ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் ஓர் அழகிய வீடு இருந்தது. அதுதான் சக்கரவர்த்தி அடிக்கடி தங்கும் இல்லம். அன்று அங்கே வீட்டின் எதிரே இரண்டு ஆண் யானைகள் சண்டைக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தன. ஒன்றின் பெயர் சுதாகர். இன்னொன்றின் பெயர் சூரத் சுந்தர். அவற்றைச் சண்டையிடவைத்துப் பார்ப்பதில் சக்கரவர்த்திக்கு அலாதி சந்தோஷம் இருந்தது.
கொஞ்சநேரம் ஓடிவிட்டு வந்த அந்த யானைகள் இறுதியில் வீட்டு பால்கனிக்குக் கீழே வந்து நின்றுகொண்டு ஒன்றின் தும்பிக்கையை ஒன்று பிடித்து பலப்பரீட்சை பார்க்கத் தொடங்கின. சக்கரவர்த்தியும் குடும்பத்தினரும் அந்த சாகச விளையாட்டைக் கண்டுகளிக்க யானைகளுக்குக் கொஞ்சதூரத்தில் வந்தனர். அவரது மூன்று முத்த மகன்களும் முன்னால் சென்றனர். சண்டையைப் பார்க்க மிகவும் ஆர்வம் கொண்ட சக்கரவர்த்தியின் ஒரு மகனான அந்த இளைஞன் கொஞ்சம் அதிகமாகவே முன்னால் சென்றான்.
கொஞ்சநேரம் தும்பிக்கைகளை முறுக்கிக்கொண்டிருந்த யானைகள் பின்பு விட்டுவிட்டு ஓரிரு அடிகள் பின்வாங்கின. சுதாகர் என்ற யானையின் கோபம் மட்டும் அடங்கவில்லை. ஆனால் அது சூரத் சுந்தரைத் தாக்காமல் அருகில் நின்றுகொண்டிருந்த சக்கரவர்த்தியின் மகனை நோக்கிப் பிளிறிக்கொண்டே வந்தது. யானைக்கு அவன் சக்கரவர்த்தியின் மகன் என்று தெரியுமா என்ன? அப்போது அந்தப் பையனுக்கு பதினான்கு வயது.
ஆனால் அவன் அச்சம் ஏதுமின்றித் தன் குதிரைமீது அமர்ந்திருந்தான். குதிரை பயந்து பின்னால் ஓடாதபடியும் கட்டுப்படுத்திப் பிடித்துக்கொண்டிருந்தான். அதுமட்டுமா? தன்னை நோக்கிப் பிளிறிக்கொண்டு வந்த யானையின் நெற்றியை நோக்கி ஒரு ஈட்டியை எறிந்தான்.
எல்லாருக்கும் அச்சமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் அச்சத்தில் இப்படியும் அப்படியும் ஓடியது. அப்படி ஓடியபோது ஒருவர்மீது ஒருவர் தடுமாறி விழுந்தனர். பிரபுக்களும் வேலைக்காரர்களும் சப்தமிட்டுக்கொண்டே ஓடினர். யானைகளை அமைதிப்படுத்தி அல்லது அச்சமூட்டி விரட்ட பட்டாசுகள் கொளுத்திப் போடப்பட்டன. ஆனால் என்ன செய்தும் அந்த யானை பின்வாங்கவில்லை.
அந்த இளைஞன் அமர்ந்திருந்த குதிரையைத் தன் நீண்ட தும்பிக்கையால் பிடித்துக் கீழே தள்ளியது. ஆனால் சட்டென்று தரையிலிருந்து வீறுகொண்டெழுந்த இளவரசன் தன் வாளை எடுத்து அந்த கோபக்களிறை சந்திக்கத் தயரானான். அத்துடன் அவனது வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் அப்போது அவனுக்கு ஓர் உதவி கிடைத்தது. அவனது சகோதரன் ஷுஜா என்பவன் அந்தப் புகையிலும் கூட்டத்திலும் தன் குதிரையுடன் உள்ளே புகுந்து அந்த யானையைத் தன் ஈட்டியால் காயப்படுத்தினான்.
தளபதி ராஜா ஜெய்சிங் என்பவரும் அங்கே வந்து சேர்ந்தார். அவரும் தன் குதிரையின் மீது அமர்ந்தவராக வலது பக்கத்திலிருந்து யானையைத் தாக்கினார். அந்த இடத்துக்கு ஓடி, வேண்டியதைச் செய்யும்படி தன் காவலாளிகளுக்கு சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. சும்மா நின்றுகொண்டிருந்த சூரத் சுந்தர் யானை திடீரென்று சுதாகரைத் தாக்க வந்தது. ஏற்கனவே ஈட்டிகள், அம்புகள், வாள்வீச்சு என்று காயப்பட்டிருந்த சுதாகர் இன்னொரு சண்டைக்குத் தயாராக இல்லை. அது ஓடிவிட்டது. அதைத் துரத்திக்கொண்டு சூரத்சுந்தரும் ஓடியது.
சக்கரவர்த்தி தன் மகனை அணைத்து அவனை உச்சி முகர்ந்தார். மகனது வீரத்தை மெச்சினார். அவனுக்கு ‘பஹதூர்’ என்ற பட்டத்தையும் அளித்தார். ‘பஹதூர்’ என்றால் ‘கதாநாயகன்’ என்று அர்த்தம். அதுமட்டுமல்ல; வீர மகனுக்கு நிறைய பரிசுப்பொருள்களும் அளித்தார். சக்கரவர்த்தி ஜஹாங்கீரின் கண்ணெதிரே ஒரு புலியை எப்படி ஷாஹஜான் வீரத்துடன் எதிர்கொண்டாரோ அதைப்போல அவர் மகனும் இருக்கிறார் என்று பிரபுக்கள் மெச்சினர். ஆமாம். மேலே சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியின் கதாநாயகர் ஒளரங்கசீப்தான்.
இப்படியெல்லாம் யானைக்கு அருகில் போகலாமா என்று அப்பா கேட்டதற்கு, ‘போகலாம் அப்பா, என்னை யானை கொன்றிருந்தால் அது எனக்கு அவமானமல்ல; ஏனெனில் இறப்பு என்பது சக்கரவர்த்திகளுக்கும் வரும்தானே’ என்று பதில் சொன்னார் இளைஞர் ஒளரங்கசீப். அன்றிலிருந்து மூன்று நாள் கழித்து அவருக்கு 15வது பிறந்த நாள் வந்தது.
பதினைந்தாவது பிறந்த நாளன்று மகனுக்கு எடைக்கு எடை தங்க நாணயங்களும் (5000 மோஹர்கள்), சுதாகர் என்ற அந்த யானையையும், இன்னும் பல பரிசுகளையும் சக்கரவர்த்தி கொடுத்தார். மேலும் இரண்டு லட்ச ரூபாய்க்கான பரிசுப்பொருள்களும் கொடுத்தார்.
ஒரு மனிதரின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரைப் புரிந்துகொள்ளவும் உதவலாம். ஆனால் ஒரு மனிதரின் வரலாற்றைப் புரிந்துகொண்டால் ஒரு நாட்டின் அரை நூற்றாண்டுகால வரலாற்றையே புரிந்துகொண்டதற்கு ஒப்பாகும் என்று ஒருவர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியுமோ முடியாதோ, ஆனால் ஒளரங்கசீப்பின் வரலாற்றில் அப்படித்தான் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சொன்னவர் யார்? பிரபலமான வரலாற்று ஆசிரியரான ஜே. என். சர்கார் என்று அறியப்பட்ட ஜாதுநாத் சர்கார். History of Aurangazeb என்ற நூலின் முதல் பாகத்தின் அறிமுகத்தில் அவர் இப்படிக்கூறுகிறார்: ‘ஒளரங்கசீப்பின் வரலாறானது நடைமுறையில் 17ம் நூற்றாண்டு இந்தியாவின் ஐம்பதாண்டுகால வரலாறாகும்’. இந்திய நாட்டு வரலாற்றின் பக்கங்களில் அதிமுக்கியமான காலகட்டம் அது என்றும், வரலாற்றின் துவக்ககாலகட்டத்திலிருந்து பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்தியாவில் ஏற்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் உருவான ஆகப் பெரிய அரசாங்கம் ஔரங்கசீப்புடையது மட்டுமே என்றும் கூறுகிறார்.
காஷ்மீரிலிருந்து கர்நாடகம்வரை ஒளரங்கசீபின் செங்கோலுக்கு இந்தியா அடிபணிந்தது. இஸ்லாம் இறுதியாக இந்தியாவில் முன்னேறிச் சென்றது இவர் காலகட்டத்தில்தான். அசோகர், ஹர்ஷவர்தர், சமுத்ரகுப்தர் ஆகியோரது சாம்ராஜ்ஜியங்களைவிட மிகவும் பெரியது ஒளரங்கசீபின் பேரரசு என்றும் கூறுகிறார். மற்ற சக்கரவர்த்திகளின் ஆட்சிகளில் நடந்தமாதிரி டெல்லி தலைமைக்கு எதிராக கள்ளத்தனமாக ஆட்சிசெய்யவோ, வருமானத்தைக் கொடுக்க முடியாது என்றோ எந்த மாகாண ஆளுநரும் ஒளரங்கசீப்புக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை.
அவரது தனிப்பட்ட வாழ்வு ஒரு துறவியுடையதைப் போன்று மிக எளிமையானதாக இருந்தது. ஆனாலும் அவரது ஐம்பதாண்டுகால ஆட்சி தோல்வியிலும் குழப்பத்திலும்தான் முடிந்தது.
திருமறை, ஹதீது எனப்படும் நபிமொழிகள் இரண்டையும் நன்றாக ஒளரங்கசீப் அறிந்துவைத்திருந்தார். அவரது கடிதங்களில் அவற்றிலிருந்து பொருத்தமாக உதாரணங்களை எடுத்துரைப்பார். அரபி, பாரசீகம் இரண்டு மொழிகளிலும் சரளமாகப் பேசினார்; எழுதினார். தாய்மொழி உர்து. அரண்மனையில் பேசப்பட்ட மொழியும் அதுவே. துருக்கி மொழியும் தெரியும்.
திருமறையைத் தன் கையால் மூன்று பிரதிகள் எழுதி, அவற்றுக்குப் பொருத்தமான படங்களை இணைத்து, அழகான நூலாக்கி, ஒன்றை மக்காவுக்கும் ஒன்றை மதினாவுக்கும் அனுப்பினார். மூன்றாவது நிஜாமுத்தீன் ஒளலியாவின் தர்காவில் உள்ளது. ஒளரங்கசீப் குர்’ஆனை முழுமையாக மனனம் செய்த ’ஹாஃபிஸ்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகிய பீங்கான் கோப்பைகள் அவருக்குப் பிடிக்கும்.
தன் கையால் எழுதிய திருமறைப்பிரதிகளையும், தொப்பிகளையும் விற்று, அந்தப் பணத்தையே தன் செலவுகளுக்காகப் பயன்படுத்தினார். இது சாதாரண விஷயமல்ல. அறத்தில் ஊறியிருக்கும் ஒருவரால்தான் இப்படி வாழமுடியும். இந்த விஷயத்தில் ஹஸ்ரத் கலீஃபா உமர் அவர்களை ஒளரங்கசீப் பின்பற்றியுள்ளார் என்று சொல்லவேண்டும்.
கடிதங்களையும் மனுக்களையும் தன் கையாலேயே எழுதினார். ச’அதி, ஹாஃபிஸ் போன்ற கவிஞர்களின் பல கவிதைகளை மனப்பாடமாகச் சொல்வார்; குறிப்பிடுவார். திருமறை, நபிமொழி தவிர இமாம் கஸ்ஸாலியின் படைப்புகளை அதிகம் படித்தார்; அடிக்கடி குறிப்பிடுவார். சூஃபித்துவத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தை இது காட்டியது.
அஹ்மத்நகர் மாவட்டத்தில் பிங்கார் என்ற ஊரில் இருந்தபோது அவரை இறைவன் அழைத்துக்கொண்டான். அப்போது அவருக்கு வயது 88. அப்போது அந்த சக்கரவர்த்தியின் வசம் இருந்தது 300 ரூபாய்கள் மட்டுமே. அவையும் அவர் விருப்பப்படி தர்மம் செய்யப்பட்டன.
0
அருமை,, வாழ்த்துக்கள் சார்