Skip to content
Home » ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில்.

நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில் அனைத்தையும் பிரிக்கும் ஒரு நாட்டில் பிறந்து, வாழ்ந்தாலும் பிற வெள்ளையர்போல் எனக்கும் இனவேறுபாடு குறித்து நீண்டகாலத்துக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. என்னை ஒரு வெள்ளையனாகப் பார்க்க ஒருவரும் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் ‘இன்னோர்’ இனம் குறித்து, ‘இன்னொரு’ நிறம் குறித்து எனக்கு அப்போதே தெரிந்திருந்தது. இனம் குறித்து எப்போது, யார் பேசினாலும் அந்த விவாதம் ‘அவர்கள்’ பற்றியதாகவே இருக்கிறது. இனம் குறித்த விவாதத்தில் பங்கேற்காத வெள்ளையரே இல்லை. நான் எல்லோரையும் மதிப்பவன்; நான் இனவாதியல்ல என்றே எல்லா வெள்ளையரும் சொல்கிறார்கள். இருந்தும் இனவாதம் ஏன் மேலோங்கியிருக்கிறது? ஏன் கறுப்பின மக்கள் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படுகிறார்கள்? நாம் அனைவரும் பரிசுத்தமானவர்கள் என்றால் இனவொதுக்கல் ஏன் நிலவவேண்டும்?

அமெரிக்காவில் ஒரு வெள்ளையராக இருப்பதென்றால் என்ன? இக்கேள்விக்கான விடையை சமூகவியலாளரான ராபின் டியாங்கிலோவின் சமீபத்திய நூல் (White Fragility, Robin Diangelo) கண்டறிய முயல்கிறது. ஒரு வெள்ளைக் குழந்தையும் ஒரு கறுப்புக் குழந்தையும் ஒன்றுபோலவே பிறக்கின்றன. ஆனால் இரு நிறங்களுக்குமே வரலாறு இருக்கிறது. கறுப்பு வரலாறு வலியும் துயரமும் பாகுபாடும் நிறைந்த பக்கங்களைக் கொண்டது என்றால் வெள்ளை வரலாற்றில் சிறப்புரிமைகளும் வாய்ப்புகளும் வசதிகளும் மிகுந்திருக்கின்றன.

கறுப்புக் குழந்தையின் அமெரிக்காவும் வெள்ளைக் குழந்தையின் அமெரிக்காவும் ஒன்றல்ல. ஒரு கறுப்புக் குழந்தை இனம் குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. அக்குழந்தை பிறக்கும்போதே இன அடையாளத்தோடுதான் பிறக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த அடையாளம் அக்குழந்தையை அலைகழிக்கிறது. இனவாதம் என்றால் என்னவென்று அக்குழந்தை படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. வெள்ளையர் தனிச்சிறப்புரிமை பெற்றவர்கள், அவர்களும் நாமும் ஒன்றல்ல என்பதை அக்குழந்தைக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. யதார்த்தத்தின் மாயக்காரம் அந்தக் குழந்தையின் முகத்தில் அறைந்து இந்த உண்மைகளைப் புரிய வைக்கும்.

எல்லோரும் சமம் என்னும் உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசம், அமெரிக்கா. ஆனால் அதன் ஆரம்பப் பக்கங்களைப் பார்த்தால் வலியும் ரணமும் ரத்தமும் கண்ணீரும் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம் என்கிறார் டியாங்கிலோ. பழங்குடி மக்கள்மீதான இனவொழிப்புதான் அமெரிக்க வரலாற்றின் தொடக்கம். அடிமைப்படுத்தப்பட்ட, கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்கர்களின், அவர்களுடைய வழித்தோன்றல்களின் உழைப்பிலிருந்து உருவானதுதான் அமெரிக்காவின் செல்வ வளம். இன்றும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும் வெள்ளையர்கள், ஆண்கள், மத்திய அல்லது மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மேஜையின் முன்பு இவர்கள்தான் அமர்ந்திருக்கிறார்கள். மேஜைக்கு அருகில் நெருங்கிவர முடியாதவர்களுக்கும் சேர்த்து இவர்கள்தான் முடிவெடுக்கிறார்கள்.

ஒர் ஆணாக இருப்பதென்றால் என்னவென்பதை, ஒரு வெள்ளையராக இருப்பதென்றால் என்னவென்பதை வேண்டுமென்றேதான் கற்றுக்கொடுக்காமல் இருக்கிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளரும் பெண்ணியவாதியுமான பெக்கி மெகின்டோஷ். ஆ, வெள்ளையர் சிறப்புரிமைகளோடு பிறக்கிறார்களா என்று திகைப்போர் தொடங்கி இப்போதெல்லாம் யார் நிறம் பார்க்கிறார்கள் என்று இயல்பாகக் கடந்து செல்வோர்வரை அனைவரிடமும், இந்தா இதைப் பாருங்கள் என்றொரு பட்டியலை வழங்குகிறார் பெக்கி. பின்வருபனவற்றை உங்களால் சுலபமாகச் செய்யமுடியுமென்றால் நீங்கள் ஒரு வெள்ளையர். சிறப்புரிமைகள் பெற்றவர் என்கிறார் பெக்கி.

என் விருப்பத்துக்கு ஏற்றவாறு இருக்கலாம். என் இனத்தவர்களோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சேர்ந்திருக்கவோ எனக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் விலகி நிற்கவோ முடியும்.

என் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் வீடு வாங்கி குடியேறலாம்.

அப்படிக் குடியேறினால் என் அண்டை வீட்டார் என்னோடு இனிமையாக அல்லது நடுநிலையோடு பழகுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

என்னை யாரும் பின்தொடர மாட்டார்கள், மிரட்டமாட்டார்கள் என்னும் நம்பிக்கையோடு கடைக்குச் செல்லலாம்.

செய்தித்தாளைப் பிரித்தால், தொலைக்காட்சியைத் திருகினால் என் இனத்தைச் சேர்ந்தவர்களை அதிகம் பார்க்கமுடியும்.

நம் நாகரிகம், நம் தேசிய மரபு என்றெல்லாம் சொல்லும்போது, இதையெல்லாம் உருவாக்கியவர்கள் என்னைப் போன்றவர்கள்தான் என்று என்னிடம் சொல்வார்கள்.

என் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் அவர்களுடைய இனம் நல்ல விதமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

ஒரு குழுவில் என் இனத்தைச் சேர்ந்தவள் நான் மட்டுமே என்றாலும் என் குரலுக்கு மதிப்பளிக்கப்படும்.

ஒரு கடைக்குப் போனால் நான் தேடும் என் இனத்தின் இசையைச் சுலபமாகக் கண்டறியலாம். என் பண்பாட்டு வழக்கங்களுக்கு ஏற்ற உணவு வகைகள் ஒரு பல்சுவை அங்காடியில் எனக்குக் கிடைக்கும். முடிதிருத்தும் கடையில் என் தலைமுடியை அழகுபடுத்தத் தெரிந்தவர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்.

காசோலை, கடன் அட்டை, பணம் என்று எதைப் பயன்படுத்தினாலும் இவரை நம்பலாமா என்பதுபோல் யாரும் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கமாட்டார்கள்.

இங்கே இனப்பாகுபாடு இருக்கிறது, நம் பாதுகாப்புக்கு இதையெல்லாம் செய்யவேண்டும் என்று என் குழந்தைகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது.

என் குழந்தைகளை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படத் தேவையில்லை.

கெட்ட வார்த்தை பேசினாலோ, பழைய துணி அணிந்தாலோ, கடிதத்துக்குப் பதில் போடாமல் விட்டாலோ என்னைக் கடிந்துகொள்வதாக நினைத்து என் இனத்தின் கல்வியறிவின்மையை யாரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள் என்று நம்பலாம்.

பொதுவெளியில் ஆண்களின் குழுவில் நான் பேசும்போது என் இனத்தை யாரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரிக்க மாட்டார்கள்.

சவாலான சூழலை நான் கடந்து வந்தால், நீ உன் இனத்துக்குப் பெருமை என்று தட்டிக்கொடுக்க மாட்டார்கள்.

என் இனத்துக்காக நான் பேசவேண்டிய அவசியம் இருக்காது.

என் அரசை விமரிசிக்கும்போது, அதன் செயல்திட்டங்களின் அபாயங்கள் குறித்துப் பேசும்போது, என்னை வெளியாளாக யாரும் பார்க்கமாட்டார்கள்.

இங்கே யார் பொறுப்பாளர், அவரைப் பார்க்கவேண்டும் என்று ஒருவரிடம் கேட்கும்போது அவர் என்னை அழைத்துச் செல்லும் அறையில் என் இனத்தைச் சேர்ந்தவர் அமர்ந்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

என்னை, என் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி உண்டா என்று தயங்காமல் எந்தப் பணி வாய்ப்புகள் குறித்தும் நான் யோசிக்கலாம்.

வெளியில் செல்லும்போது, பொதுவிடங்களில் நடக்கும்போது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது என்னை எல்லோரும் இயல்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பலாம்.

ஆம், இவையெல்லாம் எனக்கு இயல்பாக நடக்கக்கூடியவைதாம் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் அடுத்து செய்யவேண்டியவை என்னவென்பதை பெக்கியே கற்றுக்கொடுக்கிறார். நீங்கள் ஒரு வெள்ளையர் என்பதை முதலில் உணருங்கள். எப்படிக் கறுப்பு என்பதை ஓர் இனம் என்று சொல்லிப் பிரிக்கிறீர்களோ அதேபோல் வெள்ளை எனும் நிறத்தைக் கொண்டு உங்களைப் பிரித்து அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். வெள்ளை உங்களுக்கு என்னவெல்லாம் அளிக்கிறது என்பதை உணருங்கள். நீங்கள் அனுபவிக்கும் பல வசதிகளை உங்கள் தோலின் நிறம்தான் உங்களுக்கு வழங்குகிறது. இனம் குறித்து நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் வேறு யாரையோ பற்றியல்ல, உங்களையும் உங்களைப் போன்ற வெள்ளையரையும் பற்றிதான் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். நீங்கள் இல்லாமல் நிறப்பாகுபாடு இல்லை. நீங்கள் இல்லாமல் இனமோதல் இல்லை.

அதோ ஒரு கறுப்பர் போகிறார் என்று உங்களால் ஒருவரை அடையாளம் காட்டமுடியுமென்றால் அதேபோல் அதோ அங்கே அமர்ந்திருப்பவர் ஒரு வெள்ளையர் என்றும் உணர ஆரம்பியுங்கள். அமெரிக்கா இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது. இனப்பாகுபாடு, இனவெறி உண்மை. வெள்ளையர் அனுபவிக்கும் பலன்கள் பல அநீதியானவை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். நான் வெள்ளை, எனவே என் கருத்துகள் உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்னும் நம்பிக்கையை அகற்றுங்கள்.

கறுப்பு தோல், கலப்பினத் தோல் கொண்டிருப்போரிடம் விவாதிப்பதற்கு முன்பு நீங்கள் செய்யவேண்டியது அமைதியாகவும் அடக்கமாகவும் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பது. நீங்கள் சிறப்புரிமைகள் பெற்றிருப்பவர் என்பதையும் உங்களோடு பேசுபவர் அத்தகைய உரிமைகள் இல்லாதவர் என்பதையும் மனத்தில் கொண்டு அவர் வலியை, அவர் வேதனையை, அவர் குறையைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களைப்போல் கருத்துகளோடு வருவதில்லை, அனுபவங்களோடு வருகிறார்கள். இனவாதம் குறித்து நீங்கள் கேட்டோ படித்தோ தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் உங்களைவிட அழுத்தமாகவும் நேரடியாகவும் உணர்ந்திருப்பார்கள். அந்த அனுபவத்துக்கு மதிப்பளியுங்கள். இனவாதம் ஒரு வன்முறை. அது உங்களையும் சேர்த்தே அழிக்கிறது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழும் உலகம் ஏன் சமத்துவமற்றதாக இருக்கிறது என்பதையும் அதில் உங்கள் பங்கு என்னவென்பதையும் நீங்கள் வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் ஓர் அங்குலமும் மாறாது. உங்கள் தோலின் நிறம் வெள்ளையாக இல்லாமல் போயிருந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இனவாதம் நிலவக்கூடாது என்றால் அது குறித்து நீங்கள் ஆழமாகத் தெரிந்துகொண்டாக வேண்டும். நீங்கள் மாறியாகவேண்டும். மற்றவர்களையும் மாற்றுவதற்குத் தயாராகவேண்டும் என்கிறார் பெக்கி. இனவாதம் காயப்படுத்துவதோடு நிற்கவில்லை. பலி வாங்கவும் செய்கிறது.

பாலின வேறுபாட்டுக்கும் மேற்கண்ட விவாதங்களைப் பொருத்திப் பார்க்கலாம். ஓர் ஆணாக இருப்பதால் கிடைக்கும் சிறப்புரிமைகள் குறித்து பெரும்பாலான ஆண்களுக்குப் புரிதலில்லை. குடும்பம் தொடங்கி எல்லா அமைப்புகளிலும் ஆண்களே நிறைந்திருக்கிறார்கள். இது தவறான சமூக அமைப்பு என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களே அனைவருக்கும் சேர்த்து முடிவெடுக்கிறார்கள். ஒரு பெண் அவர் பெண்ணாக இருப்பதாலேயே குரலற்றவராக இருக்கிறார் என்பதோ இயல்பாக ஓர் ஆண் பெற்றிருக்கும் அடிப்படையான உரிமைகளையும் வாய்ப்புகளையும்கூட ஒரு பெண் போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது என்பதோ ஓர் ஆணுக்குப் புரிவதில்லை. ஒருவரும் ஆண்களுக்கு இதனைக் கற்றுக்கொடுப்பதுமில்லை.

இனவாதம், சாதியம், ஆணாதிக்கம், அடிமைமுறை, வெறுப்பு அரசியல், பிளவுவாதம், வகுப்புவாதம் என்று தொடங்கி நம் குறைகளை, குற்றங்களை, போதாமைகளை, சறுக்கல்களை அச்சமின்றி விவாதிக்கும் ஒரு துறை வரலாறு. அநீதி என்றால் என்னவென்பதை நான் கற்றுக்கொடுக்கிறேன். ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து பிரிக்கும் கோட்பாடுகள் என்னென்ன என்பதை நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். பாகுபாடுகள் எந்த வடிவில் வந்தாலும் அவற்றை எதிர்க்கவேண்டிய அவசியத்தை நான் உணர்த்துகிறேன். எப்படி எதிர்க்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறேன் என்கிறது வரலாறு.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *