ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாய்மரக் கப்பல்கள் கடல்களில் பயணித்தன. ஜேம்ஸ் வாட் நீராவி விசையைச் சீர் செய்த சில வருடங்களில், சுரங்கத்தில் நீரை வெளியேற்றவும், பஞ்சுத்தறி ஆலைகளில் நூல் நூற்கவும், மாவு ஆலைகளில் மாவு அறைக்கவும், வாட் எஞ்ஜின் பயனுக்கு வந்தது.
1785இல் ஸ்காட்லாண்டில் பாட்ரிக் மில்லர் (Patrick Miller) நீளமான இரண்டு படகுகளை இணைத்து ஒரு ஜோடிப்படகை உருவாக்கினார். இவற்றை ஒரு துடுப்புச் சக்கரத்தால் (paddle wheel) இணைத்தார். நதி ஓடை கால்வாய்களில் ஓடும் நீரினால் நீராலைகள் பல நூறு ஆண்டுகளாய் இயங்கி வந்தன. நீரின் சக்தி, நீராலைகளில் துடுப்புச் சக்கரத்தைச் சுழற்ற, ஓர் அச்சுக்கோல் வழியாக அது மற்ற இயந்திரங்களைச் சுழற்றப் பயன்பட்டன. மாவரைக்கும் மாவாலைகளிலும், நெய்தலுக்கு நூலாலைகளிலும் இவை பிரபலம். நீராலைக்கு எதிர்மறையே கரிவிசையால் சுழற்றப்பட்ட துடுப்புச் சக்கரங்கள். கரிவிசையால் சுழலும் சக்கரம் நீரைத் தள்ளி படகைச் செலுத்தும்.
நீராவி எஞ்ஜின் ஒன்று துடுப்புச் சக்கரத்தைச் சுழற்றி, ஜோடிப்படகை ஏரிகளில் நகர்த்தியது. நீராவி விசையால் இயங்கும் போர் படகுகளைச் செய்து ஐரோப்பிய அரசுகளுக்கு விற்பது மில்லரின் நோக்கம்.
மாவரைக்கும் ஆலைகள் ஆங்கிலத்தில் ”மில்”(Mill) என அறியப்படுகின்றன. மாவரைப்பவனின் தொழில்பெயர் மில்லர் (ஜெர்மன் மொழியில் மியூல்லர், முல்லர்). அப்பேர்பட்ட ஒரு மில்லர் முதல் துடுப்புச் சக்கரப் படகை உருவாக்கியது தக்கப் பொருந்தும்.
ஜேம்ஸ் வாட் பிறந்த கிளாஸ்கோ (Glasgow) நகரத்தையும் ஸ்காட்லாந்தின் மற்ற பெரும் நகரமாகிய எடின்பரா (Edinburgh) நகரத்தையும் ஃபோர்த் (Forth), கிளைட்(Clyde), என்ற இரண்டு கால்வாய்கள் இணைத்தன. இந்தக் கால்வாய்களை உருவாக்கி நிர்வாகித்து படகுகளிடம் சுங்கம் வசூலித்த கம்பெனியின் தலைவர், டண்டஸ் துரை (Lord Dundas), பாட்ரிக் மில்லரின் படகைப் பார்த்து பரவசமாகி, அதேபோல் நீராவி விசையால் இயங்கும் படகை உருவாக்க முடிவெடுத்தார். அலெக்ஸாண்டர் ஹார்ட் (Alexander Hart) படகு அமைக்க, வில்லியம் சைமிங்க்டன் (William Symington)நீராவி விசையை உருவாக்கினார். 1803இல் சார்ளட் டண்டஸ் (Charlotte Dundas) என்று அவரது மகள் பெயர் சூட்டப்பட்ட கரிவிசைப் படகு (steamboat), அந்தக் கால்வாயில் இயங்கியது.
அமெரிக்காவிலிருந்த வந்திருந்த ராபர்ட் ஃபுல்டன் (Robert Fulton) இதைப் பார்த்தார். பிரான்சு தலைநகர் பாரிசில் ஓடும் செய்ன் நதியில் ஃபுல்டன் ஒரு கரிவிசைப் படகு உருவாக்கிச் செலுத்தினார். பின்னர் 1807இல் பௌல்டன் வாட் கரிவிசையை வாங்கி, அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்துக்கும் ஆல்பனி நகரத்துக்கும் இடையே ஓடிய ஹட்ஸன் (Hudson) நதியில், கிளேர்மாண்ட் (Clermont) எனும் ஒரு கரிவிசைத் துடுப்புச்சக்கரப் படகை இயக்கினார். 150 மைல் (240கி.மீ.) பயணத்தை 32 மணிநேரத்தில் மேற்கொண்டது இந்தப் படகு. கிளேர்மாண்ட் வணிக ரீதியாக வெற்றிபெற்ற முதல் கரிவிசைப் படகு எனும் புகழ் பெற்றது.
இதற்கு முன்பே அமெரிக்காவில் மற்ற சில இடங்களில் பலர் கரிவிசைப் படகுகளை உருவாக்கி இயக்கினார்கள். அவை சில ஆண்டுகள் இயங்கி, பின் நின்றுவிட்டன. 1804ல் ராபர்ட் ஸ்டீவென்ஸ் (Robert Stevens) திருகுவிசை (screw propeller) பொருந்திய ஒரு படகை உருவாக்கினார். இதற்கு ”ஃபீனிக்ஸ்” (Phoenix) என்று பெயரிட்டார்.
திருகுவிசை, மின்விசிறி (electric fan) போன்றது. மின்விசிறியின் சிறகுகள் காற்றைத் தள்ளி குளிர்தென்றலைச் சமைப்பதுபோல், திருகுவிசை நீரைத் தள்ளித் தான் பொருந்திய படகை நகர்த்தும். அளவிலும் கனத்திலும் துடுப்புச்சக்கரத்தைவிடச் சிறியது. துடுப்புசக்கரம் ஒரு படகின் வலப்புறமோ இடப்புறமோ இல்லாமல், படகின் பின்புறம் (வால் பகுதி) நீரில் மூழ்கியோ, சற்றே உயர்ந்தோ இருக்கும். நிலத்தின் எதிர்ப்புத்திறனை (உராய்வு – friction) விட நீரின் எதிர்ப்புதிறன் மிகக்குறைவு என்பதால், குறைந்த சக்தியுடைய கரிவிசையும் பெரிய படகை நகர்த்தும். ஜேம்ஸ் வாட் ஒரு திருகுவிசையை 1780களிலேயே உருவாக்கினார். ஆனால் அதைப் படகில் பொருத்தி இயக்கவில்லை.
ராபர்ட் ஸ்டீவென்ஸ் உருவாக்கிய ஃபீனிக்ஸ் படகு, குறைந்த அழுத்த பௌல்டன்-வாட் எஞ்ஜினோடு அதியழுத்த (high pressure) நீராவி எஞ்ஜினைப் பொருத்தியது. இங்கிலாந்தில் ரிச்சர்ட் டிரெவிதிக் செய்ததுபோல், அமெரிக்காவில் ஆலிவர் எவான்ஸ் (Oliver Evans) உயரழுத்த நீராவி எஞ்ஜினைச் செய்து புகழ் பெற்றார்.
1811இல் ஜான் ஸ்டீவென்ஸ் (John Stevens) இரண்டு திருகுவிசை பொருந்திய ஒரு படகை உருவாக்கி, நியூ யார்க்கிற்கும் ஹோபோகனிற்கும் இடையே செலுத்தினார். இதற்கு ஜூலியானா (Julianna) என்று தன் மகள் பெயரைச் சூட்டினார். ஹட்ஸன் நதி கடலில் கலக்கும் பகுதி இது. நன்னீர் இல்லை. கடலின் உப்புநீர், திருகு விசைகளைச் சீக்கிரம் அரித்துவிடும். இரும்பில் மட்டும் செய்யாமல், வெங்கலம், செம்பு, போன்ற கலவைகளிலும் உலோக விசிறிகளைச் செய்து துரு பிடிப்பதையும் உப்பரிப்பதையும் தாமதப்படுத்தினர்.
மிஸ்ஸிஸிப்பி நதி மிசை நிலவினிலே
அதே 1811இல் ஓகையோ (Ohio) நதிக்கரையில் இருந்த பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரத்தில் கரிவிசைத் துடுப்புச்சக்கரப் படகுகள் இயங்கத் தொடங்கின. ஓகையோ நதி மூன்று பெரிய மாநிலங்களைக் கடந்து மேற்கே சென்று, அமெரிக்காவின் மிகப்பெரிய நதியான மிஸ்ஸிஸிப்பி (Mississippi) நதியில் கலக்கும். மிஸ்ஸிஸிப்பி வட அமெரிக்காவின் மிக பிரம்மாண்டமான நதி, நீளத்தில் அகலத்திலும் கங்கையை ஒத்தது. ஓகையோ நதியை கோதாவரிக்கு ஒப்பிடலாம். ஓகையோவை தவிர அதைப் போன்ற ஐந்து பெரும் நதிகள் – மிஸௌரி(Missouri), இல்லினாய் (Illinois), டென்னஸ்ஸீ (Tennessee), ஆர்கன்ஸா (Arkansas), சிவப்பு (Red river) நதி – வெவ்வெறு இடங்களில் மிஸ்ஸிஸிப்பி நதியோடு கலக்கின்றன.

அடுத்த நாற்பது ஆண்டுகளில் இந்நதிகளில் கரிவிசைப் படுகு போக்குவரத்து அபாரமாகப் பெருகியது. கரி, இரும்பு, செம்பு, தகரம், பருத்தி நெல், ஏற்றிச் செல்லும் கரிவிசைப் படகுகள் அமெரிக்காவெங்கும் பரவின. இதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில் புரட்சி வட அமெரிக்கக் கண்டத்தில் பரவியது. நதிக்கரைகளிலும் பரந்த நிலங்களிலும் காடுகள் அதிகம். நதிகளிலும் ஏரிகளிலும் ஓடிய படகுகள், நிலக்கரிக்கு மாற்றாக விறகை எரிபொருளாய் பயன்படுத்தின.
காண்டீபத்தால் காடெரித்தான் அர்ஜுனன். காடுவெட்டி நாடெடுத்தான் கரிகாலன். படகோட்ட காடெரித்தான் அமெரிக்கன். சுரங்கதிலிருந்து வாங்கி வரும் கரியைவிட, அக்கம்பக்கத்தில் வெட்டினால் கிடைக்கும் விறகு மலிவல்லவா?
இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஜெர்மனி போன்ற பெரும் ஐரோப்பிய நாடுகள் நிலப்பரப்பில் தமிழ்நாட்டை ஒத்தவை. இன்றைய அமெரிக்காவோ இன்றைய இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரியது – இந்தியாவில் முப்பது மாகாணம், அமெரிக்காவில் ஐம்பது மாகாணம். ஆனால் அன்றைய அமெரிக்கா அட்லாண்டிக் கடலை ஒட்டிய பதிமூன்று மாகாணங்களின் (13 colonies) ஐக்கிய நாடாகதான் இருந்தது. மாநில அரசுகள் பலமாக இருக்கவேண்டும், மத்திய அரசு போர், வெளியுறவு தவிர மற்ற நிர்வாக விஷயங்களில் பலமாக இருக்கக்கூடாது என்று ஜார்ஜ் வாஷிங்கடன் தலைமையில் அமெரிக்காவின் சுதந்திரப் போராளிகளும், வணிகரும் , சமூக ஆர்வலரும், அரசியல்வாதிகளும் நினைத்ததால், அரசியலமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள் ஒன்றிய அரசுக்கு வருமான வரி விதிக்கக்கூட உரிமையில்லாமல் செய்தனர். இதற்கு மேற்கே இருந்த நிலங்கள் பிரான்சுக்குச் சொந்தமாகப் பல இடங்களும் லூயிஸியானா நிலப்பரப்பு (Louisiana Territory) என்ற பெயரில் இருந்தன. இவற்றை 1804இல் நெப்போலியன் ஐரோப்பாவில் தான் சந்தித்த நஷ்டங்களுக்கு ஈடுகட்ட, அமெரிக்க அரசாங்கத்திற்கு விற்றான்.
அந்த நிலங்களில் செவ்விந்தியப் பழங்குடிகளும் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். சுமார் நானூறு பெருங்குழுக்களாய் இவர்கள் வாழ்ந்து வந்தனர்., மிஸ்ஸி(Missi), சிப்பி(Sippi), இல்லினாய்(Illinois), ஓகல்ஹோமா(Oklahoma), ஐடஹோ(Idaho), ஐயோவா(Iowa), டென்னஸ்ஸீ(Tennessee) என்று இன்று வழங்கும் பல அமெரிக்கா மாநிலப் பெயர்கள் இந்தப் பழங்குடியின் பெயர்களே. இதைத்தவிற சியௌ(Sioux), அபேச்சி(Apache), மோஹிகன்(Mohican), நவஹோ(Navajo), செமினோல்(Seminole), கோமான்சி(Comanche), செரோக்கீ(Cherokee), செயென்(Cheyenne), டகோட்டா(Dakota), லகோட்டா(Lakota), பானீ(Pawhnee), டெலவேர்(Delaware) போன்ற பல இனக்குழுக்கள் தங்களைத் தேசங்களாய் கருதி வாழ்ந்துவந்தன.
நீராவிப் படகுகளும், அதன் வழியே வெள்ளையர்கள் வளர்த்த விவசாயமும் வணிகமும் தொழிற்சாலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக செவ்விந்தியர்களின் நிலங்களை ஆக்கரமித்தன. 1830இல் சட்டம் போட்டு நிலம் திருடியது ஜனநாயக அரசு. ஐந்து செவ்விந்திய தேசங்களின் மக்கள் கட்டாயமாக மிஸ்ஸிஸிப்பிக்கு மேற்கே நாடு கடத்தப்பட்டனர். பயணத்தில் பல்லாயிரம் மாண்டனர்; குடி அமர்த்தப்பட்ட நிலங்களில் குளிரிலும் பசியில் பல்லாயிரம் மாண்டனர். கண்ணீர் பாதை (Trail of Tears) என்று இதற்கு இழிப்பெயர்.
மிஸ்ஸிஸிப்பி நதிக்கரை மாநிலங்கள் யாவும் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களாக மாறி, ஐரோப்பிய முறையில் அரசு அமைத்து, ஒவ்வொன்றாக வாஷிங்க்டன் தலைநகரின் தலைமையில் மாநிலங்களாக அமெரிக்காவுடன் இணைந்தன.
சரக்குகளை எடுத்துச் செல்லும் படகுகள் பல, சுற்றுலாப் படகுகளாகவும், உல்லாசப் படகுகளாகவும் மாறின. சூதாட்ட மையங்கள் இயங்கப் பல தடைகளைப் போட்ட அமெரிக்க மாநில அரசுகள், துடுப்புச்சக்கரப் படகில் சூதாட்டம் நடத்த விதிவிலக்கு அளித்தன. பணக்காரர்கள் சொகுசாகப் பயணிக்க பஞ்சு பட்டு படுக்கைகளுடன், அலங்காரமான விஸ்தாரமான, அறைகள் செய்து, மது பானமும் பெரிய விருந்தும் கிடைக்கும் உல்லாசப் படகுகள் ஓடும் நதியில், கரியும் இரும்பும் மற்ற தாதுகளும் தாங்கும் புகைபடிந்த அழுக்கான படகுகளும் அருகருகே ஓடின.
இதனால் பல கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் மிஸ்ஸிஸிப்பி நதியின் துடுப்புப்படகுகள் கதைக்களம் ஆயின. நதியில் விளையாடி கொடியில் தலை சீவி அமெரிக்க இலக்கியம் ஒரு தனி அடையாளம் பெறத் தொடங்கிய காலம் அது. மார்கு டுவெய்ன் (Mark Twain) எனும் புகழ்பெற்ற எழுத்தாளரின் கதைகள் இப்படகுகளிலும், நதிகளிலும் நதியோரமும் அமைந்தன. அவர் உண்மை பெயர் சேமுவல் கிளிமென்ஸ் (Samuel Clements); ”மார்க் டுவெய்ன்” என்பது, கயிற்றை நதியில் விடுத்து அளவெடுக்கக் கலபதிகள் உறக்கச் சொல்லும் ஆணை. அதைப் புனைப்பெயராக வைத்துக்கொண்டார். ஆப்பிரிக்கவிலிருந்து பருத்தி வயல்களில் வேலை செய்யக் கொண்டு வரப்பட்ட கருப்பின அடிமைகளின் வரலாறும் இங்கே நடந்தது. 1928இல் வால்ட் டிஸ்னி முதன்முதலில் சித்திரங்களைக் காகிதத்தில் வரைந்து, கார்ட்டூன் எனும் புதுவித சினிமா எடுத்தார். அதில் மிக்கி மௌஸ் (Mickey Mouse) எனும் எலி கதாநாயகன். அந்த முதல் சினிமாவின் பெயர் “ஸ்டீம்போட் வில்லி” (Steamboat Willie). மிக்கி மௌஸ் அதில் ஒரு நீராவிவிசைப் படகின் கலபதி.

லண்டனின் கீழடி – தேம்ஸ் சுரங்கம்
ரயில் யுகம் 1830 முழுவீச்சில் தொடங்கும் முன்பே, லண்டன் நகரில் பாயும் தேம்ஸ் நதிக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதையை அமைக்க தேம்ஸ் ஆர்ச்வே கம்பெனி (Thames Archway company) 1805இல் திட்டமிட்டது. சுரங்கத்தைக் கட்ட ரிச்சர்ட் டிரெவிதிக்கை தேம்ஸ் கம்பெனி அணுகியது. ஆயிரம் அடி சுரங்கம் தோண்டிய பின், மண் உறுதியாக இல்லை, தொடர்வது ஆபத்து என்று இது கைவிடப்பட்டது. ஆனால் 1818இல் இப்படி ஒரு சுரங்கத்தைக் கட்டமுடியும் என்று மார்க் புரூணெல் (Marc Brunel) நம்பிக்கை தெரிவித்தார்.

கப்பல்களில் நுழைந்து மரத்தைத் துளைக்கும் கப்பல்புழு (shipworm) என்ற ஒரு புழுவை ஆராய்ந்தார் புரூணெல். இப்புழுவின் தலை பலமான எலும்பும் பல்லும் உடையது. (உண்மையில் இது புழு அல்ல, டெரீடோ நேவலிஸ் (Teredo navalis) எனும் கடல்வாழ் உயிரினம்; பார்க்கப் புழு போல் இருக்கும்; அவ்வளவே). மண்புழு மண்ணை முன்னே விழுங்கி பின்னே உமிழ்ந்து ஊர்வது போல், கப்பல்களின் மரத்தை துளையிட்டு ஊர்வது இப்புழு. இந்த புழுவினால் ஊக்கம் பெற்று, ஒரு பலமான கவசத்தை முன்புறமும், மண்ணை வெளிக்கிடத்தும் பின்புறமும் கொண்ட சுரங்கம்தோண்டும் இயந்திரத்தை புரூணெல் உருவாக்கினார்.

உடல் நலக்குறைவால் புரூணெல் கொஞ்சம் ஓய்வெடுக்க, அவரது பதினெட்டு வயது மகன் இசம்பார்ட் கிங்டம் புரூணெல் (Isambard kingdom Brunel) சுரங்கப் பணியின் மேற்பார்க்க முன் வந்தார். 1828இல் சுரங்கச் சுவர் பலமாக இல்லாததால், மேலோடும் நதியின் நீர் சுரங்கத்துக்குள்ளே பாய்ந்தது. சில பணியார்கள் இறந்தனர். இசம்பார்ட் எப்படியோ உயிர் தப்பினார்.
சுரங்க விசைக்கு (tunnel boring machine) கவசத்தை ஹென்றி மாட்ஸ்லே (Henry Maudslay) வடிவமைத்தார். சுரங்கம் தோண்டும்போதே அதற்குச் செங்கல்களால், சுவரும் கூரையும், சுமைத்தாங்கி தூண்களையும் அமைத்தனர். 1841இல் வெற்றிகரமாகச் சுரங்கத்தைக் கட்டி முடித்தார் மார்க் புரூணெல். ஸ்டீவென்ஸனின் ரயில் எஞ்ஜின் சாதனைகளுக்கு முன்னமே தேம்ஸ் சுரங்கம் திட்டம் பிறந்ததால், அப்போது ரயில்களைப் பற்றி அவர்கள் யோசிக்க வாய்ப்பேயில்லை. குதிரை வண்டிகளும் நடப்பவர்களும் பயணிக்கும் சுரங்கமாகவே இருந்தது. லண்டன் நகரம் அசுர வேகத்தில் வளர, 1850களிலேயே நிலம் விலையேறியது. லண்டன் நகரில் கட்டிய ரயில் பாதைகள் உள்ளூர் போக்குவரத்துக்குப் போதவில்லை.
1860களில் கிழக்கு லண்டன் ரயில் கம்பெனி, தேம்ஸ் சுரங்கத்தை இரண்டு லட்சம் பவுண்டுக்கு வாங்கி, புரூணெல் துளைத்த சுரங்கப் பாதைகளில் தண்டவாளங்களைப் பொருத்தி, நிலத்தடி ரயில் சேவை தொடங்கியது. இதுவே பிற்காலத்தில் லண்டன் மெட்ரோ என்று மாறியது. 1900களில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் சுரங்க ரயில் உருவாகி நகரப் போக்குவரத்து (மெட்ரோ Metro) சேவை தொடங்கின. அந்தச் சுரங்கங்களை, கப்பல் புழுவை போல் புரூணெல் வடிவமைத்த விசைகளே தோண்டின. தற்பொழுது, 2025இல் சென்னையிலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் மெட்ரோ சுரங்கத்தைத் தோண்டும் விசைகளுக்கு ஆதி விசை, மார்க் புரூணெலின் சுரங்கவிசை. கூவம் நதிக்கு அடியே, அடையாறு நதிக்கு அடியே தோண்டப்படும் சுரங்கத்துக்கு, முதலில் லண்டனில் தேம்ஸ் நதிக்கு அடியில் தோண்டிய மார்க் புரூணெலே வழிகாட்டி.
அவர் மகன் இசம்பார்ட் கிங்க்டம் புரூணெல் தந்தையை மிஞ்சிய மகனாக விளங்கினார்.
இரும்புப் படகு இரும்புக் கப்பல்
கடலில் பாறைகளில் மோதி கப்பல்கள் நாசமாகாமல் இருக்க, உலோகத் தகடுகளைப் பொருத்தி ஆங்கிலேயர்கள் 1770களிலேயே பரிசோதனைகள் செய்தனர். பீரங்கிகள் பொருந்திய போர் கப்பல்களின் வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்கவும் உலோகத் தகடுகள் உதவின. போர் கப்பல் மட்டுமல்ல, கடல் கொள்ளையர் கப்பல்களும் பீரங்கி பொருத்திக்கொண்டன. இன்று எதிரி நாட்டில் கலவரம் செய்பவர்களுக்கு நிதி, ஆயுதம், தகவல், பயிற்சி போன்ற உதவிகளைக் கொடுக்கும் பல அரசுகள் இருப்பது போல், அன்று ஒரு சில கடல்கொள்ளையருக்கு உதவி செய்த அரசுகள் இருந்தன.
1774 முதல் 1790 வரை அந்துவான் லவாய்சியே வேதியியலை புரட்டிப்போட்டு, புதிய அறிவியல் யுகத்தைத் தொடக்கி வைத்தார் என்று பார்த்தோம். இரும்புப் பட்டறைகளில் இரும்பைக் காய்ச்சியவர்கள், இரும்பு கார்பன் ஆக்சிஜன் இவையெல்லாம் தனிமம் என்று அறிந்த பின், வெவ்வேறு விதமாக இரும்பு செய்வதிலும் ஆராய்ச்சிகள் செய்தனர். 1804இல் ஹம்ஃப்ரீ டேவி மின்சாரத்தால் மின்பகுப்பால் (Electrolysis) சோடியம் கேல்சியம் பொடாசியம் மெக்னீசியம், போன்ற புதிய தனிமங்களைக் கண்டுபிடித்தார் என்றும் நாம் பார்த்தோம். அடுத்த பல ஆண்டுகளில் இதனால் உலோகவியலிலும் பல புதுமைகள் நடந்தன. அதிக கார்பன் கொண்ட காய்ச்சிய இரும்பை (cast iron) விட கொஞ்சம் குறைந்த கார்பனைக் கொண்ட பிழிந்த இரும்பு (wrought iron) வலுவானது, எளிதில் உடையாது, அதிகமாக கனம் தாங்கும் என்றெல்லாம் அறிந்தனர். இதுவே ஜார்ஜ் ஸ்டீவென்சனின் ரயில் வண்டி வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் பார்த்தோம். இதைப் போல் புதிதாய் தனிமம் என்று அடையாளமான மாங்கனீஸ்(Manganese), நிக்கல் (Nickel) போன்ற உலோகங்களோடு இரும்பைக் கலந்தால் துருப்பிடிக்காமல் பல வருடம் நீடிக்கும் ஸ்டீல் (steel எஃகு) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்தலம் எனும் வடமொழிச் சொல்லின் தமிழ் தற்சமம் தலம், அல்லது தளம்; கட்டடம் கோயில் அரண்மனை நிற்கும் இடத்தைக் குறிக்கும். ஜெர்மன் மொழியில் இச்சொல் ஸ்டாஃல் (stahl). ஒரு ஸ்தலத்தில் நிறுவப்படும் கட்டடம் உறுதியாக நிற்பதால் ஸ்டாஃல் என்ற சொல்லுக்கு ”உறுதியானது” என்ற பொருளும் அமைந்தது; உறுதியான திடமான இரும்பு ஜெர்மன் ருஷிய மொழிகளில் ஸ்டாஃல் என்றும், ஆங்கிலத்தில் ஸ்டீல் (steel) என்றும் பெயர்பெற்றது. இதனால் ருஷிய அதிபர் ஜோசஃப் ட்ஷுகாஷ்விலி (Joseph Dzhugashvili) ”இரும்பு மனிதன்”, அதாவது ”ஸ்டாலின்”(Stalin) என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டார். விசித்திரமாக ஜெர்மனியை ஒரு நாடாக இணைத்த பிரஷிய பிரதமர் பிஸ்மார்க் (Bismarck), ஜெர்மனியின் இரும்பு மனிதர் என்றே புகழ்பெற்றார்.
கப்பல்புழு மட்டுமல்ல, மற்ற கடல் வாழ் உயிரினங்கள், கப்பல்களின் அடிவாரத்தில் ஒட்டிக்கொள்ளும். அட்லாண்டிக் கடலில் இது பெரிய பிரச்னை. விட்டுவிட்டால் மரமெல்லாம் அரித்து கப்பல் நாசமாகிவிடும். இவற்றை அகற்ற கப்பலை மணலில் கரை ஏற்றுவது (careening) வழக்கம். கரையேற்றிய கப்பலை மீண்டும் கடலில் செலுத்த கயிறுகட்டி மீண்டும் இழுக்கவேண்டும். கடல்புழு கப்பலில் ஒட்டாமல் தடுக்க, செப்புத் தகடு கவசங்களைக் கப்பல்களில் 1750கள் முதல் சில கடல் வணிகர் பொருத்தினர். பின்னர் இரும்புத் தகடுகளைக் கவசமாய் பொருத்தினர். கப்பலைச் செய்ய நீளமான மரங்கள் கிடைப்பது அரிதாக, இரும்புக் கம்பிகளும் பயனுக்கு வந்தன. கயிறுக்கு மாற்றாக இரும்புச் சங்கிலிகளும் பயனுக்கு வந்தன.
இதோடு நிற்காமல், மரத்திற்குப் பதிலாக இரும்பிலேயே கப்பல்களைச் செய்யலாம் என்று எண்ணம் அக்காலத்தில் உதித்தது.
1821இல் கேப்டன் சார்லஸ் நேப்பியர் (Charles Napier) தூண்டலில் பொறியாளர் ஆரன் மேன்பி (Aaron Manby) முழுவதும் இரும்பிலேயே ஒரு படகைச் செய்தார். இப்படகுக்கு ஆரன் மேன்பி என்று அவர் பெயரையே சூட்டினார் நேப்பியர். இரும்பினால் செய்த படகு கரிவிசையும் பொருந்தியது.
1819இல் நியூ யார்க்கில் உருவாகிய ஒரு பாய்மரக் கப்பலை, கலபதி மோஸஸ் ராஜர்ஸ் (Captain Moses Rogers), விலைக்கு வாங்கி, அதில் 90 குதிரை சக்தியுடைய (90 hp) ஒரு நீராவி விசையைப் பொருத்தி, எஸ் எஸ் சவான்னா (SS Savannah) என்று பெயரிட்டார். இதற்கு சவான்னா ஸ்டீம்ஷிப் கம்பெனி பணம் கொடுத்து உதவியது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டும் முதல் கரிவிசைக் கப்பலைத் தான் செலுத்த வேண்டும் என்பது மோஸஸ் ராஜர்ஸின் விருப்பம். அமெரிக்காவின் சவான்னா நகரத்தில் இருந்து இங்கிலாந்தின் லிவர்பூல் துறைமுகம் வரை, கப்பலைச் செலுத்தினார். 29 நாள் பயணத்தில் பெரும்பான்மையாக பாய்மரம் விரித்து காற்றின் உந்துதலே கப்பலை இயக்கியது. காற்று மிகவும் மந்தமாகியபோது மட்டுமே கரிவிசை இயங்கி துடுப்புச்சக்கரத்தால் கப்பல் நகர்ந்தது. 29 நாளில் 80 மணி நேரம்தான் கரிவிசை இயங்கியது. பாய்மரக் கப்பலிலிருந்து பெரும் புகையைக் கண்ட இரு கப்பல்கள் சவான்னாவில் தீ விபத்து என்று எண்ணி உதவிக்கு வந்தன. கரிவிசை என்று கண்டபின் உதவ வந்த கப்பல் மாலுமிகள் அதன் பொறியியல் புதுமையை வியந்தனர்.

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 1825இல் ஜார்ஜ் ஸ்டீவென்சன் வெற்றிகரமாக தண்டவாளங்களில் ரயில் வண்டி இயக்கினார் என்று முன்பே பார்த்தோம். 1829இல் லிவர்பூல் மேன்சஸ்டர் (Liverpool – Manchester) நகரங்கள் இடையே தண்டவாளங்களில் இயக்கி ரயில் யுகத்தைத் தொடங்கினார் என்றும் பார்த்தோம். ரயில் வண்டிகள் இயங்கும் ரயில் நிலையங்களுக்கும், நதியிலும் ஏரியிலும் செல்லும் கரிவிசைப் படகுகளுக்கும் எப்படியாவது கரியை அல்லது விறகைக் கொண்டுவரலாம். ஆனால் கடலில் செல்லும் கப்பல்கள் பயணத்திற்குத் தேவையான கரி முழுவதையும் சுமந்து செல்லவேண்டும்.
இதனால் ஆரன் மான்பி போன்று அருகருகே உள்ள சிறு கடலைத் தாண்டும் கப்பல்களோ, கரையோரமாக நகரங்களுக்கிடையாகவோ கரிவிசைக் கப்பல் இயக்கலாம். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் அளவுக்குப் பெரிய கப்பலைக் கட்டினாலும், சரக்கு எதுவும் ஏற்றிச்செல்லமுடியாமல், கரி மட்டுமே கொண்டு போகும் நிலை நிலவியது. அப்படிச் செய்தால் மற்ற சரக்கு ஏதும் வைக்கக் கப்பலில் இடமே இருக்காது. வணிகம் செய்யமுடியாத கப்பலை யார் கட்டுவார்?
ஆதலால் அடுத்த இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பாய்மரக் கப்பல்களே பெருங்கடல் பயணங்களை மேற்கொண்டன. தற்காலிக உதவிக்குச் சில பாய்மர கப்பல்களில் கரிவிசைப் பொருத்தப்பட்டன. உரை இடையிட்ட பாட்டுடை செய்யுளை போல், பாய்மரம் பொருந்திய கரிவிசைக் கப்பல் எனலாம்.
இரட்டை இலை
காஞ்சிபுரத்திலிருந்து சீன தேசம் சென்ற பல்லவ இளவரசர் போதிதர்மர் சீனருக்குத் தியானம் செய்யும் முறைகளை கற்பித்தாராம். தியானம், தியான் என்றும், பின்னர் ஸென் (zen) என்றும் மறுவி சீன மொழியில் விளங்கியது. தியானமும் பௌத்தம் கற்பிக்க ஷாவோலின் கோவிலை நிறுவினார். தங்களைப் பாதுகாக்க குங்ஃபூ (KungFu) எனும் ஆயுதமற்ற பாதுகாப்பு பயிற்சியும் கற்றுக்கொடுத்தார். ஒருமுறை தியானம் செய்யும்போது தன்னையறியாமல் களைப்பில் தூங்கிவிட்டார். இதைப் பெரும் அவமானமாகக் கருதி தன் கண்ணிமைகளைப் பிய்த்து எரிந்தார். அவ்விடத்தில் ஒரு செடி வளர்ந்தது. அச்செடியின் இலைகளைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு பருகினால், களைப்பு கலைந்து தூக்கம் கலையாமல் பல நாழிகை விழித்திருக்கலாம். இப்படியாக போதிதர்மர் சீன மக்களுக்குத் தேநீரை அறிமுகம் செய்தார் என்பது சீனத்திலும் ஜப்பானிலும் புகழ் பெற்ற புராணம்.
சில தொல்லியல் ஆராய்சிகளும், மிகப் பழைய சில சீனப் புத்தகங்களும் பல நூறு ஆண்டுகளாக சீனதேசத்தில் தேநீர் பருகும் பழக்கம் நிலவியதைக் குறிக்கின்றன. மன்னர்களும் செல்வந்தர்ளும் அதைப் பருகி வந்தனர். ஆனால் அது போதிதர்மர் காலத்தில் பரவலாகி மக்களும் தேநீர் பருகும் பழக்கம் பரவியிருக்கலாம்.
1600களில் சீனத்திற்கு முதலில் சென்ற போர்த்துகீசியர்கள், தேநீரை பருகி சிலாகித்தனர். போர்துகீசிய இளவரசி கேதரீன் (Catherine of Braganza) இங்கிலாந்தின் மன்னன் இரண்டாம் சார்ல்சை 1662இல் மணந்தார். அவளுடைய வரதட்சணையாக, அன்று போர்த்துகீசியர் வசம் இருந்த பம்பாய் நகரம் இங்கிலாந்திற்குத் தாரை வார்க்கப்பட்டது. இதன் பின்பு ராணி கேத்தரீன் விரும்பிய தேனீர் அரண்மனையிலும் செல்வந்தர்களிடமும் பின்னர் சமூகத்திலும் பரவியது.
1689இல் சூரத் போன்ற நகரங்களில் இந்தியர்கள் மருந்தாக தேனீர் பருகியதை ஆங்கிலேயர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் தேநீர் அருந்தும் வழக்கம் அக்காலத்தில் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறவில்லை.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியும் சீன தேசம் சென்று தேயிலை வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களிடமோ மற்ற ஐரோப்பியரிடமோ வெள்ளி, தங்கம் தவிர எந்தப் பொருளையும் சீனர்கள் வாங்க விரும்பவில்லை. இதனால் இங்கிலாந்தின் தேயிலை இறக்குமதிக்குப் பெரும் செலவு செய்தது. தேயிலைக்கு வரி ஏற்றியதால் தான் 1776இல் அமெரிக்க காலனிகள் புரட்சி செய்து, போர் நடத்தி சுதந்திரம் பெற்று தனி நாடு நிறுவின. இது வரலாறு. சீனாவிலிருந்து இங்கிலாந்து நெடுந்தூரம் என்பதால் வேகமாக இயங்கும் ”டீ கிளிப்பர்” (tea clipper) கப்பல்களை ஈடுபடுத்தினர். இவை பாய்மர கப்பல்கள்தான், கரிவிசை கப்பல்கள் இல்லை.
கிளிப்பர் வகை கப்பல்கள் வேகமாகச் செல்லவே 1790களில் உருவாக்கப்பட்டவை. மற்ற கப்பல்களைவிடச் சரக்கு கிடங்கின் கொள்ளளவு குறைவானது. இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் நடந்த போர்களில் 1812 வரை பயன்பட்டன.
இதைத் தவிர ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து அமெரிக்க வயல்களில் விவசாயம் செய்யவும் பல வித கப்பல்கள், குறிப்பாக கிளிப்பர் கப்பல்கள் பயன்பட்டன. அது தனிக் கதை. இதே போல் குற்றவாளிகளை (வெள்ளையர்கள்) சிறைகளிலிருந்து விடுதலையான பின் மீண்டும் அதே குற்றம் செய்கிறார்கள் என்று உணர்ந்த ஆங்கில அரசு, இவர்களை நாடுகடத்தத் தொடங்கியது. முதலில் அமெரிக்காவிற்கும் பிறகு ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பப்பட்டனர்.
ஐரோப்பாவில் உருவான பல வித மதுபானங்களையும், அமெரிக்கக் கண்டத்தில் வளர்ந்த புகையிலையையும், கம்பெனிகளும் கப்பல்களும் உலகெல்லாம் பரப்பின.
இந்தியாவிலிருந்து இதே போல் பஞ்சு துணி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வாங்கிவந்த இங்கிலாந்து, 1757இல் தமிழகத்தையும் வங்காளத்தையும் ராபர்ட் கிளைவ் கைபற்றி ஆட்சி செய்யத் தொடங்கிய பின், இந்தியாவின் வரி வருமானத்தினால் ஈடுகட்டியது. ஆனால் சீனாவில் நிலத்தை அபகரிக்க முடியவில்லை.
அதனால் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு அபின் (opium) விற்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அபின் இன்று ஒரு போதைப் பொருளாக மட்டும் கருதப்படுகிறது. ஆனால் அது ஆயிரம் ஆயிரம் வருடங்களாகக் கடுமையான வலிகளைப் போக்கும் மருந்தாகப் பயன்பட்டது.
அபின் மற்றுமல்ல, அதைச் சார்ந்த பல இலைகளும் மூலிகைகளும் நெஞ்சு வலி, பிரசவ வலி, கை கால் முறிவு, பலத்த காயம், அறுவை சிக்கிச்சை போன்ற கடுமையான வலிகளுக்கு எகிப்திலும் பாரசீகத்திலும் பாரதத்திலும் பயன்பட்டன. கிரேக்க காலத்திலேயே ஐரோப்பாவிற்கும் பரவியது. பானங்களில் கலந்து அருந்தலாம், உணவில் கலந்து உண்ணலாம், நீரில் கரைத்து ஆவி பிடிக்கலாம், எரித்துப் புகையைச் சுவாசிக்கலம். சீனாவில், தேனீரில் கலந்தும் பருகினார்கள். விருந்தோம்பலில் கௌரவமாக செல்வந்தர்கள் வழங்கும் பொருளாக நிலவியது. 1827இல் மெர்க் எனும் ஜெர்மானிய கம்பெனி, அபினிலிருந்து மார்ஃபீன் Morphine எனும் வலிகுறைக்கும் மருந்தைச் சுரந்து, மருந்துக்கடைகளில் விற்றது.
சீனத் தேனீர் ஐரோப்பிய பாமர மக்களுக்கும் பழக்கமாக்கியது போல், இந்தியாவில் விளைந்த அபினை ஆங்கிலேயர் சீனாவிற்கு ஏற்றுமதி செய்து சீனப் பாமர மக்களுக்கும் பழக்கமாக்கினர். டீ கிளிப்பர் கப்பல்கள் இதற்கும் வசதியாக இருந்தது. சில ஆண்டுகளில் சீனத்தின் முதலில் துறைமுக நகரங்களிலும், பின்னர் ஊள்ளூரிலும், மக்களிடையே அபின் போதைப் பழக்கம் வளர்வதை கண்ட சீன அரசு, அதை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது. பதினைந்து லட்சம் கிலோ அபின் ஆங்கிலேய கப்பலகளிடமிருந்து பிடுங்கி, நாடறிய தீயிட்டுக் கொளுத்தியது சீன அரசு.
1750களில் இங்கிலாந்து அரசு கடல்வணிக கட்டுப்பாடு சட்டங்களை (Navigation Acts) இயற்றியது. இதன் படி, இங்கிலாந்தின் ஆட்சியில் இருக்கும் எந்த நாட்டு மக்களும் இங்கிலாந்திற்குச் சரக்கு அனுப்பினால், ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான கப்பலில் மட்டும்தான் அனுப்ப அனுமதி. இங்கிலாந்தின் ஆட்சிக்கு அடியில் வந்த அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பின்னர் மதராஸ் ராஜதானி, வங்காள ராஜதானி, யாவும் வேறு எந்த நாட்டுடனும் இங்கிலாந்தின் அனுமதியின்றி வணிகமே செய்ய முடியாது. குறிப்பாக, கரும்பு, சக்கரை, தேயிலை, பருத்தி, போன்ற சில பொருட்களுக்கு வணிகம் செய்யத் தடை. சட்டபூர்வமாக ராணுவ பலத்தால் உலகெங்கும் சுரண்டலுக்கான சட்டங்கள் இவை.
1806இல் நெப்போலியன் ஐரோப்பாவில் பெரும் நிலங்களை வென்ற பின், இங்கிலாந்தின் இந்தக் கட்டுப்பாடுகளையும் சுரண்டலையும் ஒழிக்க பெர்லின் சாசனம்(Berlin Decree), மிலான் சாசனம் (Milan Decree) போன்ற சட்டங்களை இயற்றினான். இந்தச் சட்டங்கள் மூலம் இங்கிலாந்து குடிமகன்களோ கம்பெனிகளோ ஐரோப்பாவில் எந்த வணிகமும் செய்யத் தடை. 1813இல் தங்கள் சுரண்டலுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் தடையாய் இருந்த நெப்போலியனின் தடைகளை வணிக் ரீதியாக வீழ்த்த புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது ஆங்கிலேய அரசு. குறிப்பாக, கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக ஏகாதிபத்தியத்தை (monopoly) பெரிதாகக் குறைத்தது. தேயிலை, அபின் ஆகிய இரண்டு பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை மற்ற கம்பெனிகளும் வியாபாரம் செய்யலாம் என்று அறிவித்தது.
நெப்போலியனால் சரிந்த சுரண்டலை ஈடுகட்ட, வங்காளத்திலும் பீகாரிலும், நெல் விளைந்த கங்கை கரையில், நெல் விளைச்சலைத் தடுத்து அபின் விளைச்சலைக் கட்டாயமாக கம்பெனியும் ஆங்கிலேய அரசும் அறிமுகம் செய்தன. கங்கை கரையின் அபின் பண்டம் சீனத்து தேயிலைக்கு மாறு கொண்டார். நெல் விளைச்சல் குறைய, செயற்கை பஞ்சம் உருவாக, லட்சக்கணக்கில் அப்பகுதி மக்கள் மாண்டனர்.
அபின் வணிகத்தில் மற்ற நாடுகளும் சும்மா இருக்கவில்லை. துருக்கியில் விளைந்த அபினை சீனத்தில் விற்க அமெரிக்க அரசாங்கமும் கம்பெனிகளும் முன்வந்தன. தேயிலை, பீங்கான், பட்டுத்துணி விற்று தங்கம், வெள்ளியைச் சம்பாதித்த சீனர்கள், பெட்டி பெட்டியாய் தங்கம், வெள்ளி கொடுத்து அபின் வாங்கினர்.
1815இல் நெப்போலியன் தோற்றபின் ஆங்கிலேய வேதாளம் மீண்டும் அதிகார ஏகாதிபத்திய முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. முருங்கை தோப்பு ஒன்று உருவாக்கி வேதாள படையே அகோர தாண்டவம் ஆடியது. அபின் வணிகம் இப்போதுதான் மிகவும் அதிகரித்து, சீன அரசு தீயிட்டு 1839இல் கொளுத்தும் நிகழ்வு அரங்கேறியது. இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட அபினை உங்கள் வணிகர்கள் எப்படிக் கப்பல் கப்பலாக எங்கள் நாட்டில் விற்கலாம் என்று விக்டோரியா ராணிக்கு சீன அரசர் கடிதம் எழுதினார். ராணியிருந்தாலும் ஜனநாயகமாக இங்கிலாந்து அரசு இதை செய்தது என்று அவர் உணரவில்லை போலும்.
சீன தேசம் அபின் தடை செய்ததை எதிர்த்து, இங்கிலாந்திலும் பல குரல்கள் எழும்பின. எதிர்கட்சிகள் அரசாங்கத்தைக் கண்டித்தன. ஆனால் சீனர்கள் அபின் தடை செய்யும் பெயரில் பல அக்கிரமங்கள் செய்தனர் என்று குற்றம் சாட்டி, ஆங்கிலேயர் சீனத்தில் பல போர்களை நடத்தினார்கள். டிப்பு சுல்தானையும், மராட்டியரையும், நெப்போலியனையும் வென்று, கரிவிசைக் கப்பல்களையும், பல வித பீரங்கிகளையும், புதுப்புது துப்பாக்கிகளையும் உருவாக்கிய, தொழில் புரட்சியால் அசுர வளர்ச்சி கண்ட ஆங்கிலேயர் சீனர்களை எளிமையாக வென்றனர். தங்களுக்குச் சாதகமான ஒப்பந்தங்களை மராட்டியருடனும் மைசூர் அரசரடனும் அமைத்துக்கொண்டது போல் சீன அரசிடமும் அமைத்தனர்.
இதற்கிடையே இங்கிலாந்தில் ரயில் யுகம் அமோகமாக அரங்கேறியது.
References
1 “A Short History of Science and Technology upto 1900” by TK Derry and Trevor Williams
2 “Transport Revolutions” by Richard Gilbert and Anthony Perl
3 “Symngton and the Steamboat”, BEG Clark
4 “Isambard Kingdom Brunel” – BBC TV episode of 100 Greatest Britons

