Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர் ஆகியோர்மீது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107ஆம் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்தால்தான் கைது செய்யமுடியும். வ.உ.சி தரப்பில் பிணைத்தொகை அளிக்க முன்வந்தும் ஏற்கப்படவில்லை. மார்ச் 12ஆம் தேதி மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டார் வின்ச்.

வ.உ.சியின் கைது அறிவிப்பின் மறுநாளான மார்ச் 13 அன்று, திருநெல்வேலியில் ஒருவகையான அசாதாரண சூழல் நிலவியது. சுதேசம் மற்றும் சுதந்திரம் குறித்துத் தொடர்ந்து பேசி வந்த தங்கள் தலைவரான வ.உ.சியைக் கைது செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. திருநெல்வேலிப் பாலம் எனப்படும் வீரராகவபுரம் முழுதும் மக்கள் குழுமியிருந்தனர். பாலத்திற்கு அருகிலிருந்த காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து வியாபாரிகள் பலர் ரயிலேறி நெல்லை வந்தடைந்ததாக நீதிமன்றச் சாட்சிகள்மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏட்டு குருநாதய்யர்தான் கடையடைக்க வற்புறுத்தியதாகப் பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன. மக்கள் கூட்டம் பெருந்திரளாக இந்து கல்லூரிக்கு நகர்ந்து சென்றது. வ.உ.சியின் சுதேசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருந்த காரணத்தால் இந்து கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த எழுச்சிக்குப் பெரும் பங்காற்றினர்.

அடுத்ததாகப் பெருந்திரள் கூட்டம் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை டவுன் பக்கம் சென்றது. டவுன் செல்லும் சாலைப் பகுதியில்தான் அரசாங்க அலுவலகங்களும் கட்டடங்களும் இருந்தன. மக்கள் கூட்டம் செல்லும் வழியில் தென்பட்ட தந்திக் கம்பங்கள், தெரு விளக்குகள் எல்லாமும் உடைக்கப்பட்டன. கட்டடங்களின்மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. காவல் நிலையம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமையின் உக்கிரத்தை உணர்ந்த ஆட்சியர் வின்ச், பாளையங்கோட்டை ரிசர்வ் போலீஸ் படைக்குத் தகவல் தெரிவித்தார். இதனால் நெல்லையில் தண்டக் காவல் படையை நிறுத்துவதற்கான பரிந்துரைக் கடிதம் சென்னை மாகாணத் தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டது. அத்துடன் 50 பேர் கொண்ட காவலர்களை அனுப்பும்படி திருச்சிக்கும் தந்தி சென்றது.

கலவரம் நடக்கும் இடத்திற்கு ஆட்சியர் வின்ச்சும் காவல் கண்காணிப்பாளர் ஸ்வீட்டிங்கும் விரைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் முதலில் அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடவில்லை. ஆனால் நேரம் செல்லச் செல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக நாலா பக்கமும் மக்கள் அவர்களைச் சூழ்ந்தனர். அம்மக்கள் எழுப்பிய ‘வந்தே மாதரம்’ கோஷம் அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது.

ஒரு கையில் சாட்டையும், மறு கையில் சுழல் துப்பாக்கியுமாகக் கூட்டத்தைத் தாண்டி முன்னேறினார் வின்ச். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதாக சுதேசமித்திரன் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் மக்கள் கூட்டம் சிறிது பின்வாங்கத் தொடங்கியது.

கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், மார்ச் 13ஆம் தேதியன்று எழுச்சியின் தீவிரம் 3 மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆட்சியர் வின்ச் வரவழைத்திருந்த துப்பாக்கி ஏந்திய காவல் படை, ரத வீதிக்குள் நின்றிருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்வீட்டிங், 1899 சிவகாசி கலவரத்தில் அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளை மக்கள் மறந்துவிட்டதாகத் தனது தலைமை அதிகாரியான ஐஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். கூடுதலாகத் தண்டக்காவல் படையை நிறுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வ.உ.சியின் கைதுக்குக் காரணம் பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்திற்கும் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்திற்கும் இடையேயான பகை என்பதைப் பலர் அறிவர். இந்திய விவகாரங்களுக்கான செயலாளரான லார்டு மார்லி என்பவர் லண்டனிலிருந்து, ‘இந்தப் போராட்டங்கள் குறிப்பிட்ட தொழில்துறை குறைகளைப் பற்றியவையா அல்லது அரசியல் சார்ந்தவையா?’ எனக் கேள்வி எழுப்பியதிலிருந்தே கைதின் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.

வ.உ.சியின் கைது குறித்து சுதேசிகளும் ஆங்கிலேய அதிகாரிகளும் மேற்கொண்ட விவாதங்களில் அது தொடர்ந்து வெளிப்பட்டது. ஆங்கிலேய வணிகர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.

நெல்லை மக்கள் எழுச்சி ஒருபுறமிருக்க, தூத்துக்குடியில் கோரல் மில் நிர்வாகம் இதற்கு முந்தைய வேலைநிறுத்தத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் பலன்களையும் திரும்பப் பெற்றது. இது அத்தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குப் பலத்த பின்னடைவைக் கொடுத்தது. அவர்கள் அனைத்துச் சலுகைகளையும் இழந்தனர். குரல் கொடுக்க ஆளில்லாமல் போயினர்.

ஆயினும் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய வ.உ.சியின் கைதைக் கண்டித்து மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகராட்சித் தூய்மைப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருந்தனர். வெள்ளையர்களின் வீடுகளுக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இறைச்சிக் கடைக்காரர்கள் வெள்ளையர்களுக்கு இறைச்சி விற்பதை நிறுத்தியிருந்தனர். தூத்துக்குடியின் வீரியம் நெல்லையைவிட அதிகமாக இருந்த காரணத்தினால் காவலர்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் இருந்தன.

பொதுக்கூட்டம் நடத்த 144 தடை உத்தரவினை ஆஷ் அறிவித்திருந்தார். ஆங்காங்கே சில ரகசியக் கூட்டங்கள் நடந்தன. கூட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறையினர் கல்வீச்சை எதிர்கொண்டனர். எழுச்சி ஆரம்பித்த நாளிலேயே கைது நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருந்தது ஆங்கிலேய அரசு. எழுச்சியில் பங்கேற்ற யாரையும் தப்பவிடக்கூடாது என்கிற முனைப்பும் வெள்ளையர்களிடம் இருந்தது. விசாரணைகளின்போது, பலர் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைக்கூடத் தெளிவாக அறிந்திருக்கவில்லை என்பது பதிவுகளில் காணப்படுகிறது.

அவர்களின் வழக்குகளுக்கு நிதியுதவி செய்யப் பலரும் நிதி திரட்டினர். குறிப்பாக சுப்ரமணிய பாரதி, சென்னை ஜன சங்கத்தின் சார்பாக நிதியுதவி கேட்டார். பத்திரிகையில் அறிக்கைவிட்டுக் கேட்டுப் பார்த்தும் போதுமான நிதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.

மார்ச் 25 அன்று நடைபெற்ற விசாரணையில், பிணைத்தொகைக் கொடுக்க முன்வந்தும் மாஜிஸ்ட்ரேட் ஏற்காதது சரியல்ல என்று கூறி வ.உ.சி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இம்முறை வ.உ.சிமீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. சுப்பிரமணிய சிவா அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரும் கைது செய்யப்பட்டார். சென்னை மாகாணத்தில் பதிவான முதல் தேசத்துரோக வழக்குகளில் ஒன்றாக இவை இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கும் தூத்துக்குடியில் உள்ள பிற சுதேசி முயற்சிகளுக்கும் நான் செய்த பணியின் காரணமாக, தங்கள் வணிகத்திலும் வருமானத்திலும் பெரும் இழப்பைச் சந்தித்த சில ஐரோப்பிய வணிகர்களின் தூண்டுதலின் பேரில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நிர்வாக அதிகாரிகள் எனக்கு எதிராக இந்த வழக்கைப் புனைந்துள்ளனர்’ எனத் தன் மேல் சுமத்தப்பட்ட குற்றம் என்பது அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக விசாரணையின்போது வ.உ.சி வாதிட்டார்.

2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வ.உ.சிக்கு எதிராகப் பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அரசுத் தரப்பின் சாட்சிகளையும் ஆவணங்களையும் கவனித்துக் கொண்டிருந்த வ.உ.சி, ‘இவை அனைத்தும் நாடகம்’ என்று குறிப்பிட்டதாக ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி பதிவு செய்திருக்கிறார்.

7 ஜூலை 1908 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ஏ.எப். பின்ஹே, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தூண்டும்படி பேசியதற்கும், ஆட்சி அதிகாரத்தை மாற்ற மக்களிடையே பேசியதற்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். இதுவரை யாருக்கும் எழுதப்படாத ஓர் அநீதியான தீர்ப்பாக அது இருந்தது. சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார். அதே வாரத்தில் வட இந்தியாவில் திலகர் ‘கேசரி’ பத்திரிகையில் அரசுக்கு எதிராக எழுதியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 6 வருடகாலம் சிறைத் தண்டனை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பின்ஹேயின் தீர்ப்பு பிரிட்டிஷ் இந்தியாவுக்கான அமைச்சராக இருந்த ஜான் மார்லியை அதிருப்தியடையச் செய்தது. இந்திய வைஸ்ராய் லார்டு மிண்டோவுக்கு கடிதம் எழுதிய அவர், ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மனிதர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பினை ஆதரிக்க இயலாது. அடுத்த அஞ்சலில் இத்தீர்ப்பு என் பார்வைக்கு வருகையில் இத்தீர்ப்பு நிலைக்காது’ எனக் குறிப்பிட்டதாக ம.பொ.சிவஞானம், கப்பலோட்டிய தமிழன் நூலில் குறிப்பிடுகிறார்.

தீர்ப்புக்குப் பின்னர் இருவரையும் அந்தமான் சிறைக்கு நாடுகடத்த எண்ணினர். ஏற்கெனவே அந்தமானில் சிறைக்கைதிகள் கூட்டம் அதிகமானதால் வேறு கைதிகளுக்கான அனுமதியை மறுத்தனர். எனவே சுப்பிரமணிய சிவா திருச்சி சிறைக்கும், வ.உ.சி கோவை மத்தியச் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

வ.உ.சி.க்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் விதிக்கப்பட்ட கடுமையான தண்டனை இந்தியா முழுவதும் கண்டனத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி எழுச்சி தென்னிந்தியச் சுதந்திர இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வ.உ.சியின் சுதேச முன்னெடுப்பும், தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டமும், சுதந்திர உணர்வும் மக்களை ஒருங்கிணைத்தன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *