1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அவரது கணுக்கால் தண்டவாளத்திற்கும், ஸ்லீப்பர் கட்டைக்கும் இடையில் சிக்கி, கணுக்கால் எலும்பு முறிந்து, கால் நடக்க இயலாமல் போனது. நல்லவேளையாக அவரது நண்பர்கள் சிலர், அருந்தவசெல்வன் போன்றோர் ரயிலடியில் இருந்ததால், உடனே அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இருக்க வேண்டியதாயிற்று. காரணம், தகடுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவுகளைச் சரி செய்யும் முறை அப்போதுதான் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் வந்திருந்தது. இவருக்கோ கணுக்கால் எலும்புகள் நொறுங்கி இருந்தன. புதிய முறை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவர்கள் குறைவு. எனவே சிகிச்சைக் காலம் நீண்டது. கிட்டத்தட்ட மே மாதம்தான் அவர் வீடு திரும்பினார். காலில் கட்டுடன், ஜூனில் பணிக்கு வரத் தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் மாவுக்கட்டு விலக்கப்பட்டு கிரீப் எனப்படும் துணிக்கட்டுடன் நடமாடிக் கொண்டிருந்தார். ஆயினும், முழு ஆரோக்கியத்துடனோ, நடக்கக்கூடிய நிலையிலோ அவர் இருந்தார் என்று சொல்ல முடியாது. சற்று விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.
மதம் கொண்ட யானையின் அருகில் சென்று சிகிச்சை அளிப்பது எந்த அளவிற்கு உசிதம் என்பது கேள்விக்குறிதான். அசம்பாவிதம் இல்லாமல் செயல்பட முடியுமா என்பதும் சொல்ல முடியாத நிலை. ஆயினும், அதனைத் தன்னுடைய தலையாயக் கடமை என்றெண்ணி, திருச்சிக்குக் கிளம்பினார். இதுதான் தொழிலை ஊதியத்திற்காகச் செய்பவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு!
மற்றொரு முக்கியமான விஷயம், அந்தக் காலகட்டத்தில், துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தும் முறை இல்லை. எனவே, யானையை நெருங்காமல் தொலைவிலிருந்து பாதுகாப்பாக மயக்க மருந்து செலுத்த முடியாது. கட்டாயம் சற்றேனும் அருகில் சென்றுதான் ஆக வேண்டும். அவரது கால் இருந்த நிலையில், அது எவ்வளவு ஆபத்தானது என்று நான் சொல்லத் தேவையில்லை. யானை வெகுண்டு திரும்பினால், இவரால் ஓட முடியுமா? ஆயினும், அவர் மாலையில் செய்தியும் பணிக்கட்டளையும் கிடைத்ததும் புறப்பட்டு விட்டார், திருச்சிக்கு. அப்போது நடைமுறையில் இருந்த ஊதுகுழல் (புளோ பைப்) மற்றும் 3 டோஸ் மயக்க மருந்துகளுடன்.
அந்தக் காலகட்டத்தில் காட்டு மிருகங்களுக்கு மயக்க மருந்து பயன்பாடு டாக்டர் கே அவர்களால்தான் தொடங்கப்பட்டது. அதுவரை ஊதுகுழலால்தான் மயக்க மருந்து செலுத்தப்படும். ஏனெனில், காட்சிச் சாலையில் இருக்கும் விலங்குகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும்தான் கால்நடை மருத்துவர்கள் இந்த முறையில் மயக்க மருந்து தருவர். காட்டு விலங்குகளுக்கு மயக்க மருந்து தந்து பிடிப்பதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ யாரும் அறியாத ஒன்று.
அன்றைய நடைமுறைப்படி, இந்த மயக்க மருந்தை வாங்குவதற்குப் பெரும் பாடு பட வேண்டும். மாவட்ட வன அதிகாரி சிபாரிசு செய்து அரசுக் கிடங்கில் மருந்தாளுநர் பரிந்துரைத்தால்தான் ஒரு டோஸ் மருந்து கிடைக்கும். அந்த அளவிற்குக் கட்டுப்பாடுகள். சிவப்பு பட்டை நடைமுறைகள். இவற்றுக்கிடையில், அந்த 3 டோஸ் மருந்திலேயே காரியத்தை முடிக்க வேண்டும். இல்லையேல், மறுபடி இந்த நடைமுறையை முதலில் இருந்து திரும்பத் தொடங்க வேண்டும். அதற்கு மேலும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகள் நிறைந்த காலத்தில் அவர் பணியாற்றியதே ஒரு பெரும் சவால்தான். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல், விலங்குகளின் நலனுக்காக அவர் செயல்பட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இன்றுபோல எல்லா வசதிகளுடன் (போக்குவரத்து, மருந்துகள், துப்பாக்கி) ஒரு படையுடன் (!) சென்று ஒரு விலங்கை மயக்கமடைய (டார்ட்) செய்வதுபோல் அல்ல அன்று!
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தபோது, ஏறக்குறைய இரவு ஒரு மணி. அதாவது அடுத்த நாள் புலர்காலை. டாக்டர் கே அந்த இடத்தையும் சூழலையும் உன்னிப்பாக நோக்கினார். யானை எவ்வாறு நடந்து கொள்கிறது என்று தாற்காலிகத் தடுப்புகளுக்கு வெளியே நின்று அவதானித்தார். அது ஒரு திறந்த வாசல் கொண்ட தென்னந்தோப்பு. வாயிலின் எதிர்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் உயரமான மண்கரை. திறந்த வாயில் தற்போது கட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுவிட்டது; அந்தத் தடுப்பை ஒட்டி வசந்த மண்டபத்தின் மதில் சுமார் அரை கிலோமீட்டர் நீண்டு கிடந்தது. மதிலிலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் யானையைக் கட்டும் மேடை இருந்தது. தடுப்பின் மற்றொரு முனையில் அஹோபில மடத்தின் ஒரு சிறிய கோவிலும் மண்டபமும். மற்றொரு புறம் நந்தவனமும் அடுத்த தெருவில் உள்ள வீடுகளின் புழக்கடை சுவர்களும். தோப்பினுள் யானை தனியாக, சங்கிலி அனுமதிக்கும் அளவு சுற்றி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் அருகே (சுமார் 20 அடி தூரம் தொலைவில்) வந்து சற்று நிற்பதை ஒரு சடங்காகச் செய்து கொண்டிருந்தது. சுற்றிலும், முன்பே சொன்னது போல, விளையாட்டு மைதானங்களில் பொருத்தும் பெரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு அந்தத் தோப்பைப் பிரகாசமாகப் பகல் போல வைத்திருந்தன.
அங்கிருந்த பாகன்களிடம் சற்று அளவளாவினார். யாரெல்லாம் இந்த யானையைப் பிடிக்க முடியும் என்று ஆழம் பார்த்தார். அவர்களது மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். யாரும் யானை அருகில் போகத் தயாரில்லை என்று அறிந்தார். யானைகளை மிகச் சாதுரியமாகக் கையாளும் பல பழங்குடிப் பாகன்களிடம் பழகிய அவருக்கு இந்தக் கோவில் யானைகளின் பாகன்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர். கோழிக்கமுத்தியிலும் முதுமலையிலும் உள்ள பழங்குடிப் பாகன்கள் யானையை அவர்களது வீட்டு அங்கத்தினர்போல வைத்திருப்பர். அந்த முகாம்களுக்குப் போனவர்களுக்குத் தெரியும், அந்தப் பாசப் பிணைப்பு. ஆனால் இங்கு நிலைமை சற்று வேறு விதமாக இருந்ததை உணர்ந்தார். அங்கு கையாளும் முறைகள் இங்கு செல்லாது என்று அறிந்தார். முற்றிலும் அவரை நம்பி இந்தச் செயல்பாடு உள்ளது என்று உணர்ந்தார். ஆகவே, இவர்களது பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அறிய அவருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. மேலும், அவர் கையாளப்போகும் நடைமுறை, யானை மயக்கம் அடையும் வரை அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதனால், தெளிவாகத் திட்டமிட்டு காரியத்தில் இறங்கத் தீர்மானித்தார். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
‘இந்த வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் மேலே ஏறுவதற்கு ஏதாவது படி அல்லது வழி இருக்கிறதா?’ என்று கேட்டார். உடனே மடத்துக்காரர்கள், ‘வழி இருக்கிறது, படிகள் வழியாக மேலே போகலாம்’ என்றனர். டாக்டர் கே, ஊதுகுழலும் மயக்க மருந்து குப்பிகளும் அடங்கிய தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த வழியைக் காட்டச் சொன்னார்.
மெதுவாக, கிரீப் கட்டு போட்ட காலுடன், சிரமப்பட்டு மற்றவர்கள் உதவியுடன் மதில் மேல் ஏறி, அந்தக் காலுக்குப் பெரும் அழுத்தம் தராதவாறு வசதியான ஓர் அமரும் நிலையைத் தெர்ந்தெடுத்தார். ஏனெனில், அப்போதுதான் முழு பலத்தில், ஊதுகுழலில் மருந்தை வைத்துச் செலுத்த முடியும். மருத்து செலுத்துவதற்கு நல்ல சீரான சமநிலையும் கிடைக்கும். ஊதும் போது நிலை தடுமாறாமலும் இருக்க முடியும். அப்படியே அமர்ந்துகொண்டு, ஒருமணி நேரம் யானையின் நடையுடை பாவனைகளைக் கவனித்தார். மதிலின் அருகில் வந்தால் சில நிமிடங்கள் நிற்பதை யானை கிருஷ்ணன் வழக்கமாகக் கொண்டிருப்பதை அனுமானித்தார். அந்த நிலையில் யானைக்கு ஊதுகுழல் வழியே மயக்க ஊசியைப் போடுவது நல்லது என்று சரியாக அனுமானித்தார். அதற்கேற்ப மருந்தைக் குழலில் நிரப்பினார். யானை மறுமுறை மதிலருகே வரும் நேரத்திற்குத் தயாராக இருந்தார். பார்ப்பவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவ்வளவு பெரிய யானையை ஊதுகுழலால் மயக்கம் அடையச் செய்ய முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தனர். யானை மற்றொரு முறை தனது சுற்றை முடித்து மதிலருகே வந்து நின்றது. ஆச்சரியகரமாக, மக்கள் டாக்டர் கே. கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பெரும் குழப்பம் விளைவிக்காமலும், சத்தம் போடாமலும் அமைதியாக இந்த வித்தியாசமான நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
யானை கிருஷ்ணன் வந்து மதிலுக்குச் சுமார் 20 அடி தொலைவில், சற்றே பக்கவாட்டில், நெற்றியைக் காட்டியவாறு நின்றது. அப்போது அதன் நெற்றி தெளிவாக விளக்கொளியில் தெரிந்தது. மருத்துவர் கே, முழுப் பலத்தையும் பிரயோகித்து மயக்க ஊசியைக் குறி வைத்து ஊதினார். சேஷாத்திரி சொன்னதுபோல, ‘ஊப்ப்’ என்ற அந்தச் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. மயக்க ஊசி, மருந்துடன் சரியாக நெற்றிப் பொட்டில் தைத்தது. யானை சற்று உதறி ஆடியது. ஆனால் பெரிதாக எந்த அசைவையும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் யானை தள்ளாடி நடந்தது. டாக்டர் கே, உடனே அங்கிருந்த மாவுத்தர்களை உள்ளே இறங்கி யானையைச் சங்கிலி கொண்டு பிணைக்குமாறு கூறினார். அதற்காகக் காத்துக் கொண்டிருந்ததுபோல நான்கைந்து பாகன்கள் உள்ளே தடுப்பைத் தாண்டி ஓடிச் சென்றனர். டாக்டர் கே.வும் மெதுவாக மதிலிலிருந்து இறங்கி, மற்றவர்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்றார்.
ஏனெனில், யானை ஆஜானுபாகுவான ஒரு கொம்பன். சுமார் 10 அடி உயரமும், நல்ல வலுவான உடலும், நீண்ட கொம்புகளும் உடைய முரட்டு யானை. சில நேரம் இந்த ஒரு டோஸ் போதாமல் போனால், மாவுத்தர்களுக்குப் பிரச்சினை ஆகலாம். அதனால் இன்னொரு டோஸையும் எடுத்துக் கொண்டு டாக்டர் கே பின் தொடர்ந்தார். நினைத்ததுபோல யானை முற்றிலும் அடங்கவில்லை. பாகன்கள் சற்றுத் தொலைவிலேயே நின்று விட்டனர். அதற்குள் டாக்டர் கே யானையின் பின்னால் சற்றுத் தொலைவில் பாதுகாப்பாக நின்று இரண்டாவது ஊசியை அதன் பின் பகுதியில் செலுத்தினார். மிக வேகமாக, அதே நேரம் சரியானபடி செயல்பட்டு இரண்டு டோஸ் மருந்தையும் டாக்டர் கே செலுத்தியிருந்தார். யானை மேலும் தள்ளாடத் தொடங்கியது. பின் மயங்கி நின்றது. அதன் பின், எளிதாக யானையின் அருகே பாகன்கள் செல்ல முடிந்தது. பயமின்றிப் பணி செய்யத் தைரியம் கொண்டனர்.
ஒரு யானையை, மயக்கத்தில் நின்ற நிலையில் வைக்க மிகத் தீவிரமான அளவு மருந்தைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஜைலோ சீன் போன்ற மருந்து, யானையின் செயல்களைக் கட்டுப்படுத்தி நின்ற நிலையிலேயே வைக்கும் தன்மை வாய்ந்தது (குறைந்த அளவுகளில்). யானையை இடம் மாற்ற அல்லது வேறு சில சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் கூடுதலான அளவில் மருந்தை உபயோகிக்க நேரிடும். ஏனெனில், அப்போதுதான் நினைத்ததுபோல காரியத்தைச் செய்ய இயலும். அதற்கான நேரமும் கிடைக்கும். அதன் பின்னர், யானையை நிலைக்குக் கொண்டு வர மற்றொரு மருந்தைப் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கு ரிவைவல் டோஸ் என்று பெயர். இங்கு, அதுபோலச் செய்ய நேரவில்லை என்று அனுமானிக்கிறேன்.
காரணம், இங்கு நோக்கம் யானையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான். வெகு நேரம் சிகிச்சை அளிப்பது அல்ல. எனவே டாக்டர் கே, யானையை அவர்கள் சங்கிலி கொண்டு பிணைக்கும் வரை, சிறிய கால அவகாசத்திற்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்து இருப்பார் என்று தோன்றுகிறது. நமக்கு எப்படி மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை முடிந்ததும் சில மணி நேரங்களில் நாம் மீண்டும் சுய நினைவு அடைகிறோமோ, அதுபோல. இதை நான் டாக்டர் கே-யுடன் 25 ஆண்டுகள் கால்நடை ஆய்வாளராகப் பணி புரிந்த மணி என்பவரிடமும், டாக்டர் மனோகரனிடமும் (மற்றொரு சிறந்த கால்நடை வைத்தியர்) ஊர்ஜிதம் செய்து கொண்டேன். எப்படியாயினும் பாகன்கள் கிருஷ்ணனை முன்கால், பின்கால் என நான்கு கால்களையும் சங்கிலி கொண்டு பிணைத்துவிட்டனர். இனி, யானை தன் இஷ்டம்போல எங்கும் செல்ல முடியாது. இந்தக் கிருஷ்ணன், அதன் பின் சில வருடங்கள் கழித்து திருவள்ளூர் கோவிலுக்கு அனுப்பப்பட்டது என்பது வேறு கதை.
இந்த நடவடிக்கை முடிவு பெறும்போது விடிந்துவிட்டது. அன்று அங்கிருந்தவர்கள் மட்டும்தான், இது எப்படிப்பட்ட ஒரு தீரச் செயல் என்று அறிவார்கள். ஒரு முரட்டுக் கொம்பனை, ஊதுகுழல் கொண்டு மயக்க மருந்து செலுத்தி மயக்கம் அடையச் செய்வது எவ்வளவு சிரமமான செயல் என்பதை இந்தத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரு டோஸ் மருந்து வீண் ஆனாலோ, அல்லது குறி தவறினாலோ மொத்த முயற்சியும் பயனில்லாமல் போகும். ஊதும் திறன், குறி பார்த்தல், மருந்தின் அளவு எனப் பல செயல்பாடுகள் இங்கு கச்சிதமாக இருக்க வேண்டும்.
டாக்டர் கே ஊதுகுழல் மூலம் சுடுவதை ஒரு பயிற்சியாகச் செய்வார் என்று அவரது மகன் ஸ்ரீதர் சொல்வதுண்டு. வீட்டிலேயே ஒரு குறி அட்டை வைத்து பல்வேறு தூரங்களில் நின்று ஊதி, குறி தவறாமல் இருக்கப் பயிற்சி செய்வார் என்று விவரிப்பார். அது தன் தொழிலில் அவருக்கிருந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது. அதேபோல நான் சந்தித்த பலரும், யானையை (அல்லது எந்த மிருகத்தையும்) பார்த்த மாத்திரத்தில், அதற்கு ஏற்ற மயக்க மருந்து அளவு என்ன என்பதை உடனே கணிக்க வல்லவர் டாக்டர் கே என்ற விஷயத்தை வியப்புடன் கூறுவர். அதற்கு அடித்தளம், மிருகத்தின் உடல் எடையும் உருவமும்தான். அதனால்தான், டாக்டர் கே-வுக்கு வனத்துறையில் மற்றவர் பொறாமைப்படத்தக்க அளவில் செல்வாக்கு மட்டுமல்ல, பெரும் மரியாதையும் இருந்தது. ஆனால் அதை என்றும் அவர் தவறாகப் பயன்படுத்தியதில்லை!
இங்கு நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்- டாக்டர் கே-இன் நிலைமையைத் துல்லியமாகக் கணிக்கும் திறன்; தன் பலவீனங்களை அறிந்து செயல்படுதல்; கூட நின்று செயல்படுபவர்களை அனுசரித்து திட்டமிடுதல்; கள நிலவரத்திற்கு ஏற்ப தன் திட்டத்தை வகுப்பது; புது யுக்திகளைக் கையாளுவது; எந்த நேரத்திலும் நிதானத்தை இழக்காதது எனப் பல நிர்வாகப் பாடங்களை இந்த நிகழ்விலிருந்து நாம் அறியலாம்.
ஜீயருக்கு பரம சந்தோஷம், யானையை உயிருடன் மீட்டதில். மக்களும் நிறைந்த மகிழ்வடைந்தனர். கோவில் யானையைச் சுட்டுக் கொல்லாமல் காப்பாற்றியதற்கு. என்ன, பல வருடங்கள் கழிந்துவிட்டதால் பல நேரடிச் சாட்சிகள் உயிரோடு இல்லை. அதிர்ஷ்டவசமாக பரோடா வங்கி ஊழியர் சேஷாத்திரியும் (உள்ளூர் வாசி), பழைய பாகன் ஸ்ரீதரன் நாயரும், பாகன் ராஜேஷும் கிடைத்தனர். இவர்கள் கிடைக்க நண்பர் மாலோலன் பெரிதும் உதவினார். சில சந்தேகங்களை நண்பர்கள் மணியும் டாக்டர் மனோகரனும் தீர்த்து வைத்தனர். அதனால், இந்த நிகழ்வை மீட்டெடுக்க இயன்றது.
வருத்தமான விஷயம், அன்று எந்த நாளேடோ, பத்திரிக்கையோ இந்தச் சம்பவத்தை இப்போது நான் சொன்னது போல விவரமாக எழுதவில்லை. பெட்டிச் செய்திபோல வந்ததாகத் தகவல். அன்றைய அரசாங்கம் அல்லது வனத்துறை இதை ஒரு வீரச் செயல் என்று கருதவில்லை. எப்படி வ.உ.சி.யின் தியாகம் இன்று அறியப்படாமல் போனதோ, அதேபோல இந்த நிகழ்வும் மறக்கப்பட்டுவிட்டது. இதை மீட்டெடுத்ததில், எனக்குப் பெரும் நிறைவும் மகிழ்ச்சியும். அதைவிட மகிழ்ச்சி, உண்மையான அர்ப்பணிப்பு, தொழில் பக்தி, நேர்த்தி, ஜீவகாருண்யம், பக்கவாட்டுச் சிந்தனை, திட்டமிடல், தன்னலம் அற்ற சேவை, செயல்பாடு போன்ற சொற்களின் சரியான அர்த்தத்தை உணர வைக்க இயன்றதுதான்!
(தொடரும்)
Dear Chandrasekharan what you are written in this episode is absolutely correct Iam recollecting once again this incident
Thanks a lot Mani ji