Skip to content
Home » உயிர் #4 – அறிவியல் எதை நம்புகிறது?

உயிர் #4 – அறிவியல் எதை நம்புகிறது?

டைனோசர்

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். திடப்பொருட்கள் எல்லாவற்றிலும் அதன் அணு இறுக்கமாகத் திரட்டப்பட்டிருக்கும் எனப் பார்த்தோம். இப்போது அணு என்பது பெரும்பாலும் வெற்றிடம் என்பதையும் பார்க்கிறோம். இது எப்படிச் சாத்தியம்? ஒரு பொருளில் ஓர் அணுக்கருவிற்கும் மற்றொரு அணுக்கருவிற்கும் இடையேயான இடைவெளி கால்பந்தின் உருவகத்துடன் பார்க்கும்போது 15 கிலோ மீட்டர் என்றும், இடையில் இருக்கும் கொசு அளவிலான எலக்ட்ரான்களும் பல கிலோமீட்டர் இடைவெளியில் அமையப்பட்டிருக்கிறது என்றும் பார்த்தோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

கற்களை எடுத்துக்கொள்வோம். ஒரு கல் முழுவதும் வெற்றிடமாக இருந்தால், அந்தக் கல்லின் அணுக்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒப்பீட்டளவில் பல கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தால், எப்படி அந்தக் கல் அவ்வளவு கடினமாகவும், திடமாகவும் இருக்கிறது? இடைவெளியுடன் கட்டமைக்கப்பட்ட பொருள் இடிந்து விழுந்துவிடாதா? எப்படி அவை ஒன்றுக்கொன்று தாங்கிப்பிடிக்காமல், அதேசமயம் இடிந்து, சாயாமல் இருக்கிறது?

ஒரு பொருளின் அணுக்களுக்கிடையே இடைவெளி இருந்தால், அந்த இடைவெளியின் ஊடே நம்மால் ஏன் பார்க்க முடியவில்லை? இரண்டு சுவற்றுக்கு இடையே இடைவெளி இருந்தால் அதன் உள்ளே நம்மால் நடந்து செல்ல முடியும் அல்லவா? அப்படி இருக்கும்போது இரண்டு அணுக்களுக்கு இடையே 15 கிலோ மீட்டருக்கு இடையேயான இடைவெளி இருக்கும்போது ஏன் நம்மால் அவற்றின் உள்ளே நுழைய முடியவில்லை?

கற்களால் கட்டப்பட்ட சுவரும் நாமும் இடைவெளி கொண்ட அணுக்களால் கட்டமைக்கப்பட்டவர்கள் என்றால் நம்மால் ஏன் சுவற்றுக்குள் புகுந்து செல்ல முடியவில்லை? ஏன் பாறைகளும், சுவரும் அடர்த்தியாகத் தோன்றுகிறது? நம்முடைய இடைவெளியை கொண்டு, ஒரு பாறையின் இடைவெளியை ஏன் நிரப்பமுடியவில்லை?

இதற்கு விஞ்ஞானிகள் கூறும் பதில்கள் விசைகள் (Forces), பிணைப்புகள் (Bonds) மற்றும் களங்கள் (Fields) ஆகியவை ஆகும். நாம் பார்க்கும், உணரும் திடப்பொருள் வெறும் அணுக்கருட்களும் எலக்ட்ரான்களும் மட்டுமல்ல. இவற்றுக்கு இடையே நம் கண்ணுக்குத் தெரியாத விசைகள், பிணைப்புகள், களங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டு இந்தக் கால்பந்துகளைப் பிரித்தும், அதேசமயம், இந்தக் கால்பந்துகளின் கூறுகளை இணைத்தும் வைத்திருக்கின்றன. இந்த விசைகளும், களங்களும்தான் நமக்குத் திடமான உணர்வை அந்தப் பொருளுக்குத் தருகின்றன.

இதை ஒரு சிறிய கற்பனையின்மூலம் விளக்கலாம். வேகமாக வீசும் காற்றை விசையாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எதுவுமற்ற இடைவெளியில்தான் இந்தக் காற்று வீசும். ஆனால் நம்மால் அந்த இடைவெளியைக் கடந்து சென்றுவிட முடியுமா? காற்று நம்மை அழுத்தி, தள்ளிவிடும் இல்லையா? அதேபோல்தான் இந்த அணுக்கருட்களுக்கு இடையே உள்ள விசையும் களங்களும்.

திரவத்தை எடுத்துக்கொண்டாலும், அதன் அணுக்கருக்களுக்கு இடையேயான இடைவெளி மேலே பார்த்ததுபோலத்தான் இருக்கும். ஆனால் இரு அணுக்களைப் பிணைத்திருக்கும் விசையும், களங்களும் சற்று இறுக்கம் தளர்வானதாக இருக்கும். அதனால் நம்மால் நீருக்கு ஊடாக நடந்து செல்ல முடியும். வாயுக்களில் உள்ள அணுக்கள் கட்டப்படாமல் சுதந்திரமாக உலாவும், அதனால் அவற்றுக்கு இடையே நம்மால் எளிதாக நடந்து செல்ல முடியும். இவ்வாறு சுதந்திரமாகத் திரியும் காற்றின் அணுக்கள் ஒரே திசையில் உந்தப்பட்டால் அது தானாகவே அருகில் வந்துவிடும் இல்லையா?

அத்தகைய ஒரு சூழலில் நம்மால் காற்றைத் தாண்டிச் செல்ல முடியாது. தீவிரமாகக் காற்றடிக்கும்போது அதற்கு எதிர் திசையில் நாம் செல்ல முயன்றால் நடப்பது இதுதான். சூறாவளிக் காற்றின்போது இந்த அணுக்களின் பிணைப்பு மேலும் இறுகி, ஒரே திசையில் செலுத்தப்படும் என்பதால் ஒன்றிணையும் அணுக்களின் விசைகளும் இணைக்கப்பட்டு அருகே செல்லும் நம்மைத் தூக்கிச் சென்றுவிடுகிறது.

நம்மால் திடப் பொருட்களுக்குள் நடந்து செல்ல முடியாது, ஆனால் சில சிறிய துகள்களால் அவற்றின் ஊடாகச் செல்ல முடியும். உதாரணம் ஒளியணுக்கள் (Photons). ஒளிக்கற்றை (Light Beams) என்பது ஒளியணுக்களின் பாய்ச்சல்தான். அவற்றால் சில வகையான திடப்பொருளுக்குள் நுழைந்து செல்ல முடியும். உதாரணமாக கண்ணாடிக்குள் அவற்றால் ஊடுருவிச் செல்ல முடியும். அதைத்தான் நாம் ஒளிப்புகு திடப்பொருள் (Transparent) என்கிறோம்.

கண்ணாடியிலோ, தண்ணீரிலோ அல்லது சில வகை ஆபரணக் கற்களிலும் (Gemstones) அணுக்கருக்களில் ஒழுங்கமைப்பு ஒளியணுக்கள் ஊடுருவ அனுமதிப்பதாக இருக்கும். ஆனால் அதற்குள் புகுந்து வரும் ஒளியணுக்கள் தம் வேகத்தை இழந்து விடுகின்றன. நாம் நீருக்குள் நடக்கும்போது வேகத்தை இழப்பதுபோல்.

ஆனால் பெரும்பாலான திடப்பொருட்கள் ஒளியணுக்களை அனுமதிக்காது. நாம் அன்றாடம் பார்க்கும் கற்கள், பாறைகள் உள்ளிட்டவை ஒளிப்புகா தன்மை கொண்டவை (Opaque). இத்தகைய திடப்பொருட்கள் ஒளி அணுக்களை ஊடுருவ அனுமதிக்கவில்லை என்றாலும், அவற்றை உறிஞ்சிவிட்டுச் சிலவற்றை வெளியே சிதறடிக்கின்றன. அவை எந்த வகையான ஒளியணுக்களை உறிஞ்சுகின்றன, எவற்றைச் சிதறடிக்கின்றன என்பதைப் பொறுத்து அந்தத் திடப்பொருள் வண்ணங்களைப் பெறுகிறது. (இதுகுறித்து நாம் ஏற்கெனவே விரிவாக பார்த்திருக்கிறோம்).

சில திடப்பொருட்கள் ஒளியணுக்களை உள்ளே அனுமதிக்கவும் செய்யாது, உறிஞ்சவும் செய்யாது. தன் மீது மோதும் ஒளியணுக்களை ஒரு குறிப்பிட்ட நேர் வரிசையில் பிரதிபலிக்கும். அவற்றைத்தான் நாம் கண்ணாடி என்கிறோம். (நாம் முகம் பார்க்கும் கண்ணாடி).

அணுக்களை நாம் எப்படித் தெரிந்துகொண்டோம்?

நாம் மேலே விட்டு வந்த கேள்விக்கு மீண்டும் செல்வோம். அணுக்கள் என்பது பாக்டீரியாக்கள், வைரஸ்களை விட மிகச் சிறிய அளவிலான ஒரு பொருள். அவற்றை நாம் எப்படித் தெரிந்துகொண்டோம்? கண்ணால் பார்க்க முடிகின்ற பொருட்களே நம்மை ஏமாற்றும்போது, கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருளை எப்படி உண்மை என நம்புகிறோம்? இதற்கு அறிவியல் எப்படி ஓர் உண்மையை உறுதி செய்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

0

இந்த உலகின் இயற்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சித்த ஆதிமனிதன் அவற்றின் காரணத்தை அறிய முடியாத நிலையில் அவற்றைச் சுற்றி கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டான். சூரியன் ஏன் உதிக்கிறது? மழை ஏன் பெய்கிறது? இந்த உலகம் எப்படி உருவானது? இப்படி அனைத்திற்குப் பின்னாலும் ஒரு கதையை உருவாக்கினான்.

இந்தக் கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமானவை. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. புனைவை விட நிஜம் விசித்திரமானது என்பதுபோல இயற்கை நிகழ்வுகளுக்குச் சொல்லப்படும் கட்டுக்கதைகளைவிட அதற்கான உண்மையான அறிவியல் காரணங்கள் புனைவைவிட சுவாரஸ்யமானவை. காலப்போக்கில் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றாக நிகழ, நிகழ இருள் மறைந்து வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்தது.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். எது அறிவியல்? எப்படி ஒரு நிகழ்விற்குப் பின்னாலான அறிவியல் காரணியை முடிவு செய்கிறோம்? எதை வைத்து அறிவியல் கூறுவதுதான் நிஜம் என்ற முடிவுக்கு வருகிறோம்? எது நிஜம், எது நிஜம் இல்லை என்பதை எப்படி முடிவு செய்கிறோம்?

இப்போது நிஜம் என்றால் என்ன என்ற கேள்வியின் பதிலுக்கு வருவோம். எது உண்மை? இருக்கும் அனைத்தும் உண்மை. இல்லாதது பொய். சரியா என்றால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. டைனோசரை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் அப்படி ஓர் உயிரினம் இருந்தது. இப்போது இல்லை. அப்படியென்றால் டைனோசர் என்பது பொய்யாகிவிடுமா? நட்சத்திரங்களை எடுத்துக்கொள்வோம். விண்வெளியில் ஏதோ ஒரு தூரத்தில் நட்சத்திரம் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதன் ஒளி நம்மை வந்து அடையும்போது, அந்த ஒளியை நாம் பார்க்கும்போது, அந்த நட்சத்திரம் அழிந்துபோயிருக்கலாம். அப்போது நாம் பார்த்த நட்சத்திரம் உண்மையா? பொய்யா?

குழம்ப வேண்டாம். இந்தப் பிரபஞ்சம் பற்றிய முழு முதல் உண்மை என்பது இன்னும் அறியப்படாதது. அதனால் எவற்றை நம்மால் எதை உணர முடிகிறதோ, எதைப் புரிந்துகொள்ள முடிகிறதோ அதைத்தான் உண்மை என வரையறுத்து வைத்திருக்கிறோம். ஒரு பொருளை எடுத்துக்கொள்வோம். அந்தப் பொருளை பற்றிய உண்மை என்ன என்பதை எப்படி அறிவோம்? முதலில் ஒரு பொருள் இப்போது இருக்கிறது என்பதை எப்படி அறிவோம்? நமது புலன்களால்.

பார்வை, வாசனை, தொடுதல், கேட்டல் மற்றும் சுவை ஆகியவற்றைக் கொண்டு ஒரு பொருள் இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். ஒரு பாறை இருக்கிறது. அதைக் கண்களால் பார்க்கிறோம். பிறகு தொட்டு உணர்கிறோம். அதில் இருந்து வரும் வாசனையை ஆராய்கிறோம். இவற்றைக் கொண்டு அது பாறை என்ற அர்த்தத்தைத் தருகிறோம். அதேபோல் சாலையில் திரியும் நாய், தெரு முனையில் நிழல் தரும் மரம், காலையில் குடித்த காபி, வானில் பறக்கும் விமானம் ஆகிய அனைத்தையும் இந்த ஐம்புலன்களால் உணர்ந்து அவற்றிற்கும் அர்த்தம் கற்பிக்கிறோம். அதை உறுதி செய்து உண்மை என நம்புகிறோம்.

இப்போது மீண்டும் டைனோசருக்கு வருவோம். டைனோசர்களை நாம் பார்த்தது இல்லை. (திரைப்படங்களில் பார்த்ததை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது). அவை கத்துவதைக் கேட்டதும் இல்லை. அவை எப்படி இருக்கும் என்று கால இயந்திரத்தில் பயணம் செய்து நேரில் பார்க்கும் வாய்ப்பும் நமக்கில்லை. பின் அவை இந்தப் பூமியில் வாழ்ந்தன என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

இங்கேயும் நம் புலன்களுக்கு உதவி செய்ய வேறு விதமான விஷயங்கள் பயன்படுகின்றன. நம்மிடம் உயிர் படிமங்கள் (Fossils) இருக்கின்றன. அந்தப் படிமங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதும் நமக்குத் தெரியும். கனிமங்கள் நிறைந்த நீர் எப்படி சேறு மற்றும் பாறையின் அடுக்குகள் புதைந்திருக்கும், இறந்த மிருகங்களின் உடல்களுக்குள் சென்று, அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும், அணு அணுவாக இடம் மாற்றி, மூல விலங்கின் சுவடைக் கற்களில் அச்சிடுகிறது என்பது நமக்குத் தெரியும். (இந்தச் செயல்முறையையும் நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்).

இதனால் நாம் டைனோசர்களை நேராகப் பார்க்காவிட்டாலும், அவற்றின் இருப்பைச் சில மறைமுக ஆதாரங்களைக் கொண்டு நம் புலன்களின்மூலம் அறிந்து முடிவுக்கு வருகிறோம். இவற்றின் மூலம் நாம் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதையே சொல்லிவிட முடியும். பண்டைய உயிர்களின் சுவடுகளை நம்மால் பார்த்தும், தொட்டு உணரவும் முடியும்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “உயிர் #4 – அறிவியல் எதை நம்புகிறது?”

  1. மிகுந்த ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அதே சமயம் எளிமையாகவும் உள்ளது. ஆனால் சும்மா புரட்டி விட்டு போக முடியாது. ஆழ்ந்த சிந்தனையுடன் மறுபடி மறுபடி படிக்க வேண்டும். நன்றி

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *