Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத் தோன்றினார்.

சிதம்பரனாரின் இளமைச் சீற்றம், துணிவு, ஒழுக்கம் ஆகியவை அவர்களுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. வ.உ.சியை சூழ்ச்சியில் சிக்கவைத்து, நீதிமன்றத்தில் அவர் குரல் ஒலிப்பதைத் தடுப்பதே அவர்களின் எண்ணம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகளாகக் கீழ்கண்ட வழக்குச் சம்பவங்கள் அமைகின்றன.

ஒருமுறை தலைமைக் காவலர் சுப்ரமணியம் என்பவரின் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் சிதம்பரனாருக்கும் பங்கு இருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர். கூட்டுச் சதி ஆலோசனை செய்ததாக வ.உ.சி மீது குற்றம் சுமத்தினர். அப்படிச் செய்வதனால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பாக வ.உ.சி ஆஜராக அச்சம்கொள்வார் என்றெண்ணினர்.

வ.உ.சியிடம் பேசி ‘நீதிமன்றத்திற்கு வரவேண்டாம்’ எனச் சமாதனப்படுத்தினர். அவரும் அதற்கு உடன்பாடு அனுப்பினார். ஆனால் விசாரணை நடைபெறும் நாளில் திடீரென நீதிமன்றத்தில் ஆஜரானார். காவலர்களுக்கு அவரின் வருகை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘சாட்சிகளை உடைத்து விடுவார்’ எனக் காவல்துறை சார்பில் வாதாடினர். அவ்வழக்கு நடைபெறும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லயோனல் வைபர்டு இருந்தார்.

வழக்கின் போக்கை நன்கு கவனித்தார் நீதிபதி. வ.உ.சி மீது சுமத்தப்பட்டிருப்பது முற்றிலும் உண்மையல்ல என்பதைத் தெரிந்துகொண்டார். வழக்கினைத் தள்ளுபடி செய்தார். மேலும் தலைமைக் காவலர் சுப்ரமணியத்திற்கு வேலையும் பறிபோனது. இந்த வழக்கில் வ.உ.சிக்கு ஏற்பட்ட செலவினங்களை வழக்கு தொடர்ந்தவரே நஷ்ட ஈடாகத் தரவேண்டி நீதிபதி ஆணையிட்டார். கூடுதலாக, தன் மீது வழக்கு தொடர லஞ்சம் பெற்றுக்கொண்டு உதவிய துணைக் குற்றவியல் நீதிபதி திரு. ஏகாம்பர ஐயர் மீதும், வாசுதேவராவ், பஞ்சாபகேச ஐயர் என்ற மற்ற இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார் வ.உ.சி.

குற்றத்தை நிரூபித்து தண்டனையை உறுதிசெய்தார். வ.உ.சியின் வாதாடும் திறமை ஊரில் இருப்போருக்குப் பேசுபொருளானது. ஊரே பாராட்டி மகிழ்ந்தது. மக்களுக்காக மக்களில் ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவர்களின் கண்களில் தெரிந்தது. சிதம்பரனாரின் புகழ் ஊர் முழுக்கப் பரவியது. வாதாடுவதற்கு வழக்குகள் வரிசையாக வந்தபடி இருந்தன. வழக்குகளில் வாதாடுவதற்கு மற்றவர்களிடம் காசு வசூலித்தாலும், காசில்லாத வறியவர்களின் வழக்குகளில் பெரும்பாலும் காசு வாங்காமல் வாதாடினார்.

திருநெல்வேலி மாவட்டம் குலசேகரநல்லூர் எனும் ஊரில் இருந்த செல்வந்தர் ஒருவர், அவ்வூரிலுள்ள பெண்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுத்துவந்தார். நீண்ட நாட்கள் நடந்துவந்த கொடுமை தாங்காமல் ஊர் மக்களில் சிலர் கொதித்துப்போய் அவரை அடித்தே கொன்றுவிட்டனர். வழக்குப் பதிவாகி 7 பேர் குற்றவாளிகளாய் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். 1898ஆம் ஆண்டில் அவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுள் ஆறுமுகத் தம்பிரான் என்பவரை 6 ஆண்டுகள் கழித்து முதல் எதிரியென போலீசார் கைது செய்து ஒட்டப்பிடாரத்தில் சிறைவைத்தனர். அவரது இயற்பெயர் அழகப்பபிள்ளை. ஆறுமுகத் தம்பிரான் எனப் பெயர் மாற்றம் செய்து சிதம்பரத்தில் ஒரு மடத்தின் தலைவராய் இருந்துவந்தார். அவர் வ.உ.சியின் நெருங்கிய உறவினர். வழக்கின் தீவிரம் அறிந்து உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழக்கறிஞராய் களம் இறங்கினார் வ.உ.சி.

ஆறுமுகத் தம்பிரானுக்கு ஜாமின் வேண்டியும் கிடைக்கவில்லை. எனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கொலை வழக்கு விசாரணையில் வாதியின் சார்பாக 2 வழக்கறிஞர்கள் வாதாடினர். அவர்களின் வாதங்களில் முன்னுக்குப்பின் முரண்கள் நிரம்பி இருந்தன. எதிர்த்தரப்பில் இருந்த வழக்கறிஞரான வ.உ.சியிடம் குறுக்கு விசாரணை நடைபெறாமலேயே இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதியாய் இருந்த வாலஸ், சிதம்பரனாரின் விசாரணைத் திறனை வியந்து ‘உமது வாக்கு விசாரணையின் அணுக்கத்தையும் கண்டு வியந்தேன். உமக்கு நிகரான கிரிமினல் வழக்கறிஞர் இல்லை’ எனக்கூறிக் கைகுலுக்கி மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே 1895ஆம் ஆண்டு தன் 23ஆம் வயதில், திருச்செந்தூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்னும் பெண்மணியை மணமுடித்தார். நல்லதொரு இல்லாளாக இறுதிவரை வாழ்ந்தார். வ. உ.சிக்குத் தேவையான அனைத்தையும் இன்முகத்துடன் செய்து வந்தார் வள்ளியம்மாள். வ.உ.சியைக் காண வீடுதேடி வரும் நண்பர்களையும், வ.உ.சி திடீரென அழைத்துவரும் நண்பர்கள் கூட்டத்தினையும் புன்முறுவல் மாறாது வரவேற்று உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை என்பதை வ.உ.சியே அவர் எழுதிய வள்ளியமை சரித்திரத்தில், ‘கூறெனக் கூறிய பொழுதும்கூட உடையோ நகையோ ஒன்று என்றும் தா எனக் கேட்டிலள்; பண்பெலாஞ் செய்தனள் ‘ எனக் குறிப்பிட்டு மகிழ்கிறார். கணவரின் தேசத் தொண்டினைத் தன்னுடைய தொண்டாகவும் நினைத்துக் காத்துவந்தார் வள்ளியம்மாள்.

0

காவல்துறை, நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள் என ஒவ்வொருவரிடமும் வம்பு, வழக்கு எனப் பகை வளர்த்துக்கொண்டு உள்ளூரில் வேலைபார்த்து வருவதை வ.உ.சியின் தந்தை உலகநாதன் விரும்பவில்லை. ஊரே பாராட்டிப் புகழ்ந்தாலும், தந்தை உலகநாதன், வ.உ.சிதம்பரனாரைத் தூத்துக்குடிக்குச் சென்று வக்கீல் தொழில் நடத்தும்படி வலியுறுத்தினார். தந்தையின் சொற்படி 1900ஆம் ஆண்டில் ஒட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு மாற்றலாகி பணியாற்றத் தொடங்கினார் சிதம்பரனார்.

தாம் கொண்ட கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாதவர் வ.உ.சி. தன்னை நம்பியவர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்தார். தூத்துக்குடி வந்த பிற்பாடும் அவரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் தம்மை இணைத்துக் கொண்டார். வ.உ.சியின் இலக்கியப் பேச்சு ஆரம்பமான நாள் இதுவென்றே கூறலாம். உத்தரவேதமாம் திருக்குறள் குறித்த இலக்கியப் பேச்சாகவே அநேக இடங்கள் அமைந்தன.

வ.உ.சி தனிமனித ஒழுக்கத்திலும் ஆன்மிகச் சிந்தனையிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர். அதன் தொடர்ச்சியாகத் தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘விவேகபாநு’ எனும் பெயரில் ஆன்மிக இதழ் தொடங்கினார். ‘லௌகீகத்திற்கும் வைதிகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை’ என்ற அறிவிப்புடன் முதல் இதழ் வெளியானது. கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார்.

அவரது முதல் ஆன்மிகக் கட்டுரையான ‘கடவுளும் பக்தியும்’ 1901ஆம் ஆண்டில் விவேகபாநுவில் வெளியானது. கட்டுரைகளும் நூல்களும் எழுதியது மட்டுமல்லாது நூல் ஆய்விற்கும் உதவி செய்துவந்தார். தமிழ் ஆய்விற்கு வருடந்தோறும் ரூ.12 நன்கொடையளித்து வந்தார் என கந்தசாமிக் கவிராயர் வ.உ.சியைப் பற்றி விவேகபாநு இதழில் குறிப்பிடுகிறார். 1897ஆம் ஆண்டில் சென்னையில் இராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டது. இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களுள் ஒருவரான இராமகிருஷ்ணானந்தரை சென்னையில் சந்தித்தார் வ.உ.சி. அவரது சுதேச உணர்வு மேலோங்க இந்தச் சந்திப்பு காரணமாக அமைந்தது. சுதேசத்தின் விதை மனத்தில் விழுந்த தருணம் அது.

‘சுதேசியம் ஒன்றே சுகம்பல அளிக்கும்
இதேஎன் கடைப்பிடி என்றனன். அவனுரை
வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்
சித்தம் அதனைச் சிதையாது வைத்தது’

என வ.உ.சி தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

1873ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே திலகரின் உரைகளை, கட்டுரைகளைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். திலகரைத் தன் அரசியல் குருவாகக் கொண்டார். இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு அவருக்கு உத்வேகம் அளித்தது. வங்கத்தில் நடைபெறும் சுதேச நடவடிக்கைகளை, விழிப்புணர்வுச் செயல்பாடுகளை அங்கே இருந்த நண்பர்களிடம் கேட்டறிந்தார். தூத்துக்குடியில் கைத்தொழில் வளர்ச்சங்கம், தரும சங்கம், சுதேசியப் பண்டகச் சாலையென அமைப்புகளை ஏற்படுத்தி தன் சுதேசப் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். ஒருபக்கம் நீதிமன்ற வழக்கு விசாரணைகள், மறுபக்கம் சுதேசியக் கொள்கைக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், விவேகபாநு ஆன்மிக இதழ் வெளியீடு எனத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார்.

பொதுவாகத் தலைவர்களை அவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், அவர்கள் கொண்டுள்ள பற்றுகள் ஆகியவற்றை முன்வைத்தே வகைப்படுத்தலாம். அதன் அடிப்படையில் வ.உ.சியைப் பார்த்தோமேயானால், நாட்டுப்பற்றை முதன்மையாகவும் மொழிப்பற்றை அடுத்ததாகவும் கொண்டு இயங்கினார். வ.உ.சியின் தூத்துக்குடி வருகையே அவரின் ஆன்மிகம், இலக்கியம் மற்றும் சுதேசியப் பணிகளுக்கு ஏற்றக் களமாக அமைந்தது என்பது உண்மை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *