Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம்.

மேற்கண்ட உரையின் கூற்று முற்றிலும் உண்மையானது. 1850களின் ஆரம்பம் தொட்டே இந்தியா தன்னை நவீனத் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயார்ப்படுத்த ஆரம்பித்திருந்தது. இந்தியாவில் பருத்தி ஆலைகளும் சணல் உற்பத்தி ஆலைகளும் நிலக்கரிச் சுரங்கங்களும் தோன்றின. சிலர் இம்மாற்றங்கள் இந்தியாவின் தொழிற்புரட்சிக்கு வித்திடும் என்று அடித்துக் கூறினர்.

ஆங்கிலேய ஆட்சியின்கீழ் கிராமப்புறப் பொருளாதாரம் சிதைந்து, நகரமயமாக்கல் வேகமடைந்தது. அத்துடன், ‘தொழிலாளர்கள்’ என்ற புதிய சமூக வர்க்கமும் உருவாகத் தொடங்கியது. தென் தமிழகத்தில் பருத்தித் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயர் ப்ராங் ஹார்வி, பாபநாசம் அருவியின் நீர்வளத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, 1885ஆம் ஆண்டு 10,000 கதிர்களுடன் தின்னெவேலி மில்ஸ் என்ற பருத்தி ஆலையைத் தொடங்கினார். மூன்றே ஆண்டுகளில் அது 16,000 கதிர்களாக விரிவடைந்து வேகமான வளர்ச்சியைப் பெற்றது.

வணிகத்தை விரிவுபடுத்த 1888இல் தூத்துக்குடி கடற்கரையையொட்டி கோரல் மில் எனும் பருத்தி ஆலையையும் தொடங்கினார். நல்ல வருமானத்துடன் கணிசமான லாபத்துடன் அதை நடந்தி வந்தார். ஆனால் தொழிலாளர்களின் வாழ்வு என்னவோ எப்போதும்போல இருண்ட நிலையில்தான் இருந்தது. முதலாளிகளின் வாழ்வில் எல்லாமும் இருந்தன. தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியம் இல்லை, வார விடுமுறை இல்லை, உணவு இடைவேளை இல்லை என, ‘இல்லையென்பது’ மட்டுமே தொழிலாளர்களின் வாழ்வாக இருந்தது.

‘ரேகை பார்த்து ஓட்டுதல்’ எனும் முறையிலேயே தொழிலாளர்கள் பணிக்கு வந்துசென்றனர். அதாவது காலை ஒளியில் உள்ளங்கை ரேகை தெரியும் வேளை தொழிற்சாலைக்கு வந்துவிட வேண்டும். உள்ளங்கை ரேகை மங்கும் இரவு நேரத்தில்தான் வேலை முடிக்க வேண்டும். 8 மணி நேர வேலையென்பதெல்லாம் அப்போது நடைமுறைக்கு வராத காலம். ஆலையில் நடக்கும் சிறுசிறு தவறுக்கெல்லாம்கூட பிரம்படிதான் தண்டனை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரே கடந்துசென்றால்கூட எண்ணிக்கையில்லாப் பிரம்படி தண்டனை நிச்சயம்.

தொழிலாளர்கள் வேலை செய்த தரை தார் பூசப்பட்டிருந்தது. கடுமையான வெயிலில் அந்தத் தார் இளகி வெப்பமடைந்தபோதும், அதன்மீதே மணிக்கணக்கில் நின்று வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது. பாதுகாப்பு வசதிகளோ தொழிலாளர் நலன்களோ அங்கு காணப்படவில்லை. இந்தக் கொடுமைகளால் தொழிலாளர்களிடையே நீண்டகாலமாக அதிருப்தி குவிந்துகொண்டே வந்தது. ஆனால் அவர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்கள் உருவாகாத காலம் அது. என்ன செய்ய வேண்டும், எப்படிப் போராட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலும் அவர்களிடம் இல்லை.

இந்நிலையில், கோரல் மில் தொழிலாளர்களின் துயரங்கள் வ.உ.சிதம்பரனாரின் கவனத்திற்கு வந்தன. தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், 27 பிப்ரவரி 1908 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களை ஊக்குவித்தார். அது வெறும் ஊதிய உயர்விற்கான போராட்டமாக மட்டுமல்லாமல் மனித மரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டமாகவும் மாறியது. இந்த வேலைநிறுத்தம் ஆங்கிலேய அதிகாரிகளையும் ஆலை நிர்வாகத்தையும் கடும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியது.

கோரல் மில் நிறுவனத்தின் நிர்வாக முகவர்களான ஏ அண்ட் எஃப் சகோதரர்களே பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் நிறுவனத்தின் தூத்துக்குடி முகவர்கள் ஆவர். ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ஆங்கிலேயருக்கெதிராகச் சுதேசிக் கப்பல்களைக் கடலில் வெற்றிகரமாக இறக்கியிருந்தார் வ.உ.சி. எனவே ஹார்வி பிரதர்ஸ் நிர்வாகம் இதனைத் தனிப்பட்ட மோதலாகக் கருதியதில் வியப்பில்லை.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வ.உ.சிக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப ஐயரும் இருந்தனர். இவர்கள் திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தொடர் சொற்பொழிவாற்றினர். பொதுமக்களிடையே சுதேச உணர்வையூட்டினர். வேலை நிறுத்தத்திற்கு முன்தினம் சிவாவும் வ.உ.சியும் ஆற்றிய உரை அங்கிருந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கனலூட்டியது. இதனை ஆங்கில அரசின் ரகசியப் போலீஸ் அறிக்கையின் குறிப்பு தெரிவிக்கிறது (N.A.I:1908:7).

சுப்பிரமணிய சிவா ரஷ்யப் புரட்சியை மேற்கோள் காட்டினார், ‘எந்தவொரு சுதேச இயக்கத்தின் வெற்றியும் தொழிலாளர்களின் கைகளில்தான் உள்ளது. தொழிலாளர்கள் கூலியை உயர்த்தினால் அந்நிய நிறுவனங்கள் இங்கே நிலைத்திருக்க முடியாது. ஆலை முதலாளிகளை முடக்குவதற்கு இயந்திரங்களைப் பழுதாக்கினாலோ, வேலைநிறுத்தம் செய்தாலோ போதுமானது. நாம் வேலை நிறுத்தத்தையே தேர்வு செய்வோம்’ எனச் சிவா முழக்கமிட்டார்.

வேலைநிறுத்தத்தின் முக்கியக் கோரிக்கைகளாக ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர விடுமுறை வசதிகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை முன்னிறுத்தினர். இவ்வேலைநிறுத்தத்தினை 28 பிப்ரவரி 1908 அன்று வெளியான சுதேசமித்திரன் பத்திரிகை, ‘புதுக்கட்சி பலமாய் வேரூன்றியிருக்கிறது. ஏற்கெனவே 500 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இன்னும் அநேகர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவது இந்த தூத்துக்குடி பவளத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கண்ணைத் திறப்பார்களா?’ எனச் செய்தி வெளியிட்டது.

அந்தக் கால அரசியல் சூழலில் ‘புதுக்கட்சி’ என்று குறிப்பிடப்பட்டது, திலகரின் தீவிர தேசியவாதக் கொள்கைகளைப் பின்பற்றிய வ.உ.சி தலைமையிலான சுதேசி இயக்கத்தினரைத்தான். போராட்டத்திற்கு ஆதரவாகப் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகச் செய்தி பரவியதும், ஆங்கிலேய நிர்வாகம் பதற்றமடைந்தது. உடனடியாக 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 20 போலீசார் திருநெல்வேலியில் இருந்தும், 30 போலீசார் தூத்துக்குடியிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்தனர். நிலைமையை நேரடியாகக் கண்காணிப்பதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வின்ச்சும் தூத்துக்குடிக்கு விரைந்துவந்தார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வ.உ.சிதம்பரனார் தொடர்ந்து வழங்கினார். மறுபுறம், ஆலை நிர்வாகம் உள்ளூரில் இருந்த சில அடியாட்களின் துணையுடன் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தியும் மிரட்டியும் போராட்டத்தை உடைக்க முயன்றது. ஆனால் தொழிலாளர்கள் எவரும் பணிந்துவிடவில்லை.

நாள்தோறும் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் சுதேசிக் கூட்டத்தில் கோரல் மில் தொழிலாளர் பிரச்னை குறித்து வ.உ.சி எடுத்துரைத்தார். தொழிலாளர் இயக்கத்தினை, சுதேச இயக்கத்துடன் இணைக்க அவர் முழுமுனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இந்த அணுகுமுறை தொழிலாளர்களைத் தாண்டி பொதுமக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றுத்தந்தது.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் ராபர்ட் ஆஷ், தன்னை வந்து சந்திக்கும்படி வ.உ.சிக்கு செய்தி அனுப்பினார். வ.உ.சி தனது வழக்கறிஞருடன் சென்று அவரைச் சந்தித்தார். தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் பின்னணியில் வ.உ.சியே இருப்பதாக ஆஷ் குற்றஞ்சாட்டினார். இதற்கு, ‘வேலைநிறுத்தத்தை நான் ஏற்பாடு செய்யவில்லை; தொழிலாளர்களைப் பட்டினியில் வாடவைத்த ஆலை நிர்வாகத்தின் நடவடிக்கைகளே இந்தப் போராட்டத்திற்குக் காரணம்’ என்று பதிலளித்தார் வ.உசி.

இந்த நிகழ்வைத் தனது சுயசரிதையில் வ.உ.சி பின்வருமாறு பதிவு செய்கிறார்:

‘கொடியபல செய்து கூலி யாட்களை
மடியும் விதத்தினில் வருந்திவந் ததனால்
வேலையை நிறுத்தினர் ; வேண்டுவ கேட்டுளன்;
நாலு தினத்தினில் நன்மையாம்’

பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. ஆஷின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வ.உ.சிதம்பரனார் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தார். போராட்டம் நீடித்ததால் தொழிலாளர்களின் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அச்சூழலில், வெங்கட்ராமய்யர் எனும் வழக்கறிஞர் திரட்டிய நிதியின் மூலம் ஒரு வாரத்திற்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.இதனை 5 மார்ச் 1908 அன்று தி இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

இப்படித் தொழிலாளர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த உறுதிப்பாடு அதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் காணாதது. பத்திரிகைகள் இப்போராட்டத்தினை முதலாளித்துவத்திற்கு மட்டுமல்ல; ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வரவிருக்கும் ஒரு பெரும் கலகத்திற்கான கிளர்ச்சி என்றே அழைத்தன.

மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ் தொழிலாளர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை கடும் விவாதமாக மாறியது. இறுதியாகத் தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. மார்ச் 7ஆம் தேதி தொழிலாளர்கள் வந்தே மாதரம் எனும் முழக்கத்துடன் ஊர்வலமாக வேலைக்குத் திரும்பினர் என 7 மார்ச் 1908 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் குறிப்பிடுகிறது.

இந்த வெற்றி சுதேச இயக்கத் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதற்கிடையே வங்காளத்தின் சுதேச இயக்கத் தலைவர் விபின் சந்திர பால் 6 மாதம் சிறைவாசத்திற்குப் பின் 9 மார்ச் 1908 அன்று விடுதலையாகும் நாளை, சுயராஜ்ஜிய நாளாகக் கொண்டாடச் சுதேசி இயக்கத் தலைவர்கள் முடிவு செய்தனர். இந்த முடிவு அடுத்தகட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுக்கு அடித்தளமிட்டது.

சுதேசியினரின் கொண்டாட்டத்தினைத் தடுக்கும் பொருட்டு ‘சுதேசிகளின் கை வலுத்துவிட்டது. திங்கட்கிழமை அவர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள ஒரு பிரமாண்டமான கூட்டத்தை நிறுத்தியே ஆக வேண்டும்’ எனத் தலைமைச் செயலர் அட்கின்சனுக்கு ஆட்சியர் வின்ச் கடிதம் எழுதினார். அதன்படி வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயர் ஆகியோர் மார்ச் 9ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.

அழைப்பின் பின்னணியை அறிந்திருந்தபோதிலும், மூவரும் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜரானார்கள். ஆனால் அதிகாரிகள் திட்டமிட்டே விசாரணையைக் காலம் தாழ்த்தி, மாலை நேரத்தில்தான் நடத்தினர். விசாரணை முடிந்ததும் மாலையிலேயே திருநெல்வேலியில் கூட்டம் நடத்தினர். அதன்பின் இரவோடு இரவாக ரயிலில் தூத்துக்குடி சென்ற அவர்கள், மறுநாள் காலையில், தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினர். ஒரு கூட்டத்தைத் தடுக்க அதிகாரிகள் முயன்றபோது, அதற்குப் பதிலாக 2 கூட்டங்களை நடத்தி முடித்தனர் சுதேசித் தலைவர்கள்.

இந்தச் செயல் ஆங்கிலேய நிர்வாகத்தை மேலும் எரிச்சலடையச் செய்தது. இவர்களை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறிச் செல்லும் என்ற அச்சம் அதிகாரிகளிடையே வலுத்தது. அதன் விளைவாக, மார்ச் 12 அன்று வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயர் ஆகியோரைக் கைதுசெய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அந்தக் கைது உத்தரவே பின்னாளில் ‘நெல்லை எழுச்சி’ என்று வரலாற்றில் பதிவான மகத்தான மக்கள் எழுச்சிக்கான முதல் தீப்பொறியாக அமைந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *