கணிதவியலாளர்களுக்கு மட்டும் கணிதம் தெரிந்தால் போதும் என்று எப்படி நாம் சொல்ல மாட்டாமோ அவ்வாறே வரலாறு என்பது வரலாற்றாளர்களுக்கு மட்டுமேயான ஒரு துறை என்றும் நாம் கருதத் தேவையில்லை. அன்றாட வாழ்வில் சின்ன சின்னக் கணக்குகள் தேவைப்படுவதுபோல் சாமானியர்களாக இருந்தாலும் நமக்கும் வரலாறு தெரிந்திருக்கவேண்டும். கொஞ்சமேனும்.
நாம் சமூகத்தின் ஒரு பகுதி என்றால் நம் சமூகத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது நம் அனைவரின் வரலாறு. நாம் கையாளும் கருவிகள், நாம் சார்ந்திருக்கும் தொழில்நுட்பம், நம் வாழ்வை மேம்படுத்தும் அறிவியல், நம் மொழி, நம் கல்வி, நம் அனுபவம் அனைத்தும் கடந்த காலத்தில் கால் கொண்டுள்ளன. நமக்கென்று நினைவுகள் இருப்பதுபோல் நம் சமூகத்துக்கென்று கூட்டு நினைவுகள், அனுபவங்கள் இருக்கின்றன. அவை நம்மீது தாக்கம் செலுத்துகின்றன. நம் அறிவைக்கொண்டு மட்டுமல்ல, சமூகத்தின் கூட்டு அறிவைக்கொண்டுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில், கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தும் வரலாற்றிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன.
நம் ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் இருக்கிறது. இதன் பொருள் நாம் ஒவ்வொருவரும் நடமாடும் வரலாறு. நாம் யார், நம் அடையாளம் என்ன, அது எப்படி உருவானது போன்றவற்றை வரலாற்றிடமிருந்துதான் கற்கமுடியும். எனக்கு இந்த உணவு பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பது தொடங்கி எனக்கு இந்தக் கொள்கை ஏற்றது, அது ஏற்றதல்ல என்பதுவரை நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. நம் எண்ணங்களை நாம் வாழும் சூழலும் சேர்ந்தேதான் தீர்மானிக்கிறது. நம் சூழலை விலக்கி வைத்துவிட்டு நம்மை நாமே விளங்கிக்கொள்வதும் சாத்தியமல்ல. நாம் எப்படி இன்றைய சூழலுக்கு வந்து சேர்ந்தோம் என்றொரு கேள்வியை எழுப்பினால் நாம் வரலாற்றோடு உரையாட ஆரம்பித்துவிட்டோம் என்று பொருள்.
0
கடந்த காலம். கடந்த காலம் குறித்த தேடல். கடந்த காலத்தின் பொருள். ஹிஸ்டரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கான அர்த்தம் இந்த மூன்றும்தான். பேரரசர்களுக்கு மட்டும்தான் கடந்த காலம் இருக்கிறதா? சிந்து சமவெளி நாகரிகம், மௌரியர், குப்தர், போர், ஆக்கிரமிப்பு, தஞ்சாவூர் ‘பெரிய விஷயங்கள்’ மட்டும்தான் வரலாறா? இல்லை. ஆனால் நாம் படித்த வகுப்பறைகளிலும் இன்றைய வகுப்பறைகளிலும் சமூக அறிவியல் எனும் பெயரில் ஆசிரியர்கள் பெரிய விஷயங்களை மட்டுமே கவனப்படுத்திப் பாடமெடுத்து வருகிறார்கள். நான் படித்தது அரசுப் பள்ளியில் என்பதால் நான் கற்ற வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி சுதந்தர இந்தியாவோடு நிறைவுற்றது. முடியாட்சி காலம் வரை அரசர்களும் நவீனக் காலம் வந்தவுடன் தேசத் தலைவர்களும் பெரும் ஆளுமைகளும் என் புத்தகத்தில் நிறைந்திருந்தனர். எனக்கு எதற்கு இந்தப் பழைய பஞ்சாங்கக் கதைகளெல்லாம் எனும் சலிப்பைத்தான் இப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு ஏற்படுத்தியது.
வம்சங்களின் வரலாற்றையும் ஆளுமைகளின் வாழ்வையும் படிக்கவேண்டியதும் அவசியம்தான். பாபருக்கு அடுத்து யார், முதலாம் பானிபட் போர் எப்போது நடந்தது, ஜாலியன்வாலா பாக் ஏன் நடந்தது, ஒத்துழையாமை இயக்கம் என்றால் என்ன, அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது போன்றவற்றையெல்லாம் ஒரு மாணவர் கற்கவேண்டியது முக்கியம், மறுப்பதற்கில்லை. ஆண்டுகளையும் தேதிகளையும் ஓரளவுக்கேனும் நினைவில் வைத்திருப்பதும் உதவும்.
மதிப்பெண்கள் பெறுவதற்கு அல்ல. கடந்த காலத்தைக் காலவரிசையின்படி புரிந்துகொள்வதற்கு. முதல் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுதான் ரஷ்யப் புரட்சியும் நடந்தது என்பது வெறும் தகவல் அல்ல. ரஷ்யப் புரட்சியை முதல் உலகப் போரை விலக்கிவிட்டுப் புரிந்துகொள்ளமுடியாது என்பதால். இரண்டாம் உலகப் போர் எப்போது ஆரம்பித்து, எப்போது நிறைவடைந்தது என்பதை இங்கிருக்கும் ஒரு மாணவர் ஏன் நினைவில் வைத்திருக்கவேண்டும்? ஏனென்றால் இந்தியா விடுதலை பெற்றதற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. 1789 புரட்சியை உலகில் எவரும் மறக்க இயலாது. 1848 புரட்சிகள் நினைவில் இல்லாவிட்டால் பெரிய பாதகமில்லை. காரணம் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் உலகம் தழுவியது. 1848 ஐரோப்பியப் புரட்சிகளைப் பெரும்பாலும் வரலாற்றாளர்கள் மட்டுமே இன்று அசைபோடுகிறார்கள்.
0
அதிகாரத்தில் இருப்போரை மையப்படுத்தும் அணுகுமுறையை வரலாறு விட்டொழித்துவிட்டது. சாமானியர்களின் வாழ்வும் போராட்டமும் கனவும் வலியும் நம்பிக்கையும் வரலாற்று நூல்களில் எப்போதோ இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இருந்தும் பாடப்புத்தகங்களில் இந்த மாற்றங்கள் போதுமான அளவுக்கு எதிரொலிக்கவில்லை. வரலாறு ‘யாரோ’ பலரின் கதையல்ல. நம் ஒவ்வொருவரின் கதை என்னும் அழுத்தமான உண்மை இன்னமும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. குறிப்பாக, அரசுப் பாடத்திட்டங்களில்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) வெளியிடும் பாடப்புத்தகங்களில் இக்குறை இல்லை. எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் (Our Pasts-III) இடம்பெற்றிருக்கும் பாடங்களை ஒருமுறை பார்வையிட்டால் இது புரியவரும். மொத்தம் பத்து தலைப்புகள். முதல் தலைப்பு, ‘எப்படி, எப்போது, எங்கே?’ வரலாறு குறித்த மிக நல்ல அறிமுகம், இப்பாடம். நவீன இந்தியாதான் இதன் மையம். ஆண்டுகளும் தேதிகளும் ஏன் முக்கியமானவை? எல்லா நேரங்களிலும் ஏதேனும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இவற்றுள் எது முக்கியம் என்பதை வரலாற்றாளர்கள் எப்படித் தீர்மானிக்கிறார்கள்? ஏன் சில ஆண்டுகளை மட்டும் நாம் நினைவில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறோம்? ஏன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்? காலத்தை எந்த அடிப்படையில் பிரிக்கிறோம்? காலனியம் என்றால் என்ன? பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய வரலாற்றை எப்படி எழுதினார்கள்? அதில் என்ன குறை? இப்படிப் பல கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன.
வணிகத்திலிருந்து நிலப்பரப்புவரை எனும் இரண்டாவது பாடம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்குள் ஒட்டகம்போல் நுழைந்ததை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாவது பாடத்தில் (கிராமப்புறங்களை ஆளுதல்) கம்பெனி ஆட்சி வலுபெறுகிறது. இங்கு நிர்வாகம், வரி வசூல், இண்டிகோ உற்பத்தி என்று தொடங்கி கிராமப்புற வாழ்க்கை மையப்படுத்தப்படுகிறது. காலனியாதிக்கத்துக்குச் சாமானியர்கள் ஆளாகும்போது என்ன நிகழும் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
நான்காவது பாடத்திலும் சாமானியர்களையே நாம் சந்திக்கிறோம். பழங்குடிகளின் வாழ்க்கை, அவர்களுடைய வாழ்வாதாரம், வேட்டை சேகரிப்பு சமூகம் இயங்கும் முறை, கால்நடை வளர்ப்பு, பயிரிடும் முறை என்று ஒரு புதிய உலகம் நம்முன் விரிகிறது. மக்கள் செயலற்றவர்களா? யார் ஆண்டால் என்ன, நம் வேலையைப் பார்ப்போம் என்று ஒரு சிறிய வட்டத்துக்குள் முடங்கிக்கிடப்பதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்வா? அரசியல், ஆட்சி, நிர்வாகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறை கொண்டிருப்பார்களா? கொண்டிருப்பார்கள் என்பதோடு நில்லாமல் அரசியலில் அவர்கள் பங்கேற்கவும் செய்வார்கள் என்பதை ஐந்தாவது பாடம் படம்பிடித்துக் காட்டுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சிப்பாய்கள் என்று அனைவருமே வரலாற்றுணர்வு பெற்றவர்கள்தாம். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி அவர்களை நேரடியாகப் பாதித்தது. விதி விட்ட வழி என்று அமைதி காக்காமல் சூழலை மாற்றுவதற்கான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். 1857 புரட்சியில் பங்கேற்ற சாமானிய மக்களின் கதைதான் ஐந்தாவது பாடம்.
அடுத்த பாடத்தில் ஆலை முதலாளிகளையும் நெசவாளர்களையும் இரும்பு, எஃகு ஆலைகளில் பணிபுரிவோரையும் சந்திக்கிறோம். உலகம் நவீனமயமானதற்குக் காரணம் தொழிற்புரட்சி என்றால் அந்தப் புரட்சிக்கு அடித்தளமாகத் திகழ்ந்தவர்கள் தொழிலாளர்கள். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய சக்தியாகத் திகழ்ந்ததற்கு நெசவுத் தொழில்மூலம் கிடைத்த அபரிமிதமான லாபமும் ஒரு காரணம். இந்த லாபத்துக்கும் இந்திய நெசவாளர்களின் உழைப்புக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
நாங்கள் இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தது அதன் வளங்களைச் சுரண்டிக் கொழுக்கத்தான் என்று ஒருபோதும் ஒரு காலனி நாடு அறிவிக்காது. உன்னதமான ஒரு நோக்கத்தை உற்பத்தி செய்து அதன் பின்னால் ஒளிந்துகொள்வதுதான் அவர்களுடைய வழக்கம். கிழக்கிந்திய நிறுவனம் செய்ததும் அதைத்தான். பின் தங்கியிருக்கும் இந்தியர்களுக்குக் கல்வியறிவு புகட்டி அவர்களை அறிவொளி மிக்கவர்களாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள் என்று பிரகடனம் செய்தது கிழக்கிந்திய நிறுவனம். பிரிட்டன் புகுத்திய கல்விமுறையால் நாம் பலனடைந்திருக்கிறோமா? ஆங்கிலேயக் கல்வி இந்திய மாணவர்களை எப்படிப் பாதித்தது? ஏழாவது பாடம் இக்கேள்விகளை விவாதிக்கிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள்? அப்போது பெண்களின் நிலை எப்படி இருந்தது? படிக்கும் வயதிலேயே குழந்தைகளை மணமுடித்து வைக்கும் வழக்கம் அன்று ஏன் இருந்தது? இன்றுபோலன்றி அன்று கல்வி ஏன் பலருக்கு மறுக்கப்பட்டிருந்தது? கணவன் இறந்துவிட்டால் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும் எனும் நிலை எப்படி மாறியது? சாதி, பெண், சீர்திருத்தம். எட்டாவது பாடத்தின் தலைப்பு இதுதான். அடுத்த அத்தியாயம் தேசிய விடுதலை இயக்கத்தின் கதையை விவரிக்கிறது என்றால் இறுதி அத்தியாயம் சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவை அறிமுகப்படுத்துகிறது.
காந்தியும் நேருவும் அம்பேத்கரும் இன்னபிறரும் முக்கியமானவர்கள். ஆனால் நவீன இந்தியாவை வடிவமைத்தவர்கள் அவர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தலைவரின் பின்னாலும் திரண்டு நின்று அவர்கள் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எளிய மக்கள். நாம் வாழும் காலத்தை அவர்களும் சேர்ந்தே உருவாக்கியிருக்கிறார்கள். காந்தியின் சத்தியாகிரகத்தையும் மகர் சத்தியாகிரகத்தையும் மட்டுமல்ல, பிர்சா முண்டா தலைமையிலான போராட்டத்தையும் சேர்த்துதான் நாம் படிக்கவேண்டும். ஏனெனில் அது நம் கதை. மேற்படி பாடநூல் அழுத்தமாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். வரலாற்றை யார் உருவாக்குகிறார்கள் என்னும் கேள்விக்கான சரியான விடை, நாம் அனைவரும் என்பதுதான்.
0
பாடநூலின் முதல் சில பக்கங்களில் அதை உருவாக்கிய அணியினரின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. கற்கும் மாணவர்களோ, கற்பிக்கும் ஆசிரியர்களோ, இப்பட்டியலைச் சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி, பார்வையிட்டிருந்தால் ஜானகி நாயர், தனிகா சர்க்கார், ராமச்சந்திர குஹா என்று தொடங்கி பல வரலாற்றாளர்களின் பெயர்களை அடையாளம் கண்டிருக்கமுடியும். வரலாறு சாமானியர்களுக்கானதும்தான் என்பதை அழுத்தமாக வலியுறுத்திவரும் வரலாற்றாளர்கள் இவர்கள். இவர்களுடைய பங்களிப்பில் வெளிவந்திருப்பதால்தான் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் தனித்துவத்தோடு திகழ்கின்றன.
இந்த அணியின் தலைமை ஆலோசகராகத் திகழ்ந்த வரலாற்றாளர் நீலாத்ரி பட்டார்ச்சார்யாவை அசோகா பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். வானத்தில் மீதல்ல, ஒரு வரலாற்றாளர் தன் கண்களைப் புழுதி படிந்த நிலத்திலும் அதில் வாழும் சாமானிய மக்கள்மீதும்தான் எப்போதும் பதித்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்களுள் ஒருவர். காலனியாதிக்கம் கிராமப்புற வாழ்வை எவ்வாறு மாற்றியமைத்தது என்பதை விவரிக்கும் மிக முக்கிய நூலொன்றை (The Great Agrarian Conquest) எழுதியவர்.
உரையாடலைத் தொடர்ந்து அவர் எடுத்த வகுப்பொன்றில் கலந்துகொண்டதை மதிப்புமிக்க அனுபவமாகக் கருதுகிறேன். ஒரு வரலாற்று வகுப்பு எப்படி இருக்கும் என்று மட்டுமல்ல, எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது அவர் வகுப்பு. எட்டாம் வகுப்பு மட்டுமல்ல, என்சிஇஆர்டியின் சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் அனைத்துமே மெச்சத்தக்க வகையில் உருவாக்கப்பட்டவை என்றாலும் மாணவர்களால் ஏன் அவற்றுக்குள் நுழையமுடியவில்லை என்பதற்கான விடையை நீலாத்ரியின் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது உணர்ந்தேன். பாடப்புத்தகம் என்பது ஓர் உளி மட்டுமே. அதை யார், எப்படி கையாள்கிறார் என்பதை வைத்துதான் சிற்பம் தனக்கான மதிப்பை ஈட்டிக்கொள்கிறது.
(தொடரும்)

