Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது #2

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – சிறைக் கொடுமைகளும் போராட்டங்களும்

9 ஜூலை 1908. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வ.உ.சிதம்பரனார் கோவைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது வாழ்வில் அரங்கேறிய சிறைக் கொடுமைகளுக்கான அத்தியாயம் தொடங்குகிறது. கோவைச் சிறையில் அரசியல் கைதிக்குரிய எந்த உரிமையும் அவருக்கு வழங்கப்படவில்லை. குற்றவாளிகளைவிட அவரைக் கடுமையாக நடத்த வேண்டும் என்பதே ஆங்கிலேய அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

கோவைச் சிறையின் ஜெயிலர் மிட்சேல், சூப்பிரண்ட் காட்ஸன், சிறை மருத்துவர் ஒருவர் என இம்மூவரும் செய்த அடக்குமுறைகளுக்கு அளவேயில்லை. வ.உ.சியைக் கொலைக் குற்றவாளிகளுடன் அடைத்தனர். வெறும் கைகளால் சணல் நூலைப் பிரித்துச் சுழற்றும் இயந்திரத்தை இயக்கும் வேலை முதலில் அளிக்கப்பட்டது. உள்ளங்கைகளில் கொப்புளங்கள் மட்டுமல்லாது, ரத்தம் வரும் அளவிற்கு அவரை வேலையில் ஈடுபடுத்தினர். கல் உடைக்கும் வேலையும் செய்யக் கட்டாயப்படுத்தினர்.

கொளுத்தும் வெயிலில், மாடுகளை மட்டுமே பயன்படுத்தும் எண்ணெய்ச் செக்கினைத் திறந்தவெளியில் நாள் முழுவதும் இழுக்க வைத்தனர். வ.உ.சிதம்பரனார் செக்கிழுப்பதைக் காண மனமில்லாத பிற கைதிகள் தாங்களாகவே அதை இழுக்க முன்வந்தனர். ஆனால், வ.உ.சி. அதற்குச் சம்மதிக்கவில்லை. பல நாட்கள் அவரிடம் கெஞ்சிய பிறகு, நாள் முழுவதும் வேண்டாம், ஜெயிலர் அல்லது சிறைத்துறை அதிகாரிகள் இல்லாத நேரத்தில் இழுக்கலாம் என ஒப்புக்கொண்டார்.

இதனை நகைச்சுவையாகப் பின்னாளில் தன் சுயசரிதையில் பதிவு செய்தார் வ.உ.சி. ‘சணல் பிரித்து, கைத்தோல் உரிந்ததைப் பார்த்த ஜெனரல், உடனே என்னைச் செக்கிழுக்க வைத்தான். அவனது அன்பு எத்தகையது?’ என்றார்.

ஆனால், அக்காட்சியை நினைத்து, பாரதி மனம் பதறி, ‘செக்கினை இழுக்க முடியாமல் போனாலோ மெதுவாக இழுத்தாலோ, சிறைக் காவலர்களால் அவர் மீது விழும் கசையடிகளை நினைத்தாலே நெஞ்சம் படபடக்கிறது. அதைப்பற்றி எழுதும்போது கை நடுங்குகிறது’ என்றார்.

கோவைச் சிறையில் தேவைக்கு அதிகமாக உடலுழைப்பைச் செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டார். இளைப்பாறுவதற்குக்கூட நேரம் வழங்கப்படவில்லை. சரியான உணவு கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட உணவிலும் கல்லும் மண்ணுமே மிகுந்திருந்தன. வ.உ.சி. பலமுறை ஜெயிலரிடம் முறையிட்டார். யாரும் செவிமடுத்துக் கேட்கவில்லை. கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கைதிகளை அடித்துச் சித்திரவதை செய்வது அவர்களின் வழக்கமாக இருந்தது.

தொடர்ச்சியான இந்தக் கொடுமைகளால் ஆத்திரமுற்ற கைதிகளில் சிலர் ஜெயிலரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதையறிந்த வ.உ.சி., அந்த யோசனையைக் கைவிடுமாறு கூறினார். அதனைப் பொருட்படுத்தாது, 2 ஆகஸ்ட் 1908 அன்று ஜெயிலர் மிட்சேல் மீது அவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த ஆபத்தான தாக்குதலில் மிட்சேல் படுகாயமடைந்தார். இதனால் கோவைச் சிறையில் கலவரம் வெடித்தது. பல கைதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில், மூவருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனை பெற்ற கைதிகளின் சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து, அவர்களுக்கான மேல்முறையீட்டுச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார் வ.உ.சி. அவர்களது தரப்பில் சி.கே. சுப்பிரமணிய முதலியார் வாதாடினார். நவம்பர் மாதம் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பு ஆஜரான வ.உ.சி., சிறை நிர்வாகத்தின் துன்புறுத்தல்களை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். ‘சிறைக் கைதிகளுக்கு நடக்கும் யாவும் அநியாயமானது. அவர்களுக்குத் தேவையான எந்த வசதியும் செய்துதரவில்லை. குளிக்க , தூங்குவதற்குக்கூடச் சரியான வசதி இல்லை. உண்ணும் உணவில்கூட கற்களும், மண் கட்டிகளுமே இருக்கின்றன. கைதிகளை ஜெயிலர் மிருகத்தனத்துடன் நடத்தினார். இதுபோன்ற காரணத்தினாலேயே சிறைவாசிகள் ஜெயிலரை அடித்திருக்கலாம்’ என வாக்குமூலம் அளித்தார். சிறைக்குள் நடக்கும் அட்டூழியங்களை நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார் வ.உ.சி. மிட்சேல் மீது குற்றம்சாட்டியவர்கள் அந்த வழக்கிலிருந்து விடுதலைப் பெற்றனர்.

இந்நிகழ்விற்குப் பின்னர், வ.உ.சியை மற்ற சிறைக் கைதிகளுடன் தங்க வைக்காமல் தனிமைச் சிறையில் அடைத்தனர். அதிகாரிகளுக்கு எதிராகச் சாட்சி கூறியது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறையில் வ.உ.சிதம்பரனாருக்குக் கல்கத்தா அமிர்த பஜார், இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைச் சிறையின் மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் கொடுத்து வந்தார் வார்டன் ஒருவர். ஒருநாள் அதிகாரிகளிடம் பிடிபட, அவருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. தன் பொருட்டுத் தண்டனை பெற்ற அந்த வார்டனுக்குப் பண உதவி அளித்தார் வ.உ.சி. பின்னர், அந்த வார்டன் விடுதலையாகிச் சிறையிலிருந்து வெளியேறியதும், கடை வைத்துப் பிழைப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சியின் மனைவி மீனாட்சி அம்மாளின் பெரும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, 1908ஆம் ஆண்டு நவம்பரில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வ.உ.சியின் இரட்டை ஆயுள் தண்டனை ஆறாண்டுத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும், நன்னடத்தையின் காரணமாக அந்தத் தண்டனை நான்கரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்த நான்கரை ஆண்டுகளை ஒரே சிறையில் கழிக்கக் கூடாது என்கிற நிபந்தனையின்படி, கோவைச் சிறையில் முதல் இரண்டரை ஆண்டுகளையும், அடுத்த இரண்டு ஆண்டுகளை கண்ணனூர் சிறையிலும் கழிக்க உத்தரவிடப்பட்டது.

கோவைச் சிறையில் இரண்டரை ஆண்டுகள் கழிந்தபின், 1 டிசம்பர் 1910 அன்று வ.உ.சி. கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கைதிகள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தன. கைதிகளுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களையும் வழங்கப்படும் தண்டனைகளையும் கேட்டறிந்தார் வ.உ.சி. ஆனால், அவர் அதனோடு நிற்கவில்லை. தன் மனைவி மூலம் நண்பர்களுக்குக் கடிதம் அனுப்பினார். நேரடியாகக் கடிதம் எழுத இயலாத சூழலில், மைத்துனர் பிச்சையா பிள்ளையின் வழியாக அவர் தகவல்களை அனுப்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உதாரணமாக, 20 செப்டம்பர் 1912 அன்று வ.உ.சியின் மனைவி மீனாட்சி அம்மாள், அவருடைய நண்பர் ஒருவருக்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு: ‘நெல்லைக் கலகத்தில் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளில் ஒவ்வொருவரையும் சந்தித்து, இந்த ஜெயிலில் இருக்கும் சில கைதிகளின் விவரங்களைத் தனித்தனி ஸ்டேட்மெண்டுகளாகக் கைப்பட வாங்கிப் பத்திரப்படுத்திக்கொள்ளவோ அல்லது அவற்றை வாங்கித் தபாலில் அனுப்பவோ வேண்டும். விடுதலைக்குப் பின்னர் என் கணவர் அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார். ஆகவே, அந்நியர் யாரும் அறியாதபடி ஸ்டேட்மெண்டுகளை வாங்க வேண்டுகிறேன்.’ இந்தக் கடிதம், ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ நூலில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறாக, தன்னை வேவு பார்க்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்துக்கொண்டு, தன்னுடன் இருந்த கைதிகளுக்கு விடுதலை பெற்றுத் தரத் துடித்த செயல் வ.உ.சியின் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. எழுச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவேன் என்று முன்னரே அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

கைதிகளிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களை முதலில் மைத்துனர் ஞா. பிச்சையா பிள்ளையின் உதவியுடன் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தினார் வ.உ.சி. ஆனால், அரசாங்கம் அதற்குச் செவி சாய்க்கவில்லை. பின்னர், ‘இந்து’ நாளிதழ் மூலம் செய்தியை வெளியிடச் செய்தார். அந்தச் செய்தி அரசின் கவனத்தை ஈர்த்தது. விசாரணை நடத்தப்பட்டு, தண்டனைக் குறைப்புகள் வழங்கப்பட்டன. தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இதுவே அவரது முயற்சிக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்தது. அதனோடு, விடுதலையடைந்தவர்களுக்குத் தனது மைத்துனரின் உதவியுடன் விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

அதனைத் தன் சுயசரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘பலர்க்கு முரிய புரொக்கள மேஷன் ரிமிஷனும் எட்வர்டு ரிமிஷனும் ஜார்ஜ் ரிமிஷனும் கொடாமல் அவரை வைத்திருந்ததை அறிந்தேன்; ‘ஹிந்துவுக் கறைந்தேன். அது பிரசுரித்ததும் அவரைத் துரிதாக விடுதலை செய்தனர். என்னிலம் சென்றனர். அவருக்குச் செய்தனன் விருந்தென் செப்பிய மைத்துனர்’.

வ.உ.சி. நினைத்தபடியே 6 பேர் விடுதலை பெற்றனர். இவர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் கூடுதலாக 6 மாதங்கள் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவைச் சிறையில் அனுபவித்த கொடுமைகளை கண்ணனூர் சிறையில் யாரும் அனுபவிக்கக் கூடாது என்பதில் வ.உ.சி. உறுதியாக இருந்தார். கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டு ஓராண்டு கழித்தே, தனது மனைவி, மகன்கள் உலகநாதன், ஆறுமுகம் ஆகியோரை கண்ணனூருக்கு அழைத்துவந்து, தன் மைத்துனர் பிச்சையா பிள்ளையுடன் பிள்ளையார் கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கவைத்தார். அங்கிருந்தபடியே மேல்முறையீட்டு விவகாரங்களை மீனாட்சி அம்மாள் கவனித்து வந்தார்.

சிறைவாசத்தில் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த வேதனை அவரை ஆழமாகப் பாதித்தது. அந்த மனநிலையை அவரது சுயசரிதையில் இடம்பெற்றுள்ள பின்வரும் வரிகள் வெளிப்படுத்துகின்றன. சிறையில் இருந்தபோது, குருவிக்கூட்டிலிருந்து பறந்து சென்ற குஞ்சைப் பார்த்து அவர் எழுதியது:

‘கூட்டினை விட்ட குரீஇக் குஞ்சே நீ
வீட்டினை விட்ட மிகையால் இக் காட்டினில்
துன்பமுரு கின்றேன்போல் துன்பமுரு கின்றனையோ
இன்பமும் சுற்றம் இழந்து’

ஒருபுறம் கைதிகளுக்கு இழைக்கப்படும் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக வ.உ.சி. போராடிக்கொண்டிருந்தார். மறுபுறம், சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி அவரை வெகுவாகப் பாதித்தது. குடும்பப் பிரிவு, சிறைக் கொடுமை, பொருளாதாரச் சிக்கல் என அத்தனை இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும் வ.உ.சி. மனம் தளரவில்லை. கடவுள் நம்பிக்கையும் இலக்கியப் பணிகளுமே அவருக்கு ஆறுதலாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் ஜேம்ஸ் ஆலனின் ‘As a Man Thinketh’ எனும் வாழ்வியல் நூலை ‘எண்ணம் போல் வாழ்க்கை’ எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். இன்றளவும் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ அவரது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *