ஏனென்றால் வரலாறு என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்படும் மற்றுமொரு துறை அல்ல. அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி.
0
ஒரு வகுப்பறை. கரும்பலகையில் உலக வரலாறு என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மாணவன் ஆசிரியரை நெருங்கி வந்து, அண்ணாந்து பார்த்துப் பரிதாபத்தோடும் வருத்தத்தோடும் கேட்கிறான். ‘அதெப்படி, எனக்கு ஆர்வமில்லாத விஷயங்களாகப் பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுக்கிறீர்கள்?’ அந்த ஆசிரியர் திகைத்து நிற்கிறார். இப்படியொரு கேலிச் சித்திரத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.
வரலாறு குறித்து நிலவும் பொதுக்கருத்து, அது ஓர் அலுப்பூட்டும் தலைப்பு என்பதுதான். உலகின் எந்த மூலைக்குச் சென்று, எந்தப் பள்ளி மாணவனிடம் கேட்டாலும், ஆம், எங்களுக்குத் தொடர்பில்லாதவற்றையும் ஆர்வமில்லாதவற்றையும்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். எங்களுக்கு வரலாறு வேண்டாம் என்றுதான் சொல்வார்கள்.
வரலாறு ஏன் அலுப்பூட்டுகிறது என்பதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. வரலாறு நமக்கு அறிமுகமாவது பள்ளிக்கூடத்தில். பள்ளிக்கூடத்தைக் குழந்தைகள் விரும்புவதில்லை. நம்மை முதல் முறையாகக் கைப்பிடித்து, கடந்த காலத்துக்குள் அழைத்துச் செல்பவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் விரும்பிய எதையும் ஆசிரியர்கள் இதுவரை கற்றுக்கொடுத்ததில்லை. வரலாறு என்றால் என்னவெனும் கேள்வியை முதன் முதலாக நாம் எதிர்கொள்வது பாடப்புத்தகத்தில். மாணவர்களின் வெறுப்புப் பட்டியலில் முதலில் இடம்பெறும் பொருள், பாடப்புத்தகம்.
நான் படித்த அரசுப் பள்ளியில் எனக்கு வரலாறு எடுத்தவர் நல்லவர், பண்பானவர். அன்றும் சரி, இன்றும் சரி, நல்ல ஆசிரியர் என்று அவரை என்னால் அழைக்க முடிந்ததில்லை. வகுப்பறைக்குள் நுழைந்ததும், அன்று எந்தப் பாடம் என்பதைச் சொல்லிவிடுவார். எல்லோரும் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு தயாராவோம். ம், நீ ஆரம்பி என்றவுடன் ஒரு மாணவி எழுந்து நின்று வாய்விட்டு வாசிப்பார். ஒரு பத்தி நிறைவடைந்ததும் அவர் அமர்ந்துவிடவேண்டும். அடுத்து யார் என்பதை ஆசிரியர் சொல்வார். அவர் எழுந்து நிற்கவேண்டும். அவர் யாரையும் எப்போதும் அழைக்கலாம் என்பதால் எல்லோரும் கவனமாகப் பின்தொடர்வார்கள். வகுப்பறை அமைதியாக இருக்கும், யாரும் கதையடிக்கவோ வேடிக்கை பார்த்துக்கொண்டோ இருக்கமுடியாது என்பதைக் கடந்து இதில் நாங்கள் பெற்றுக்கொள்வதற்கு எதுவும் இருந்ததில்லை.
எல்லோரும் அமர்ந்ததும் ஆசிரியர் பத்து நிமிடங்களில் நாங்கள் அன்று படித்த பாடத்தில் முக்கியமான பத்திகள் என்னென்ன, எவற்றையெல்லாம் நாங்கள் கடந்து சென்றுவிடலாம் என்பதைக் குறிப்பிடுவார். பாட இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான விடை எங்கே ஆரம்பிக்கிறது என்றும் எங்கு முடிகிறது என்றும் அவர் சொல்லும்போது நாங்கள் குறித்து வைத்துக்கொள்வோம். அந்தப் பகுதிகளை மனனம் செய்துவிட்டால் போதும்.
எல்லோருடைய புத்தகங்களும் திறந்திருக்கும். எல்லோருடைய கவனமும் பாடத்தில் இருக்கும். ஆனால் ஒருவரும் ஒன்றும் கற்றுக்கொடுக்காமலேயே, ஒருவரும் ஒன்றும் கற்றுக்கொள்ளாமலேயே ஒரு வகுப்பு நிறைவடைந்துவிடும். ஒவ்வொரு வகுப்பும் இப்படித்தான் தொடங்கும், முடியும். ஒவ்வொரு தேர்வையும் இப்படித்தான் எதிர்கொண்டோம். இப்படித்தான் தேர்ச்சி பெற்றோம். சிந்து சமவெளி நாகரிகம், மௌரிய ஆட்சி, தொழில் புரட்சி, நெப்போலியன், இரண்டாம் உலகப் போர் என்று தொடங்கி உலக வரலாற்றை நாங்கள் ஒவ்வொரு வகுப்பாகக் கரைத்துக் குடித்தது இப்படித்தான்.
ஏன் மனனம் செய்தோம்? ஏனென்றால் எங்களுக்கு எதுவும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை. ஏன் சொல்லிக்கொடுக்கப்படவில்லை? ஓர் ஆசிரியர் எவ்வளவு மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறார், ஒரு வகுப்பில் எத்தனை பேர் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்பதை வைத்து அவர் தகுதி தீர்மானிக்கப்படுகிறதே தவிர அவர் யாருக்கு, எதை, எவ்வளவு புரிய வைத்தார் என்பதை வைத்தல்ல. ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியல்தான் கவனிக்கப்படுகிறதே தவிர, அவர் எவ்வளவு கற்றார் என்பதல்ல. எங்களிடம் படித்த இவ்வளவுபேர் மாநில அளவில் முன்னிலை வகிக்கிறார்கள் எனும் பெருமிதம்தான் ஒரு பள்ளி நிர்வாகத்துக்குத் தேவைப்படுகிறது. மதிப்பெண்களை விடுங்கள், அறிவொளிதான் மெய்யானது என்று சொல்லும் ஒரு பள்ளி நிர்வாகமும் இதுவரை சொன்னதில்லை. கல்லூரிக்கும் இதுவே பொருத்தம்.
கிட்டத்தட்ட உலகம் முழுக்க நிலவும் அவலம் இது என்கிறார்கள் நான் சந்தித்து உரையாடிய வரலாற்றாசிரியர்கள். முக்கியமான வரலாற்று ஆய்வுகளை முன்னெடுத்த பலர் தங்கள் பள்ளிப் பருவத்தில் வரலாறா, ஐயோ வேண்டாம் என்று அலறியவர்களாக இருந்திருக்கிறார்கள். கடனே என்றுதான் படித்து முடித்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வெளியில் வந்த பிறகே வரலாற்றை நான் நேசிக்கத் தொடங்கினேன் என்று பலரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரிந்த சில வரலாற்றாசிரியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஒரு வகுப்பில் வரலாறு போதிக்கும் ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் அமைதி காத்தனர். நீங்கள் சமீபத்தில் படித்த ஒரு வரலாற்று நூலைக் குறிப்பிடமுடியுமா என்று கேட்டபோது ஒன்றிரண்டு பேர் மட்டுமே சில தலைப்புகளைக் குறிப்பிட்டனர். அவற்றுள் எதுவுமே வரலாற்று நூல் அல்ல. நிர்வாகப் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. பாடப்புத்தகம் கடந்து எதுவும் படிக்க நேரமில்லை. கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுக்கத்தான் தோன்றுகிறதே தவிர, வாசிப்பதற்கான உந்துதல் கிடைப்பதில்லை. இப்படிப் பல காரணங்களை அடுக்கினாலும், இறுதியாக அவர்கள் சொன்னதுதான் உண்மையான, ஏற்கத்தக்க காரணமாக எனக்குப் பட்டது – ‘ஒரு பணியாகச் செய்கிறேனே தவிர, வரலாற்றின்மீது தனிப்பட்ட அளவில் பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது.’
தனது ஆறாவது வயதில் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆனால், ‘என்னால் சீராகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர் கற்றுக்கொடுத்த முறை இயந்திரத்தனமாக இருந்தது. எனக்கு 13 வயதானபோதுதான் வயலின் பிடிபட ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அப்போது நான் மொசார்ட்மீது காதல் வயப்பட்டிருந்தேன்.’
இயந்திரத்தனமான பாடமுறையை மட்டும் விமரிசிக்கவில்லை ஐன்ஸ்டீன். குட்டிக் குட்டியாகப் பல தகவல்களை மனனம் செய்து நினைவில் வைத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை. தகவல்கள் எப்போதும், எங்கும் கிடைக்கக்கூடியவை. அவற்றைத் தலையில் தூக்கிக்கொண்டு அலையவேண்டாம். கல்வியின் நோக்கம் தகவல்களை மூட்டை மூட்டையாக மாணவர்கள்மீது சுமத்துவது அல்ல. அதற்கு எதற்கு வகுப்பறைக்குப் போகவேண்டும்? நாமே புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு மனனம் செய்துவிடலாமே! ஒரு கல்லூரியின் பணி (பள்ளியின் பணி என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்) பாடப்புத்தகங்கள்மூலம் கிடைக்காதவற்றுக்கு மனத்தைப் பழக்குவதுதான். ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது பள்ளிக்கும் பொருந்தும்.
வரலாறு என்பது இவருக்குப் பிறகு அவர், அவருக்குப் பிறகு மற்றொருவர் என்று வரிசைக்கிரமமாக மன்னர் வம்சங்களை நினைவில் வைத்துக்கொள்வது அல்ல. வரலாறு என்பது ஆண்டுகளும் தேதிகளும் அல்ல. வரலாறு என்பது ஒரு போரில் வென்றவர் யார், தோற்றவர் யார் என்னும் புள்ளிவிவரம் அல்ல.
ஆனால் இவற்றைத்தான் நம் பள்ளி (ஏன், கல்லூரியிலும்தான்) ஆசிரியர்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். நாமும் இவற்றைத்தான் ஏற்றி வைத்துக்கொண்டு இதுதான் வரலாறு என்றும் நம்பிக்கொண்டிருந்தோம். தகவல் துணுக்குகள் இயல்பாகவே அலுப்பூட்டவை. எனவே வரலாறு அலுப்பூட்டும் துறையாக நம் நினைவுகளில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
நான் பள்ளியில் படித்தபோது அப்படியொன்றும் வரலாற்றின்மீது பெரும் பற்றெல்லாம் கொண்டிருக்கவில்லை என்று நினைவுகூர்கிறார் ரொமிலா தாப்பர். அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டவர். கலிங்கப் போரைத் தொடர்ந்து பௌத்தத்தைத் தழுவி, கொல்லாமையைத் தனது கொள்கையாக வரித்துக்கொண்டவர் என்னும் எளிய சித்திரத்தைத்தான் நம் எல்லோரையும்போல் அவரும் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பார். வெறும் தகவல்களாகவே இவை அவர் மனத்தில் அப்போது பதிந்திருக்கும். பாடப்புத்தகங்களிலிருந்து வெளியில் வந்து வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் வரலாறு அவரை ஈர்க்கத் தொடங்கியது.
வரலாறு என்பது வெறும் பாடத் தலைப்பு அல்ல அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதை அவர் உணர்ந்தார். பள்ளியில் படித்த அதே அசோகர் குறித்த மிகப் பெரும் ஆய்வுகளை முன்னெடுத்தார். பள்ளிப் பாடத்தில் சில பத்திகளும் கல்லூரியில் சில பக்கங்களிலும் அடக்கப்பட்டிக்கும் பண்டைய இந்திய வரலாற்றை (முற்கால இந்தியா என்றுதான் அவர் அழைப்பார்) அரை நூற்றாண்டாகத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் தாப்பர். பண்டைய இந்தியா குறித்த நம் புரிதலில் மிகப்பெரும் மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். பல புதிய வெளிச்சங்களை நாம் அவருடைய ஆய்வுகளிலிருந்து திரட்டிக்கொண்டோம்.
வரலாற்றாளர்களுக்கு வரலாறு முக்கியம், சரி. நம்மைப் போன்ற சாமானியர்கள் ஏன் வரலாறு கற்கவேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன்?
(தொடரும்)

