Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

Charles Lamb

இதைக் காட்டிலும் மோசமான நிலைமைகள் உண்டு: திருமணமானவர்கள் தனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு, நீங்கள் அவர்களின் நண்பராகப் பழகியிருக்க வேண்டும். நேரில் சந்தித்து, உங்கள் மதிப்புக்குரிய நேரத்தை அவர்கள் நிமித்தம் செலவு செய்திருக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு உங்கள் நண்பரிடம் நெருங்கிய உறவு இருந்து, அதை உங்கள் நண்பரின் மனைவியிடம் நீட்டிக்க முடியாது போனால், திருமணத்திற்கு முந்தி அவரோடு எத்தனைக்காலம் நட்பு பாராட்டியிருந்தாலும் இனி நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் நட்புறவு விரைவில் முறிந்துபோகலாம். அடுத்த ஒரு வருடத்திற்குள் தூரம் அதிகரிக்கும். உங்கள் நண்பர் விநோதமாய் நடந்துகொள்ளத் தொடங்குவார். முத்தாய்ப்பாக உங்கள் நட்புக்கு மூடுவிழா நிகழ்த்தவும் எத்தனிப்பார்கள்.

திருமணத்திற்குப் பிறகும் மனதார என் நம்பிக்கைக்கு உரிய நண்பராகத் திகழ்பவர் என்றால், மிகச் சிலரைத் தவிர என்னால் வேறு எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெரும்பாலும் திருமணத்திற்குப் பிந்தைய நட்புறவுகளே அதிகம் என்பேன். சிலர் அதை வரன்முறைக்கு உட்பட்டு நீர்த்துப்போகாமல் பாதுகாக்கின்றனர்.

ஆனால், திருமணப் பந்தத்தில், யாரேனும் ஒருவர் மற்றொருவரின் அனுமதி கோராமல் வேறொரு அந்நியருடன் நட்பு பாராட்டினால் அவர்தம் இணையருக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத கோபம் வரும். குறிப்பாக, திருமணத்திற்கு முன்பு உருவான சிநேகம் என்றால், சந்தேகமே வேண்டாம்.

ஒவ்வொரு நெருங்கிய உறவும், நீண்ட காலத்துச் சிநேகமும் தத்தம் இணையரின் ஒப்புதலுக்கு உட்பட்டுத் தொடர வேண்டும் என்பதில் இருவரும் குறியாய் இருப்பர். கிட்டத்தட்ட இது புதிதாய் ஆட்சிக்கு வரும் ஒரு மன்னரின் செயலை ஒத்தது. தான் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்கு முன்புவரை புழக்கத்தில் இருந்த பழைய நாணயங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதிலிருக்கும் பழைய முத்திரைகளுக்குப் பதில் புதிய முத்திரை பதிக்கும் நடைமுறைகளைக் காட்சி மாறாமல் அப்படியே அரங்கேற்றுவார்கள். புதிய முத்திரைக்காகக் காத்திருக்கும் துருப்பிடித்த பழைய நாணயத்தின் உருவமைவில் நீங்கள் என்னை எங்ஙனம் பொருத்திப் பார்க்கலாம் எனக் கற்பனை செய்யுங்கள்.

உங்கள் மீதுள்ள நம்பிக்கையை எப்படித் தீர்த்துக்கட்டினால், தாமாக மனம் வெறுத்து உங்கள் நண்பர் அவநம்பிக்கை கொள்வார் எனத் சமயோசிதமாகத் திட்டம் தீட்டி பலவகைகளில் அவர் மனைவி உங்களுக்கு அவமானம் உண்டாக்குவார். இதைச் சீர் செய்ய ஒருவழி உண்டு. அவர்கள் என்ன சொன்னாலும் எல்லாம் நன்மைக்கே என்று நூதனமாக நடந்துகொள்ளுங்கள். இதற்கு அவர்கள் விசித்திரமானப் பார்வையைப் பரிசளிப்பார்கள்.

ஒருவழியாக உங்கள் நண்பர் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து, விஷேச நடத்தைகளை அவதானித்து, உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜோக்கர் என முடிவுகட்டத் தொடங்குவார். தனியனாக ஊர்ச் சுற்றும் நாட்களில் ஜோடியாகச் சேர்த்துக் கொள்ள மட்டுமே இவன் லாயக்கு, பெண்களிடம் பேசுவதற்கெல்லாம் இவன் ஒத்துவரமாட்டான் எனப் புரிந்துகொள்வார். அந்தப் பார்வையில் வெறித்துப்போன அயர்ச்சி தென்படும். பெரும்பாலும் என்னை அப்படித்தான் பார்க்கிறார்கள்.

நண்பர்களுக்கிடையில் பிளவு உண்டாக்க ‘மிகைப்படுத்தல் அல்லது முரண் அடுக்கு’ என மற்றொரு உபாயம் உண்டு. அதன்வழி உங்கள் மீது மிக உயர்ந்த அபிப்பிராயம் தோன்றுமாறு ஆகச்சிறந்த மிகையூட்டுகளைத் தம் கணவரின் காதில் வாரியிறைப்பார்கள். நண்பருக்கும் உங்களுக்கும் இடையில் பெயர்க்கமுடியாத பந்தம் உருவாகும். நீங்கள் வாய்திறந்து ஏதும் சொன்னால், பொன்னாக, பூவாகப் பல மடங்கு மெருகேற்றி உயர்வு நவிற்சிபட உங்கள் நண்பரிடம் ஏற்றிச் சொல்வார்கள்.

ஒரு கட்டத்தில் இவை வெறும் முகஸ்துதி என உங்களுக்குத் தெரிந்துவிடும். காது கொடுத்துக் கேட்கமுடியாத சூழலுக்கு உந்தப்படுவீர்கள். முன்னெப்போதையும் விடப் பரபரப்பு அடங்கும். போற்றுதலும் வியப்பும் மிதமாகும். எனவே போலியான நடிப்புக்கு அப்பாற்பட்டு, உண்மையாகவே அவரின் மனைவிக்கு உங்களைப் பிடித்துப்போய்விடும்.

குட்டையைக் குழப்ப அவர்கள் கையாளும் மற்றொரு உபாயத்தைச் சொல்கிறேன். (தான் விரும்பியதை நிறைவேற்ற, அவர்களுக்கு எண்ணிலடங்காத வழிகள் உண்டு.) உங்களிடம் நண்பருக்குப் பிடித்துப்போன விஷயத்தின்மேல், துளியும் அலட்டல் இன்றி அப்பாவித்தனமான எளிமையோடு அவரின் மனைவி தொடர்ச்சியாகக் கல்லெறிந்து கொண்டே இருப்பார்.

உதாரணமாக, உங்கள் நன்னடத்தைமேல் நண்பருக்கு நல்ல அபிப்பிராயம் கூடியிருந்தால், அவர் மனைவி உங்கள் பேச்சில் சலிப்புத் தட்டுவதாய் உணர்த்துவார். இன்னுமொருபடிச் சென்று, ‘அன்பே, உங்கள் நண்பர் திரு. ___ மிகச் சிறந்த புத்திமான் என்றல்லவா சொன்னீர்கள்’ என்பார்.

ஒருவேளை உங்கள் பேச்சு அவருக்குப் பிடித்துப்போயிருந்து, உங்கள் நடத்தைமேல் குற்றச்சாட்டுகள் எழுப்ப விரும்பினால், ‘ஓ, இதுதான் உங்கள் ஆஹா ஓஹோ நண்பரா?’ எனச் சிறிய குற்றங்களுக்குப் பெரிய பூதக்கண்ணாடி மாட்டுவார்.

நண்பர் ஒருவரின் மனைவியை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. நான் அவர் கணவரின் நெடுங்காலத்து நண்பன் என்ற வகையில் பலவிதச் சலுகைகளும் மரியாதைகளும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஒன்றும் கிடைத்தபாடில்லை. திருமணத்திற்கு முன்பே, நண்பர் அவரிடம் என்னைப் பற்றி நிறைய சொல்லியதாகச் சொன்னார். என்னை நேரில் சந்திக்கவும் ஆசையோடு இருந்தாராம்.

ஆனால் நேரில் பார்த்த பிறகு, நண்பரின் மனைவிக்கு மிகப்பெரிய ஏமாற்றம். நண்பர் சொன்னதை வைத்து நானொரு வாட்டசாட்டமான, (அவரது வார்த்தையில் சொல்வதானால்) ஆபீசர் போன்ற மிடுக்கில் இருப்பவன் என்று கற்பனை தீட்டி வைத்திருந்திருக்கிறார். ஆனால் நிஜத்தில் நான் அப்படிப்பட்டவன் அல்ல. என் நண்பரும் என்னைப் போலவே அதே உயரம், மிடுக்கில்லாத தோற்றம் கொண்டவராக இருக்கும்போது, ஏன் என்னை மட்டும் அந்நியமாகக் கற்பனை செய்து பார்த்தீர்கள் என்று நான் கேட்டிருக்கலாம், ஆனால் கேட்கவில்லை.

திருமணமானவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது பல சங்கடமான சம்பவங்கள் எனக்கு ஏற்பட்டது உண்டு. அவற்றை விரித்தால் வீடு தாங்காது என்பதால், திருமணமான பெண்கள் வழக்கமாகத் தவறிழைக்கும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சில நேரங்களில் தம் கணவரை நண்பர் போலவும், நம்மை அவர்தன் கணவர் போலவும் நடத்துகின்றனர். அதாவது, சில சமயங்களில் நம்மைப் பழக்கப்பட்டவர் போன்றும், தம் கணவரை விருந்தினர் போன்றும் உபசரிக்கின்றனர்.

ஒருமுறை நண்பர் வீட்டு விருந்துக்குச் சென்றபோது, வழக்கமாக நான் உணவருந்தும் நேரத்தைத் தாண்டி இரண்டு, மூன்று மணிநேரங்களுக்குப் பிறகும் நண்பர் தலைகாட்டவில்லை. அவரின் வருகைக்காகக் காத்திருந்த மனைவி, எனக்கும் உணவு பரிமாறாமல்; உணவுச் சிப்பிகளையும் வீணாக விட்டதுதான் மிச்சம்.

இது நிச்சயமாக நல்ல பழக்கம் இல்லை. கண்ணியம் என்பது தன் வாழ்வில் முன் பின் தொடர்பில்லாத நபருக்கும், அவரின் அசௌகரியத்தைக் குறைக்கும் போக்கில் செயல்படும் ஒரு சிறிய உதவி. அவருக்குச் சாதகமாய் பெரிய காரியங்கள் செய்ய முடியாவிட்டாலும், சிநேகமான வழியில் சிறிய உதவிகள் செய்யலாம். அந்தச் சிப்பிகளைத் தன் கணவருக்குப் பாதுகாப்பதன் பேரில் வீணாக்கியதற்குப் பதில், எனக்குப் பரிமாறியிருந்தால் ஆசார விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவர் எனச் சொல்லியிருப்பேன்.

கணவர்களிடம் அடக்கத்தோடும், கண்ணியத்தோடும் நடந்துகொள்வதைத் தாண்டி மனைவிக்கு வேறு எவ்விதச் சிறப்பு விதிகளும் இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, செரெசியாவின் நடத்தைப் பற்றியும் இங்குச் சொல்லிவிடுதல் சிறப்பு. நான் ஆசையாசையாகச் சாப்பிடலாம் என்றிருந்த அடர் செர்ரிப் பழங்களை, மேஜையின் எனது மூலையிலிருந்து தன் கணவர் அமர்ந்திருக்கும் மறு மூலைக்கு எடுத்துப் போய்விட்டார். அதற்குப்பதில் மலை நெல்லிக்காயைச் சாப்பிடுங்கள் என்று பரிமாறினார். நான் இந்த அவமரியாதையை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

இத்தகு பெண்மணிகளின் ரோமன் அடையாளப் பெயரைக் குறிப்பிடும் அளவுக்கு எனக்குச் சக்தியில்லை. நான் சோர்ந்து போய்விட்டேன். ஆனால் இனிவரும் காலத்திலும் அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படாவிட்டால், ஊரறியும் வண்ணம் வெளிப்படையாக அவர்கள் பெயரை முழுமுதல் ஆங்கிலத்தில் எழுதி அப்பட்டமாக்கிவிடுவேன். விதி மீறுபவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்.

0

_________
‘A Bachelor’s Complaint of the Behavior of Married People’ by Charles Lamb (Published in Essays of Elia – 1823 )

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *