தார்.
அந்தக் கல்லூரியில் மாணவர் சங்கம் மெல்ல அவரை ஈர்த்தது. தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ ஏடான ‘நேஷனல் ஃபிரண்ட்’ அங்கு கிடைத்தது. அதைப் படிப்பதிலும், விவாதிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
அக்காலத்தில் காங்கிரஸ் கமிட்டி மங்கடப்பள்ளி என்ற இடத்தில் ஒரு மாதம் தத்துவம், பொருளாதாரம், அரசியல், நாட்டு நடப்பு போன்றவற்றில் பயிற்சி வகுப்பு நடத்தியது. இதில் கலந்து கொண்ட உமாநாத் அங்கு புடம் போடப்பட்டார். அங்கு புடம் போடப்பட்ட இன்னொருவர் வி.பி.சிந்தன்.
மேலும், மேலும் புத்தகங்களைப் படித்து சுப்ரமணிய சர்மாவிடம் தன் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டார் உமாநாத். அருகில் இருந்த சதானந்தா பனியன் கம்பெனியில் நடந்த தொழிலாளர் மீதான தாக்குதல் அவருக்கு அவர்களது நிலையை அனுபவப் பாடமாகக் கற்றுக் கொடுத்தது.
நாடெங்கும் மாணவர் எழுச்சி பெற்று மாணவர் சங்கங்கள் உருவாகத் தொடங்கின. அவ்வாறு உருவான மலபார் மாணவர் சங்கத்தின் மாநாடு கோழிக்கோட்டில் நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக உமாநாத் சிறப்பாகச் செயல்பட்டார்.
அச்சமயம் மூத்தத் தலைவர் ஏ.கே.கோபாலன் வேலையின்மைக்கு எதிராக நடைபயணம் வர, அதில் உமாநாத் அந்த ஊரில் கலந்து கொண்டார். காந்தி அவ்வப்போது கொதித்தெழுந்த எழுச்சிகளைக் கைவிட்டபோது இளைஞர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சங்கமித்தனர். கள்ளிக்கோட்டை கிருஸ்தவக் கல்லூரியில் உருவான கிளையில் உமாநாத் அமைப்பாளராகச் செயல்பட்டார்.
கோட்டக்கல் எனும் இடத்தில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் பொது மாநாட்டில் ரகசியமாகப் பிரசுரம் விநியோகிக்கும் பணியை உமாநாத்திடம் கட்சி ஒப்படைக்க, அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார் அவர். அந்தப் பயிற்சிகள் அவரை இளம் கம்யூனிஸ்டாகச் செதுக்கின.
இரவு முழுவதும் கட்சிப் புத்தகங்கள் படிப்பது, குறிப்பெடுப்பது என்று அவரது வழக்கம் மாறியது. என்னவென்று புரியாவிட்டாலும் எதோ நல்லதுதான் செய்கிறான் என்று அம்மா நினைத்துக்கொண்டார்.
ஒருநாள் இரவு அவரது வீட்டில் ஒரு புதிய மனிதர் வர, உமாநாத் திணறினார். அவர் தலைப்பாகையை அவிழ்க்க, அங்கு நின்றவர் சகாவு கிருஷ்ணபிள்ளை. தலைமறைவாக அங்கு வந்திருந்தார் அவர். தாயிடம் கேட்காமலேயே அவரை உள்ளே அறைக்குள் அழைத்துச் சென்று பிறகு தாயிடம் சென்றார் உமாநாத். அவரோ ஒரு கேள்வியும் கேட்காமல் அவர் சாப்பிட்டாரா என்று விசாரித்தார். இல்லை என்று தெரிந்ததும் உடனே உணவு தயாரித்து, வெளியார் யாரையும் உள்ளே வரவிடாமல், சமையலறைக்குள் அழைத்து உணவிட்டார். அந்த அளவுக்கு உமாநாத் மீதும் அவரது செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டார் அவரது அன்னை.
இண்டர்மீடியட்டில் தேர்வான உமாநாத் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கையில் காசில்லாததால் அவரது சகோதரர் தன் குழந்தையின் நகையை அடகு வைத்துப் பணம் கொடுத்தார். கல்லூரிக்குப் போகும்போதே சுப்ரமணிய சர்மா கட்சி சார்பில் அறிமுகக் கடிதம் கொடுக்க, கல்லூரியில் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவில் சேர்ந்தார் உமாநாத். பின்னால் தீக்கதிர் ஆசிரியராகத் திகழ்ந்த கே. முத்தையாதான் அக்குழுவின் தலைவர். அந்தக் கல்லூரியில் சிறப்பாக மார்க்சிய நூல்கள் நூலகத்தில் படிக்கக் கிடைத்தன. இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். தாமும் படித்து, தலைமறைவாக இருந்த தோழர்களுக்கும் கொடுத்து உதவினார்கள் மாணவர்கள்.
ஒருநாள் சிதம்பரத்தில் நடந்த பயிற்சி வகுப்புக்கு கே.முத்தையாவுடன் சென்ற உமாநாத் அங்கு உச்சிக்குடுமியுடன் வந்த ஓர் ஆசிரியரைக் கண்டு திகைத்தார். பின்னால்தான் தெரிந்தது அவர் தலைமறைவாக இருந்த தோழர் ஏ.கே.ஜி.
இரண்டாம் உலகப்போரை எதிர்த்து எந்த வகையிலாவது போராட வேண்டுமெனக் கட்சி கட்டளையிட, யோசித்தனர் இம்மாணவர்கள். பல்கலை துணைவேந்தரோ பிரிட்டிஷ் அடிவருடி. எனவே அங்கு இருந்த ‘சொற்பொழிவுக் கழகத்தைப்’ பயன்படுத்த மாணவர்கள் முடிவெடுத்தனர். ஒரு பேராசிரியரை உலகப்போரை ஆதரித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிய வைத்தனர். அதை எதிர்த்து மாணவர் தலைவர்களில் ஒருவரான திரவியம் அனல் பறக்கப் பேச, அத்தீர்மானத்தை முன்மொழிந்த பேராசியரைத் தவிர அனைவரும் எதிர்த்து விட்டனர். மாணவர்களின் யோசனை வென்றது.
அந்தக் காலகட்டத்தில் உலகப்போரை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததால் இந்தியா முழுவதும் கட்சித் தலைவர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவாகி ரகசியமாகச் செயல்பட்டு வந்தனர். இப்போது கட்சிக்குப் புதிய, யாரும் அறியாத தொண்டர்கள் தேவை. கட்சி யோசித்துச் செயல்படத் தொடங்கியது.
ஒருநாள் உமாநாத்தை கே.முத்தையா அழைத்தார். அவரிடம் சென்னையில் கட்சியின் தலைமறைவு மையம் செயல்படுவதாகவும், உமாநாத் முழுநேர ஊழியராகி அங்கு யாருக்கும் தெரியாமல் சென்று சேர வேண்டுமென்றும் கூறினார். உமாநாத் வாழ்வில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் பணிபுரிவது என்பது முழுநேரத் தியாகம். இப்போது எதோ கொஞ்சம் மாத அலவன்ஸ் கிடைக்கிறது. அப்போது அதுவும் கிடையாது. பட்டினி, தியாகம், அர்ப்பணிப்பு, சிறை, சித்ரவதை என அனைத்துக்கும் தயாராக இருந்தால்தான் ஒருவர் முழுநேரக் கம்யூனிஸ்ட் ஆக முடியும். மிகவும் ஆபத்தான பாதை அது.
குடும்பத்தைக் காப்பாற்றுவான் எனக் காத்திருக்கும் சகோதரர், அன்னை. பாசவலையை அறுத்துக் கொண்டு, படிப்பைத் துறந்துதான் கட்சிக்குச் செல்லமுடியும். அதனாலென்ன? முழுநேரப் புரட்சியாளராகத் தீர்மானித்து விட்டார் உமாநாத். கே.முத்தையாவிடம் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். தம் சகோதரருக்கும் அன்னைக்கும் தன் முடிவைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். சென்னைக்குக் கிளம்பிவிட்டார். அவரது வாழ்வின் அடுத்த கட்டம் தொடங்கியது.
(தொடரும்)
பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன்,உமாநாத் இம்மூவரும் இன உணர்வால் தனக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதாக கருதிய கலைஞருக்கு பாடம் புகட்டிய தொழிற்சங்க தலைவர்கள் இவர்கள் மூவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தனர்