Skip to content
Home » வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்

வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்

‘கற்பதை நிறுத்தும் வரைதான் ஒருவருக்கு உண்மையான முதுமை தொடங்குகிறது. ஒவ்வொரு புத்தகமும் எனக்குப் புதிதாக எதையாவது கற்றுக்கொடுக்கிறது அல்லது விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது’ என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸ்.

அவரைப் போலவே நாமும் புத்தகங்களை வாசிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம். ஆனால், படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதில் பெரும்பாலும் பலரும் சிரமப்படுகிறோம். பல மணிநேரம் வாசித்த ஒரு புத்தகத்தில் உள்ள சில முக்கியமான கருத்துகளைச் சில நாட்களுக்குப் பிறகு மறந்துபோகும் நிலை உங்களுக்கு எத்தனை முறை ஏற்பட்டுள்ளது?

குறிக்கோள் இன்றி செயல்படுத்தப்படும் எந்தவொரு செயலும் அதன் உண்மையான இலக்கை அடைவதில்லை. பலரும் மற்றவர்கள் வாசிக்கும் முறையைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தங்கள் குறிக்கோள்களுக்குப் பொருந்தாத உத்திகளையே பின்பற்ற நேரிடுகிறது. ஆழமாக வாசிப்பதும் சரியான உத்தியைத் தேர்ந்தெடுப்பதும் எப்போதும் உங்கள் குறிக்கோள்களைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்தே தொடங்குகின்றன. ஆக, வாசிப்பதன் நோக்கம் என்ன?

நாம் படித்ததை நினைவில் கொள்ளத் தவறும்போது, அந்தப் புத்தகத்தை மீண்டும் படிப்பதில் நமது மதிப்புமிக்க நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறோம். அந்த நேரத்தை மற்றொரு மதிப்புமிக்க புத்தகத்தைப் படிப்பதற்கோ அல்லது வேறு முக்கியமான பணிகளுக்கோ பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா! வாசிப்புப் புரிதலை மேம்படுத்தவும், நாம் படித்ததை நினைவில் கொள்ளவும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம்.

புத்தகங்களை மேலோட்டமாக அணுகும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதாவது, பல வேலைகளைச் செய்துகொண்டே அவசரமாக வாசித்துவிட்டு, ஓரமாக வைத்துவிடுவோம். இதில் ஏற்றுக்கொள்ளச் சற்று கடினமான உண்மை என்னவென்றால், வாசிப்பது என்பது பணியின் ஒரு பாதி மட்டுமே, படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து ஆழமாகப் புரிந்துகொள்வதே மற்ற பாதி.

வாசிக்கத் தொடங்கும் முன் சிறிய ஆய்வு ஒன்றினை மேற்கொள்வது சிறந்தது. அதாவது, அந்தத் தலைப்பைப் பற்றியும் அதன் பின்னணிச் சூழலைப் பற்றியும் அறிந்துகொள்ள இணையத்தில் ஒருமுறை தேடிப் பாருங்கள். முக்கியமான பின்னணித் தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது, முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும், அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளவும், தகவல்களை நினைவில் நிறுத்தவும் உதவும். உதாரணமாக, ஒரு நாவலை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றால், அந்த நூலாசிரியரின் பின்னணி குறித்தும், அந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழல் குறித்தும் ஆய்வு செய்யுங்கள்.

வாசித்தவற்றை நினைவில் கொள்ளவும், வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் சிறந்த வழி, ஒரு புத்தகத்தை வாசிக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே அளவு நேரத்தை அதில் உள்ள முக்கியக் கருத்துகளைப் பற்றிச் சிந்திக்கவும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் ஒதுக்க வேண்டும். ‘வாசிப்பு என்பது அறிவிற்கான மூலப்பொருட்களை மட்டுமே மனதிற்கு வழங்குகிறது, நாம் படித்தவற்றை நம்முடையதாக மாற்றுவது சிந்தனைதான்’ என்கிறார் புகழ்பெற்ற தத்துவஞானி ஜான் லாக் அவர்கள்.

நீங்கள் படிக்கும்போது தகவல்களை வெறுமனே உள்வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக, அந்த விஷயத்தைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கி, கருத்துக்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு என்ன உணர்வைத் தருகிறது? அந்தத் தகவல் உங்களை உற்சாகப்படுத்துகிறதா? அல்லது ஆர்வத்தைத் தூண்டுகிறதா, அல்லது விமர்சன ரீதியாக சிந்திக்க வைக்கிறதா? அது நீங்கள் படித்த மற்ற விஷயங்களையோ, அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையோ உங்களுக்கு நினைவூட்டுகிறதா? இந்த வழியில் கருத்துகளைப் பற்றிச் சிந்திப்பது அதை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது. முக்கியத் தகவல்களை நீங்கள் அதிகமாக நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

புத்தகத்தில் ஒரு முக்கியமான பகுதியை வாசிக்கும்போது, சற்று இடைநிறுத்தி, அதில் உள்ள விஷயங்களை உங்கள் மனதில் காட்சிப்படுத்திப் பாருங்கள். உதாரணமாக, அறிவியல் பாடப்புத்தகத்தில் இதயம் எவ்வாறு உடல் முழுவதும் இரத்தத்தை உந்தித் தள்ளுகிறது என்பது பற்றிப் படிக்கும்போது, அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். முக்கியமான கருத்துகளைத் தெளிவாக மனக்கண்ணில் கொண்டுவருவது, அந்தத் தகவல்களை உங்கள் நினைவில் ஆழமாகப் பதிய வைக்க உதவும். குறிப்பாக, காட்சிகளின் மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு உத்தியாகும்.

வாசிப்பின் மூலமாக நீங்கள் ஒரு புதிய சிந்தனை முறையையோ அல்லது கருத்தையோ கற்றுக்கொள்ளும்போது, அது உங்கள் மூளையில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது. அதன்மூலம் உங்கள் பழைய அனுபவங்கள் அல்லது தகவல்கள் அனைத்தையும் புதிய கோணத்தில் அணுகிப் பார்க்க முடிகிறது. அதாவது பழைய நிகழ்வுகளிலிருந்து புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. பேட்ரிக் ஓ’ஷாக்னெஸ்ஸி அவர்கள் கூறுவது போல, வாசிப்பின் மூலமாக கடந்த காலத்தையே மாற்றியமைக்க முடிகிறது.

வாசிப்பதன்மூலம் பெறும் புரிதலை மேம்படுத்துவதற்கான ஒரு வழி, நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதாகும். வாசித்த கருத்துகளைச் செயலில் ஈடுபடுத்துவது, அவற்றை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். நடைமுறைப் பயிற்சி என்பது கற்றலின் மிகச் சிறந்த வடிவமாகப் பார்க்கப்படுகிறது.

உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பது, அதில் உள்ள விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கவும் நினைவில் கொள்ளவும் ஒரு வலுவான உந்துதலை அளிக்கிறது. உதாரணமாக, நீங்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கப்போகிறீர்கள் என்றால் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து அனைத்துத் தகவல்களையும் கற்றுக்கொள்வதில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதுபோலவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கான புத்தகத்தைப் படித்து, அதன் முக்கியக் கருத்துகளை உடனடியாகப் பயன்படுத்தலாம்.

வாசித்துப் புரிந்துகொள்ளும் பணியை முழுவதுமாக உங்கள் நினைவாற்றலை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நீங்கள் வாசிக்கும் புத்தகத்திலுள்ள சிறந்த விஷயங்களைக் குறித்து வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அச்சுப் புத்தகங்களில் அடிக்கோடிடுதல், தனியாக ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்ளுதல், கிண்டிலில் படிக்கும்போது பத்திகளை ஹைலைட் செய்துவைத்தல், ஆடியோ புக்குகளைக் கேட்கும்போது சுவாரஸ்யமான மேற்கோள்களைச் சேமித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இதில் நாம் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயம், குறிப்புகளைத் தேடக்கூடிய வடிவத்தில் சேமித்து வைப்பதேயாகும். டிஜிட்டல் வடிவில் குறிப்புகளை சேமிப்பதற்கு எவர்நோட் போன்ற செயலிகள் நல்ல தேர்வாக இருக்கும். இதில், எளிமையான தேடல், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் பயன்படுத்தும் வசதி மற்றும் இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நீங்கள் வாசிக்கும் புதிய தகவல்களை ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்த கருத்துகளுடன் இணைப்பதன் மூலம், நீங்கள் படித்தவற்றை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. சார்லி மங்கர் கூறுவது போல, ‘நீங்கள் படிக்கும் விஷயங்களை, அதில் விளக்கப்படும் அடிப்படை கருத்துக்களின் கட்டமைப்புடன் தொடர்புபடுத்தும் மனப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், படிப்படியாக நீங்கள் ஞானத்தை அடைவீர்கள்’.

வேறு ஒரு தலைப்பை நினைவூட்டும் அல்லது உடனடியாக ஒரு தொடர்பையோ அல்லது புதிய யோசனையையோ தூண்டும் ஒரு விஷயத்தைப் படிக்கும்போது, அந்த எண்ணத்தைக் கவனிக்காமல் கடந்து செல்ல அனுமதிக்காதீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்பதையும், அது மற்ற கருத்துகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதையும் குறித்து வையுங்கள்.

வெவ்வேறு துறைகளைச் சார்ந்த யோசனைகள் சந்திக்கும் இடத்தில்தான் புதிய நுண்ணறிவுகள் வெளிப்பட முனைகின்றன என்பதால், நன்கு அறிமுகமான சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய இந்த தொடர்புப்படுத்துதல் உதவும். ஆக, அடுத்த முறை நீங்கள் ஒரு புத்தகத்தில் உள்ள முக்கியமான கருத்தினை வாசிக்கும்போது, ‘இது எனக்கு எதை நினைவூட்டுகிறது?’ என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு, அதன் மையக்கருத்தை ஒரு சில வரிகளில் சுருக்கி எழுத முயற்சி செய்யுங்கள். இது உங்களை அந்தப் புத்தகத்தில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள் எவை என்பதைச் சிந்திக்க தூண்டும். முழுப் புத்தகத்தையும் மீண்டும் வாசிப்பதன்மூலம் கிடைக்கும் அதே அளவு பலனை, நீங்கள் எழுதிய சில வரிகளைப் பார்ப்பதன் மூலமே உங்களால் பெறமுடிவதைக் காலப்போக்கில் உணர்வீர்கள்.

வாசிப்பின் மீதான சிந்தனையில் உள்ள குறைபாடுகளை அல்லது இடைவெளிகளை சரியாக வெளிப்படுத்த இந்தச் சுருக்கம் உதவும். மேலும், இது அந்தப் புத்தகத்தின் முழு சாராம்சத்தையும் அந்தப் புத்தகத்தை படிக்காத ஒருவருக்கு விளக்கும் அளவிற்கு நம்மை தயார்படுத்தும். இதையே புகழ்பெற்ற நிதி ஆய்வாளரான பென் கார்ல்சனும் ‘ஒரு புத்தகத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பதை அறிந்துகொள்வதற்கான சிறந்த வழி, அதைப் பற்றி ஏதாவது எழுதுவதே ஆகும்’ என்று வலியுறுத்துகிறார்.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தை முழுமையாக அணுகுதல் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். ‘ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் வாசித்த மனிதனிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ என்கிறார் புகழ்பெற்ற சிந்தனையாளரான தாமஸ் அக்வினாஸ். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரே ஒரு சிறந்த புத்தகத்தை மட்டும் படித்து, அதை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையின் ஒரு முழுப் பகுதிக்குமான உங்கள் நம்பிக்கைகளை அமைத்துக்கொண்டால், அந்த நம்பிக்கைகள் உறுதியானவையாகவும் துல்லியமானவையாகவும் முழுமையாகவும் அமையும்.

‘படிக்கத் தகுதியான எதையும் இருமுறை மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் படிக்கலாம். ஒரு புத்தகம் சிறப்பானதாக இருந்தால், அதை எத்தனை முறை படித்திருந்தாலும், அதிலிருந்து புதிய விஷயங்களைக் கண்டறியவும், முன்பு கவனிக்காத அம்சங்களைக் கண்டுகொள்ளவும் உங்களால் எப்போதும் முடியும்’ என்ற தத்துவஞானி கார்ல் பாப்பர் அவர்களின் கூற்றுப்படி சிறந்த புத்தகங்களை இருமுறை படிப்பது என்பது சிறப்பானதே. ஒரே புத்தகத்தை நீங்கள் மீண்டும் வாசித்தாலும், அதை ஒருபோதும் அதே விதமாக வாசிப்பதில்லை.

இன்றைய பரபரப்பான உலகில், ஒவ்வொரு நாளும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சூழல்களும் மாறுகின்றன. ஒரு புத்தகத்தை இரண்டாவது முறை படிக்கும்போது, முதல் முறை கவனிக்காத சில விஷயங்களை நீங்கள் கண்டறியக்கூடும் என்பது கவனத்தில் வைக்கவேண்டிய ஒன்று. அதுபோலவே புதிய பகுதிகள் மற்றும் கருத்துகள் உங்களது அப்போதைய சூழலுக்குப் பொருத்தமானவையாகத் தோன்றும். வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, வெவ்வேறு வாக்கியங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பது இதில் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்ட கருத்துகளை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். ஒரு நல்ல பாடலை முணுமுணுப்பது அதன் வரிகளை நினைவில் வைத்துக்கொள்ள உதவுவது போலவே, நீங்கள் படித்த முக்கியமான கருத்துகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வது, படித்தவற்றை நினைவில் கொள்ள உதவும்.

ஒரே மாதிரியான தலைப்புகளில் தொடர்ச்சியாகப் படிப்பது கருத்துகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் படித்ததை நினைவில் கொள்ளவும் உதவும். ஒரே மாதிரியான தலைப்புகளில் எண்ணற்ற புத்தகங்களில் உள்ள தகவல்கள் என்பவை, ஒரு மரத்தின் வெவ்வேறு கிளைகள் போன்றவை. ஒவ்வொரு கிளையும் வித்தியாசமாகத் தோன்றினாலும், அவை அனைத்தும் ஒரே அடிமரத்திலிருந்துதான் தோன்றுகின்றன அல்லவா! அதுபோலவே வெவ்வேறு புத்தகங்களாகத் தோன்றும் அனைத்திலும் உள்ள அடிப்படைக் கருத்துகள் பொதுவாக ஒரே மாதிரியாகவே இருக்கும்.

நாம் வாசிக்கும் புத்தகங்களில் உள்ள கருத்துகளை உள்வாங்கி நினைவில் வைத்துக்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். அறிவு என்பது தக்கவைத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே பெருகும். அதாவது, அதிக புத்தகங்களை வாசிப்பது மட்டுமல்ல, வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் அதிகபட்சப் பயனைப் பெறுவதே முக்கியம்.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *