Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 15 – சுதேசத்தின் மீதான தொடர் பழிவாங்கல்

‘சுதேசி கம்பெனியினர் இப்போது உண்மையிலேயே தங்களுடைய எல்லா வளங்களையும் இழந்துவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களது கப்பல்கள் கொழும்பில் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே, நிறுவனம் கலைக்கப்படுவது இனி வெகுதூரத்தில் இல்லை. உங்கள் கணிப்பு முழுமையாக நிறைவேறவில்லை என்றாலும், அதற்கு மிகவும் நெருக்கமாகவே வந்துவிட்டது’ என்று துணை ஆட்சியர் ஆஷுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் வின்ச் குறிப்பிட்டார்.

இக்கடிதத்தின் வாயிலாகச் சுதேசிக் கப்பலின் தள்ளாட்டம் அவர்கள் இருவருக்கும் அளித்திருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது. 2 டிசம்பர் 1908 அன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுமான வின்ச் தனது பொறுப்புகளை எஸ்.டபிள்யூ.ஜி.ஐ. மேக்ஐவர் என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். வின்ச் பதவியை விட்டு வெளியேறிய ஒரு வாரத்திற்குள், ஆஷ் மீண்டும் அதே திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சாத்தூரின் துணை ஆட்சியராகவும், இணை மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரனாரின் கைது நடவடிக்கைக்குப் பின்னர் ஆங்கிலேய அரசின் ஒவ்வொரு துறையும் சுதேசிகளிடமும் சுதேசிக் கப்பல் நிர்வாகத்திடமும் காட்டிய கடுமையான நடவடிக்கைகளுக்கு அளவேயில்லை. வ.உ. சிதம்பரனார் கொடுத்த உணர்வினால் மக்களுக்கு ஏற்பட்ட எழுச்சி ஆங்கிலேயர்களுக்கு ஒருவித அவமான உணர்வைக் கொடுத்ததே இத்தகைய கடும் நடவடிக்கைகளுக்குக் காரணம்.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே கணித்திருந்த சிதம்பரனார், 3 மார்ச் 1908 அன்று ஆற்றிய உரையில் ‘சுதேசி கம்பெனியின் மேலாளர் பதவியை நான் விட்டுவிடப் போகிறேன். பொய்யான வழக்குகளில் சிக்கவைக்கப்படும் அனைவருக்காகவும் வழக்குகளை ஏற்று வாதாடத் தயாராக இருக்கிறேன். அத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் வரை எந்தக் கட்டணமும் பெறாமல் நடத்துவேன். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் சதித்திட்டங்களை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த மாவட்டத்தில் அந்த வழக்குகள் விசாரிக்கப்படவும் விடமாட்டேன். இனிமேல் நம்மீது கலகம், சண்டை போன்ற பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்’ எனக் கூறினார்.

உரையில் குறிப்பிட்டிருந்தைப்போலவே வ.உ.சியின் கைதைத் தொடர்ந்து அவருடைய இல்லத்தில் தடாலடிச் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஒருவேளை சமர்ப்பித்தால் அவை ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாறக்கூடும் என்பதை முன்னரே ஊகித்திருக்கலாம். அவற்றை அழித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. வ.உ.சியைச் சார்ந்தவர்களுக்கும், சுதேசக் கப்பல் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் தொல்லைகளை அளித்தபடி இருந்தனர்.

சுதேசிக் கப்பல் கம்பெனியின் பயணிகள் மேற்பார்வையாளரான தேவாரம் பிள்ளை கைது செய்யப்பட்டார். அவரை ஆஷின் முன் நிறுத்தினர். எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஓராண்டு காலம் அமைதி காக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ரூ. 500 பிணைத்தொகை கொடுத்த பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார். ரூ. 500 என்கிற பிணைத்தொகை அக்காலத்தில் எவ்வளவு பெரியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இக்கைதினைச் சுட்டிக்காட்டி ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதேபோல், சுதேசிக் கப்பல் கம்பெனியில் கீழ்நிலை ஊழியராகப் பணியாற்றிய சங்கர சுப்பு என்பவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஒரு பேனா கத்தியைக் காரணம் காட்டி, இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 152இன் கீழ் கைது செய்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர் துணை மாஜிஸ்ட்ரேட் ஆஷ் முன்பு நிறுத்தப்பட்டார். பின்னர் அந்த ஏழைக் குடியானவர் தன் சொந்தப் பிணை உறுதிமொழி எழுதிக்கொடுத்த பின்னரே விடுவிக்கப்பட்டார்.

ஆங்கிலேய அரசின் மேல்நிலை அதிகாரிகள் மட்டுமல்லாமல் கீழ்நிலை ஊழியர்களும் சுதேசிக் கப்பல் நிர்வாகத்திற்குத் தொல்லைகளைக் கொடுத்தனர். சுதேசி கப்பலில் இருந்த தண்ணீரைத் தங்கள் அதிகாரிகளின் தேவைகளுக்கும் பிறருக்கும் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தனர். பல பீப்பாய்களைக் கீழே கொட்டினர்.

சுதேசிக் கப்பல் நிர்வாகம் மட்டுமல்லாமல் கப்பலும் நேரடி எதிர்ப்பைச் சந்தித்தது. காலியா கப்பலிடம் துறைமுக நுழைவு அனுமதியில்லை எனக் கூறித் திருப்பியனுப்பினர். இதற்காக இலங்கை சென்று அனுமதிக் கடிதம் வாங்கிச் சமர்ப்பித்த பிறகும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாக அதே துறைமுகத்தில் இருந்த சுதேசிக் கப்பலுக்குத் திடீரென அனுமதியில்லை என மறுப்பதன் மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. வ.உ.சி இப்போது சிறையில் இருக்கிறார். அவர் வெளியே வருவதற்குள் கப்பலின் இயக்கத்தை நிறுத்திவிடவேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இதற்காகவே இந்த அலைக்கழிப்பு.

இவை அனைத்திற்கும் பின்னால் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு ஆதரவாக ஆஷ் களத்தில் செயல்பட்டார்.

இந்நிலையில் வ.உ.சியுடன் நெல்லை எழுச்சிக்குத் துணை நின்றோரின் நிலைமையையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டியது அவசியம். நெல்லை எழுச்சியில் வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பாரதி ஆகியோரைத் தொடர்ந்து இருவர் மீது ஆங்கிலேய அரசு குற்றஞ்சாட்டியது. ஒருவர் குருநாதய்யர். இன்னொருவர் கே.ஜி லோகநாதய்யர். குறிப்பாக வ.உ.சிதம்பரனார் சுயசரிதையில் தன் உயிர் நண்பனாய் கூறும் குருநாதய்யர் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.

பல மொழிகளைக் கற்றறிந்தவர். நெல்லை எழுச்சியில் கடையடைப்புகளை முன்னின்று நடத்தியதால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் நாடு கடத்தப்பட்டார். ஒருவேளை வ.உ.சியின் சுதேசக் கருத்துகளை ஆதரிக்காமல், வ.உ.சியோடு சேராதிருந்தால் காவல்துறையில் இன்னும் பல உயரிய பொறுப்புகளை அவர் அடைந்திருக்கலாம்.

இக்கைது சம்பவத்தால் சொந்த வாழ்வில் அவருக்கு மணமுறிவு ஏற்பட்டது. 7 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து 13 ஜூன் 1913 அன்று விடுதலையானார். பின்னர் தன் சகோதரருடன் ஜப்பான் சென்றதாக சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது விடுதலைக்குப் பின்னரும் அவர் கண்காணிக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அடுத்து கே.ஜி. லோகநாதய்யர். இவர் கல்லூரி ஆசிரியர். இந்துக் கல்லூரியில் பணிபுரிந்தவர். குருநாதய்யர் எப்படிப் பொதுமக்களை எழுச்சியில் பங்கேற்க அழைத்ததில் பெரும்பங்கு வகித்தாரோ, லோகநாதய்யர் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்ததாக அரசாங்கம் குற்றம் சுமத்தியது. இந்துக் கல்லூரி மற்றும் சி.எம்.எஸ் கல்லூரியில் நடந்த வன்முறைகளுக்கு லோகநாதய்யரே முழு முதற்காரணம் என அரசாங்கம் கூறியது. 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2000 அபராதமும் பெற்றார். பின்னாளில் அவரின் நிலைமையை அறிந்துகொள்ளும் தகவல்கள் ஏதும் ஆய்வாளர்களுக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை.

எழுச்சியில் பங்கேற்றுக் கைதான யாருக்குமே தண்டனை குறைப்பே கிடைக்கவில்லை என்பதை மேற்கண்டவர்களின் தண்டனைக் காலங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஓராண்டுக்கு மேல் தண்டனையடைந்தோருக்கு ஆண்டுக்கு ஒரு திங்கள் (மாதம்) என்கிற விகிதத்தில் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்பது இந்திய அரசின் பரிந்துரை. ஆனால் வின்ச் எழுதிய பரிந்துரைக் கடிதம், தண்டனைக் குறைப்பு வேண்டிக் கேட்டோருக்கு ஒரு கசப்பு மருந்தைப் பரிசாகக் கொடுத்தது.

‘சட்டத்திற்குப் புறம்பாக ஆட்சியை அழிக்க முனைந்தவர்களின் குற்றம் அண்மையில்தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 4 ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் தண்டனைக் குறைப்பைப் பரிசீலிக்கலாம். அதற்கு முன்னர் தண்டனைக் குறைப்பு என்பதற்கு இடமில்லை’ என்று எழுதினார். தன்னுடைய பதவி மற்றும் பொறுப்புகளை விட்டு விலகியிருந்தாலும் எழுச்சியில் கைதானோரின் மேல் காட்டிய வன்மம் குறித்து இதற்கு மேல் விளக்கவேண்டிய அவசியமில்லை.

வின்ச் மற்றும் ஆஷ் ஆகியோரின் சுதேச எதிர்ப்புணர்வு, சுதேசிக் கப்பலை அழித்தொழிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை வ.உ.சி சிறையில் அனுபவித்த மனிதாபமற்றக் கொடுமைகளுக்கும் அடக்குமுறைக்கும் பழிவாங்கலுக்கும் இன்னொரு முகமாக அமைந்தன. வரலாறு பல நேரங்களில் அதிகாரத்திற்கெதிராகக் கேள்வி கேட்டவர்களுக்கு முதலில் வழங்குவது சிறையைத்தான்; பின்னர் வருங்காலம் அவர்களுக்குச் சிலை அமைக்கிறது.

ஆனால் சிலைகள் எழுப்பப்பட்ட பிறகும் அவர்களின் சிந்தனைகள் மக்களின் வாழ்விலும் நினைவிலும் நிலைத்திருக்கிறதா என்பதே விடையில்லாத கேள்வி.

வ.உ.சியின் நிலையும் அப்படித்தான். தமிழக வரலாற்றில் அவருக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருந்தாலும், அவரது சிந்தனையின் ஆழத்தை நாம் போற்றத் தவறியிருக்கிறோம். அவர் ஒரு கப்பல் நிறுவனத்தை மட்டும் தொடங்கவில்லை; இந்தியர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் ஓர் அரசியல் கருத்தியலைச் செய்துகாட்டினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *