சுதேசிக் கப்பல் நிர்வாகத்திற்குப் பல்வேறு தரப்புகளிடமிருந்த எதிர்ப்புகள், கடன் சுமைகள், நிலுவைத் தொகைகள் போன்ற நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் எஸ். டி. கிருஷ்ண அய்யங்கார் தனது முயற்சியைக் கைவிடவில்லை. முதலீட்டிற்கு நிதி திரட்டுதல், வியாபாரிகளை நேரில் சந்தித்தல், கடன் தொடர்பான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தல், எனத் தொடர் பயணத்திலேயே இருந்தார். 1910 ஜனவரி அன்று அவர் மேற்கொண்ட பம்பாய் சுற்றுப்பயணம் அவருடைய இறுதி முயற்சி எனலாம். அந்தப் பயணத்தின் மூலம் பம்பாய் கப்பல் அதிபரான எசாஜி தாஜ்பாயின் கொழும்புப் பயணத்திட்டத்தைத் தெரிந்துகொண்டார் அய்யங்கார்.
தாஜ்பாயைச் சந்திப்பதற்காகக் கிருஷ்ண அய்யங்கார் கொழும்பு சென்றார். அந்தச் சந்திப்பின் நோக்கமாக இரண்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, லாவோ கப்பலை தாஜ்பாயின் நீராவிக் கப்பலுக்கு வாடகைக்கு விடுவது. இரண்டாவது, தாஜ்பாயின் கப்பலான மார்கரிட்டாவின் உதவியுடன் காலியா கப்பலை மும்பைக்கு இழுத்துச் செல்வது. இந்த இரு திட்டங்களுக்கும் தாஜ்பாய் ஒப்புக்கொண்டதாகக் குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வாடகைக்கு விடப்படும் கப்பலின் வருமானத்தைக் கொண்டு காலியா கப்பலைப் பழுதுபார்த்து மீட்டுவிடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதற்கிடையே, ‘மிராண்டா’ கப்பலை பாம்பனுக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே இயக்க சுதேசிக் கப்பல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. பிப்ரவரி மாத அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுவது வழக்கம். இந்நாட்களில் பிரிட்டிஷ் கப்பல்கள் நிர்ணயிக்கும் தொகையைவிடக் குறைவாக வைத்துக் கப்பலை இயக்கலாம் என்பது திட்டம். இவ்வாறு கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பினும், கப்பல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வது, கப்பல்களை வாடகைக்கு விடுவது, அடமானம் வைப்பது, நன்கொடை வசூலிப்பது, புதிய கடல்வழிப் பாதைகளில் கப்பல்களை இயக்குவது எனப் பல்வேறு வழிகளை முன்வைத்து கிருஷ்ண அய்யங்கார் முயற்சிசெய்து பார்த்துக்கொண்டே இருந்தார். ஏதேனும் ஓர் அதிசயம் நிகழாதா என்கிற ஏக்கத்துடன் காத்திருந்தார். ஆனால் இறுதியில் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.
காரணம், அதுவரை கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் உறுதுணையாக இருந்த வெங்கட்ராம ஐயர், மார்ச் 1910 அன்று நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி வக்கீல் தொழிலுக்கு மீண்டும் திரும்பினார். இது கிருஷ்ண அய்யங்காரின் தொடர் முயற்சிக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இருந்தும் தன் பாதையை அவர் மாற்றவில்லை. கொழும்பு விரைந்தார். பங்குகளை வாங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். நிறுவனத்தின் நோக்கத்திற்கு உதவ, தேசபக்தி மிக்க இளைஞர்களை முகவர்களாகக் கோரி விளம்பரம் வெளியிட்டார்.
மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு, நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் முயற்சிகளையும்கூட அரங்கேற்றினார்.
‘இந்த நிறுவனம் தோல்வியுற்றால், தென்னிந்திய மக்களுக்கு இதைவிடப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆங்கிலேயர்களும் பிற வெளிநாட்டினரும் நம்மை இழிவாகவே பார்ப்பார்கள். இந்தியர்கள் மீது அவர்களுக்கு ஏற்கெனவே மரியாதை இல்லை; அதிலும் தென்னிந்தியர்களின் விஷயத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பம்பாய் மக்களை நண்பர்களாகவும், வங்காள மக்களைப் புலிகளாகவும், சென்னை மாகாண மக்களை அடிமைகளாகவும் பிரிட்டிஷார் கருதுகிறார்கள். நமது முதன்மையான சுதேசி முயற்சி ஒன்று தோல்வியுற்றால், அவர்களின் பார்வையில் நாம் இன்னும் எந்த அளவுக்குத் தாழ்ந்து போவோம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை’ என்றெல்லாம் தான் நடத்திய விஜயா நாளிதழில், தன் வெளியீட்டை நிறுத்துவதற்கு முன்பு பாரதி எழுதியிருப்பதாக ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
அடுத்த இரண்டு மாதங்களில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்து, மீட்க முடியாத நிலையை எட்டியிருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டது. நிதி திரட்டத் தீவிர முயற்சிகள் நடைபெற்றாலும், நிர்வாகத்தினர் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என்றே புலனாய்வுப் பிரிவு கூறியது. இதுபோன்ற வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் செயல் என்று குற்றம்சாட்டியது.
1910, மே மாதத்திற்குப் பிறகு லாவோ கப்பலின் நிலைமை என்னவானது என்பது குறித்துச் சரியான விவரங்கள் இல்லை. காலியா கப்பலும் அதே ஆண்டில் ஒரே ஒரு பயணத்தை மட்டுமே மேற்கொண்டது. அது தவிர வேறெந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜூன் மாதத்தில் சுதேசிக் கப்பலின் செயல்பாடுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்தியப் பத்திரிகைச் சட்டம் அப்போது கடுமையானதால், பல சுதேசிப் பத்திரிகைகள் தங்களது வெளியீட்டை நிறுத்தியதும் கப்பல்கள் குறித்த தகவல்கள் கிடைக்காமல் போனதற்குக் காரணமாக அமைந்தது.
செப்டம்பர் மாதத்தில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் அலுவலகம், கடற்கரைச் சாலையிலிருந்து, மேலூரில் உள்ள ஒரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்வு சுதேசிக் கப்பல் நிர்வாகத்தின் பொருளாதாரச் சூழலைக் காட்டுகிறது.
0
இதற்கிடையே டிசம்பர் 1910இல் வ.உ.சி. கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, சிதம்பரனாரின் மனைவி அவரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குப் பணம் திரட்டப் போராடினார். கடன் தொடர்பான சந்திப்புகளிலும், சொத்து விற்பனை தொடர்பாக உறவினர்களுடனான பேச்சு வார்த்தைகளிலும் முழுநேரமாக ஈடுபட்டிருந்தார். இவையனைத்தும் வ.உ.சி. அளித்த அறிவுறுத்தலின்படியே செய்து வந்தார். காவல்துறை தன்னைக் கண்காணிப்பது தெரிந்தும், தன் கணவர் தனக்கிட்ட பணிகளைத் துணிவோடு செய்தார்.
எஸ்.டி. கிருஷ்ண அய்யங்கார் எவ்வாறு சுதேசிக் கப்பலை கடன் சுமையிலிருந்து மீட்கப் போராடினாரோ அவ்வாறே வ.உ.சியை மீட்கும் முயற்சியில் மீனாட்சி அம்மாள் கொடும் துயரத்திற்கு ஆளானார் என்பதைப் பின்வரும் அவருடைய கடித வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
‘என்னிடமிருந்த சிறிய பொருட்களும் நகைகளும், ஊரார் எங்களுக்குத் தந்தனவும், எனது பர்த்தா அவர்களின் கேஸ்களுக்கும் அப்பீல்களுக்கும் எங்கள் சாப்பாட்டுக்குமாகத் தீர்ந்துபோய்விட்டன. எங்கள் உற்றாரும் உறவினரும் மேலும் மேலும் எங்களுக்குக் கொடுத்துச் சலித்துப்போனார்கள்’ என மண்டயம் ஸ்ரீநிவாசாரியாருக்கு எழுதப்பட்ட கடிதம், அவரின் துன்பத்தின் எல்லையைப் படம் போட்டுக் காண்பிக்கிறது.
‘தாங்கள் எனக்குக் கொடுக்கும் பணத்தை என் பர்த்தா அவர்கள் வந்த பின் நியாயமான வட்டியுடன் திரும்பச் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்’ என்று பலருக்கும் கடிதம் எழுதி, அதன் வழியே கண்ணீர் சிந்தினார். ‘நான் மானம் கெடாத கூலி வேலைகளைச் செய்யவும் தயார்’ என்று மீனாட்சி அம்மாள் தன் மாமனாருக்கு எழுதிய கடிதத்தின் வார்த்தைகள் நம் நெஞ்சில் முள் தைப்பதாக உள்ளன.
ஒருபக்கம் வழக்கு தொடர்பான பதிவேடுகள், கோப்புகளை வைத்து தன் கணவரை மீட்கச் சட்டப் போராட்டம் நடத்துதல், மறுபக்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக வந்த அறிக்கைகளுக்குப் பதிலளிக்க ஆவணங்களைத் திரட்டுதல், என மீனாட்சி அம்மாளின் போராட்டம் வ.உ.சி.யின் போராட்டத்திற்கு இணையானது. இந்தச் சாதகமற்ற சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சிறையிலிருந்து விடுதலையான இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து நிலுவைகளையும் செலுத்தி முடிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார் வ.உ.சிதம்பரனார்.
சுதேசிக் கப்பல்கள் குறித்த பரிவர்த்தனைகள் ‘லாய்ட்ஸ் ரெஜிஸ்டர் ஆஃப் பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் ஷிப்பிங்’ என்கிற ஆவணத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் மூலம் கிடைக்கப்பெறுகின்றன.
அதன்படி 1911இல் காலியா கப்பல் ஜே. மேகிண்டோஷ் அண்ட் கம்பெனிக்கு விற்கப்பட்டதையும், லாவோ கப்பல், பி. ஈஸ்வரமூர்த்தியா பிள்ளைக்கு விற்கப்பட்டதையும், 1911 நவம்பரில் அது பம்பாயிலிருந்து புறப்பட்டு ஏடனை அடைந்த தகவலையும் அறிந்துகொள்ள முடிகிறது.
வ.உ.சிதம்பரனாரை சிறைவாசத்திலிருந்து மீட்க நகைகளை விற்றாயிற்று; பாத்திரங்களையும் பண்டங்களையும் விற்றாயிற்று. இறுதி ஆயுதமாக வ.உ.சியின் தாயாருக்குச் சொந்தமான அசையா சொத்துகளின் விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் மீனாட்சி அம்மாள். இறுதியில், மீனாட்சி அம்மாளின் தொடர் முயற்சிகளும் போராட்டமும் எதிர்பார்த்த பலனை அளித்தது. 24 டிசம்பர் 1912 அன்று வ.உ.சி விடுதலையானார். சுதேசிக் கப்பல்களை மீட்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமாக இருந்தாலும், ஒருவழியாக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வ.உ.சிதம்பரனார் விடுதலையாகி இருந்தார். ஆயினும் அதன்பின்னர் அவர் வாழ்ந்த காலம் முழுதும் வறுமை அவரைச் சூழ்ந்திருந்தது என்பது தாங்க முடியாத துயரமாகும்.(தொடரும்)

