ஏனென்றால் இலக்கைப் போலவே அதை அடைவதற்கான வழியும் முக்கியம்.
ஹிட்லர் என்றதும் வானில் உயர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்களின் கரங்கள் காந்தி என்றதும் கீழே இறங்கிவிட்டன. காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களில் யாருக்கும் ஆர்வம் இல்லையா? ‘இல்லை!’ காந்தி உங்களைக் கவரவில்லையா? ‘இல்லை!’ அவர் தேசத் தந்தை இல்லையா? நம் விடுதலையைப் பெற்றுத் தந்தவர்களில் முதன்மையானவர் அல்லவா? ‘இல்லை! அவரால்தான் விடுதலை தாமதமானது! அவருடைய அகிம்சையெல்லாம் நமக்குத் தேவையில்லை. இன்றைய தேதிக்குப் பொருத்தமாகவும் இல்லை!’
இதன் பொருள் காந்தி இனி நமக்குத் தேவையில்லை என்பது மட்டுமல்ல. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பொருத்தமற்றவராக இருந்தார், இந்தியாவுக்கு ஒரு சுமையாக இருந்தார் என்பதுதான். ஹிட்லர் ஏற்பு எனக்கு ஏற்கெனவே அதிர்ச்சியை அளித்திருந்ததாலோ என்னவோ காந்தி நிராகரிப்பு எந்த நடுக்கத்தையும் உண்டாக்கவில்லை. ஹிட்லர் ‘ஆல்ஃபா’ தலைமுறையைச் சென்றடைந்ததுபோல் காந்தி செய்யவில்லை என்பதை எனது அடுத்தடுத்த வகுப்புகளிலிருந்து தெரிந்துகொண்டேன்.
காந்தி நம் உரையாடலில் இல்லை. நம் வாழ்வில், சிந்தனையில் இல்லை. ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் அரசியல் களத்திலும் காந்தி இல்லை. காந்தி ஓட்டு பெற்றுக்கொடுப்பவர் இல்லை என்பதால், அவருக்கென்று ஒரு வாக்கு வங்கியில்லை என்பதால் அரசியல்வாதிகள் யாரும் அவர் பெயரை மறந்தும் உச்சரிப்பதில்லை. ரூபாய் நோட்டுகளிலும் சிலைகளிலும் அரிதான நினைவிடங்களிலும் உறைந்திருக்கும் காந்தியை யாரும் பொருட்படுத்தி நான் கண்டதில்லை. எங்குமே இல்லாத ஒருவர் வகுப்பறையில் மட்டும் உயிர்த்திருப்பார் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? தவிரவும், காந்தியை எதிர்நிலையிலிருந்து அணுகும் போக்கு புதிதல்ல என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. காந்திமீது தொடக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்காத விமரிசனங்களையா இன்றைய மாணவர்கள் அவர்மீது சுமத்திவிடமுடியும்?
கம்யூனிஸ்டுகளின் ஆரம்பகால வாதங்களைப் பின்வருமாறு எளிமையாகத் தொகுத்துக்கொள்ளலாம். காந்தி என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒரு பிம்பம். அவர் நமக்கான உந்துசக்தி அல்ல, நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு முட்டுக்கட்டை. காந்தியின் அணுகுமுறை இந்தியாவுக்கு விடுதலையைப் பெற்றுத் தராது. அப்படியே பெற்றுத் தந்தாலும் அது விடுதலையாக இருக்காது. நாம் செல்லவேண்டிய திசையே வேறு. தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்மயப்படுத்தவேண்டும். வர்க்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதாரரீதியிலும் பண்பாட்டுரீதியிலும் பின்தங்கியிருக்கும் மக்களை நவீனப்படுத்தவேண்டுமே தவிர, கடவுள், சமயம், மதம் என்று பிற்போக்குத்தனமாக உரையாடலை முன்னெடுக்கக்கூடாது. நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கவேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஆற்றலைப் பாட்டாளி மக்களுக்கு அளிக்கவேண்டும். சோஷலிசமே நமக்கான தீர்வாக இருக்கமுடியும்.
ஏன் காந்தி வேண்டாதவர் என்றால் போராட்டம் அல்ல, சமரசமே அவர் வழிமுறை. முதலாளிகளோடு அவர் சமரசம் செய்துகொண்டார். ஏகாதிபத்தியவாதிகளோடு அவர் சமரசம் செய்துகொண்டார். மதவாதிகளிடம் சமரசம் செய்துகொண்டார். ஒரு போர்க்களத்துக்கு அமைதியையும் அகிம்சையையும் அன்பையும் கொண்டு செல்லமுடியாது. காந்தியத்தை ஏற்பவர்கள் போராடும் வலுவை இழந்துவிடுவார்கள். வர்க்க உணர்வை இழந்துவிடுவார்கள். விடுதலைக்கான உந்துதல் அவர்களிடம் தோன்றாது என்பதால் காலாகாலத்துக்கும் அடிமைத்தனத்தில் சிக்குண்டு இருக்கவேண்டியிருக்கும். எனவே காந்தி நிராகரிக்கப்படவேண்டியவர். மார்க்சியப் பார்வையில் இந்திய வரலாற்றை அணுகிய ரஜனி பாமி தத் போன்றோர் வந்தடைந்த முடிவு இது.
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் திரைமறைவாக இருந்த கம்யூனிஸ்டுகள் காந்தியத்துக்கு எதிரான ஓர் இயக்கத்தை கொல்கத்தாவில் தொடங்கி, காந்தியின் அகிம்சைக்கு எதிராகக் கருத்தியில்ரீதியில் பரப்புரை மேற்கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ) சேர்ந்தவர்களின் நிலைப்பாடு இப்படி என்றால் தீவிர கம்யூனிஸ்டுகள் (மாவோஸ்டுகள், நக்சல்பாரிகள்) காந்தியைத் தீமையின் உருவாக, துரோகியாக, முதலாளித்துவத் தரகராக மதிப்பிட்டு, அவரைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினர்.
கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். காந்தியின் பல நிலைப்பாடுகளோடு தாகூர் முரண்பட்டிருக்கிறார். சுபாஷ் காந்தியின் பாதையிலிருந்து முரண்பட்டு பிரிந்து, தனிப்பாதை வகுத்துக்கொண்டவர். படேல் காந்தியை விமரிசித்திருக்கிறார்.நேருவோடு முரண்களே இல்லை என்றா நினைக்கிறீர்கள்? இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் காரணம் வேறு யாருமில்லை, காந்திதான். பலவற்றையும் குறித்து அவர் கொண்டிருந்த உறுதியான, கறாரான நிலைப்பாடு அவரை நோக்கி ஒரு பெருந்திரளை ஈர்த்ததுபோல் பலரை அவரிடமிருந்து விலக்கியும் வைத்தது.
மதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் என்று அறியப்பட்டாலும் மதவாதிகளால் அவரோடு இணக்கம் பேணமுடியவில்லை. அவருடைய சத்தியாகிரகப் போராட்ட முறையை ஏற்றுக்கொண்டவர்கள்கூட சவுரி சவுராவின்போது அவர் நடந்துகொண்ட முறையை எதிர்த்திருக்கிறார்கள். சிறுபான்மை நலம் குறித்து காந்தி அளவுக்குத் தீவிரமாக, தொடர்ச்சியாகச் சிந்தித்த, செயல்பட்ட இன்னொருவரைக் காண்பது அரிது என்றாலும் இஸ்லாமியர்கள் அவரைத் தங்களுடைய முன்னுதாரணமாக வரித்துக்கொண்டதுபோல் தெரியவில்லை.
ஒரு வழக்கறிஞராக தென் ஆப்பிரிக்காவுக்கு முதன் முதலில் சென்றபோது ஆப்பிரிக்க மக்கள் குறித்து அவர் கொண்டிருந்த பார்வையை இனவாதம் என்றுதான் அழைக்கவேண்டும். பெண்ணிய நோக்கில் காந்தியைத் தாராளமாக விமரிசிக்கமுடியும். காந்திதான் பெண்களை அதிக எண்ணிக்கையில் விடுதலைப் போராட்டத்துக்கு அழைத்து வந்தார். உலகளவில் இது ஒரு சாதனை. அதே நேரம் பெண்கள் குறித்து அவர் கொண்டிருந்த சில கருத்துகள் பிற்போக்கானவை. பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட பிரமச்சரியப் பரிசோதனைகள் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதிலும் ஐயமில்லை. காந்தியின் அரசியல், மதம், அறம் மூன்றும் கடுமையான எதிர்ப்புகளை இடது வலது பேதமின்றிச் சந்தித்திருக்கின்றன.
நானும் காந்தியை எதிர்திசையிலிருந்து அணுகியவன்தான். கடும் இடது இலக்கியங்களின் சுவையில் கட்டுண்டு கிடந்த காலத்தில் காந்தியை நிராகரிப்பது எனக்கு எளிதானதாக இருந்தது. அதுவே நவீனமானது என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். வரலாறு கற்க ஆரம்பித்த பிறகுதான் என் தவறு புரிந்தது. எடுத்துக்காட்டுக்கு, காந்தி ஒரு சனாதன இந்து. ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பியவர். எனவே அவர் நவீனமானவரல்லர் எனும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஜே.டி.எஃப். ஜோர்டன்ஸ் உதவினார். காந்தியின் அகிம்சை என்பது செயலற்றவரின் முதலும் கடைசியுமான ஆயுதம் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை லூயி ஃபிஷர், டென்னிஸ் டால்டன் போன்றோர் திருத்தியமைத்தனர். ஜான் ரஸ்கின் போன்ற ஐரோப்பியர்களிடமிருந்து மட்டுமல்ல இந்தியச் சிந்தனை முறைகளிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும்கூட விலகி நின்று சுயமாகச் சிந்தித்தவர் காந்தி. அவருடைய தனித்துவம் என்பது அவருடைய அசல் சிந்தனைமுறைதான் எனும் டால்டனின் சொற்கள் காந்தியை மீண்டும் புதிதாகக் கற்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியது. காந்தியின் எழுத்துகளை அதன்பிறகுதான் நேரடியாக வாசிக்க ஆரம்பித்தேன். காந்தி வகித்த இடம் என்ன என்பதை வரலாறு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வைத்தது.
0
காந்தியின் சிந்தனைகளைச் சொல் சொல்லாகப் பற்றிக்கொண்டு நடைமுறைப்படுத்துவது இயலாத செயல். எடுத்துக்காட்டுக்கு, காந்தியின் உணவுப் பரிந்துரை அசாத்தியமானது மட்டுமல்ல அவசியமற்றதும்கூட. அதேபோல் மரக்கறியை அனைவருக்கும் வலியுறுத்துவதென்பது தேவையற்றது மட்டுமல்ல இன்றைய அரசியல் சூழலில் தவறானதும்கூட. பிரமச்சரியத்தின்மீது காந்தி கொண்டிருந்த பற்றைச் சுலபமாக நம்மால் ஒதுக்கித் தள்ளிவிடமுடியும். காந்தி கனவு கண்ட கிராமம் இன்று சாத்தியமா? காந்தி கொண்டிருந்த பொருளாதாரக் கொள்கைகளை இன்றைய உலகமயமாக்கலில் நம்மால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா?
காந்தியிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளவேண்டியவை இவையல்ல. இன்றைய காலத்துக்கு காந்தியின் நான்கு கொள்கைகள் நமக்கு உதவக்கூடும் என்கிறார் ராமச்சந்திர குஹா. முதலாவது, சூழலியல் குறித்த அக்கறை. உணவு, ஆடை, கட்டுமானம், தொழில், கருவி, வாகனம் என்று நம் வாழ்வோடு கலந்துவிட்ட அனைத்து அம்சங்களிலும் மேற்கத்தியத் தாக்கங்கள் நிறைந்திருக்கின்றன. மண்ணும் காற்றும் நீரும் சீரழிந்துகொண்டிருப்பது குறித்த கவலைகளின்றி நுகர்வுப் பண்பாட்டில் நாம் மயங்கிக் கிடக்கிறோம். மேற்கைப் பின்பற்றி இந்தியா ஒரு போதும் துரிதத் தொழில்மயமாக்கலை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார் காந்தி. பிரிட்டன் எனும் சின்னஞ்சிறு தீவின் பொருளாதாரப் பசியால் உலகம் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நாமும் அவர்கள் வழியில் சென்றால் வெட்டுக்கிளிகளிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலம்போல் உலகம் மாறிவிடும் என்று எச்சரிக்கிறார் காந்தி. புவிச்சூடேற்றம் அபாயகரமான எல்லைகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலத்துக்கு காந்தியின் சூழலியல் பார்வையை நாம் மறுவாசிப்பு செய்யவேண்டியது அவசியம்.
இரண்டாவது, இறை நம்பிக்கை குறித்த அவர் பார்வை. ஒருவர் எந்த மதத்தில் பிறந்திருக்கிறாரோ அந்த மதத்தின் சாரத்தை மெய்யாகப் பின்பற்றி வாழவேண்டும் என்பது காந்தியின் எதிர்பார்ப்பு. எல்லா மதங்களும் அன்பை, சகோதரத்துவத்தை, அறத்தை வலியறுத்துவதால் உண்மையான மத நம்பிக்கை மனிதர்களை மேம்படுத்தும் என்று அவர் நம்ப விரும்பினார். அவருக்கு கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தனர். அவருடைய வழிபாட்டுக் கூட்டங்களில் இஸ்லாத்துக்கு எப்போதும் ஓரிடம் இருந்தது. காந்தியைப்போல் இந்து மதப்பற்றாளரை எப்படிப் பார்க்கமுடியாதோ அதேபோல் காந்திபோல் இஸ்லாமியர்களை நெஞ்சோடு அரவணைத்துக்கொண்ட மாற்று மதத்தினரையும் பார்க்கமுடியாது. மதத்தின் பெயரால் பிளவுகள் அதிகரிக்கும் இன்றைய காலத்தில் எல்லா மதங்களையும் சம அன்போடு அரவணைத்துக்கொள்ளவேண்டும் எனும் காந்தியின் வேண்டுகோள் இறை நம்பிக்கையற்றவர்களுக்கும் அருமருந்தாகத் திகழும்.
மூன்றாவது, பொது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய மாண்பு. காந்தி எந்த அரசுப் பதவியும் வகித்தவரல்லர். அவருடைய ஆசிரமத்துக்கு எந்தப் பாதுகாப்பும் தேவைப்படவில்லை. யாரும் எப்போதும் கதவைத் தட்டலாம். அவரளவுக்குத் திறந்த வாழ்வை வேறெவரும் எங்கும் வாழ்ந்ததுபோல் தெரியவில்லை. தனது ஒவ்வொரு சிந்தனையையும் ஒவ்வொரு செயல்பாட்டையும் அவர் உலகோடு பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு போராட்டத்தையும் மிகக் கவனமாக முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார். சுயநலனின் நிழல்கூட அவரைத் தீண்டியதில்லை. அறத்தின் அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு முடிவையும் எடுத்திருக்கிறார். தனது முடிவால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். காந்தியின் பொதுவாழ்க்கை நேர்மையில் வேர் கொண்டிருந்தது. அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தேவையான அடிப்படைப் பண்பு இது.
நான்காவது, அகிம்சை. காந்தியின் அகிம்சை அவர் வாழ்ந்த காலத்திலேயே விமரிசிக்கப்பட்டிருக்கிறது, பழிக்கப்பட்டிருக்கிறது, நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மேலேயுள்ள மூன்று கருத்தாக்கங்கள் மட்டுமல்ல காந்தியம் எனும் பெயரில் இன்று நாம் தொகுத்துக்கொள்ளும் ஒட்டுமொத்த சிந்தனைச் சிதறல்களுக்கும் அடிப்படையாகத் திகழ்வது அவருடைய அகிம்சைதான். நுகர்வுப் பண்பாட்டை அவர் சுற்றுச்சூழலின்மீது செலுத்தப்படும் வன்முறையாகக் காண்கிறார். உன் மதத்தைக் காட்டிலும் என் மதம் உயர்ந்தது, என்னுடையதுதான் உள்ளதிலேயே சிறந்தது என்று நாம் முழங்கும்போது நமக்குப் பெருமிதமாகவும் மற்ற நம்பிக்கையாளர்களுக்குப் பெருவலியாகவும் திகழ்வதால் அது வன்முறையாக மாறுகிறது. அகிம்சை என்பது வேறுபாடுகளை அங்கீகரிப்பது, மதிப்பது, போற்றுவது. உண்மை, அகத்தூய்மை, எளிமை போன்ற பண்புகளை அகிம்சையோடு இணைத்து அர்த்தப்படுத்திக்கொண்டார் காந்தி.
‘காந்தியம் என்பது காந்தியத்தைக் காட்டிலும் மேலானது. காந்தியாலும்கூட குறைபாடுள்ள காந்தியராகவே இருக்கமுடிந்தது. ஆனால் அதுவே அவரைப் போற்றத்தக்க மனிதராக உயர்த்துகிறது’ என்கிறார் ஆஷிஸ் நந்தி.
0
‘பகத் சிங் தூக்கிலிடப்பட்டதை காந்தி ஏன் ஆதரித்தார்? தான் மட்டுமே ஒரே தலைவராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே? ஒரு புரட்சியாளர் கொல்லப்படுவதை ஆதரிப்பதன் பெயர்தான் அகிம்சையா?’ முதல் மாணவி அமர்வதற்குள் இரண்டாமவர் கையை உயர்த்தினார். ‘நேதாஜியை ஏன் மகாத்மா ஆதரிக்கவில்லை? அவர் வழியில் ஒட்டுமொத்த இந்தியாவும் சென்றிருந்தால் விரைவாக நம் சுதந்தரம் கிடைத்திருக்கும்தானே?’
இந்த வினாக்களுக்கான விடை காந்தி ஏன் அகிம்சை பாதையைத் தேர்ந்தெடுத்தார் என்பதைத் தெரிந்துகொள்வதில் அடங்கியிருக்கிறது. லாலா லஜபதி ராய் 1928இல் பிரிட்டிஷாரின் வன்முறைக்கு இறையானார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் அரசைப் பழி தீர்க்க முடிவெடுத்தனர். மூன்றாண்டுகளில் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த முடிவு காந்தியை அசைக்கவில்லை. காரணம் இலக்கு மட்டுமல்ல, அதை அடைவதற்கான வழிமுறையும் முக்கியம் காந்திக்கு. வன்முறைப் பாதை அவருக்கு உவப்பானது அல்ல. வன்முறையின்மூலம் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றால் அந்த விடுதலை மெய்யான விடுதலையாக இருக்க வாய்ப்பில்லை என்பது காந்தியத்தின் சாரம்.
பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரின் ஆயுதப்போராட்ட வழியை அவர் ஆதரிக்க மறுத்தது இதனால்தான். புரட்சியாளர்களும் தேசபக்தர்கள்தாம் என்பதில் ஐயமில்லை. அவர்களுடைய தியாகம் நிஜம். ஆனால் அவர்களுடைய தியாகத்தில் ஒருபோதும் அழியாத ரத்தக்கறை படிந்திருக்கிறது. அவர்களுடைய நோக்கங்களும் செயல்பாடுகளும் ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆயுதத்தைப் பயன்படுத்த அல்ல, அகிம்சையைக் கடைபிடிக்கத்தான் அதிக வலு தேவை என்றார் காந்தி. ஓர் ஆயுதப்போராளியின் சிந்தனைகள் சமூகத்தை ஒருபோதும் பற்றிக்கொள்ளாது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்று காந்தி நம்பினார். எல்லோரும் அழிந்து ஒரேயொரு சத்தியாகிரகி உயிர்த்திருந்தால்கூடப் போதும் காந்திக்கு. அந்த ஒற்றை மனிதரைக் கொண்டு அவரால் போராட்டத்தைத் தொடர்ந்து இயக்கமுடியும்.
அகிம்சை என்பதற்குக் கொல்லாமை என்பது மட்டுமல்ல பொருள். ‘யாரையும் வருத்தக்கூடாது; தம்மை நமக்கு எதிரி என்று எண்ணிக்கொள்பவர்மீதுகூட கெட்ட எண்ணத்தை மனத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே அகிம்சை என்பதற்கு உண்மையான பொருள். இந்த எண்ணத்தில் எவ்வளவு முன்ஜாக்கிரரையான தன்மை அடங்கியிருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும். உங்கள் விரோதி என்று நீங்கள் எண்ணுபவர்களிடம்கூட… என்று நான் சொல்லவில்லை. உங்கள் எதிரி என்று தம்மை எண்ணிக்கொள்பவர்கள்கூட… என்று கூறியிருக்கிறேன். அகிம்சா தர்மத்தைப் பின்பற்றி நடப்பவருக்கு விரோதி என்று ஒருவர் இருப்பதற்கே இடமில்லை.’ (இதுவும் இனி வருவதும் ரா. வேங்கடராஜுலுவின் மொழியாக்கம்).
இடதுசாரிகளுக்கு சோஷலிசம் எப்படி இறுதி இலக்கோ அதேபோல் காந்திக்கு அகிம்சை இறுதி இலக்கு. அதை அடைந்துவிட்டதாக காந்தி ஒருபோதும் கருதியதில்லை. நெருங்க, நெருங்க விரிவடைந்துகொண்டே போகும் தன்மை கொண்டதாக அகிம்சை அவருக்குக் காட்சியளித்தது. நம் விரோதி என்று தம்மை எண்ணிக்கொள்பவரை மனதளவிலும் வெறுக்காமல் இருக்கும் நிலையை, நாம் ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்கிறார் காந்தி. மனதளவில் தீங்கு நினைத்தாலும் தர்மத்திலிருந்து தவறியவர்களாகிவிடுகிறோம் என்று எச்சரிக்கிறார்.
காந்தி கடைபிடித்தது அகிம்சையை அல்ல, தீவிர அகிம்சையை என்றார் லாலா லஜபதி ராய். அகிம்சை நல்லதுதான். ஆனால் அதற்கும் ஓர் எல்லையுண்டு. அளவு கடந்து அகிம்சையை வலியுறுத்தும்போது வீரம் மறைந்துவிடுகிறது. போராடும் தேசத்துக்கு வீரம்தானே அவசியம்? தீவிர அற விழுமியங்களை இந்துக்கள் பின்பற்றினால் அது அவர்களுடைய அரசியல் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் சண்டையிடவேண்டும் என்பதல்ல. அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு ஆயுதப் போராட்டம் உதவுமென்றால் அதை ஏன் நாம் கையிலெடுக்கக்கூடாது? இதுதான் லஜபதி ராயின் வாதம். சுயநலனுக்காகவா சொல்கிறேன், நம்மை நம்பியிருக்கும் மக்களுக்காகத்தானே சொல்கிறேன்?
தனிநபர்களுக்கு வன்முறை வேண்டாம், சரி. அத்தியாவசியமான தருணங்களில் சமூகத்துக்காக ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படித் தவறாகும்? ஒரு நாட்டை ஆளும் அரசுக்கு ராணுவம் இருந்தாகவேண்டும் அல்லவா? மக்களின் பாதுகாப்புக்கு ஆட்சியாளர்தானே பொறுப்பேற்கவேண்டும்? அவரால் எப்படி அகிம்சையைக் கொண்டு ஆளமுடியும் என்றால், முடியும் என்கிறார் காந்தி. முடியவேண்டும். அவ்வளவுதான். ஏன் அன்பைக் கொண்டு ஆளமுடியாதா?
‘விரோதி எனப்படுவோரிடம் உங்கள் அன்பை — அகிம்சையை — அவர் மனத்துள் ஆழப் பதியுமாறு நீங்கள் காட்டுவீர்களாயின், அதே அன்பைத் திரும்ப அவரும் காட்டியே தீருவார்.’ ஒருவன் கொடுமை செய்கிறான் என்றால் அவனுக்கு மீண்டும் கொடுமை புரிவதைவிட அவன் கையில் நம்மை ஒப்படைத்துவிடுவதுதான் சிறந்த வழி. ஆனால் அது அத்தனை எளிதல்ல என்கிறார் அவர். ‘ஒருவரைத் தாக்கி அடிப்பதற்கு வேண்டியதைவிட இதற்கு உடலிலும் உள்ளத்திலும் அதிக தீரம் வேண்டும்’ என்கிறார் காந்தி.
காந்தியத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ள உதவும் சற்றே விரிவான ஒரு மேற்கோள். ‘உங்கள் நாட்டிற்காகவும், நீங்கள் அருமையாகப் போற்றும் மனிதரின் மானத்தைக் காப்பதற்கென்றும் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பொதுவாக மானத்தைக் காக்க என்று சொல்வனவெல்லாம் சரியான வாதங்கள் ஆகமாட்டா. கொடுமை செய்பவன் கையில் நம்மையே ஒப்படைத்துவிடுவதன்மூலம் நம் தரப்பில் உள்ளவர் மானத்தை நாம் பாதுகாத்துவிட முடியும் என்பதை அகிம்சா தர்மம் நமக்குப் போதிக்கிறது. ஒருவரைத் தாக்கி அடிப்பதற்கு வேண்டியதைவிட இதற்கு உடலிலும், உள்ளத்திலும் அதிக தீரம் வேண்டும்.
‘உங்களுக்கு ஒரு வகையில் உடல்வன்மை இருக்கலாம் — அதைத் தீரம் என்று நான் சொல்லவில்லை. அந்தப் பலத்தை நீங்கள் உபயோகிக்கலாம். அதையும் உபயோகித்துவிட்ட பிறகு என்ன உண்டாகிறது? மாற்றானுக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்படுகின்றன. அவனுடைய பலாத்காரத்தோடு உங்கள் பலாத்காரமும் மோதிக்கொள்வதால் அவனுக்கு இன்னும் அதிகக் கோபத்தை மூட்டிவிட்டீர்கள். உங்களைக் கொன்று போட்டுவிட்ட பிறகும் மீதமிருக்கும் பலத்தை உங்கள் பாதுகாப்பில் இருப்பவர்களிடம் காட்டுகிறான். ஆனால், நீங்கள் எதிர்த்துத் தாக்கவில்லை. உங்கள் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் எதிராளிக்கும் நடுவில் அசையாமல் உறுதியுடன் நின்றுகொண்டு அவன் அடிப்பதையெல்லாம் பொறுமையுடன் வாங்கிக்கொண்டு பதிலுக்குத் திருப்பாமல் நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது என்ன நேரும்? எதிராளியின் பலாத்காரமெல்லாம் உங்கள் பேரிலேயே செலவழிக்கப்பட்டுவிடும்; உங்கள் பாதுகாப்பில் இருந்தவரும் பாதிக்கப்படாமல் விடுபடுவார். இதை உங்களுக்கு நிச்சயமாகக் கூறுகிறேன். வாழ்க்கை இந்த விதமான திட்டப்படி நடப்பதாக இருந்தால் இன்று ஐரோப்பாவில் நீங்கள் காண்பவை போன்ற யுத்தங்களை நியாயமெனக் கருதும் தேசாபிமானத்திற்கே அதில் இடமில்லை.’
தேவைப்படும் தருணங்களில் பின்வாங்கத் தயங்கியதில்லை காந்தி. மக்கள்மீது அபார நம்பிக்கை கொண்டவர். அதே மக்கள் அவர் வகுத்துத் தந்த பாதையிலிருந்து விலகும்போது, அவர்கள்மீது குற்றம் சுமத்தாமல் ‘நான் எங்கே தவறு செய்தேன்?’ என்று சுயபரிசீலனையில் இறங்கியவர். சவுரி சவுராவில் கலவரத்தீ பற்றிக்கொண்டதைத் தொடர்ந்து தனது போராட்டத்தை அவர் திரும்பப்பெற்றுக்கொண்டது தன்னுடைய விழுமியங்கள்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
ஹிட்லரின் வழி இதற்கு நேர் எதிரானது. யூதர்களை அவர் விரோதிகளாக அறிவித்ததற்குக் காரணம் அவர்கள் யூதர்கள் என்பதைத் தவிர வேறில்லை. யூதர்களை மனிதர்களாக அல்ல, கொன்றொழிக்கவேண்டிய நோய்க்கிருமிகளாக அவர் கருதினார். ஹிட்லரின் வெறுப்பரசியல் யூதர்களை மட்டுமின்றி, ஜெர்மானியர்களையும் சேர்த்தே அழித்தது. காந்தியின் அகிம்சை இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது. அநீதியை அகிம்சையைக் கொண்டு வெல்லமுடியும் என்பதை காந்தி நிறுவினார். அநீதியால் அழிவைத் தவிர எதையும் சாதிக்கமுடியாது என்பதை ஹிட்லரின் வாழ்க்கை புலப்படுத்துகிறது. ஹிட்லரும் காந்தியும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள். காந்தி தான் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்காகக் கொல்லப்பட்டவர் என்றால் ஹிட்லர் தனது தோல்விகளின் அழுத்தத்தால் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டவர்.
இருவரையும் நாம் படிக்கவேண்டும். ஹிட்லரின் ஜெர்மனி, காந்தியின் இந்தியா இரண்டையும் நாம் ஆராயவேண்டும். ஹிட்லர் ஏன் இனவொழிப்பைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் காந்தி ஏன் அகிம்சையை உயர்த்திப் பிடித்தார் என்பதையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும். இருவர் குறித்தும் உருவாக்கப்பட்டுள்ள கற்பிதங்களிலிருந்து விலகி அவர்களுடைய சாரத்தை நாம் உணரவேண்டும். காந்தியோடு உரையாடத் தொடங்கினால் ஹிட்லர்மீதான மயக்கம் அதுவாகவே மறையும்.
(தொடரும்)

