எந்தவொரு செயலையும் ஏன் என்ற கேள்வியுடன் தொடங்குவது அதன் மீதான ஈடுபாட்டையும் அவசியத்தையும் நம்மிடம் உருவாக்கும். ஏன் என்ற கேள்விக்கான பதிலே, அச்செயலின் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செம்மைப்படுத்தி, வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும். நல்ல புரிதலுடன் ஒரு பணியைத் தொடங்குவது அதன் செயல்பாட்டு முறையை விவேகமாகவும் வேகமாகவும் முன்னெடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். ஆகையால் ‘ஏன் நாம் வாசிக்க வேண்டும்’ என்ற கேள்வியுடன் தொடங்குவது நல்ல தொடக்கமாக அமையும்.
‘சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்?’, ‘இன்றைய தினசரியில் நடுப்பக்கக் கட்டுரையை வாசித்தீர்களா?’, ‘இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகம் வாங்கினீர்கள்?’, ‘உங்கள் ஆஸ்தான எழுத்தாளருக்கு விருது கிடைத்துள்ளது தெரியுமா?’ போன்ற கேள்விகளெல்லாம் இப்போது அரிதாகிக்கொண்டே வருகின்றன. வாசிப்பின் மகத்துவம் தெரியாத சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் எழவே செய்கிறது அல்லவா!
‘ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் எவனோ, அவனே எனது வழிகாட்டி’ என்கிறார் ஜுலியஸ் சீசர். வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நமக்குத் தந்து, ஒரு சிறந்த வழிகாட்டியைப்போல, தனது பணியை செவ்வனே செய்துவிடும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. சரியான முறையில் கொடுக்கப்படும் ஒரு நல்ல ஊக்கம், ஒருவனைப் பெரும் சாதனைகளை நோக்கிக் கூட்டிச்செல்லும். அப்படியான ஊக்கத்தை அளிக்கக்கூடிய அருமருந்து வாசிப்பு.
மனித வாழ்கையில் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் என்றுமே பஞ்சமில்லை. ஒரு சிக்கலைச் சரியான கோணத்தில் கண்டறிந்து, அதன் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை வேறுபடுத்திப் பார்த்து, சரியான தீர்வினை எடுப்பதற்கான வழி, உங்களிடமுள்ள அறிவுத்திறனும் அனுபவங்களுமே ஆகும். இவற்றைத் தருவது வாசிப்பு.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பெரும் சமுதாய மாற்றங்களுக்கும் அடிப்படை வாசிப்பே. பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத எத்தனையோ தலைவர்கள் தங்களது பரந்த வாசிப்பு பழக்கத்தால், பெரும் சாதனைகளையும் மாற்றங்களையும் இந்த உலகில் ஏற்படுத்தியுள்ளனர்.
எப்பேர்ப்பட்ட மோசமான அல்லது வருத்தமான மன நிலையையும் நல்லதொரு வாசிப்பால் நேர்மறையானதாக மாற்றிவிட முடியும். மேலும் மன அழுத்தம், பதற்றம் போன்ற நமது மனதிற்கு எதிர்மறையான விஷயங்களைக்கூட வாசிப்பின் வாயிலாக துடைத்தெறியலாம். ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது புதிய தகவல் ஒன்றை நாம் கற்றுக்கொள்ள தொடங்குகிறோம். இதன் வாயிலாக பழைய கசப்பான விஷயம் ஒன்றை நமது மனதில் மாற்றியமைக்கும் சாத்தியம் கிடைக்கிறது.
உலக ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே கிடைத்த அறிய பொக்கிஷம் புத்தகம். அதனாலேயே புத்தகங்களை மனிதர்களின் சிறந்த நண்பன் என்கிறோம். ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது, அதிலுள்ள பலதரப்பட்ட உலக விஷயங்களை மட்டும் தெரிந்து கொள்வதில்லை, மாறாக நாம் நம்மையே அறிந்துகொள்கிறோம் என்கின்றனர் அறிஞர்கள். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நாம் எந்த கோணத்தில் காண்கிறோம், அதனை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறோம் மற்றும் அதன் மீதான நமது தனிப்பட்ட மதிப்பீடு என்ன போன்ற விஷயங்களின் வாயிலாக நாம் நம்மையே அறிந்துகொள்ள முடிகிறது.
‘புத்தகம் என்பது மீண்டும் மீண்டும் திறந்து பார்க்கக்கூடிய ஒரு பரிசு’ என்கிறார் கெய்லர். வாசிப்பானது நல்ல சிந்தனைத் திறனுடன் கூடிய வளர்ச்சிக்கு உரம் போன்றது. ஆம், நமது சிந்தனைத் திறனை மேம்படுத்தி, சரியான விஷயங்களில் நமது பார்வையை கொண்டுசெல்லும் பணியை மேற்கொள்கிறது நமது வாசிப்பு பழக்கம். தொடர்ச்சியான நல்ல வாசிப்பை தன்னகத்தே கொண்டவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்பட்டதாக உள்ளதாம்.
தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வாசிப்பு நமக்கு உதவுகிறது. சரி, உண்மையிலேயே நமக்குத் தெரிந்த விஷயங்கள் அல்லது நமக்குத் தெரியும் என்று நாமாகவே நினைத்துக்கொண்டுள்ள விஷயங்களின்மீது வாசிப்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நாம் தொடர்ச்சியாக வாசிக்க, வாசிக்க நமக்குத் தெரிந்த விஷயங்களின்மீது கேள்விகள் எழத் தொடங்குகின்றன. அதன்மூலமாக அந்தக் குறிப்பிட்ட தகவலின்மீது நமக்கு நல்லதொரு தெளிவு ஏற்படுகிறது. இதன் மூலமாக, நாம் இதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாகலாம் அல்லது பொய்களும் உண்மையாகலாம்.
ஒவ்வொரு நொடியும் புத்தம் புது விஷயங்களை பிரசவித்துக்கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் அறிந்துகொள்வதற்கான புதிய செய்திகளுக்குப் பஞ்சமேயில்லை. அதுபோல நாம் கற்றுக்கொள்வதற்கான திறன்களுக்கும் பஞ்சமில்லை. வாசிப்பின் வாயிலாகவே இதனை நாம் அடைய முடியும்.
நமது உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல நமது மனதிற்கும் நல்ல எண்ணங்களுக்கும் அவசியம் வாசிப்பு. உடற்பயிற்சியின் மூலமாக நமது உடல் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழி, வாசிப்பு.
மருத்துவ உலகில் வாசிப்பின் ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக மனித மூளையின் செயல்பாடுகள் வியக்கத்தக்க அளவில் மேம்பாடு அடைவதாகக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். வாசிப்பின் வாயிலாக நமது நினைவுத்திறன் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இதன் மூலமாக அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நினைவாற்றல் நோய்களை தாமதப்படுத்த முடிகிறது என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
நிஜ உலக செயல்பாடுகளுக்கு மட்டுமல்ல, நமது கற்பனை உலகிலும் வாசிப்பின் பங்கு அலாதியானது. நமது தொடர்ச்சியான வாசிப்பு பழக்கத்தின் மூலமாக நமது கற்பனைத்திறன் செழித்து வளர்கிறது. இது நமது பல நிஜ உலக செயல்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இதனை நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தருணத்திலேயே உணர்ந்துகொள்ளலாம். நாம் இருக்கும் இடத்தை மறந்து வேறு ஒரு மாறுபட்ட அலாதியான சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது வாசிப்பு.
வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புகிறீர்களா? புகழ்பெற்ற மனிதர் ஒருவரை சந்திக்க விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பிடித்த இதிகாசக் கதையில் நீங்களும் இணைய விரும்புகிறீர்களா? வேற்றுமொழி பேசும் ஒருவருடன் உங்களது மொழியிலேயே உரையாட விரும்புகிறீர்களா? உங்களுக்குத் தெரியாத மொழி அல்லது கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேறு கலாசாரத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தற்போதைய சூழலை மறந்து புதியதொரு சூழலுக்கு உங்கள் மனதை அழைத்துச்செல்ல விரும்புகிறீர்களா? இவை அனைத்தையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதற்கு வாசியுங்கள்.
வாசிக்க வேண்டும் என்கிறீர்களே! அப்படியானால் ஒரு நாளைக்கு எவ்வளவு வாசிக்க வேண்டும்? அல்லது ஒரு புத்தகத்தை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும்? என்ற துணைக் கேள்விகள் நிச்சயம் எழும் அல்லவா! உண்மையில், வரம்புகளை நிர்ணயித்துக்கொள்ளாத வாசிப்பே நல்ல வாசிப்பிற்கான அடையாளம். உதாரணமாக, இந்த இரண்டு பக்கங்களைச் சாப்பிடுவதற்கு முன் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் வேகமும், ஆழ்ந்த வாசிப்பிற்கான நல்ல அணுகுமுறை அல்ல.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றித் தனிப்பட்ட அனுமானம் என்பது நிச்சயம் இருக்கும். காட்டில் புலி ஒன்று மானை துரத்திக்கொண்டு செல்கிறது. அதனிடம் சிக்காமல் மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அந்தப் புலியின் கண்ணோட்டத்தில் தனக்கான இரையை எப்படியும் பிடித்து தனது இன்றைய பசியைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்பதாக இருக்கும். அதுவே அதன் மானின் கண்ணோட்டத்தில் புலியிடமிருந்து எப்படியாவது தப்பித்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாக இருக்கும் அல்லவா! இப்படியான மாறுபட்ட கண்ணோட்டங்களை நமக்குத் தந்து, நமது அனுமானங்களுக்குச் சவால் விடுவது புத்தக வாசிப்பின் முக்கியப் பலன்.
நான் நிறைய படித்தவன், முனைவர் பட்டம் பெற்றவன் மற்றும் ஆய்வுகளெல்லாம் செய்து நிறைய அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளேன். இன்னும் நான் எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா? உண்மையில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, நீங்கள் படித்த அல்லது முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வுகளெல்லாம் குறிப்பிட்ட ஒரு பாடத்திட்டம் அல்லது பிரிவைச் சார்ந்தது. இந்தக் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது என்பது பரந்து விரிந்த ஒட்டுமொத்த ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்காது. பாடப் படிப்பிற்கு அப்பாற்பட்ட வாசிப்பினை நீங்கள் மேற்கொள்ளும்போது மட்டுமே உங்களால் பெரும் வாழ்க்கை வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
அமைதியாக நீங்கள் கடந்து செல்லும் பல விஷயங்களில் உங்களைக் கேள்வி கேட்கும் நிலைக்கு தயார்படுத்தும் அற்புதப் பணியைச் செய்கிறது வாசிப்பு. கேள்வி கேட்பதோடு, உங்களைச் சுற்றியுள்ள சூழலை ஆராயவும் மதிப்பிடவும் மற்றும் அதிலிருந்து நிறைய அனுபவங்களை பெறுவதற்குத் தேவையான யுக்திகளை உங்கள் மனதிற்குத் தருகிறது வாசிப்பு. மேலும் உங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சி நுணுக்கங்களைத் தந்து உதவுகிறது. தொடர்ச்சியான வாசிப்பின் வாயிலாக நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்களை உங்களால் எளிதில் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.
குறைந்த வாசிப்புத் திறன் உடைய ஒருவரால் ஒரு விஷயத்தை உள்வாங்கிக்கொள்வதற்கும், அதனை மதிப்பீடு செய்வதற்கும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். அதுவே தொடர்ச்சியான வாசிப்பை வழக்கமாகக் கொண்டுள்ள ஒருவர் இப்பணியைக் குறைந்த நேரத்தில் செய்துமுடிக்க முடிகிறது. அதற்குக் காரணம் சிந்தனைத் திறனில் உள்ள வேறுபாடே.
நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன்மூலமாக அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துகளை மட்டும் நீங்கள் உள்வாங்கிக்கொள்வதில்லை. மாறாக இன்னும் பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. அதாவது, நீங்கள் வாசிக்கும்போது நீண்ட நேரம் ஒரே சூழலில் இருப்பதால் சீரான ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள், ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் பண்பு உங்களிடம் வளர்கிறது, நீங்கள் வாசிக்கும் புத்தகத்திலுள்ள நிகழ்வுகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்துவதால் நினைவாற்றல் மேம்படுகிறது.
சிற்பியின் கையில் உள்ள உளி போன்றது மனிதர்களின் கையில் உள்ள புத்தகம். எப்படி ஓர் உளி கல்லைச் செதுக்கி செதுக்கி சிற்பமாக மாற்றுகிறதோ, அதேபோல ஒரு புத்தகம் படிக்கப் படிக்க நம்மைப் பண்புள்ளவர்களாகவும் விவேகமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது. பல வெளிநாட்டுப் பள்ளிகளில் தினமும் படிப்பதற்கென நேரம் ஒதுக்கி, மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை படிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வாசிப்பதற்கான நேரத்தை தங்களது பாடத்திட்டத்திலேயே சேர்த்து மாணவர்களின் வாசிப்பை அன்றாட பழக்கமாகவே மாற்றி ஊக்கப்படுத்துகின்றனர்.
நல்ல வாசிப்பே உங்களிடமுள்ள சிறந்த எழுதும் திறனையும் பேசும் திறனையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும். இன்றைய காலக்கட்டத்தில் பேச்சு திறன் இல்லையென்றால், சமுதாயத்தில் நம்மால் பிழைக்க முடியாது அல்லவா! ஆக, அந்தப் பேச்சுக்கும் அடிப்படை வாசிப்பே. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பை வசப்படுத்துவோம், வளமான வாழ்க்கைக்கு வழி செய்வோம்!
(தொடரும்)

