டப்ளின் நகரின் கடைவீதிகளைக் கடந்து செல்லும்போதோ, கிராமப்புறம் வழியாகப் பயணம் மேற்கொள்ளும்போதோ மனதை உருக்குலைக்கும் காட்சிகளை அங்கு ஒருவர் காணலாம். அவ்வூரின் தெருக்கள், சாலைகள், வாயிற்படிகளில் பணம், காசு இல்லாத பல ஏழைப் பெண்கள் வீற்றிருப்பார்கள். அவர்களைத் தொடர்ந்தே மூன்று, நான்கு, ஆறு என்கிற எண்ணிக்கையிலான கிழிந்த ஆடை உடுத்திய குழந்தைகள் யாசகம் ஏந்தி பாதசாரிகளை இடைமறிப்பர்.
நேர்மையாகச் சம்பாதித்து வாழ்க்கையை நகர்த்துவதற்குத் திறனில்லாத தாய்மார்கள், தங்கள் நேரம் முழுவதையும் தம் குழந்தைகளுக்காக யாசகம் கேட்பதிலேயே செலவழிப்பர். இங்ஙனம் வளர்க்கப்படும் குழந்தைகளும், சில ஆண்டுகளுக்குப் பிறகு வேலையில்லாத காரணத்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபடவோ, தன் நேசத்திற்குரிய நாட்டைப் பிரிந்து ஸ்பெயின் புரட்சியில் கலந்துகொள்ளவோ விழைவர். இவ்விரண்டும் இல்லாவிட்டால் பார்படோஸ் தீவில் அடிமை வேலைக்குச் செல்வர்.
இப்போதிருக்கும் மோசமான சூழலில், பெற்றோரின் அரவணைப்பில் அவர்களுக்குச் சுமையாக இருக்கும் குழந்தைகளை என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்குமென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர் என்று நினைக்கிறேன். ஆக, யாரேனும் ஒருவர் இக்குழந்தைகளை ஆரோக்கியமாக நாட்டுக்குச் சேவகம் செய்யும்படி வளம் பொருந்தியவர்களாக உருமாற்ற எளிய யோசனையைக் கொண்டு வருவார்களானால், அவர் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சேர்த்ததற்கான கௌரவத்தைப் பெறுவார்.
இதுவொன்றும் பிச்சைக்காரர்களின் புதல்வர்கள் மட்டும் பலனடையும் குறுகிய யோசனை அல்ல. எனது உள்நோக்கம் பன்மடங்கு பெரியது. பெற்றோரின் முறையான அரவணைப்புக்கு உட்படாத எல்லாக் குழந்தைகளும், வீதியில் கையேந்தி உதவி கேட்கும் எல்லாச் சிறுவர்களும் உபாயம் பெறவேண்டும் என்றே அக்கறை செலுத்துகிறேன்.
இந்த அதிமுக்கியமான விஷயத்தில் நான் பல ஆண்டுகளாகச் சிந்தை செலுத்தி வருகிறேன். தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு, பிறரின் யோசனையில் உள்ள அபத்தங்களை என்னால் சுட்டிக்காட்ட முடிகிறது. தாயின் பனிக்குடத்திலிருந்து பிறந்தது முதல் ஓராண்டுவரை, தாய்ப்பால் மட்டுமே குடித்து ஒரு குழந்தையால் உயிர் வாழமுடியும். இரண்டு ஷில்லிங் சம்பாதித்தால் போதும், மேலதிக உணவுகள் கொடுத்து போஷாக்காக வளர்த்துவிடலாம். அதையும் அத்தாய்மாரால் வெகு சாமர்த்தியமாக யாசகம் பெற்றுச் சேர்த்துவிட முடியும்.
ஆனால், ஓராண்டுக்குப் பிறகும் தம் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் சுமையில்லாதவர்களாய் இவர்கள் திகழ வழிவகை செய்யவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு உணவும் உடையும் தங்குதடையின்றிக் கிடைத்துவிட்டால், வசதி வாய்க்காத ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இவ்விரண்டும் கொடுத்து அரவணைப்பார்கள்.
இத்திட்டத்தால் மற்றொரு அனுகூலம் உண்டு. இன்றைக்குப் பெருமளவில் தன்னார்வக் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. முறைதவறிப் பிறந்த குழந்தைகளைப் பிஞ்சிலேயே கொலை செய்யும் வழக்கம் இருக்கிறது. இவ்விரண்டு நடைமுறைகளும் இத்திட்டத்தைப் பின்பற்றினால் பெரும்பாலும் குறையும். மனதைப் பதைபதைக்கும் இக்கொடூரச் சம்பவம் மானநஷ்டம் கருதி நடைபெறாமல், பொருளாதார நஷ்டத்தால் நடைபெறுகிறது என்பதைக் கேட்டால் கருங்கல் மனமும் கண்ணீர்விட்டு இரக்கம் சிந்தும்.
இந்நாட்டில் 15 லட்சம் பேர் வசிப்பதாய் வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு லட்சம் ஜோடிகளுக்கே குழந்தைப் பாக்கியம் உண்டு. அதிலொரு 30,000 ஜோடிகள், தாமாக தம் குழந்தைகளைப் பேணி வளர்க்கும் ஆற்றல் உடையவர்கள் என்று ஒதுக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் இத்தனைப் பேர் இந்தச் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்களா என்று சந்தேகம் வலுக்கிறது.
இவையொருபுறமிருக்க, மீதமுள்ள 1,70,000 ஜோடிகள் இனப்பெருக்க ஆற்றலுடன் இந்நாட்டில் உள்ளனர். அதில் ஒரு ஐம்பதாயிரம் பெண்கள் கருச்சிதைவு, எதிர்பாரா விபத்து, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளால் குழந்தைகளை இழக்கின்றனர். ஆக, அவர்களையும் கழித்தால் மிச்சமிருப்பது 1,20,000 குழந்தைகள். ஒவ்வொரு ஆண்டும் ஏழைப் பெற்றோருக்கு மகவாகத் தோன்றும் இக்குழந்தைகளை எங்ஙனம் பராமரிக்கப் போகிறோம் என்பதுதான் பெரும் கேள்வி.
பரீட்சார்த்த முறையில் நாம் பிரயோகித்த எந்த வழிமுறையும் இதுவரையில் கைகொடுக்கவில்லை. இக்குழந்தைகளை வைத்து கைவினைகளோ, விவசாய வேலையோ வாங்கமுடியாது. நாட்டுப்புறத்தில் வீடு கட்டவும், நிலத்தைச் சீர் செய்யவும்கூட லாயக்கு அற்றவர்கள் இவர்கள். ஆறு வயதுவரை திருட்டுத் தொழில் செய்யவும் இவர்களுக்கு அனுபவம் பத்தாது. அடிப்படையான விஷயங்களை இளமையிலேயே கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். அதுவரை கத்துக்குட்டிதான். கேவன் மாகாணத்தைச் சார்ந்த ஒரு கணவான் சொன்னதுபோல், எதையும் சாமர்த்தியமாகச் சுலபத்தில் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் உள்ள அவர் மாவட்டத்தில்கூட, ஆறு வயதுக்குக் குறைவான திறம் பெற்ற குழந்தைகளைக் காண்பது அரிது.
பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட ஆணோ, பெண்ணோ விற்பனைக்கு உகந்தவர் அல்ல என்று வணிகர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அவ்வயதை அடைந்தாலும், மூன்று பவுண்ட்களுக்கு மேல் அவர்களால் சம்பாதிக்க முடியாது. ஒருவேளை கூடுதலாகச் சம்பாதித்தாலும், அவை உணவு உடைக்குப் போதுமானதாய் இருக்காது. அதற்கின்னும் நான்கு மடங்கு சம்பாதிக்க வேண்டியிருக்கும். ஆகவே பெற்றோருக்கும் சமூகத்திற்கும் இதுவொரு நல்ல திட்டமாக இருக்க முடியாது.
யாதொரு பிரச்சனையும் இல்லாத, சுமூகமான யோசனையென்று நான் நம்புவதை இனிச் சொல்லத் தொடங்குகிறேன்.
லண்டனில் வசிக்கும் எனது அறிவார்ந்த அமெரிக்க நண்பர் ஒருவர், ‘நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தைக் கறியின் ருசி பிரமாதமாக இருக்கும்’ என்று ஒருமுறை சொன்னார். அதை நீங்கள் மிதமான சூட்டில் வேக வைத்தாலும், நெருப்பில் வாட்டினாலும், தீயில் உலர வைத்தாலும், தண்ணீர் விட்டுக் காய்ச்சினாலும் சுவை குன்றாது. ஃப்ரிக்காசி அல்லது ரேக்அவுட்டுடன் சேர்த்துச் சாப்பிடத் தரமான உணவாக இருக்கும்.
1,20,000 குழந்தைகளில் 20,000 நபர்களை இனப்பெருக்கச் சுழற்சிக்கு என்றே தனியாக ஒதுக்கிவிடுவோம். அதில் கால்பங்கு மட்டும் ஆண்களாய் இருந்தால் போதும். ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்கினங்களில் கால் பங்குக்கும் குறைவான ஆண் பாலர்களைத்தான் இனப்பெருக்கச் சுழற்சிக்கு ஒதுக்குவார்கள். இவர்கள் எல்லோரும் திருமணம் எனும் பந்தத்தில் பிறந்தவர்கள் கிடையாது. காட்டுமிராண்டித்தனமான உள்ளூர் மக்களிடம் இதுவொரு சாதாரண வழக்கம். எனவே நான்கு பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் இருந்தாலே போதுமானது.
மிச்சமுள்ள 1,00,000 குழந்தைகளையும் நாட்டின் செல்வ வளம் படைத்த பெரு முதலாளிகளுக்கு ஓராண்டு பூர்த்தியானதும் அனுப்பி வைக்கலாம். விற்பனைக்கு முந்தையை மாதத்தில், தாய்மார்கள் மிகக் கண்டிப்பாகக் கவனம் செலுத்தி குழந்தை ஊட்டத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கறி கொழுத்துப் போய், சுவையாக இருப்பது அவசியம். ஒரு பிள்ளைக் கறியை இரண்டு வேளைகள் வைத்துச் சாப்பிடலாம். முதல் வேளையாக நண்பர்களுடன் விருந்துண்ணும்போது, கால் பங்குக் கறியை மட்டும் பரிமாறிக் கொண்டால் போதும். மீதக் கறியை உப்பு மிளகுத்தூள் சேர்த்து, மிதமாகச் சூடுபடுத்தி நான்காம் நாள் சாப்பிட்டால் சுவை வேறுமாதிரி இருக்கும். குறிப்பாகக் குளிர் காலத்தில் இதுவோர் உகந்த உணவு.
பிறந்த குழந்தை 12 பவுண்ட் வரை எடை மதிப்பில் இருக்கும். நன்கு பராமரித்து வேளாவேளைக்கு உணவுகொடுத்துப் போஷாக்காகப் பார்த்துக்கொண்டால், ஓராண்டுக்குப் பிறகு 28 பவுண்ட் வரை தேற்றலாம்.
இந்த உணவு கொஞ்சம் விலைகூடியதாக இருந்தாலும், பெரும் நிலப்பிரபுக்களின் அன்புக்குரிய பதார்த்தமாய் இருக்குமென்பதை நான் சொல்லிக்கொள்கிறேன். ஏற்கெனவே பெற்றோர்களிடம் இருந்து சகலத்தையும் உறிந்துகொண்ட பிரபுக்களுக்கு, அவர்தம் குழந்தைக் கறியை உண்பதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் தங்குதடையின்றிப் பிள்ளைக் கறி கிடைக்கும். அதிலும் மார்ச் மாதம் ஒட்டிய நாட்களில், கறியின் அளவு ஏகபோகமாக இருப்பதில் வியப்பில்லை. ஒரு பிரெஞ்சு மருத்துவர் சொன்னதுபோல, ‘கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் தவக் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள் விரதத்தின் விளைவால் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வர்’. எனவே சராசரியாக, தவக் காலம் முடிந்த அடுத்த 9ஆம் மாதத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாட்டில் அதிகக் குழந்தைகள் பிறக்கும். எனவே தவக் காலம் நிறைந்த ஓராண்டுக்குப் பிறகு, நாட்டில் வழக்கத்திற்கு மீறிய எண்ணிக்கையில் அதிகமான குழந்தைகளைக் காணலாம்.
இதில் மற்றொரு நன்மையும் உண்டு. தற்போது வரை மூன்று கத்தோலிக்கக் குழந்தைக்கு, ஒரு கத்தோலிக்கர் அல்லாத குழந்தை என்ற வீதம் நாட்டின் மக்கள்தொகை இருந்து வருகிறது. இந்நிலை இனி மாறும்.
நான் முன்பே சொன்னதுபோல், ஒரு குழந்தையின் ஓராண்டுக்கான பராமரிப்புச் செலவு இரண்டு ஷில்லிங். அதற்குள் உணவு, உடை எல்லாம் அடக்கம். பெரும் நிலப்பிரபுக்கள் ஆரோக்கியமான, கொழுத்த குழந்தைக்குப் பத்து ஷில்லிங் வரை யோசிக்காமல் விலைகொடுத்து வாங்குவர். முன்பு பார்த்ததுபோல், ஒரு பிள்ளைக் கறியை நான்கு நாள் வரை கூறுபோட்டு பிரித்து உண்ணலாம். நண்பர்களுடன் கூடிய தனிப்பட்ட விருந்திலும், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்த பொது விருந்திலும் ஆரோக்கியமான, சுவைமிக்க உணவாய் விளங்கும்.
இவ்வகையில் குடியானவர்களிடத்து, தன் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளப் பல முயற்சிகளில் பிரபுக்கள் ஈடுபடலாம். தாய்மார்களுக்கு எட்டு ஷில்லிங் வரை லாபம் கிடைக்கும். அடுத்த குழந்தை பெற்று, அவர்களை வளர்க்கும் வரையில் இந்தத் தொகை கைச்செலவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் பணத்தில் குறியாய் இருப்பவர்கள் (இதுபோன்ற காலகட்டத்தில் மிகவும் அவசியம்) குழந்தையின் தோலை விற்று அதைப் பணம் செய்து லாபம் பார்க்கலாம். குழந்தையின் தோலைச் சரியாகப் பதப்படுத்தி, பெண்களுக்குத் தேவையான கையுறைகளும், ஆண்களுக்குத் தேவையான வெயில் காலப் பூட்ஸ்களும் உற்பத்தி செய்யலாம்.
டப்ளின் நகரில் இதற்கென்றே, சந்தை மாதிரியான பிரத்தியேக இடங்களை நிர்மாணிக்கலாம். போதுமான அளவில் கசாப்புக்காரர்களும் வேலைக்கு வருவார்கள். வறுத்த பன்றிகளை வாங்குவதுபோல், பிள்ளைக் கறிகளையும் உயிரோடு அல்லது மிதமான வறுவலில் வாங்கினால் நன்றாக இருக்கும்.
இந்நாட்டை ஆத்மார்த்தமாக நேசிக்கும் பெரும் அன்புக்குரிய முக்கிய நபர் ஒருவர், ‘இந்நாட்டில் அளவுக்கதிகமாய் வேட்டையாடியதால், மான்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அழிவுக்கு வந்துவிட்டது. எனவே மான் கறிக்கு மாற்றாகப் பன்னிரண்டு – பதினான்கு வயதுக்கு உட்பட்ட இளம் சிறார்களின் கறியை விநியோகிக்கலாம்’ என்றார். ஒவ்வொரு நாட்டிலும் வேலை கிடைக்காமல், உணவுப் பஞ்சத்தில் வாடும் பல இளைஞர்களைக் காண்கிறோம். அப்பேர்ப்பட்டவர்களை அவர்தம் உறவினர்களும், பெற்றோர்களும் மாமிச நோக்கத்திற்காகப் பெரும் பிரபுக்களுக்கு விற்றுவிடலாம் என்றார்.
நான் அந்த அமெரிக்க நண்பரைப் பெருமளவு நேசிக்கிறேன் என்றாலும், அவர் சொன்ன யோசனையில் எனக்கு முழு அபிப்பிராயம் கிடையாது. அவர் சொல்வதுபோல் இளைஞர்களின் கறி ஒன்றும் அத்தனைச் சிறப்பாக இருக்காது. சோனனாக இருக்கும் இளைஞர்களைச் சோபிக்க வைத்துப் புஷ்டியாக்க, பெரும் பணம் செலவாகும்.
சிறுமிகள் விஷயத்தில் இது இன்னுமே மோசமான திட்டம். தாய்மைப் பருவத்தை விரைவில் அடைந்துவிடக்கூடிய தகுதி படைத்தவர்களை, தேவையில்லாமல் இத்திட்டத்திற்குள் கொண்டுவந்தால் சமூக நடுநிலைத்தன்மை பாதிப்படையும்.
மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கு வலுவான கண்டனங்கள் எழக்கூடும். அவற்றால் அடையப் பெறும் நன்மைகள் ஏராளம் இருப்பினும், இதுபோன்ற திட்டங்களை நான் ஆட்சேபணை தெரிவித்து மறுப்பதற்கு இதுவொன்றே காரணம் என்று அறிக.
(தொடரும்)
_________
‘A Modest Proposal for preventing the Children of Poor People From being a Burthen to Their Parents or Country, and For making them Beneficial to the Public’ By Jonathan Swift (Published in 1729)
என்னங்க சொல்றீங்க. விளையாடுறீங்களா
அயர்லாந்து நாடு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் அடிமைப்பட்டுக் கிடந்தது. அயர்லாந்தில் வசிக்கும் கத்தோலிக்கர்களை, இங்கிலாந்தின் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் பிரிவினை செய்து பாடாய் படுத்தினர். அவர்களுக்கு சமயம் சார்ந்த கட்டுப்பாடுகள் விதித்தனர்.
ஐரிஷ் பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அந்நாட்டு மக்களின் சகல உரிமைகளையும் சங்கிலியால் பிணைத்து கொடுமைப் படுத்தினர். அந்நாட்டின் பொருளாதாரமும் விவசாயத் தொழிலும் பலமாக அடிவாங்கின. ஏழைகளுக்கு பெருஞ்சுமை உண்டாக்கும் விதத்தில் பூதாகர வரி விதித்தனர்.
பஞ்சத்தின் விளிம்பில் செய்வதறியாது, வீதிகள் எங்கும் யாசகம் கேட்டு வயிறு வளர்க்கும் நிலைக்கு ஐரிஷ் மக்கள் ஆளாயினர். அங்குதான் நம் கதாநாயகர் உதயமாகிறார்.
ஜோனத்தன் ஸ்விஃப்ட் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராக இருந்தாலும், அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் பிறந்தவர். பிறந்த நாட்டின் மீது இயற்கையாகவே அவருக்கு பாசம் பொங்கி வழிந்தது. அயர்லாந்து அரசாங்கத்துக்கு மாற்று யோசனை வழங்கும் எண்ணற்ற திட்டங்களை எழுதி அனுப்புகிறார். ஆனால் அத்தனையும் நிராகரிக்கப்படுகிறது.
1729ஆம் ஆண்டில் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ‘A Modest Proposal For preventing the Children of Poor People From being a Burthen to Their Parents or Country, and For making them Beneficial to the Publick’ என்ற பெயரில் ஒரு துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டு வெளியிடுகிறார். அந்தக் கட்டுரை காட்டுத்தீயாய் பரவுகிறது.
ஸ்விஃப்ட் என்ன இப்படியெல்லாம் சொல்லுகிறார்? அட, அவர் கலாய்த்திருக்கிறார் அப்பா! என்று எல்லோரும் அதை பேசுபொருள் ஆக்கினர். ஒருபுறம் இலக்கியச் சுவை மிகுந்த கட்டுரையென்றாலும், இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்ட ஐரிஷ் மக்களின் அவலநிலையை எடுத்துக்காட்டும் தார்மீக பொறுப்பையும் இதன் ஆசிரியர் புரிந்துகொண்டிருக்கிறார்.
ஸ்விஃப்ட் தன் அங்கதச் சுவையை அள்ளிப்போட்டு கிண்டிய மசாலா கட்டுரை, காலங்கள் கடந்தும் அங்கதம் என்றால் ஜோனத்தன் ஸ்விஃப்ட் என்று அவர் பெயரைச் சொல்லும் அளவுக்கு நிலையான மதிப்பை பெற்றுத்தந்திருக்கிறது.
இதன் முதல் பாதியை, கடந்த வாரம் உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் தொடருக்காக மொழிபெயர்த்திருந்தேன். அவசியம் வாசித்து “ஸ்விஃப்டியின் சட்டையர்”-ஐ ஒரு தம்ளர் சுவைத்துப் பாருங்கள். மற்றொரு பாதி இன்று வெளியாகியிருக்கிறது.