அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை விடுவித்து, தோளில் ஏற்றிக்கொண்டு, முனிவன் சுசர்மன் தனக்காகக் காத்திருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டான்.
காத தூரம் கடந்ததுமே வேதாளம் பேசியது.
‘விக்கிரமாதித்த மன்னனே! உனது பொறுமையும் விடாமுயற்சியும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. இம்முழு பூவுலகையும் ஆளக்கூடிய குணநலன்கள் கொண்ட தீரன் நீ என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதுவரையிலும் உன்னைச் சோதித்தது போதும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதோ இப்போது உனக்கு நான் சொல்லப்போவதுதான் கடைசிக் கதை. இக்கதை குறித்து நான் கேட்கப் போகும் கேள்வியும் கடினமாகத்தான் இருக்கும். எனவே நன்கு யோசித்து பதில் சொல். நீ கூறப்போகும் விடையை அறிந்துகொள்ள நானும் ஆவலாகத்தான் உள்ளேன். இப்போது கதையைச் சொல்கிறேன். கவனமாகக் கேள்!’ என்று சொல்லிவிட்டுக் கதை சொல்லத் தொடங்கியது.
‘செண்பகப்பட்டினம் என்கிற சிறு ராஜ்ஜியத்தை சிவபாலன் என்னும் அரசன் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனது மனைவி லீலாவதி. இவர்களுக்கு ரூபவதி என்கிற பருவமடைந்த மகள் ஒருத்தி இருந்தாள்.
மன்னன் சிவபாலன் நீதி நேர்மையுடன் மக்கள் மனம் கோணாமல் ஆட்சி நடத்தி வந்த போதிலும், அவனது உறவினர்களும் அண்டை தேசத்து மன்னர்களும் சிவபாலனின் மீது மிகுந்த பொறாமை கொண்டிருந்தனர். அவனை வீழ்த்தி ராஜ்ஜியத்தைப் பறித்துக்கொள்வதற்காக நேரம் பார்த்துக் காத்திருந்தனர்.
ஒருமுறை பக்கத்து நாட்டு அரசன் ஒருவன் செண்பகப்பட்டினம் மீது படையெடுத்து வந்து நாட்டை முற்றுகையிட்டான். இதுதான் தகுந்த சமயமென்று எண்ணிய சிவபாலனின் உறவினர்கள் எல்லோரும் பகை மன்னனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்தனர். அரண்மனையின் சுரங்க வழிகளையெல்லாம் காட்டிக்கொடுத்து சிவபாலனை வீழ்த்துவதற்கு உதவி புரிந்தனர்.
சிவபாலனின் ராஜ்ஜியத்துக்குள் புகுந்த எதிரிநாட்டு அரசனின் படை எல்லோரையும் வெட்டி வீழ்த்திவிட்டு அரண்மனையை நோக்கி முன்னேறியது.
உறவினர்களின் துரோகத்தால் சிவபாலன் துவண்டு போனான். இதற்குமேல் இங்கிருந்தால் எதிரி மன்னன் கையில் சிக்கிக்கொள்ள நேரும் என்பதால் இரவோடு இரவாக, ஏராளமான தங்க வைர வைடூரிய நகைகள், விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, மனைவி மகளுடன் நாட்டை விட்டு வெளியேறினான். அவனுடைய நண்பன் பராங்குசன் என்பவன் ஆண்டு வந்த கௌமார தேசத்துக்குச் சென்று அடைக்கலம் புகலாம் என்று திட்டமிட்டான்.
இரவோடு இரவாக அரண்மனையிலிருந்து புறப்பட்டு யார் கண்ணிலும் படாமல் மூவரும் ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லைப்புறம் அடுத்து அடர்ந்திருந்த கானகத்துக்குள் புகுந்தனர். இரவில் தொடர்ந்து பயணித்தால் வன விலங்குகளால் அபாயம் ஏற்படும் என்பதால் சிறிது தூரத்தில் தட்டுப்பட்ட மலைக் குகை ஒன்றில் தங்கி ஓய்வெடுத்தனர்.
விடியற்காலையில் சூரியன் கீழ்வானில் தென்பட்டு புள்ளினங்கள் குரல் எழுப்பிப் பறந்ததும் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். கௌமாரதேசத்தை அடைவதற்காகத் தென் திசை நோக்கிப் பயணித்தனர். மதியப் பொழுது நெருங்கியதுமே மகள் ரூபவதி பசியில் துடித்துப் போனாள். அப்போது சற்றுத் தூரத்தில் ஓர் அல்லிக்குளம் தென்பட்டது. மன்னன் சிவபாலன் மனைவி லீலாவதியையும் மகள் ரூபவதியையும் அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்த்தி விட்டு, எல்லோரும் சாப்பிடுவதற்குக் காய், கனி கிழங்கு வகைகளைத் தேடிக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சற்றுதூரம் சென்றதுமே தூரத்தில் ஒரு பெரும் பாறையின் மீது மனிதர்கள் சிலர் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களிடம் கேட்டால் உண்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்களை நோக்கிச் சென்றான். கொஞ்சதூரம் சென்றதுமே சிவபாலன் அம்மனிதர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். அவர்கள் கண்டாரா என்கிற வனவாசி மனிதர்கள். கானகத்தின் வழியே வரும் மனிதர்களைக் கொன்று அவர்களிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் செல்வதே அவர்களின் தொழில்.
மன்னன் சிவபாலன் அவர்கள் கண்ணில்படாமல் வந்த வழியே திரும்ப எத்தனித்தான். அவன் அப்படித் திரும்பியபோது சலசலவென சத்தம் கேட்டுத் திரும்பிய வனவாசிக் கொள்ளையர்கள் மன்னனைப் பார்த்துவிட்டனர். அவன் அணிந்திருந்த ஆடை ஆபரணங்களைக் கண்டு அரசன் என்று புரிந்து கொண்டு அவனைத் துரத்த முற்பட்டனர்.
சிவபாலன் ஓட்டமெடுத்தான். மனைவி மகளை விட்டு வந்த இடத்துக்குச் சென்று அவர்களிடம் அபாயத்தை விளக்கினான். இருவரையும் அங்கேயே அருகிலிருந்த காட்டுப் புதரில் மறைந்துகொள்ளுமாறு கூறிவிட்டு, திசை மாறி வேறுபக்கம் ஓட்டமெடுத்தான்.
மன்னனைத் துரத்திய கொள்ளையர்கள் இரு பெண்களையும் கவனிக்கவில்லை. அவர்கள் மன்னனை நோக்கி அம்பெய்தார்கள். அம்பு பட்டு மன்னன் வீழ்ந்ததும் அவனை நெருங்கி வெட்டிப் போட்டுவிட்டு அவனிடமிருந்த விலையுயர்ந்த பொருள்கள், அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு விலகிச் சென்றனர்.
நடந்தவை அனைத்தையும் ராணி லீலாவதியும் மகள் ரூபவதியும் புதர் மறைவிலிருந்து பார்த்துத் துடித்துப் போனார்கள். கொள்ளையர் கண்களில் பட்டால் தங்களையும் சீரழித்துக் கொன்றுவிடுவார்கள் என்பதால் சிவபாலன் கொலையுண்டதைக் கண்டு அவர்களால் கத்திக் கதறக்கூட முடியவில்லை.
கொள்ளையர்கள் அங்கிருந்து விலகியதும் சிவபாலனின் உடலைத் தழுவிக்கொண்டு இருவரும் கதறித் தீர்த்தார்கள். ஆனால் பருவப் பெண்ணான மகளுடன் அதிகநேரம் அங்கிருந்தால் கொள்ளையர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்று அஞ்சிய லீலாவதி, வேகமாக மகளுடன் அங்கிருந்து விலகி கால் போன போக்கில் நடந்தாள்.
திக்கு திசை தெரியாமல் இருவரும் நடந்துகொண்டே இருந்தார்கள். உயிர் பயம் விரட்ட துயரத்துடன் நெடுந்தொலைவு நடந்து உடல் சோர்ந்து போனார்கள். ஓர் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தவர்கள் தாகம் தீர நீர் அருந்தி, அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஓர் அரசமரத்தடியில் சென்று அமர்ந்தார்கள். நிர்கதியானத் தங்கள் நிலைமையை நினைத்துக் கதறி அழுதார்கள். களைப்பின் மிகுதியால் தொய்ந்து அப்படியே அரைமயக்க நிலைக்குச் சென்றார்கள்.
இதே சமயத்தில் அந்தக் கானகத்தில் வடதிசையின் எல்லையில் இருந்த பெரிய நாடான விசாலை தேசத்தை ஆண்டு வந்த மன்னன் யசகேது என்பவனும் அந்தக் கானகத்தில் வேட்டையாடுவதற்காகத் தனது மகன் விஜயதத்தனுடன் வந்திருந்தான். மனைவி யசகேதுவின் மனைவி சிறிது காலத்துக்கும் முன்புதான் இறந்து போனாள். எனவே தந்தையைத் துயரத்திலிருந்து மாற்றவே மகன் விஜயதத்தன் அவனை வேட்டைக்கு அழைத்து வந்திருந்தான்.
அவர்கள் இருவர் மட்டுமே குதிரையில் வேட்டையாடி வந்த சமயத்தில் அங்கே மண்ணில் இரு பெண்களின் பாதச் சுவடுகளை யசகேது கண்டான்.
‘மகனே! இதோ பார், இங்கே பெண்களின் இரண்டு பாதச் சுவடுகள் தெரிகின்றன. ஆளில்லாத இந்த அத்துவானக் காட்டுக்குள் வந்துள்ள பெண்கள் யாராயிருக்கும் என்று தெரியவில்லையே. ஏதேனும் வன விலங்குகள் துரத்த அவைகளிடமிருந்து தப்பிப்பதற்காக வழிதெரியாமல் வந்து விட்டார்களா? அல்லது ஊர்வசி, மேனகா, திலோத்தமா போன்ற அப்ரஸ்கள் பொழுதுபோக்குவதற்காக இப்பூலோகத்துக்கு வந்துள்ளார்களா? ஒன்றும் புரியவில்லையே? சரி வா, இந்தப் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்று அவர்கள் யார் என்று அறிந்துகொள்வோம்!’ என்றான்.
தந்தை இப்படிச் சொல்லவும், மகன் விஜயதத்தன் அவனிடம், ‘தந்தையே! நாம் ஒன்றை நிச்சயித்துக் கொள்வோம். இவ்விரண்டு பாதச் சுவடுகளில், சிறிய பாதச் சுவடுகளைக் கொண்டவள்தான் இளவயதினளாக இருக்கவேண்டும். எனவே அவளை எனக்கு உரியவளாக நான் ஏற்றுக்கொள்கிறேன். பெரிய காலடிச் சுவடு கொண்டுள்ள பெண்ணை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். சரியா?’ என்று கேட்டான்.
மன்னனும் ஒப்புக்கொண்டான்.
காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற இருவரும், லீலாவதி, ரூபவதி இருந்த அரசமரத்தடியைச் சென்றடைந்தார்கள். துயரத்துடன் சோகப் பதுமைகளாக அமர்ந்திருந்த அப்பெண்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் யார், என்னவென்று விசாரித்தார்கள். லீலாவதி நடந்தவற்றைத் தெரிவித்து கண்ணீர் வடித்தாள்.
மன்னன் யசகேது அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினான். ‘பெண்ணே! விதியின் செயலை யாராலும் மாற்றமுடியாது. கடந்து போனதை நினைத்துக் கவலைப்படுவதை விட்டு, இனி நடக்கவேண்டியவற்றை யோசியுங்கள். நீங்கள் இருவரும் இந்தக் கானகத்தை விட்டு பத்திரமாக வெளியேற நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். உங்களுடன் துணையாக வருகிறோம். அங்கிருந்து நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்குச் செல்லலாம். அல்லாமல் நாங்கள் உங்களை எங்கள் ராஜ்ஜியத்துக்கே அழைத்துச் செல்லவும் தயாராயிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமிருந்தால் எங்களுடனேயே எங்கள் அரண்மனைக்கு வந்து தங்கலாம்!’ என்றான்.
ராணி லீலாவதி, ‘அரசே! உற்றார் உறவினர் என்று இவ்வுலகில் எங்களை ஆதரிப்பார் யாருமில்லை. பருவமகளுடன் நிர்கதியாக அநாதையாக நிற்கிறோமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். தங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி!’ என்று தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
நால்வரும் யசகேது மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்கள். சில நாட்கள் சென்றதும் மன்னனும், இளவரசனும் பெண்களிடத்தில் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். இருவரும் தாங்கள் காட்டில் செய்து கொண்ட தீர்மானத்தின்படி நடப்பதில் ஒரு சிறிய சிக்கல் இருந்தது. வயதில் மூத்தவளான ராணி லீலாவதி சிறிய பாதங்களைக் கொண்டவளாயிருந்தாள். மகள் ரூபவதியோ பெரிய பாதங்கள் உடையவளாயிருந்தாள்.
ஆனாலும் இருவரும் காட்டில் நிச்சயித்தபடியே சிறிய பாதங்களைக் கொண்ட லீலாவதியை மகன் விஜயதத்தனும். பெரிய பாதங்களைக் கொண்ட இளவரசி ரூபவதியை யசகேது மன்னனும் மணந்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்கள்.
இவ்வாறாகக் காலடிச் சுவடுகளில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தாய், இளவரசனின் மனைவியானாள்! மகள், மன்னனுக்கு மனைவியானாள். எனவே மகள் தனது தாயாருக்கே மாமியார் ஆனாள். அதுபோலவே தாயும் தனது சொந்த மகளின் மருமகள் ஆனாள்!
மாதங்கள் கடந்ததும் இரு தரப்பினருக்கும் குழந்தைகள் பிறந்தனர். மன்னன், மகன், தாய், மகள் என எல்லோரும் தத்தம் குழந்தைகளுடன் மேலும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினார்கள்.’ என்று கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனைப் பார்த்துக் கேட்டது.
‘அறிவில் சிறந்தோனே, வல்லமை மிக்க விக்கிரமாதித்த மன்னனே, தந்தையும் மகனும் மகளையும் தாயையும் மணந்து பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் தங்களுக்குள்ளே எத்தகைய உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வார்கள்? இதற்கான விடை தெரிந்தும் நீ கூறாவிட்டால் உனது தலை வெடித்துச் சுக்குநூறாகிப் போகும்!’ என்றது.
வேதாளத்தின் கேள்வி விக்கிரமாதித்தனைத் துளைத்தது. அதுவரையிலும் வேதாளம் கூறி வந்த அத்தனைக் கதைகளுக்குமான கேள்விகளுக்கெல்லாம் ஆராய்ந்து பார்த்து விடை கூறியவன், இந்த இறுதிக் கதைக்கான விடை தெரியாமல் திகைத்துப் போனான். எத்தனை யோசித்தும் இக்கதைக்கான விடையை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே எதுவும் பேசாமல் மௌனமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தான்.
இதைக் கண்டு வேதாளம் ஓங்கிச் சிரித்தது. ‘மன்னா விக்கிரமாதித்தா நீ, நீடூழி வாழ்க! இந்தப் படுபயங்கரமான மயானத்தில் உன்னைப் பலவாறாக இம்சித்தும் பொறுமையைச் சோதித்தும் சிரமம் கொடுத்தும்கூட, கொஞ்சமும் அயர்ச்சியடையாமல், கொண்ட காரியம் ஒன்றே குறியாகச் சிந்தையைச் செலுத்தி வெற்றி பெறப் பாடுபட்டாய். அஞ்சாநெஞ்சம் கொண்ட உனது செயலைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன்.
இதுவரையிலும் உன்னிடம் நான் இந்தப் புதிர்க் கதைகளைக் கூறியதற்கு ஒரு காரணம் உள்ளது. இக்கதைகள்தான் சாமானியனான எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கதைகள். என்னை வேதாளமாக்கிய கதைகள். எனது வாழ்க்கைக் கதையைக் கூறுகிறேன் கேள்!’ என்ற வேதாளம் தனது சுயசரிதையைச் சொல்லத் தொடங்கியது.
(தொடரும்)
‘அறிவில் சிறந்தோனே, வல்லமை மிக்க விக்கிரமாதித்த மன்னனே, தந்தையும் மகனும் மகளையும் தாயையும் மணந்து பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் தங்களுக்குள்ளே எத்தகைய உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வார்கள்?
——————-
மேற்கண்ட விக்ரமாதித்தன் கதை புதிரை அடிப்படையாகக் கொண்டதுதான் பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. அந்தப் படத்தில்
அப்பா மேஜர் சுந்தர்ராஜன் – மகன் கமலஹாசன்
அம்மா ஸ்ரீவித்யா – மகள் ஜெயசுதா
கமலஹாசன் ஸ்ரீவித்யாவையும்;
ஜெயசுதா மேஜர் சுந்தரராஜனைக் காதலிப்பதாகவும் கதை.
இருவருக்கும் குழந்தை பிறந்தால் என்ன உறவு என்பது முடிச்சு.
——————————
பாலசந்தர் படத்தின் புதிருக்கு மூலம் விக்ரமாதித்தன் கதை என்பது தெரிந்ததுதான். இருப்பினும், மீண்டும் விகரமாதித்தன் கதையைப் படிக்கும் போது ஞாபகம் வந்தது. நன்றி. திரு உமா சம்பத்.