Skip to content
Home » வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

‘நான் மிகவும் சுறுசுறுப்பான ஆள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பவன், என்னால் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துக்கொண்டு, பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க முடியாது’ என்று கூறுபவரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். வாசிப்பு எவ்வாறான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்துகொண்டால், நீங்களும் வாசிப்புக்கு நிரந்தர ரசிகனாக மாறிவிடுவீர்கள் என்பதே உண்மை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வாழ்வியல் நியதி. மாற்றத்தை ஏற்படுத்தாத எதுவும் பயனற்ற ஒன்றே. நல்ல சிந்தனை அல்லது நேர்மறையான செயல்பாடு என எதுவாயினும், அது நம்மிடம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும். தோல்விகள்கூட நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்து பெரும் மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடுகின்றது. அதுபோலவே வாசிப்பு என்னும் பெரும் செயல்பாடு பல நல்ல மாற்றங்களை நம்மிடமும் நமது சூழ்நிலையிலும் ஏற்படுத்துகிறது.

‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா – இவை உலகையே மாற்றியமைக்கும் வல்லமை உடையவை’ என்று கூறிய மலாலா யூசுப்சாயின் வார்த்தைகளை இங்கே நினைவுகூர்வோம். புத்தகங்கள் நம் மனதை மட்டுமல்ல, நம் இதயங்களையும் மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்த மாற்றங்கள் உலகையே மாற்றியமைக்கக்கூடியவை. மேலும், புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றான, ‘நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம், நூலகம் எங்கே இருக்கிறது என்பதுதான்’ என்பதில் புத்தகத்தினால் நமக்குக் கிடைக்கும் மாற்றங்களின் வலிமையை அறியலாம்.

‘வாசிக்காத ஒருவருக்கும், வாசிக்கத் தெரியாத ஒருவருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை’ என்றார் மார்க் டிவைன். அப்படியிருக்க நல்ல வாசிப்பின் மூலமாக உங்களை நீங்களே மிகச் சிறந்தவராக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் பதியவிடுங்கள்.

வாசிப்பு நமக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது. சிந்திக்க ஒரு மாற்றுப் பார்வையைத் தருகிறது. நாம் நாமாக இல்லாமல், வேறொருவராக உணரும் ஒரு தளத்திற்கு அது நம்மை அழைத்துச் செல்கிறது. அது நாம் வாசிக்கும் புதினத்தின் கதாநாயகனாகவோ அல்லது அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் வேறொரு கதாபாத்திரமாகவோ இருக்கலாம். ஆனால், நிச்சயமாக, குறைந்தபட்சம் சிறிது நேரத்திற்காவது நாம் வேறொரு உயிராக மாறுகிறோம். அதன்மூலமாக அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாம் மற்றொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பினைப் பெறுகிறோம்.

வாசிப்பு நம் ஆளுமையை மாற்றியமைக்கிறது என்றால் அது மிகையல்ல. முதிர்ச்சியற்ற அல்லது சூழ்நிலைகளைச் சரியாகக் கையாளத் தெரியாத ஒருவரிலிருந்து, தனது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றக்கூடிய ஒருவராக நம்மை அது மாற்றுகிறது. வாசிப்பு நமக்கு முன்னறியாத திறன்களைக் கற்றுக்கொடுத்து, நம்மை அதிக விழிப்புணர்வுள்ளவர்களாக மாற்றுகிறது. வேறு எந்தச் செயல்பாடும் செய்யாத வகையில், இது நம் சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்துகிறது. மேலும், வாசிப்பு நம்மைப் பெருமளவில் மாற்றியமைத்து, நமது வாழ்க்கைக்கு மதிப்பைக் கூட்டுவது மட்டுமல்லாமல், வாழ்வதற்கான சரியான நோக்கத்தையும் அளிக்கிறது.

வாசிப்பு என்பது ஒரு விருப்பம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கைத் தேவை. ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது மறுபிறவிக்குச் சமம். வாசிப்பின் முடிவில் கிடைக்கும் ஞானம் உங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை அளித்து, நீங்கள் மீண்டும் பிறந்த உணர்வைத் தரக்கூடும். நிச்சயமாக, நாம் கையில் எடுக்கும் ஒவ்வொரு புத்தகமும் அத்தகையதொரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திவிடாது, ஆனால் பல புத்தகங்கள் நிச்சயம் அந்த மாயாஜால மாற்றத்தை நிகழ்த்துகின்றன எனலாம்.

வாசிப்பின் முதல் மாற்றம் நம் மனதிலிருந்தே தொடங்குகிறது. அதாவது சாத்தியமேயில்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த விஷயங்களைக்கூட, சாத்தியமானதாக நமது மனதிற்குள் மாற்றியமைக்கும் ஆற்றல் வாசிப்புக்கு உண்டு. உண்மையில் சாத்தியமற்றது என்று எதுவுமேயில்லை என்பதற்கான சான்றுகளே புத்தகங்கள்தான். தற்போதைய சூழ்நிலை மோசமாகத் தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறக்கூடும் என்பதை வாசிப்பே நமக்கு உணர்த்துகின்றன.

தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படித்தும், பெரிதாக உலக விஷயங்கள் எதையும் அறியாத நிலையில் இருந்துவிட்டு, வாசிப்பின் மூலமாக பெரும் சாதனைகளைப் புரிந்த பல அறிஞர்கள் இவ்வுலகில் உண்டு. மூளையின் மறுசீரமைப்பு செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, நினைவாற்றல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை மேம்படுத்துவதில் வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நமது சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தி தகவல் தொடர்புத் திறன்களைக் கூர்மையாக்குகிறது. இது முழுமையான மற்றும் ஆரோக்கியமான அறிவாற்றலோடு, நமது உலகக் கண்ணோட்டத்தில் சிறப்பான மாற்றங்களை கொண்டுவருகிறது.

வாசிப்பானது ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. வேலை, தொழில், உரையாடல்கள் என வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நமது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் ஆழ்மனதின் அறிவுத் தேடல்களில் முனைப்புடன் செயல்படுவதற்கான மாற்றங்களை தோற்றுவிக்கிறது வாசிப்பு.

வாசிப்பை வெறுமனே ஒரு செயல்பாடாகப் பார்க்கக்கூடாது. வாசிப்பு என்பது அடிப்படையில் மூளைக்கு ஒரு உணவு போன்றது. நாம் உண்ணும் உணவு எவ்வாறு நமது உடலுக்குள் சென்று, பல மாற்றங்களுக்குப் பிறகு, நமக்கான ஆற்றலை கொடுக்கிறதோ, அதுபோலவே வாசிப்பும் நமக்கான பல நல்ல மாற்றங்களை கொடுக்கக்கூடியது. அது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுடனேயே பயணிக்கும் ஒரு பயணம், ஒரு கருவி மற்றும் ஒரு நண்பன் என்ற கோணத்திலேயே வாசிப்பை மேற்கொள்ளவேண்டும்.

வாழ்க்கையின் சிறிய விஷயங்களைக்கூட கவனித்துச் செயல்படவும், அவற்றை மதிக்கவும் புத்தகங்களே நமக்குக் கற்றுக்கொடுகின்றன. சிறியது என்றால் முக்கியத்துவமற்றது என்று அர்த்தமல்ல என்ற உண்மையைப் புத்தகங்களே உணர்த்துகின்றன. வாழ்க்கைப் பிரச்சனைகளிலோ அல்லது நெருக்கடியான சூழலிலோ அல்லது மனச்சோர்வுற்ற நிலையிலோ வாசிப்பு ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை. மாறாக, கடினமான காலகட்டங்களில், நாம் எப்போதும் அவற்றைச் சார்ந்திருக்க முடியும் என்பதை அறிவோம்.

வாசிப்பு மாற்றங்களின் மூலமாக நமது கண்ணோட்டம் பரந்து விரிவடைகிறது என்றால் அது மிகையல்ல. ஒரு சூழ்நிலையை வேறொருவரின் பார்வையில் நாம் காணும்போது, விரைவாக அந்த நபரின் கண்ணோட்டத்திற்குள் நுழைய முடிகிறது. இதன் மூலமாக அதிகம் வாசிப்பவர்கள் சக மனிதர்கள் அல்லது விலங்குகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நல்ல முடிவுகளை திறம்பட செயல்படுகிறார்கள்.

சில மனநலக் கோளாறுகள் மற்றும் மூளையின் குறிப்பிட்ட சுற்றுகளில் ஏற்படும் பிரச்சனைகள்கூட வாசிப்பினால் நல்ல மாற்றங்களைப் பெறுகின்றன. கார்னகி மெலன் நடத்திய ஓர் ஆய்வில், நூறு மணிநேரத் தீவிர வாசிப்புப் பயிற்சியானது, குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தியதுடன், பாதிக்கப்பட்டிருந்த மூளையின் குறிப்பிட்ட பகுதிகளின் தரத்தையும் இயல்பு நிலைக்கு உயர்த்தியது என்று தெரியவந்துள்ளது. வாசிப்பு, மூளையின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயான தகவல் தொடர்பையும் அதன் இணைப்புகளையும் மேம்படுத்தக்கூடும் என்பதால், இந்தக் கண்டுபிடிப்புகள் மனநலக் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

கதைகளைப் படிப்பது மூளையில் உளவியல் ரீதியாகவும் நரம்பியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாவலைப் படிப்பதற்கு முன்பும், படிக்கும்போதும், படித்த ஐந்து நாட்களுக்குப் பிறகும் பங்கேற்பாளர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், தொடர்ச்சியான நரம்பியல் மாற்றங்கள் கண்டறியப்பட்டன. பங்கேற்பாளர்கள் தங்கள் நாவலைப் படித்து முடித்த பிறகு, மூளையின் ஓய்வு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததை முடிவுகள் காட்டின என்கிறார் இந்த ஆய்வின் தலைவரான, அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானி பேராசிரியர் கிரிகோரி பெர்ன்ஸ் அவர்கள்.

பல்வேறு வகையான வாசிப்புப் பொருட்களும் எழுத்து நடையும் நாம் படிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களும் நம் மனதில் வெவ்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூ ஸ்கூல் ஃபார் சோஷியல் ரிசர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த உளவியலாளர்களான இமானுவேல் காஸ்டா மற்றும் டேவிட் கோமர் கிட் ஆகியோர் 1000 பங்கேற்பாளர்களுடன் மேற்கொண்ட ஓர் ஆய்வு இதனை தெளிவுபடுத்துகிறது. நமக்கு மிகவும் பிடித்த சில தலைப்புகள் பல்வேறு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர முடியும். உதாரணமாக, உளவியலை பேச்சுவார்த்தைகள், நிதித்துறை, முடிவெடுத்தல் மற்றும் பலவற்றில் பயன்படுத்த முடியும்.

வாசிக்கும்போது அர்த்தம் தெரியாத பல சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ நாம் சந்திக்க நேரிடலாம் அல்லவா! இது அந்தச் சொற்களுக்கான பொருளைத் தேடி அறிய நம்மைத் தூண்டுகிறது. இதன் விளைவாக ஒரு புதிய சொல்லை நாம் அறிந்துகொள்கிறோம். பரந்த அளவிலான சொற்களைக் கொண்டிருப்பது, நமது உணர்வுகளை மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த உதவும். அதனைப் பின்னர் நமது எழுத்துக்களிலோ அல்லது பேச்சிலோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது வாசிப்பினால் ஏற்படும் முக்கியமான மாற்றமாகும்.

சரியான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும்போது, அது ஓர் உணர்வுப்பூர்வமான அனுபவமாக அமைகிறது. உங்கள் தற்போதைய வாழ்க்கை எவ்வளவு சிறப்பானது என்பதைக்கூட அது உங்களுக்கு உணர்த்தக்கூடும். மற்றவர்களின் துயரங்களைப் பற்றி வாசிக்கும்போது, நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரியவரும். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் உணர்வு

வாசிப்பின் மூலமாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு புதிய கண்ணோட்டத்தையோ கருத்தையோ நீங்கள் பெறுகிறீர்கள். இந்த உணர்வு, உங்களுக்குள் புதிதாகக் கிடைத்த அந்த ஆற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துகிறது. பகிர்ந்துகொள்ளவோ அல்லது கொடுக்கவோ உங்களிடம் இப்போது ஒரு விஷயம் இருப்பதால், அது மற்றவர்களுடன் சிறந்த பிணைப்பை உருவாக்கவும் உதவுகிறது.

நமது வாழ்நாட்களின் எண்ணிகையில்கூட மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை வாசிப்புக்கு உண்டு. 2017இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 3,635 பேர் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இதில், புத்தகங்களை வாசிப்பவர்கள், வாசிக்காதவர்களைவிட சுமார் 2 ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாகப் புத்தகங்களை வாசிப்பவர்களிடையே இறப்பு விகிதம் 20% குறைவாக இருந்ததாக அந்த ஆய்வு தெரிவித்தது.

வலுவான பகுப்பாய்வு சிந்தனைத் திறனில், வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள் அளப்பரியது. அதாவது, நீங்கள் ஒரு அருமையான மர்ம நாவலைப் படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாவலை படித்து முடிப்பதற்கு முன்னரே, அந்த நாவலின் கிளைமாக்ஸ் இப்படிதான் இருக்கும் என்று அனுமானித்திருக்கிறீர்களா? அப்படி அனுமானித்திருந்தால், அந்த அனுமானம் எப்படி நிகழ்ந்தது என்று சிந்தித்ததுண்டா? அதற்குக் காரணம், நமது மூளை தனக்கு வழங்கப்பட்ட அனைத்து விவரங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தனது துப்பறியும் திறன் மூலமாக அவற்றை வரிசைபடுத்தி பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதேயாகும்.

நான் சில நல்ல புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டேன், இதனால் என்னிடம் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டது, அப்படியானால் இது என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதா? என்றால், நிச்சயம் இல்லை. வாசிப்பினால் ஏற்படும் இந்த மாற்றங்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படாவிட்டால் நிரந்தரமாக நிலைத்திருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எழுத்தாளரின் எண்ணங்களிலிருந்து தொடங்கப்பட்ட பயணம், புத்தகத்தின் வழியே பவனிவந்து, வாசகரின் மனதை அடைவது என்பது மிகவும் அழகானது. நீங்களும் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை எவ்வாறு அர்த்தமுள்ளதாகவும், மனநிறைவு மிக்கதாகவும், எண்ணற்ற வாய்ப்புகளுக்குத் திறந்ததாகவும் மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *