நாகரிகம் அடைந்த கிறிஸ்தவ நாடாக நம்மைக் கருதிக்கொண்டு, பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பது, காட்டுமிராண்டித்தனமான பழக்கமென்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். பெண்கள் பற்றி முட்டாள்தனமான அசாத்திய வாதங்களைத் தினந்தினம் பரப்பி வருகிறோம்.
ஆண்களைப்போல் சம அளவில் அவர்களுக்குக் கல்வி உரிமை வாய்த்திருந்தால், நம்மைப்போல் இத்தனைப் பாவங்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
மாறும் இயல்புடைய பெண்களிடம் இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்படும் என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். ஏனென்றால், அவர்கள் எல்லாவித அறிவு நுகர்ச்சிக்கும் இயற்கையைச் சார்ந்து வாழ்க்கை நகர்த்துபவர்கள். தையல் கோர்ப்பதற்கும், அற்ப விளையாட்டு மணிகள் செய்வதற்குமே அவர்களின் இளமைக்காலம் முழுக்கக் கழிந்துவிடுகிறது. உண்மையிலேயே அவர்களுக்குப் படிக்கக் கற்றுத்தருகிறோம். ஆனால், அது அவர்கள் பெயரை எழுதிப் பார்க்க மட்டுந்தான் உதவிசெய்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் பெண் கல்வியின் நிலைமை இதுதான்.
பெண்ணினம் பற்றிக் குறைத்து மதிப்பிடுபவர்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். சொல்லிக் கொடுக்க முடியாத எவ்வித விஷேச அம்சங்களை ஆண்கள் பெற்றிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்? அவர்களின் கண்ணியத்தையோ, பழக்க வழக்கங்களையோ, குடும்ப நலனையோ சார்ந்து சிந்திக்காமல் கல்வித் தேவைக்காக அவர்கள் எவ்வித சித்திரத்தை உருவாக்குகிறார்கள் என்று ஆராயுங்கள்
பட்டைத் தீட்டப்படாத வைரம்போல் மனித ஆன்மா உடலுக்குள் ஒளிந்திருக்கிறது. அதைத் திறமாகத் தீட்டிப் பளபளக்கச் செய்ய வேண்டும். இல்லையென்றால் காலத்திற்கும் மங்கி விடும். மிருகங்களிடம் இருந்து மனிதர்களைக் வேறுபடுத்திக் காட்டுவது ‘பகுத்தறிவு’தான் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இதைக் கல்வி மட்டுமே தீர்மானிக்கும். கல்விதான் நமக்கும், மிருகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வரையறுக்கிறது. இது அப்பட்டமான உண்மை.
அப்படியிருந்தும் பெண்களுக்கு ஏன் கல்வி பெறும் உரிமை மறுக்கப்படுகிறது? அறிவும் புரிதலும் பெண்ணினத்திற்குத் தேவையற்ற வஸ்து என்றால், எல்லாம் வல்ல இறைவன் ஏன் அதற்கான வல்லமையை அவர்களுக்குத் தேவையின்றி படைத்திருக்கப் போகிறார்? காரண காரியமின்றி அவர் ஒன்றும் செய்யமாட்டார்.
பெண்களுக்கு அறியாமை ஓர் அத்தியாவசியமான அணிகலன் என்று நினைக்கிறார்களா? அறியாமையில் அவர்களால் என்ன பார்க்கமுடியும் என்று இவர்களிடம் கேட்க வேண்டும். முட்டாளைக் காட்டிலும் புத்திசாலிப் பெண் எந்த வகையில் மோசமானவள் என்று வினவ வேண்டும்.
கல்வி பெறும் உரிமையை இழக்கும் அளவுக்குப் பெண் என்ன செய்துவிட்டாள்? தற்பெருமையாலும் முரட்டுத்தனத்தாலும் அவள் ஆண்களைத் துன்புறுத்தினாளா? அவள் புத்திசாலித்தனத்தைப் பொருட்படுத்தாமல், நாம் ஏன் அவள் கல்வி பெறுவதைத் தடைசெய்கிறோம்? இந்த மனிதமற்ற பழக்க வழக்கத்தின் தவறான செய்கையால் பெண்கள் ஏமாளிகள் ஆக்கப்படும்போது, நாம் எப்படிப் பெண்கள் முட்டாள் என்று குறைசொல்ல முடியும்?
ஆண்களைக் காட்டிலும் பெண்களின் திறனும் உணர்வுகளும் மேம்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் திறன்களை வளர்த்தெடுப்பது பற்றிச் சில நுணுக்கமான நிகழ்வுகளில் இருந்து நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இது அநீதி என்று நம்மை வசைபாடுகிறார்கள். ஆண்களோடு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் நாம் பெண்களுக்குக் கல்வி மறுக்கிறோம் என்பதுபோல் தெரிகிறது.
பெண்களின் தரத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் ஏற்ப எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக இசையிலும் நடனத்திலும் பயிற்சியளிக்க வேண்டும். தன் அன்பிற்குரியவர் என்று காரணம்காட்டி பாலின அடிப்படையில் பெண்கள் கலை பயில தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
இதைத்தாண்டி பெண்களுக்குப் பல மொழிகள் கற்றுத் தர வேண்டும். குறிப்பாக, பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளில் கவனம் செலுத்தலாம். நானே இந்தப் பரிட்சையில் இறங்கி பல மொழிகளைக் கற்றுத் தரும் சாகசத்தில் ஈடுபட முயற்சிக்கிறேன். உரையின் ஒவ்வொரு அங்கத்தையும் கற்றுக் கொடுத்து, கலந்துரையாடலின் சின்னச் சின்னக் குறிப்புகளையும் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி மெனக்கெட்டுச் சொல்லித்தர வேண்டும்.
நமது பொதுக்கல்வி இந்த விஷயத்தில் எத்தனைத் தூரம் பின்தங்கியிருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் புத்தகங்கள் படிக்க ஏற்பாடு செய்யவேண்டும். குறிப்பாக வரலாற்றுப் புத்தகங்கள் மீது அவர்களுக்கு வசீகரம் உண்டாக வேண்டும். அப்போதுதான் உலகின் இயல்பைக் புரிந்துகொண்டு, அன்றாட நிகழ்வுகள் மீது அவர்களுக்கு அபிப்பிராயம் தோன்றும்.
யாருடைய மேதமை அவர்களை வழிநடத்துமோ, அவர்களுக்கு நான் எவ்விதமான பயிற்றுவிப்பையும் மறுக்க மாட்டேன். ஆனால், இதில் குறிப்பிடத்தகுந்த செய்கை என்னவென்றால், பெண்ணினம் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்; எல்லாவித உரையாடலுக்கும் அவர்கள் தகுந்தவர்கள் என்று அறிவூட்ட வேண்டும்; பெண்களின் பங்கும் அவதானிப்புகளும் முன்னேறி வருவதோடு, அவர்களிடம் மேற்கொள்ளும் உரையாடல் இன்பகரமாக இருப்பதோடு இலாபகரமாகவும் இருக்கிறது.
நான் அவதானித்தவரை பெண்களிடையே பெரிய வித்தியாசம் இல்லை. கல்வி அடிப்படையில் அவர்களிடம் வேறுபாடுகளை இனங்காண முடியாது. குறிப்பிட்ட எல்லைவரை, அவர்களின் குணம் செல்வாக்குச் செலுத்துகிறது. வளர்ப்பு முறையில்தான் அவர்கள் பெருமளவில் வேறுபடுகின்றனர்.
பெண்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக, புத்திக் கூர்மையோடு இருக்கின்றனர். அவர்கள் மிக அரிதாகவே முரட்டுத்தனமாக அசட்டையோடு நடந்துகொள்கின்றனர் என்று சொல்ல நான் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் நம்புகிறேன். ஆனால், ஆண் குழந்தைகளிடம் இயல்பிலேயே இத்தகைய குணம் உள்ளது. ஒரு பெண்ணை நன்றாக வளர்த்தெடுத்து அவளின் மேதாவித்தனத்தைக் கவனமாகப் பராமரித்தால், அவள் தன் அறிவாளித்தனத்தைத் தாராளமாக வெளிப்படுத்துவாள்.
பாரபட்சமற்ற கடவுளின் கிருபையில் அறிவும் ஒழுக்கமும் நிறைந்த பெண்களே மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அவர்தன் மகிமையால், ஆண்கள் இனத்திற்கு அன்பிற்குரிய பெண்களைச் சிருஷ்டித்திருக்கிறார். கடவுள் வழங்கியதிலும், மனிதன் பெற்றுக்கொண்டதிலும் இதைவிட உயரிய பரிசு வேறெதுவும் இருக்க முடியாது. பெண்களின் இதயத்தில் இயற்கையாகப் பொலிவூட்டும் கல்வியின் நன்மைகளை அவள் அடையவிடாமல் தடுத்து நிறுத்துவது, உலகின் மிக முட்டாள்தனமான நன்றிகெட்ட செயல்.
நன்கு வளர்த்தெடுக்கப்பட்டு, பாடம் சொல்லித்தந்து, அறிவும் ஒழுக்கமும் நிரம்பிய பெண்ணொருத்திக்கு ஈடாக எதுவுமே இல்லை. அவள் வாழும் சமூகம் உன்னதச் சின்னங்களின் அடையாளமாக இருக்கும். அவள் ஒரு தேவதையாகவும், அவளுடன் மேற்கொள்ளும் உரையாடல் சொர்க்கப்பூர்வமாகவும் இருக்கும்.
மென்மை, இனிமை, அமைதி, அன்பு, அறிவு, உற்சாகம் ஆகியவை ததும்பியவளாக அவள் இருப்பாள். உன்னத ஆசைகளுக்கு எல்லாவிதத்திலும் அவள் பொருத்தமானவள். இத்தகைய பெண்ணைக் கைக்கொண்டிருக்கும் ஆடவனுக்கு அவளோடு மகிழ்ச்சியில் திளைத்து, நன்றியோடு இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மறுபுறம் அவள் அதே பெண்ணாக இருந்து, கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தால் அவள் எப்படி நடந்துகொள்வாள் என்று பின்வருமாறு பார்ப்போம்:
- ஒரு பெண் நற்குணங்கள் உடையவளாக இருந்தால், அவளின் அறியாமை அவளை மென்மையாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.
- அவளொரு புத்திசாலிப் பெண்ணாக இருந்து, பயிற்றுவிப்பில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், மரியாதை தராத வாயாடிப் பெண்ணாக அவளை அது மாற்றுகிறது.
- முன்கணிப்பும் அனுபவமும் இல்லாத அறிவுடைய பெண்ணை, புனைவுகள் நிறைந்த விசித்திரமானவளாக ஆக்குகிறது.
- அவளின் குணநலன்கள் மோசமாக இருந்து, வளர்ப்புமுறையும் படு மட்டமாக இருந்தால் பெருமிதத்தோடு, இழிவானச் செயல்கள் செய்பவளாகிறாள்.
- அவள் உணர்ச்சிக்கு ஆட்பட்டு, ஒழுக்கங் கெட்டவளாக இருந்தால் அடங்காப்பிடாரியாக வாய்ச்சண்டைப் போட்டுக்கொண்டு இருப்பாள். இந்தக் குணம் பைத்தியக்காரர்களோடு நிரம்ப ஒத்துப்போகிறது.
- விவேகம் இன்றி பெருமிதத்தோடு செயல்படும் ஒருத்தியைக் கர்வத்தோடு கேலிக்குரியவளாய் மாற்றுகிறது.
- இவற்றில் இருந்து கொந்தளிந்து, ஆரவாரமாகச் சத்தமிட்டு, மோசமான பேயாக அவள் மாறுகிறாள்.
உலகில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தென்படும் மிகப் பெரிய வித்தியாசம் அவர்களின் கல்வியில் இருக்கிறது. இதை வெவ்வேறு பகுதியில் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையிலான ஒப்பிடல் மூலம் உறுதிப்படுத்தலாம்.
உலகிலுள்ள அனைவரும் பெண்கள் பற்றிய நடைமுறையில் தவறான கொள்கை கொண்டிருக்கின்றனர் என்ற துணிவான உறுதிமொழியை நான் இங்கு வைக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் இத்தனை நுணுக்கமாக, இவ்வளவு மகிமையோடு, மனித குலத்திற்குத் தேவையான மகிழ்ச்சியும் அழகும் பொருந்தி, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஆண்களுக்கு நிகரான வல்லமையோடு பெண்களைப் படைத்திருக்கிறார். இவர்கள் வெறும் வீட்டு வேலைச் செய்யும் பணிப்பெண்களோ, சமையல் வேலை செய்யும் அடிமைச் சேவகர்களோ கிடையாது.
பெண்ணினத்தைச் சிறிதளவும் உயர்த்துவதற்காக நான் இதைப் பேசவில்லை. ஆண்களுக்குத் துணையாகப் பெண்கள் இருக்க வேண்டும். அதற்காகவேனும் அவர்களுக்கு அப்பணிக்குத் தகுந்த கல்வி கற்பிக்க நான் விரும்புகிறேன்.
புத்திசாலித்தனமும் நன்னடத்தையும் கொண்ட ஒரு பெண், தனிச்சிறப்பு உடைய ஆணின் இடத்தை ஆக்கிரமிப்பதற்குத் தன்னால் முடிந்த அளவு அவதூறு பரப்புவாள். அறிவார்ந்த ஆண் பெண்ணின் பலவீனத்தை அடக்குவதற்கு எத்தனைத் தூரம் ஏளனம் செய்வானோ, அதில் கொஞ்சமும் குறைவில்லாத முயற்சி இதில் தென்படும்.
ஆனால் பெண்ணின் அறிவுக் கண்களை வளமான கல்வி மூலம் விசாலப்படுத்திவிட்டால், அந்த வெற்று வார்த்தைகள் காணாமல் போய்விடும். பெண்ணினம் பலகீனமானது என்று நீங்கள் முடிவாகச் சொன்னால், அது அபத்தமானது. அறியாமையும் மூடத்தனமும் பெண்களைக் காட்டிலும் ஆண்களிடம் அதிகம் தென்படுவதை இது உணர்த்துகிறது.
ஒரு பெண்மணி சொன்ன தொடர் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அசாதாரண உடற்கட்டும் முகவெட்டும் உடைய அப்பெண் நல்ல புத்திக்கூர்மையோடு அதிர்ஷ்டம் பூண்டிருந்தாள். ஆனால், அதே காரணத்தால் தொலைந்து விடுவோமோ என்ற பயத்தில் எந்நேரமும் வீட்டிலேயே அடைப்பட்டுக் கொண்டு, அன்றாடம் பெண்கள் பேசும் உரையாடல்களில்கூட கலந்துகொள்ள சுதந்திரமின்றி வாழ்ந்து வந்தாள்.
அவள் உலகின்முன் உரையாடல் நிகழ்த்த வந்தபோது, தன் இயல்பான புத்திசாலித்தனத்தினால் கல்வியின் தேவையை, தன் சொந்த வாழ்வின் மூலம் உணர்த்தினாள், ‘என்னிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேசுவதற்குக் கூட நான் வெட்கப்பட்டேன். அவர்கள் எப்போது என்ன செய்கிறார்கள், எது சரி – எது தவறு என்ற வித்தியாசம் எனக்குத் தெரியாது. திருமணம் செய்வதைவிட பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கிருந்தது’
பாலின ரீதியாகக் கல்வியில் ஏற்பட்ட குறைபாட்டை நான் பெரிதாக்க விரும்பவில்லை. மாறாக அதன் நடைமுறைப் பழக்கத்தையும் மெச்சவில்லை. நிவர்த்தி செய்வதைக் காட்டிலும் கல்வி உரிமை வழங்குவது எளிதான காரியம்.
இந்த அத்தியாயம் பெண் கல்வி பற்றிய ஒரு கட்டுரை மட்டுமே. இதைச் சரிசெய்யும் அளவுக்குப் புத்தசாலித்தனமான ஆண்கள் வாய்க்கும் எதிர்வரும் மகிழ்ச்சியான நாட்களின் (அவை எப்போதாவது இருந்தால்) முயற்சியை நான் இதில் குறிப்பிடுகிறேன்.
0
_________
‘The Education of Women’ – Daniel Defoe
பெண்களின் கல்வி உரிமை பற்றி சொன்னது தெளிவு!
“பகுத்தறிவு” மேற்கோள் என்பது முக்கியம்! கொடுத்துள்ளீர்கள் அருமை!
பெண்களுக்கு ஆகச்சிறந்த திறமைகள் இருப்பினும் அதனை மூடி வைத்துக் கொண்டு நகர்கிறார்கள். அதனைப் பற்றியும் கொஞ்சம் ஆலோசியுங்கள்.