Skip to content
Home » ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

ஏனென்றால் தனி மனித சுதந்தரம் வரலாற்றோடு பிணைந்திருக்கிறது.

வரலாற்றோடு ஏன் உங்களால் ஒன்ற முடியவில்லை என்னும் கேள்விக்குப் பத்தாம் வகுப்பு மாணவிகள் அளித்த வாதங்களை அவசியம் கருதி இங்கே தொகுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ‘எப்போதோ நடந்த இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் ரஷ்யப் புரட்சி குறித்தும் பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்? என்ன கற்கவேண்டியிருக்கிறது அவற்றிலிருந்து? என்னைச் சுற்றி நடப்பதைத் தெரிந்துகொள்வதில் பொருள் இருக்கிறது. எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். காந்தி, நேரு காலத்தில் ஒருவேளை நான் வாழ்ந்திருந்தால் அன்றைய நிகழ்வுகள் எனக்கு முக்கியமானவையாக இருந்திருக்கலாம். பிரான்ஸில் வாழ்ந்திருந்தால் பிரெஞ்சுப் புரட்சியை நானும் தெரிந்துகொண்டிருப்பேன். எங்கெங்கோ நடந்தவற்றின்மீதும் எப்போதோ நடந்து முடிந்துவிட்டவற்றின்மீதும் அக்கறை கொண்டிருக்கும் ஒரு துறைதான் வரலாறு என்றால் அந்த வரலாற்றின்மீது நான் ஏன் அக்கறை கொள்ளவேண்டும், சொல்லுங்கள்?’

காலத்தைக் கறாரான மூன்று துண்டுகளாகப் பிரித்துப் பார்ப்பதால் நேரும் மயக்கம் இது. பிரெஞ்சுப் புரட்சி குறித்து சூ என்லாயிடம் ஒரு முறை கேட்கப்பட்டபோது, ‘இவ்வளவு துரிதமாக அது குறித்து கருத்துச் சொல்வது கடினம்’ என்று பதிலளித்தாராம். ஆதாரமில்லாத குறிப்பு என்றாலும் இந்தக் கற்பனையிலும் ஓர் உண்மை ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி மட்டுமல்ல காலத்தில் எவ்வளவு பின்னுக்குச் சென்றாலும், எந்தப் பெரிய நிகழ்வை எடுத்துக்கொண்டாலும் அது குறித்து நாம் முழு உண்மையை அறிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்லமுடியாது. அசோகர் இன்றளவும் பெருமளவு நமக்குப் புதிர்தான். லிங்கன், காந்தி, தாகூர், டால்ஸ்டாய் ஆகியோர் குறித்துப் புதிய நூல்கள் வெளிவந்துகொண்டே இருப்பதற்கு ஒரு பொருள்தான் இருக்கமுடியும். அவர்கள் குறித்து அறிந்துகொள்ள புதிதாக இன்னமும் நிறைய இருக்கிறது. பிரபஞ்சம் இப்படித்தான் தோன்றியது என்று உறுதியான சான்றுகளோடு நம்மால் இன்றுவரை சொல்லமுடியவில்லை.

இந்தப் பின்னணியை வழங்கிவிட்டு, உரையாடலை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிக் குவிக்க ஆரம்பித்தேன். ‘காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் உங்களுக்கு ஒரே உணவை ஒவ்வொரு நாளும் அளித்தால் உண்பீர்களா? ஒரே வண்ணத்தில், ஒரே வடிவில்தான் இனி அனைவரும் எப்போதும் உடுத்திக்கொள்ளவேண்டும் என்றொரு சட்டம் வந்தால் ஏற்பீர்களா? யார் தகவல் தொழில்நுட்பம் படிக்கவேண்டும், யார் கணிதம் கற்கவேண்டும், யார் மருத்துவராக வேண்டும், யார் ஆலைகளில் பணியாற்றவேண்டும் என்பதை அரசுதான் இனி முடிவெடுக்கும் என்றொரு நடைமுறை வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா?’

‘இருக்காது. எங்களுக்கு வகை, வகையாக உணவுகள் வேண்டும். பல வண்ணங்களில், பல வடிவங்களில் ஆடைகள் வேண்டும். என்ன படிக்கவேண்டும் என்பதை எங்கள் பெற்றோரோடு சேர்ந்து நாங்கள்தான் முடிவெடுப்போம்! எங்கள் வாழ்வில் அரசு குறுக்கிடக்கூடாது’ என்று ஒரே குரலில் பதிலளித்தனர் மாணவர்கள். இந்தப் பதிலுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.

அமெரிக்காவின் தேசத் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்படும் பாட்ரிக் ஹென்றியின் புகழ்பெற்ற அறைகூவல் இது. ‘எனக்குச் சுதந்தரத்தை வழங்கு. அல்லது மரணத்தை!’ அமெரிக்க விடுதலைப் போருக்கு உந்துசக்தியாக இந்த முழக்கமும் செயல்பட்டது. அரசாங்கத்தின் கரங்களில் எல்லா அதிகாரங்களையும் அளித்துவிடக்கூடாது. நம் வாழ்வை, நம் தேடலை, நம் மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். தனி நபர் உரிமைகளைக் காக்கும் ‘அமெரிக்க உரிமைகள் மசோதா’ அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியதற்கு இந்த முழக்கமே காரணம்.

சாதியமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது மட்டுமல்ல, தனி நபர் சுதந்தரம் என்னும் கருத்தாக்கத்துக்கே எதிரானது என்று அம்பேத்கர் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்திக்கொண்டிருந்தார். தீண்டப்படாதோர் எவ்வாறு அமைப்புரீதியாக உரிமைகளற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதை அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவரின் செயல்பாடுகளை, சிந்தனைகளை வரையறுப்பதன்மூலம் சாதி அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கிறது. என்ன உடுத்தவேண்டும், என்ன உண்ணவேண்டும், என்ன படிக்கவேண்டும், என்ன தொழில் புரியவேண்டும் என்பதையெல்லாம் ஒரு தலித் முடிவு செய்யக்கூடாது என்று ஒரு சமூகம் தடை விதிப்பது மனித மாண்புகளுக்கு எதிரானது. தனி மனிதத் தேர்வுகளுக்குள், தனி மனித சுதந்தரத்துக்குள் அரசு மட்டுமல்ல, சாதி போன்ற கருத்தாக்கங்களும் ஊடுருவக்கூடாது. அந்த அதிகாரத்தைச் சாதியமைப்பு பெற்றிருப்பதால் அதை நாம் தகர்த்தெறியவேண்டும் என்றார் அம்பேத்கர்.

அமெரிக்கர்கள் அனுபவிக்கும் அதே தனி நபர் சுதந்தரத்தை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறார்களா என்றால் இல்லை. எடுத்துக்காட்டுக்கு, இங்குள்ளதைப் போலன்றி அமெரிக்காவில் கருத்துரிமை வலுவோடு இருக்கிறது. அதைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கறாராகப் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்க அதிபரை எப்படியும் யாரும் விமரிசிக்கலாம். மாணவர்கள் தொடங்கி யார் வேண்டுமானாலும் எந்தக் கோரிக்கைக்காகவும் அமைதியாகப் போராடலாம். இங்கே அமைதிப் போராட்டங்களும்கூடக் கடுமையாக முடக்கப்படுகின்றன. மாணவர்கள்கூடக் கைது செய்யப்படுகின்றனர். கருத்து சுதந்தரம் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது. யாரும் எதையும் உண்ணும் சுதந்தரம், யாரும் எதையும் பேசும் சுதந்தரம், யாரும் எப்படியும் உடுத்திக்கொள்ளும் சுதந்தரம் இங்கே இருக்கிறதா என்றால் அது எல்லோருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வழிபாட்டு உரிமை ஒன்றுபோல் இல்லை. பொதுவிடங்களைக் கையாளும் உரிமை எல்லோருக்கும் ஒன்றுபோல் இல்லை.

உரிமைகள் மறுக்கப்படும் ஒவ்வொரு முறையும் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் கடந்த காலப் போராட்டத்தின் நீட்சியாகவே அமைந்திருப்பதைக் காணலாம். வாக்களிக்கும் உரிமை கிடைத்திருக்கலாம், ஆனால் ஆணாதிக்கமும் இன்னபிற அநீதிகளும் தொடர்ந்துகொண்டிருப்பதால் பெண்கள் தொடர்ந்து போராடுகின்றனர். கோரிக்கைகள் மாறியிருந்தாலும் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் என்று சமூகத்திலுள்ள பலரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் சாரத்தை எளிமைப்படுத்திச் சொல்லவேண்டுமானால் இவை அனைத்துமே தனி மனித சுதந்தரத்துக்கான போராட்டங்கள் என்று சொல்லமுடியும். இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் தனி மனித சுதந்தரத்தின் தன்மையும் தேவையும் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் வெள்ளையர்கள் அனுபவிக்கும் அதே சுதந்தரத்தைக் கறுப்பின மக்கள் அனுபவிப்பதில்லை என்பதால் போராட்டங்கள் அங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

0

நமது போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்ல, நம் இருப்பின் ஒரு பகுதியாக கடந்த காலம் நீடித்துக்கொண்டிருக்கிறது. பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் ஒரு வகையில் ஆம், இன்னொரு வகையில் இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்துபோன ஒன்றா என்றால் முழுக்க முடிந்துவிடவில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் எனக்கு ரஷ்யப் புரட்சி குறித்துத் தெரியாவிட்டால் பெரிய பாதகமில்லைதான். காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையும் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் வர்க்கப் பிரிவினை தீவிரமாகிக்கொண்டிருக்கும்போது ரஷ்யப் புரட்சி எழுப்பிய கேள்விகளை எப்படி நம்மால் உதாசீனம் செய்யமுடியும்? மோதலும் வெறுப்பும் பகையும் அதிகரிக்கும்போது எப்படி நம்மால் புத்தரை, காந்தியை நினைக்காமல் இருக்கமுடியும்? அரசியல் என்னும் சொல் மாசடைந்திருக்கும் நிலையில் நேருவின் எழுத்துகளை நாடாமல் எப்படி இருப்பது? சாதியமைப்பு அதே வலுவோடு நீடிக்கும்போது எப்படி நம்மால் அம்பேத்கரின் சொற்களை மறக்கமுடியும்? ஒவேளை மறந்துவிட்டால் போராட்டத்துக்கான உத்வேகத்தை, வழிகாட்டுதலை எங்கிருந்து பெறுவோம் நாம்?

இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சுதந்தரம் என்பது இயல்பாக நம்மோடு சேர்ந்து பிறந்ததல்ல. நமக்காக அதைப் பலர் போராடிப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நம் உள்ளங்கையில் இன்று குவிந்திருக்கும் சுதந்தரத்தின்மீது எண்ணற்றோரின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியா ஒரு சுதந்தர நாடாக மாறியதற்குப் பின்னால் தொடர் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதே பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா ஒரு புரட்சியின்மூலமே விடுதலை பெற்றது. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முழக்கத்தை முன்வைத்த பிரெஞ்சுப் புரட்சி உலகெங்கும் சுதந்தர வேட்கையை வளர்த்துவிட்டது. காலம் காலமாகக் கோலோச்சிக்கொண்டிருந்த பல பேரரசுகளை விடுதலைப் போராட்டங்கள் காணாமலாக்கியிருக்கின்றன. எண்ணற்ற கொடுங்கோலர்களை வரலாறு கண்டிருக்கிறது. எவ்வளவு கொலைக்களங்களை மனிதர்கள் இதுவரை சந்தித்திருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கில்லை. உலக வரலாற்றில் பொதுவான ஓர் அம்சம் உண்டென்றால் அது விடுதலைக்கான போராட்டம்தான். முடியாட்சி, சர்வாதிகாரம், காலனியாதிக்கம், பாசிசம், எதேச்சதிகாரம் என்று ஆதிக்கம் எந்த வடிவம் கொண்டாலும் அதற்கெதிராக மக்கள் அணிதிரண்டு மக்கள் போராடியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்தப் போராட்டங்களின் கனிகளைத்தான் நாம் இன்று சுவைத்துக்கொண்டிருக்கிறோம். தேச விடுதலை கிடைத்திருக்கிறது. தனி நபர் விடுதலை அதன் முழுமையான பொருளில் எப்போது கிடைக்கும் என்னும் கேள்வியை இன்று நாம் எழுப்பிக்கொண்டிருக்கிறோம்.

என் மனத்தில் இருப்பதை அச்சமின்றி நான் எங்கும் பேசவேண்டும், எழுதவேண்டும். சமூக ஆதரவு பெற்றிருக்கும் ஒரு கருத்தை நான் மறுதலிக்க விரும்பினால் அதை என்னால் செய்ய இயலவேண்டும். இறை நம்பிக்கை முதல் தேசியவாதம் வரை எந்தக் கருத்தாக்கமும் எனக்குப் புனிதமானதல்ல என்று எனக்குத் தோன்றினால் அவற்றை மறுதலிப்பதற்கும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்குமான சுதந்தரம் எனக்கு இருக்கவேண்டும். அரசின் கரங்கள் தேவையற்ற இடங்களில் நுழையக்கூடாது. அரசின் செயலை (அல்லது செயலற்றத்தன்மையை) எதிர்த்துப் போராடுவோரை எதிரிகளாகப் பாவிப்பதும் தாக்குவதும் தண்டிப்பதும் முத்திரை குத்துவதும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தின் அடிப்படை அரசல்ல, மக்கள். மக்களின் விடுதலைக்குரல் நீடிக்கும்வரை மட்டுமே ஜனநாயகம் உயிர்த்திருக்கும். மனித விடுதலைதான் வரலாற்றின் உந்து சக்தி என்கிறார் ஹெகல்.

உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டபோது ஒரு மாணவி எழுந்த நின்றார். ‘நாங்கள் ஷார்ட்ஸ் அல்லது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும், அதற்கான சுதந்தரம் எங்களுக்கு வேண்டும்.’ அவர் பேசி அமர்வதற்குள் ஒட்டுமொத்த மாணவிகளும் ஆரவாரத்தோடு அதை ஆமோதித்தனர். பெண்கள் எந்த இடத்திலிருந்து இன்றுள்ள நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர் என்பதையும் சுதந்தரம் குறித்த அவர்கள் பார்வை எப்படி விரிவடைந்துகொண்டே செல்கிறது என்பதையும் அப்படி விரிந்துகொண்டே போனால்தான் அது சுதந்தரம் என்பதையும் அதன் பிறகு விவாதித்தோம்.

சுதந்தரத்தை வரையறுக்கமுடியாது. ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்த மக்களும் அதன் பொருளைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்கிறார்கள் என்கிறார் மார்க் பிளாக்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *