Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் என்பதே அவரது இயற்பெயர். சுருக்கமாக வ.உ.சி. இதில், சிதம்பரம் எனும் பெயர் தந்தை உலகநாத பிள்ளையின் சகோதரன் நினைவாக வைத்த பெயர். உலகநாதன், சுதந்திரப் போராட்ட வீரர் தனபதி பிள்ளையின் உறவினர். தனபதி, வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமைத் தளபதியாகவும் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வ.உ.சியின் தந்தை, தாத்தா மற்றும் பாட்டனார் உட்பட அனைவரும் வக்கீல் தொழிலையே செய்துவந்தனர். எனவே ஒட்டப்பிடாரத்தில் வக்கீல் பிள்ளை வீடு என்று யாரைக் கேட்டாலும் தெரியும். வ.உ.சியின் குடும்பத்தில் அவருடன் பிறந்தோர் ஆறு பேர் . அதில் மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள். தம்பிகளில் இருவரும், சகோதரிகளில் இருவரும் சிறுவயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டனர். எனவே ஓர் இளைய சகோதரி, ஓர் இளைய சகோதரன் என இருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இளைய சகோதரியின் பெயர் மாலையம்மாள். சகோதரரின் பெயர் மீனாட்சிசுந்தரம். இவர் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் மனநோயாளி ஆனவர். இறக்கும் வரையில் மனநோயாளியாகவே இருந்தார்.

வ.உ.சிதம்பரனார் தன் சிறு வயதில் சுவரில் விரைந்து நடப்பது, மரம் ஏறுவது, கால் மாறி ஓடுதல், மூச்சை அடக்கித் தலைகீழ் நடத்தல், கவண் கொண்டும் கை கொண்டும் கல்லெறிதல் எனத் துடுக்குத்தன விளையாட்டுகள் அனைத்திலும் பெரிதும் ஆர்வம்கொண்டிருந்தார். சலால்கான் என்பவரிடம் சிலம்பம் பயின்றார். 5ஆம் வகுப்புவரை ஆசிரியர் வீரபெருமாள் அண்ணாவி அவர்களிடம் ஓட்டப்பிடாரம் சன்னதித் தெருவில் அமைந்துள்ள திண்ணைப் பள்ளியில் தமிழ் பயின்றார். ஆத்திசூடி, உலகநீதி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நீதி வெண்பா, மூதுரை போன்ற நீதி நூல்களையும் எண்சுவடி, குழிப்பெருக்கம் ஆகிய கணக்கு நூல்களையும் ஆசானிடம் கற்றுத் தேறினார். தனக்குத் தமிழறிவித்த ஆசானைப் பின்வருமாறு தன் சுயசரிதையில் மறக்காமல் குறிப்பிடுகிறார்.

‘வெண்ணீறும் மணியும் மேவப் பெற்ற
தண்ணிய அழகிய சரீரம் கொண்டோன்
வயதோ, நாற்பது வளரப் பெற்றோன்
பெயரோ, வீர பெருமாள் அண்ணாவி ;
அன்னேன் சிறந்த அடியினைச் சார்ந்து
பன்னாள் கேட்கும் பாக்கியம் பெற்றேன்!’

தமிழில் நல்லறிவு பெற்றுவிடுவார் என்றாலும் ஆங்கிலக் கல்வியில் தன் மகன் சிறக்க வேண்டி ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலத்தில் பணிபுரியும் கிருஷ்ணய்யர் என்பவரிடம் ஆங்கிலப் பாடத்திற்கெனத் தனிவகுப்புக்கு அனுப்பினார் அவரது தந்தை. பணி மாறுதல் காரணமாக கிருஷ்ணய்யர் வேறு ஊர் சென்றதால் பின்னர் புளியப்புத்தூரிலிருக்கும் பாதிரியார் ஆடம்சனை நாடினார். ஆடம்சனின் சீர்மிகு வழிகாட்டுதலைக் கண்டு வியந்தார். தன் மகனுக்குக் கிடைக்கும் ஆங்கிலக் கல்வி ஊர் முழுதும் உள்ள மாணவர்களும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி, சிறிய பள்ளியொன்றை ஆரம்பித்தார்.

14 வயதில் அடிப்படைப் பள்ளிக்கல்வியை முடித்த கையோடு தூத்துக்குடி செயிண்ட் சேவியர் உயர்நிலைக் கல்விச் சாலையில் நடுநிலைப் பள்ளிப் படிப்பைப் படித்தார் சிதம்பரனார். கவனக் குறைவால் முதல் முயற்சியில் தேர்வில் வெற்றிபெறும் வாய்ப்பினை இழந்தார். பின்னர் அங்குள்ள கால்டுவெல் உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்றார். மீண்டும் செயிண்ட் சேவியர் பள்ளியில் அருட்தந்தை ஹெளசானல் என்பவரின் சிறப்பு மேற்பார்வையில் மெட்ரிகுலேஷன் படிப்பை 19 வயதில் முடித்தார். அதனைத் தொடர்ந்து மரியாதைக்குரிய அண்ணாதுரை, கஸ்தூரி ஐயங்கார் அவர்களிடம் ஆங்கிலமும், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி தமிழ்ப் பண்டிதர் சவுரிராய பிள்ளையிடம் தமிழும் பயின்றார்.

இவ்வாறாகத் தந்தையின் பெருமுயற்சியால் தமிழறிவும், ஆங்கில அறிவும் நிரம்பப் பெற்றார் வ.உசி. தனிப்பெருந் தலைவராகப் பின்னாளில் திகழ்ந்தாலும், இளமைக் காலத்தில் பொறுப்புடன் இருந்திருப்பார் என மனக்கணக்கு போடவேண்டாம். வ.உ.சியும் நம்மைப்போலவே இளமைப் பருவத்திற்கே உரிய வேகமும், விளையாட்டு குணமும் கொண்டவர்.

சிறுவயது சேட்டைகளுக்கு அடிக்கடி தந்தையிடம் அடி வாங்குவதும், கோபித்துக்கொள்வதுமென இருந்தார் வ.உ.சி. இதனால் அடிக்கடி வீட்டைவிட்டுக் கிளம்பிய சம்பவங்களும் உண்டு. ஒருமுறை செய்த சிறிய தவறுக்காகக் கொஞ்சம் மிகுதியாகக் கண்டித்துவிட்டார் தந்தை உலகநாதன். கோபம் தலைக்கேற, வெறும் கோவணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் சிதம்பரனார். பல நாட்களாகத் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக நண்பர் ஒருவருக்கு வ.உ.சியின் கடிதம் கிடைத்து. அதனடிப்படையில் அவர் மதுரையில் இருப்பதையறிந்து தேடிக் கண்டுபிடித்தார் தந்தை உலகநாத பிள்ளை.

பிறிதொரு நாளில் வ.உ.சி தன் அத்தையிடம் ஏதோ வாக்குவாதம் முற்றிப்போய் பிரச்னை பெரிதாகிவிட்டது. தந்தையும் வெளுத்து வாங்கிவிட்டார். தான் கூறுவதை நம்பாமல் தந்தை தன்னை அவமதித்துவிட்டதாகக் கோபித்துக் கொண்டார் சிதம்பரனார். ஊரிலிருந்து கிளம்பும் வழியில் தனக்குச் சிலம்பம் கற்றுத்தந்த ஆசான் ஜலால்கானைத் தன்னுடன் சேர்த்து அழைத்துச் சென்றார். சென்னை வந்தடைந்தார். பின் அங்கிருந்து வேறு சில பகுதிகளுக்கும் சுற்றலானார். குடும்பமோ அவரை ஊர் ஊராகத் தேடித் திரிந்தது. இறுதியாக திருவனந்தபுரத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒட்டப்பிடாரம் திரும்பினார்.

உயர்நிலைக் கல்வியை முடித்துவிட்டு கால்போனபோக்கில் காலம் கடத்திச்செல்லும் மகனின் மனப்போக்கை நினைந்து வருந்தலானார் உலகநாதன் பிள்ளை. அதனால் வ. உ.சிக்கு ஓட்டப்பிடாரம் தாலுகாவில் குமாஸ்தா வேலை வாங்கிக் கொடுத்தார். அவ்வலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார் வ.உ.சி. தன் மகனுக்காகக் கல்வி கற்க ஒரு பள்ளிக்கூடத்தையே கட்டியவர், குமாஸ்தாப் பணியோடு விட்டுவிடுவாரா? தமது குடும்பத்தொழிலான வக்கீல் பணியைத் தன் மகனும் தொடர்ந்து நடத்த ஆசைகொண்டார். வ.உ.சியை திருச்சியிலே தனது வக்கீல் நண்பர்களான கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்பவர்களது கண்காணிப்பில் சட்டப்படிப்பைப் படிக்க வைத்தார்.

1895ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில், சட்டக் கல்வியான இரண்டாம்நிலை பிளீடர்ஷிப் படிப்பை முடித்துத் தேர்ச்சியடைந்தார் சிதம்பரனார். பின் ஒட்டப்பிடாரம் சப்மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பணியைத் தொடங்கினார். சிவில், கிரிமினல் ஆகிய இரண்டு வழக்குகளையும் திறம்பட நடத்தினார். கிரிமினல் வழக்குகள் இவரைத் தேடி வந்தமைக்குக் காரணம், இவரின் சாமர்த்தியம். எதனையும் தீரப் பரிசீலித்து நடவடிக்கையெடுக்கும் பாங்கு இவரிடம் இருந்தது. வாதிடும் வழக்குகள் வெற்றியைத் தராது என்று எண்ணினால் இருதரப்பிடமும் சமாதானம் பேசித் தீர்வு காணும் அளவிற்குச் சமயோசித புத்திகொண்டவராக விளங்கினார்.

ஏழைகளிடம் கூடுமானவரை பணம் பெற்றுக்கொள்ளாமலே வழக்குகளில் ஆஜரானார். காவலர்களால் ஜோடிக்கப்படும் பொய் வழக்குகளில் ஆஜராகி ஏழைகளின் நீதியை நிலைநாட்டினார். சுவராசிய நிகழ்வாக வ.உ.சி ஆஜராகும் வழக்கு ஒன்றில் எதிர்த்தரப்பு வக்கீலாக இவரது தந்தையிருந்தார். முதலில் கொஞ்சம் யோசித்தார் வ.உ.சி. பின்னர் தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக நின்று சிறப்பாக வாதிட்டுத் தந்தையைத் தோற்கடித்தார்.

சட்டத்துறை, காவல்துறை ஆகியவற்றில் படிந்திருந்த ஊழல் காரணமாகப் பல அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபட்டனர். அதிகாரத் திமிர்கொண்டு நீதியை வளைப்பவர்கள் என இவர்களைக் கண்டு அஞ்சாமல் சட்டத்தின்முன் நிறுத்தினார். அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தந்தது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அரசாங்க அதிகாரிகளிடையே வேரூன்றியிருந்த லஞ்சப் பழக்கத்தை ஒழிக்க எடுத்த துணிச்சலான முயற்சிகள், குற்றவியல் நடுவர்களும் காவல்துறை அதிகாரிகளும் வ.உ.சி மீது விரோதம் கொள்ளும் நிலையை உருவாக்கின. மகனின் இத்தகு செயல்களினால் மனமுடைந்த தந்தை உலகநாதன், வ.உ.சியை நிதானமாக, யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ளவேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். அமைதியாய் இருக்க முனைந்தாலும் காலம் அவரை மீண்டும் அதிகாரிகளிடமும் காவலர்களிடமும் பகையைச் சம்பாதிக்கும்படி நிகழ்வுகளை அரங்கேற்றியது.

அத்தகைய சம்பவங்கள் வ.உ.சியின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *