நாம் அனைவரும் சிறுவயதில் நட்சத்திரங்களை ரசித்திருப்போம். இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டோ, வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ நட்சத்திரங்களைப் பார்த்து கதைகள் பேசியிருப்போம். சிறியவர் முதல் பெரியவர் வரை நட்சத்திரங்களின் வசீகரத்தில் மயங்காத ஆட்களே இல்லை எனலாம்.
கடலில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், பெண்களை வர்ணிக்கும் கவிஞர்களுக்கு அழகின் ஊற்றாகவும் அமைந்திருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி கொஞ்சம் விவரமாகத் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக நட்சத்திரங்கள் என்றாலே இரவு வானத்தை பற்றி சிந்திக்கும் நாம், சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்பதை மறந்துவிடுகிறோம். நாம் இரவில் காணும் நட்சத்திரங்களைப் போல சூரியனும் சாதாரண ஒரு நட்சத்திரம்தான். அது நமது பூமிக்கு மிக அருகில் இருப்பதால் பார்ப்பதற்குப் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிகிறது. அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மைப் பாதிக்கக்கூடியதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளியை நாம் அருகில் சென்று பார்க்க முடியாது. சில ஒப்பீடுகள் மூலம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒரு மைதானத்திற்கு செல்லுங்கள். அதன் நடுவில் ஒரு கால்பந்தை வையுங்கள். 25 மீட்டர் தொலைவிற்கு வந்து ஒரே ஒரு மிளகை எடுத்து வையுங்கள்.
இப்போது கால்பந்துக்கும் மிளகுக்கும் இருக்கும் ஒப்பீட்டளவிலான இடைவெளிதான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம். கால்பந்துடன் ஒப்பிடும்போது மிளகின் அளவுதான் சூரியனுடன் ஒப்பிடும்போது நம் பூமியின் அளவு.
இப்போது மிளகில் இருந்து 5 செ.மீ தூரத்தில் ஒரு கடுகை வைத்தால், அதுதான் பூமிக்கும் நிலவுக்கும் இருக்கும் இடைவெளியும் அளவும்.
சூரியனைப் போன்று நம் அருகிலுள்ள மற்றொரு நட்சத்திரம் ப்ராக்ஸிமா சென்டாரி. அதைச் சுற்றியும் கோள்கள் வலம் வருகின்றன. சூரியன், ப்ராக்ஸிமா சென்டாரி மட்டும் அல்ல, பெரும்பாலான நட்சத்திரங்களை கோள்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. ஏன் சுற்றுக்கின்றன? காரணம் ஈர்ப்பு விசை. இதைக் குறித்து விவரமாக பார்ப்பதற்கு முன் நட்சத்திரங்கள் என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடலாம்.
நட்சத்திரம் என்றால் என்ன?
நட்சத்திரம் என்பது ஓர் எரியும் பந்து. அவ்வளவுதான். ஒரு நட்சத்திரத்திற்கும் கோளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது நட்சத்திரங்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் வெப்பமாகவும் இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் ஒளியால்தான் நாம் அனைத்தையும் பார்க்க முடிகிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பருப்பொருள் பெரிதாக இருக்கிறது என்றால், அதன் மத்தியில் ஈர்ப்பு விசையும் வலுவாக இருக்கும். இதனால் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தும் அதன் ஈர்ப்பு விசையை நோக்கி இழுக்கப்படும். ஏன் நீங்களும் நானும்கூட ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உணர முடியாத அளவிற்கு விசை வலுவற்றதாக இருப்பதால் நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. நாம் வாழும் பூமி பெரியது. அதனால் அதன் ஈர்ப்பு விசையை நாம் உணர்கிறோம். நாம் எதையாவது வீசினால் அது கீழே, அதாவது பூமியின் நடுப்பகுதியில் விழுவதற்கு ஈர்ப்பு விசைதான் காரணம்.
நட்சத்திரம் பூமியைப் போன்ற கோள்களைவிடப் பெரியது என்பதால் அதன் ஈர்ப்பு விசை மிக அதிகமானதாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசை சுற்றி இருக்கும் அனைத்தையும் தம் மையத்தை நோக்கி இழுப்பதால் அதனுள் அதீத அழுத்தம் உண்டாகுகிறது.
அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க நட்சத்திரத்தின் வெப்பமும் அதிகரிக்கிறது. ஒருகட்டத்தில் அந்த வெப்பநிலை நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டும்போது, அந்த நட்சத்திரம் ஒரு ஹைட்ரஜன் குண்டு போலச் செயல்படத் தொடங்குகிறது.
அதாவது நட்சத்திரத்தில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், அணுச்சேர்க்கையில் (Nuclear Fusion) ஈடுபட்டு வெப்பத்தையும், ஒளியையும் உமிழ்கின்றன. இதனால் நட்சத்திரம் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. அதைத்தான் நாம் பூமியில் இருந்துக்கொண்டு பெண்ணின் புன்முறுவல் போல நட்சத்திரம் மின்னுவதாகக் கற்பனையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம்.
மையத்தில் இருந்து வெளிப்படும் அதீத வெப்பத்தால் நட்சத்திரம் ஒரு பலூனைப் போல விரிவடையத் தொடங்குகிறது. அதேசமயம் உள்ளே இருக்கும் ஈர்ப்பு விசை விரியும் நட்சத்திரத்தை மீண்டும் மையத்தை நோக்கி இழுக்கிறது. இவ்வாறு வெப்பத்தால் வெளியே விரிவடைவதும், ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
வெப்பம் அதிகமாக அதிகமாக நட்சத்திரம் அதிகம் விரிவடைகிறது. அவ்வாறு விரிவடையும் நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள பருப்பொருளின் நிறை (Mass of Matter) அடர்த்தி குறைந்து குளிரத் தொடங்குகிறது. அவ்வாறு குளிரும் நட்சத்திரம் சுருக்கம் அடைவதால் மீண்டும் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு வெப்பம் அடைகிறது.
இப்படியே இந்தச் செயல்பாடு ஒரு குறிப்பிட்ட சமநிலையில் தொடர்ந்து நடப்பதால்தான் நட்சத்திரம் தொடர்ந்து பல கோடிகள் ஆண்டுகள் ஒரே வெப்பத்தில் எரிந்துக்கொண்டே இருக்கிறது.
சூரியன் மட்டுமல்ல அனைத்து நட்சத்திரங்களும் இப்படித்தான் இயங்குகின்றன. சூரியனைப் போலவே பல்வேறு வகை நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமது சூரியன் சிறிய அளவிலான நட்சத்திரம் மட்டுமே. நம் சூரியனைவிடவும் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு, UY Scuti என்று ஒரு நட்சத்திரம் இருக்கிறது. நமது சூரியனே மிகப்பெரியது. அதனுள் லட்சக்கணக்கான பூமிகளை அடக்கிவிட முடியும் என்றால், UY Scuti போன்ற நட்சத்திரத்தில் 500 கோடி சூரியன்களை உள்ளே அடக்கிவிட முடியும். UY Scuti-ன் ஆரம் (Radius) சூரியனைவிட 1700 மடங்கு அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எனில் அதுதான் இந்தப் பிரபஞ்சத்திலெயே பெரிய நட்சத்திரமா என்றால் கிடையாது. Stephanson-2-18 என்று ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதன் கன அளவு சூரியனைவிட 10,000 கோடி மடங்கு அதிகம். இப்படியாக நாம் இதுவரை அறியாத ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் இதுதான் பிரபஞ்சத்திலேயே பெரிய நட்சத்திரம் என்று ஒன்றை உறுதியாக கூறிவிட முடியாது.
ஒருவேளை UY Scuti நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் இருக்கின்றன என்று வைத்துகொண்டால், அவை அந்த நட்சத்திரத்தைவிடத் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் இருக்கவேண்டும். பக்கத்தில் இருந்தால் நொடியில் பொசுங்கிவிடும். அந்தக் கோளில் உயிர்கள் வாழ்ந்தால், அந்த உயிர்களுக்கு தங்களுடைய நட்சத்திரம், நமது சூரியனின் அளவில்தான் தெரியும். காரணம், சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரம்தான் உயிர்கள் நீடித்து இருப்பதற்கான சரியான ஒப்பீட்டு தூரம்.
அதனால் UY Scuti-ன் சுற்றுப்பாதையில் உள்ள கோளும் ஒப்பீட்டு அளவில் உயிர்கள் வாழும் சூழலுக்கான தூரத்தைத் பெற்றிருக்க வேண்டும். நம் பூமியே சூரியனுக்கு அருகிலேயோ அல்லது தற்போது இருக்கும் தொலைவைவிடச் சற்று தூரமாகவோ இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் உட்கார்ந்து இந்தக் கட்டுரையை படித்துக்கொண்டிருக்க முடியாது.
ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். UY Scuti போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி கோள்களோ உயிர்களோ தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை. UY Scuti மட்டுமல்ல, அளவில் பெரிதான அத்தனை நட்சத்திரங்களுக்கு அருகிலும் உயிர்கள் தோன்ற வாய்ப்பில்லை.
காரணம் பெரிய நட்சத்திரங்கள் மிக குறைந்த ஆயுளையே கொண்டிருக்கும். UY Scuti-ன் ஆயுள் காலம் சில லட்சம் வருடங்கள்தான். அத்தனை குறைவான ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் தம்மை சுற்றி இருக்கும் கோள்களுக்கு உயிர்களைத் தோற்றுவிப்பதற்கான போதுமான அவகாசத்தை வழங்குவதில்லை.
ஆனால் சிறிய அளவிலான நட்சத்திரங்களின் கதைகளே வேறு. நமது சூரியனின் ஆயுள் காலம் சுமார் 1000 கோடி வருடங்கள். சூரியன் இப்போது 500 கோடியாவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. அது மரணிக்க இன்னும் 500 கோடி வருடங்கள் ஆகும். இத்தனை கால இடைவெளி இருந்தால்தான் ஒரு உயிர் தோன்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும்.
இன்னொன்று தெரியுமா? இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், அவை நீடித்து இருப்பதற்குமான ஆதாரங்களே நட்சத்திரங்கள்தான். அது எப்படி என்று பின்னால் பார்ப்போம்.
(தொடரும்)
This series is very interesting. Appreciate the effort by Mr.Nanmaaran and the editorial team.
அறிவியல் பற்றி குறிப்பாக விண்வெளி பற்றி தமிழில் வரும் கட்டுரைகள் மிகக் குறைவு. இந்தக் கட்டுரைகள் என்னைப் படிக்கத் தூண்டி, வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. உங்கள் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.