Skip to content
Home » வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

அறிவினை மேம்படுத்தும் மகிழ்ச்சிகரமான செயலாகப் பார்த்தால் மட்டுமே வாசிப்பை நமது வாழ்நாள் முழுமைக்குமான வழக்கமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வாசிப்பானது குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே என்று தீர்மானித்துவிட்டால் அதனை நீடித்த பழக்கமாக மாற்றுவது கடினம். ஆக, மகிழ்ச்சிகரமான வாசிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான காலமும் சூழலும் நமக்கு வசதியானதாக இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அது வாசிப்பின் தரத்தை உயர்த்தும்.

படிப்பதற்கான சிறந்த நேரம் என்பது கடிகாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. நாம் படிக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதாவது ஓரிடத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பது நமது நல்வாழ்வு மற்றும் அறிவாற்றலுக்கான செயல்திறனில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சுற்றுச்சூழல் உளவியல் வலியுறுத்துகிறது.

எந்த நேரத்தில், எங்கு அமர்ந்து படிக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம்தான். முன்னதாக, வாசிப்பிற்கான சூழலை உங்கள் மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன படிக்க விரும்புகிறோம் என்பதை முதலில் மனத்தில் பதியவிட்டு, அதன்மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதே தரமான வாசிப்பிற்கான முதல்படி. அதற்கு நமது மனதை நல்ல முறையில் தயார்படுத்துவது சிறந்தது.

சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கு மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் என்றாராம் நெல்சன் மண்டேலா. எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும்கூட, அதிலும் தனக்கான வாசிப்பினை மேற்கொண்ட எத்தனையோ தலைவர்களும் மேதைகளும் இருந்திருக்கிறார்கள்.

இன்றைய வேகமான உலகில், வாசிப்பதற்கான சரியான நேரத்தைக் கண்டறிவது பல புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு சவாலாகவே மாறியுள்ளது. வாசிப்பின்மீது ஆழ்ந்த ஆர்வம் இருந்தாலும், வேலை, தொழில் மற்றும் குடும்பத்தின் தேவைகள் ஆகியன ஒரு புத்தகத்துடன் முழுமையாக ஈடுபடும் நமது திறனைக் கட்டுப்படுத்துகின்றன.

உண்மையில் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வாசிப்பின் தரம் அதற்காக ஒதுக்கப்படும் நேரத்தின் அளவால் மட்டுமல்ல, ஒரு நாளில் அந்த நேரம் எப்போது ஒதுக்கப்படுகிறது என்பதாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதே. வாசிப்பதற்கான சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது, அந்த அனுபவத்தை ஒரு சுமையான பணியிலிருந்து வளமூட்டும் இன்பமாக மாற்றும்.

சலிப்பைத் தராதவாறு நாம் படிக்கும் புத்தகங்களின் வகைகளுக்கு ஏற்ப, படிக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக அதிகாலை வேளைகளில் நமது மனம் புத்துணர்ச்சியுடன், புதிய விஷயங்களைச் சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கும் என்பதால், கல்வி தொடர்பான புத்தகங்களை வாசிப்பதற்கு ஏற்ற நேரமாகப் பயன்படுத்தலாம். அதுபோல நமது அன்றாடப் பணிகளை முடித்த பிறகு இரவு வேளைகளில், அதிகக் கடினமில்லாத கதைப் புத்தகங்கள் அல்லது வெறுமனே பொழுதுபோக்கிற்கான விஷயங்களை வாசிப்பதற்கு கவனம் செலுத்தலாம்.

பல உயர் சாதனையாளர்கள் காலை வாசிப்பைத் தங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டுள்ளனர். இது அனைவருக்கும் பொருந்துமா என்றால், நிச்சயம் இல்லை. காரணம், சிலர் அதிகாலையில் சிறப்பாகக் கவனம் செலுத்தலாம், மற்றவர்களோ இரவில் வாசிப்பதற்கு விரும்பலாம். நமக்கான வாசிப்பு செயல்முறையை மேம்படுத்துவதற்கு, இந்தத் தனிப்பட்ட வேறுபாடுகளை அங்கீகரித்து மதிப்பது மிகவும் அவசியம்.

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் ஆகியன ஆழ்ந்த முழுமையான வாசித்தலுக்கு உகந்ததாக இருக்கும். நல்ல சிந்தனையுடனும், யோசனையுடனும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மழை பெய்யும் நாட்களும், குளிரான தருணங்களும் ரம்மியமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்.

எல்லோருக்கும் எல்லா நேரங்களும் படிப்பதற்குக் கிடைத்துவிடுவதில்லை. சிலர் தங்களிடம் ஏற்கெனவே உள்ள புத்தகங்களையோ அல்லது இந்த ஆண்டிற்காக வாங்கும் புத்தகங்களையோ திட்டமிட்டு வாசிப்பதுண்டு. அதாவது தொடர்ச்சியான விடுமுறை நாட்கள், பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகள் என அனைத்தையும் திட்டமிட்டு ஒரு முழு ஆண்டிற்கான வாசிப்புத் திட்டத்தை அமைத்துக்கொள்கின்றனர்.

மதிய உணவு இடைவேளை அல்லது மற்ற சிறு சிறு இடைவேளைகளின்போது எளிமையான, மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வாசிப்பினை மேற்கொள்ளலாம். சுய மேம்பாட்டுப் புத்தகங்களிலிருந்து சிறிய அத்தியாயங்களைப் படிப்பது அல்லது ஊக்கமளிக்கும் கட்டுரைகளைப் புரட்டிப் பார்ப்பது போன்றவை இதை ஒரு பயனுள்ள பழக்கமாக மாற்றும்.

நாள் முழுவதும் தொடர்ச்சியான வேலை அல்லது படிப்புக்குப் பிறகு, மனம் ஒரு தளர்வான நேரத்தை விரும்புகிறது. இந்த நேரத்தில் வாசிப்பு ஓர் ஓய்வு நேரச் செயலாக செயல்பட முடியும். கதைகள், சுயசரிதைகள் அல்லது நகைச்சுவைப் படைப்புகள் போன்றவை இந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமானவை. சமூக ஊடகங்கள் மற்றும் செயலற்ற பொழுதுபோக்குகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

எங்கு சென்றாலும் நாம் படிக்க விரும்பும் புத்தகங்களைக் கையோடு எடுத்துச்செல்வது நல்லது. பயணங்களிலோ அல்லது நாம் செல்லும் இடங்களில் எதிர்பாராமல் நமக்குக் கிடைக்கும் அமைதியான சூழலிலோ அல்லது காத்திருக்கும் நேரங்களிலோ புத்தகங்களை வாசிக்கலாம்.

பயணங்களில் கணிசமான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு டிஜிட்டல் புக்ஸ், ஆடியோ புக்ஸ் மற்றும் பலவகையான மின்னணு வாசிப்பு முறைகள் பெரும் உதவிகரமாக இருப்பது மறுப்பதற்கில்லை. குறிப்பாக, ஒலிப்புத்தகங்கள் சலிப்பான பயணங்களை ஆர்வமூட்டும் கற்றல் அனுபவங்களாக மாற்றும் திறன் கொண்டவை.

பெருகிவரும் நமது டிஜிட்டல் உலகில், திரையே முதன்மையான வாசிப்புச் சூழலாக மாறியுள்ளது. இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம் என்றாலும், இவை அதற்கே உரிய சில உளவியல் சவால்களையும் கொண்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. காகிதத்தில் படிப்பதோடு ஒப்பிடும்போது, திரைகளில் படிப்பது பெரும்பாலும் குறைந்த புரிதலையே ஏற்படுத்தும். படித்தவை நீண்டகாலம் நினைவில் இருப்பதும் இல்லை.

அவரவர் வீடுகளில் வசதியாக அமர்ந்து தாங்கள் விரும்பும் புத்தகங்களைப் படிப்பதற்கான சூழலும் நேரமும் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆக அதற்கான விதை சிறுவயதிலேயே பள்ளிகளில் விதைக்கப்படவேண்டியது அவசியம். வாசிப்பின் மகத்துவத்தையும் புத்தகங்களின் மீதான ஈர்ப்பையும் இன்றைய மாணவர்களுக்குப் புரியவைத்துவிடுங்கள், பிறகு எளிதில் அதனை அவர்கள் தங்களது சந்ததியினருக்கு கொண்டுசெல்வார்கள்.

வீட்டு வரவேற்பறை, பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் புத்தகங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் போஸ்டர்கள் ஆகியவற்றைக் கொண்ட ரீடிங் கார்னர்களை ஏற்படுத்துவது நல்ல முயற்சியாக இருக்கும். இதன்மூலமாக வாசிப்பதற்கான அடிப்படை உந்துதலை மாணவர்களின் மனதில் உருவாக்க முடியும்.

கல்விக்கூடங்களில் மாணவர்களின் வசதிக்கேற்ப அவர்கள் எளிதில் புத்தகங்களை அணுகும் சூழலை ஏற்படுத்தித்தரவேண்டும். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பலவகை நிறங்களுடன், பொம்மைகளுடன் கூடிய அட்டைப்படப் புத்தகங்களை அவரவர் வகுப்புகளிலேயே வைத்திருப்பது சிறந்தது. ஒரே மாதிரியான புத்தகங்களைத் தொடர்ந்து பார்ப்பதும் படிப்பதும் மாணவர்களுக்கு சலிப்பைத் தரும் என்பதால், இந்தப் புத்தகங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில், சுழற்சி முறையில் மற்ற வகுப்புகளுக்கும் மாற்றியமைக்க வேண்டும்.

அமைதியான தனிப்பட்ட வாசிப்பிற்குத் தேவையான நேரத்தைப் பள்ளி மற்றும் கல்லூரி நேர அட்டவணையிலேயே ஏற்படுத்த வேண்டும். இது மாணவர்களுக்கான படிக்கும் சூழலை நிரந்தரமாக உருவாக்கித்தர ஏதுவாக அமையும். மேலும் புத்தகங்கள் மற்றும் புத்தக விமர்சனங்கள் மீதான விவாதங்களை மாணவர்களிடையே மேற்கொள்வதும் வாசிப்பிற்கான நல்ல சூழலை அவர்களிடம் உருவாக்கும்.

கல்விக் கூடங்களில் அமையப்பெற்ற நூலகங்களில் வெறுமனே பாடத்திட்டத்துடன் தொடர்புடைய புத்தகங்களை மட்டும் வாங்காமல், பலதரப்பட்ட மற்றும் விரிவான உலக அனுபவங்களையும் பெறத்தக்க வகையில் அவற்றின் புத்தகச் சேகரிப்புகள் இருக்க வேண்டும். மேலும், அவை பலதரப்பட்ட மொழிகளில் அமையப்பெறுவது இன்னும் சிறப்பான சூழலை மாணவர்களிடம் உருவாக்கும்.

இன்றைய பள்ளி, கல்லூரி நூலகங்கள் தங்களது மாணவர்களுக்குப் பல வழிகளிலும் வசதியான சூழலை உருவாக்கித்தருகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உட்பட பல்வேறு பெரிய கல்வி நிறுவனங்களின் நூலகங்களில் சோஃபாக்கள், பீன் பேக்குகள், தனிப்பட்ட மேஜை விளக்குகள் எனப் பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

நாம் அமரும் நிலைகூட வாசிப்பிற்கான தரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தும். அதாவது, சாதாரண ஓய்வுநேர வாசிப்பிற்கு மட்டும் வசதியாக சோஃபாவில் அமர்ந்து படிப்பது அல்லது மெத்தையில் படுத்துக்கொண்டு படிப்பது போன்ற நிலைகளை மேற்கொள்ளலாம். மற்ற முக்கியமான வாசிப்புகளுக்கு நல்ல உறுதியான நாற்காலி மற்றும் மேசைகளைப் பயன்படுத்துவது தேவையற்ற சலிப்பு மற்றும் தூக்கத்திற்கான சூழலைத் தடுக்கும்.

வாசிப்பின்போது நமது உடல் சோர்வில்லாமல் இருந்தாலும்கூட, சில நேரங்களில் நமது கண்கள் சில அசௌகரியங்களைச் சந்திப்பதுண்டு. இதற்குக் காரணம், படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் வெளிச்சமே. நல்ல பிரகாசமான மற்றும் நேரடியாக இல்லாத இயற்கை ஒளியானது, தேவையற்ற கண் சோர்வைத் தடுத்து நல்ல வாசிப்பிற்கு உதவும். மேலும், படிப்பதற்காகவே கிடைக்கும் சிலவகை விளக்குகளையும் பயன்படுத்தலாம்.

நாம் படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்லது அறை சுத்தமாகவும் நேர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நல்ல குளிர்ச்சியோடும் காற்றோட்டத்துடன் இருப்பது, நமது வாசிப்பு நீண்ட நேரம் தொய்வில்லாமல் நீடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

இது படிப்பதற்கான இடம் என்று நாம் தீர்மானித்துவிட்டால் அந்த இடம் வாசிப்பிற்காக மட்டுமேயான ஓர் இடமாக இருக்க வேண்டும். அது தனி அறையாகவோ அல்லது மற்றொரு அறையின் ஒரு பகுதியாகவோ இருந்தாலும், வாசிப்பிற்காக மட்டுமே ஓர் மூலையையோ அல்லது அறையின் ஒரு சிறிய பகுதியையோ ஒதுக்கிப் பயன்படுத்துங்கள்.

காபி மற்றும் தேநீர் போன்றவை பெரும்பாலும் வாசிப்பு நேரத்துடன் தொடர்புடைய பானங்கள் என்பதால், நீண்ட வாசிப்பு நேரங்களில் இவற்றைப் பருகுவது உடலையும் மனதையும் புதுப்பிப்பதற்கான சிறந்த வழியாகும். இன்னும் சொல்லப்போனால், கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருப்பதுகூடச் சில நேரங்களில் உதவியாக இருக்கும்.

நமது வாசிப்புப் பகுதியில் உள்ள, நமது பார்வைக்கு எளிதில் தென்படக்கூடிய தேவையற்ற பொருட்கள் நமது கவனத்தை ஈர்த்து நமக்கான வாசிப்புத்திறனில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. ஆக, படிக்கும் இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

சில வகையான தொட்டிச் செடிகள் அல்லது வாசித்தலுடன் தொடர்புடைய கலைப்படைப்புகள் போன்றவை ஒரு சாதாரண இடத்தை உங்கள் வாசிப்புப் புகலிடமாக மாற்றுகின்றன. இவை மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், தொடர்ச்சியான வாசிப்பிற்கு அவசியமான கவனத்தை கூர்மைப்படுத்த உதவும் என்றும் சுற்றுச்சூழல் உளவியல் கூறுகிறது.

சரியான திட்டமிடல் ஒரு செயல்பாட்டின் பாதி வெற்றிக்குச் சமம் என்ற கூற்று வாசித்தலுக்கும் நன்றாகவே பொருந்தும் என்பதால், இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமக்கான வாசிக்கும் நேரத்தையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொண்டால் மட்டுமே நம்மால் ஓரளவிற்கேனும் வாசிப்பினைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

உங்களுக்கான வாசிப்புக்கு உகந்த ஒரு தனிப்பட்ட பகுதியை உருவாக்குவதற்குப் பெரிய நிதி ஒதுக்கீடோ அதிக இடமோ தேவையில்லை. கொஞ்சம் படைப்பாற்றலும், வாசிப்பின் மீதான காதலும் இருந்தாலே போதும். இதன்மூலம் வாசிப்பை உங்கள் வாழ்வின் இயல்பான, மகிழ்ச்சியான ஒரு பகுதியாக மாற்றலாம்.

எப்படியான சூழல், எந்த நாள் அல்லது எந்த நேரம் வாசிப்பிற்கு உகந்தது என்ற விவாதம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், வாசிப்பில் நாம் காட்டும் தொடர்ச்சியான விருப்பமே உண்மையில் முக்கியமானது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *