கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால் அவருக்கு யாரும் அறியாத வேறொரு முகம் இருந்தது.
ஓர் அந்நியராய் இந்தியப் புராதனக் கட்டிடங்கள் மேல் அளவில்லாத அன்பு வைத்திருந்தார். தொல்லியல் ஆராய்ச்சியில் இந்தியர்களுக்கு இருந்த அசட்டுத்தனத்தைக் கண்டு மனம் வெதும்பி புழுங்கினார். அவர் பரிசளித்த வெண்கல விளக்கு ஒன்று இன்றைக்கும் தாஜ் மஹாலில் ஒளிர்கிறது.
அறியாமை நிறைந்த இந்திய மக்களின் அரிய கலைப் படைப்புகளைப் பத்திரப்படுத்தி அழகு சேர்க்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். 1900ம் ஆண்டில் வங்காள ஆசியச் சமூகத்தில் ‘இந்தியப் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று அவர் பேசிய அரிய உரையில் அவருக்கு இருந்த போதாமைகளைப் பட்டியலிடுகிறார்.
1904ம் ஆண்டில் ‘புராதனச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை’ கர்சன் பிரபு அமல்படுத்தியதற்கு முன்னத்தி ஏராக இருந்தது இந்த உரைதான்.
0
புராதன இந்தியக் கட்டுமானங்கள் பற்றி அரசு கவனம் கொள்ளவேண்டிய வழிமுறைகளை நான் இங்கு சொல்வதில் எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று நினைக்கிறேன். மக்களுக்கு அறிவுஜீவித்தனமான ஆராய்ச்சிகளில் ஈடுபட போதுமான நேரம் இல்லை. தனிப்பட்ட ஆராய்ச்சிகளும் பிரத்தியேக மேற்படிப்புகளும் இந்தியக் கல்விச் சூழலில் ஒவ்வாதது என ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைக்கும்கூட வங்காளத்தின் ஆசியச் சமூகம் தொய்வின்றி தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வேடுகளே அதன் வெற்றியைப் பறைசாற்றி ஜொலிக்கின்றன.
புலமைப் பெற்ற அறிஞர் மக்களின் அறிவுரையும், சிறப்புப் பொருந்திய மாணவர்களின் ஆய்வுரையும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டடத்தில், நினைவுச் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கில் உங்கள் தயவுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இன்றைய தலைமுறையினர் தொல்லியல் ஆராய்ச்சியில் பட்டவர்த்தனமாக ஈடுபடவும், மூச்சு விடத் தள்ளாடும் அவர்தன் முந்தைய தலைமுறையினர் இதே துறையில் புலமை வாய்ந்திருக்கவும் எந்தவொரு காரணி மிக முக்கியமாய் இருந்ததோ, அதைதான் இன்று உங்களோடு பகிர வேண்டும். சிந்தை உள்ள ஒவ்வொரு மனிதனின் எண்ணவோட்டத்தையும் அந்தச் செய்தி ஈர்க்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் இந்தியா முழுதுமுள்ள பிரபலமான வரலாற்றுத் தளங்களைப் பார்வையிடச் சென்றேன். அங்கிருந்த புராதன முக்கியத்துவம் வாய்ந்த எழில்மிகு கட்டடங்களைப் பார்த்ததும், இந்தப் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் தலையாயக் கடமை என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை அங்கிருந்தவர்களிடம் சொன்னேன்.
நம் முன்னோர்களுக்கும், சமகாலத்தவருக்கும், எதிர்வரும் சந்ததியினருக்கும் கடமையாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நம்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் அதைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு கடத்துவதிலேயே முன்னோர் ஆற்றிய செயற்கரிய செயலுக்கு அங்கீகாரம் அளிக்கிறோம்.
முன்னோர்கள் ஒப்படைத்துச் சென்ற ஒப்புயர்வற்ற கலைப் படைப்பின் பாதுகாவலர் நாம். நமக்குப் பின்வரும் சந்ததிக்கு இதை அப்படியே ஒப்படைக்காவிட்டால், நீங்கள் அடைந்த இன்ப நுகர்ச்சிகளை நாங்கள் அனுபவிக்க வாய்ப்பு இல்லையே என்று குறை சொல்ல மாட்டார்களா? மேலும் முன்னோர்கள் செய்த கைவினைப் பொருட்களுக்கு மரியாதை கொடுத்து பரிசீலிக்காத நாம், எந்தவகையில் எதிர்வரும் சந்ததிகள் நமது உழைப்பை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?
அரசாங்கத்தின் சார்பாக நான் இந்தக் கடமையை வலியுறுத்தி ஏற்றுக்கொள்கிறேன். பல ஐரோப்பிய தேசங்களைவிட இந்தியாவில் இதன் தேவை இன்றியமையாததாய் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் இவை தனியார் உடைமை. நிதி பலம் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டு, அழகு கெடாமல் பராமரிக்கப்படுகின்றன.
தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பெரிய அளவிலான பணியை அரசு சாரா அமைப்புகள் செய்துவிடுவதால் அரசின் கடமை ஓரளவுக்குச் சுருங்கிவிடுகிறது. வரலாற்றுக் கட்டடங்களும் பிரம்மாண்ட கோயில்களும் மதிப்பிடமுடியாத கலைப் படைப்புகளும் ஜனரஞ்சகமான மக்கள் உடைமையாய் கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே சிதைவுபடாமல் பாதுகாத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது அவ்வளவு பெரிய காரியம் அல்ல. ஆனால் இந்தியாவில் உள்ள சூழல் முற்றிலும் வேறு.
மறைந்துபோன வம்சங்களாலும், மறக்கப்பட்ட மன்னர்களாலும், துன்புறுத்தி அவமதிக்கப்பட்ட வெவ்வேறு சமய எச்சங்களாலும் இந்திய தேச வரலாறு மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தகுந்த விதிவிலக்குகள் இருந்தாலும், அந்த நினைவுச் சின்னங்கள் பிரிட்டிஷ் இந்தியப் பிரதேசத்திலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்திலும்தான் உள்ளன. பெரும்பாலும் இவை ஆள் அரவமற்ற ஏகாந்தத் தளத்தில், வெப்பம் மிஞ்சிய காட்டுப் பகுதியில், புதர் மண்டிய செடிகளுக்கு மத்தியில் காணப்படுகின்றன.
அறியாமை நிறைந்த உள்ளூர் மக்கள் இதன் புராதனச் சிறப்பை உணர்ந்து கொள்ளாமல், தாம் விரும்பியபடி செப்பன் செய்து புதிய கட்டடத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இவையெல்லாம் இந்திய அரசின் மேல் படிந்திருக்கும் விசித்திரமான சவாலை வெளிக்கொணர்கின்றன. பேகன் கலை வடிவச் சின்னங்களைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவ ஆட்சியாளர்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று யாராவது கேட்டாலோ, மாற்றுச் சமூகக் கலாசாரத்தை பாதுகாப்பதில் ஏன் இத்தனை வேகம் என்று முணுமுணுத்தாலோ, நான் அவருடன் வாதிட விரும்பவில்லை.
மனித மனங்களை உள்ளார்ந்து கிளர்ச்சி செய்ய வைக்கும் கலை, அழகு போன்ற பண்பாட்டு வடிவங்களுக்கு சமயச் சார்பு கிடையாது. மனித நம்பிக்கையில் வேர் கொண்டிருக்கும் இந்தக் கலைப் படைப்புகளை மதங்கள் சுவீகரிப்பதற்கு முன்னால், அவை உலகம் தழுவிய மக்கள் திரளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை உணரவேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு பிராமணர்களின் பாறைக் கோவில்கள் பௌத்த விகாரங்களைப் போலும்; முகமதியர்களின் முஸ்ஜித்துகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் போலும் தெரிகின்றன. ஒரு சர்வாதிகாரியின் கல்லறைக்கும் சமயத் துறவியின் கல்லறைக்கும் கலை நேர்த்தியிலான பாகுபாட்டை நம்மால் அடையாளம் காணமுடியாது.
எழிலார்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, கடந்த காலத்தின் முகத்திரையைக் கிழித்தெறியும் முக்கிய அளவுகோல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவைதான் மர்ம முடிச்சுகளைப் புதிர் அவிழ்த்து, உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்கின்றன. மிகப் பெரிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியப்படுத்திய காலத்திலும், பழங்காலம் பற்றிய வெற்று அனுமானங்களைத்தான் வரலாறு என்று சொல்லிவருகிறோம். அறிஞர்களின் ஆய்வு முடிவுகளால் சிதறிக் கிடக்கும் பகுதிகளை ஒன்றுசேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் வரலாறு தீட்டுகிறோம்.
நம்மைச் சுற்றித்தான் அதன் தடயங்கள் மறைந்திருக்கின்றன. புதையுண்ட நகரங்களிலும், படிப்பிக்கப்படாத கல்வெட்டுகளிலும், சாதாரண நாணயங்களிலும், இடிந்து விழும் நிலையிலுள்ள புராதனத் தூண்களிலும் வரலாறு ஒளிந்திருக்கிறது. அதன்மூலம் கடந்த கால வரலாற்றை புணரமைக்கப் போதுமான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை இழந்துபோன காலத்தின் கலை, அரசியல், இலக்கியம் மற்றும் விழுமியக் கோட்பாடுகளை அனுதினமும் நமக்கு நினைவூட்டுகின்றன.
அசிரிய, எகிப்து மற்றும் தொடக்ககால ஐரோப்பிய நினைவுச் சின்னங்களை ஒப்பிடுகையில் பெரும்பாலான இந்திய நினைவுச் சின்னங்கள் காலத்தால் பிற்பட்டவை. ஒருவேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். இந்தியாவின் மிகப் பழமையான நினைவுச் சின்னம் சாஞ்சி ஸ்தூபி. அதன் கல் அடுக்கு வரிசைகள் இயேசு பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டவை. ஒருவேளை ஸ்தூப பகுதி மட்டும் அதற்கும் முந்தையதாய் இருக்கலாம்.
ஆனால் இதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்பே எகிப்திய மாளிகைகளும், சால்டியா – நினெவே நிலப் பகுதிகளும், பிரமிடுகளும், பாறையிலான கல்லறைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏதென்ஸ் நகரிலுள்ள பார்த்தினன் கோயிலைக் காட்டிலும் பழைமையான கட்டடம் இந்தியாவில் கிடையாது. ரோம் நகரின் கொலோசியத்தைக் காட்டிலும் இங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் காலத்தால் பிந்தையவை.
இங்கு முகலாயக் கட்டடங்கள் தொடக்கம் காணும் முன்பே, இங்கிலாந்தில் நார்மன் மற்றும் கோத்திக் பாணியிலான கட்டிடங்கள் கட்டிமுடிக்கப் பட்டன. இங்கிலாந்தில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் கட்டிமுடிக்கப்பட்ட அதே நூற்றாண்டில்தான் முகமதிய கட்டடப் பாணியின் நுணுக்கமான கலைப் படைப்பான ‘குதுப் மினாரை’ தில்லியில் கட்டிமுடித்தார்கள். ஆனால் நாங்கள் அவற்றை புராதனக் கட்டடம் என்று சொல்வதிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம்.
தில்லி, ஆக்ரா மற்றும் லாகூரில் கட்டப்பட்ட அரேபிய பாணியிலான பிற்காலக் கட்டடங்கள் அக்பர் மற்றும் ஷாஜகானின் தேர்ந்தெடுத்த வல்லுநர்களால் வெளிர் நிறத்தில் களங்கமற்று ஜொலித்துக் கொண்டிருக்கும்போது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் சாம்பல் நிறத்தில் மங்கல் அடித்துவிட்டன. ரென் கட்டிய மறுமலர்ச்சி கால புனித பால் தேவாலயம், தாஜ் மஹாலை காட்டிலும் ஒரு தலைமுறைதான் பிந்தியது.
பெரும்பாலான இந்தியப் புராதனப் பொருட்களுக்கு மற்றொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் உள்ளது. அவையாவும் முசல்மான் காலத்தைச் சார்ந்தவை. எந்த நிலையிலும் அதில் பூர்வாங்க அறிவோ, இந்தியக் கலை ஞானமோ எட்டிப் பார்ப்பது கிடையாது. எல்லாம் புறவயமானது. பெர்சியா, மத்திய ஆசியா, அரேபியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து படையெடுத்து வந்த அயல் நாட்டு வீரர்களிடம் கடன் வாங்கப்பட்டவை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியக் கட்டடக்கலையின் சில வடிவங்களில் அயல்நாட்டு செல்வாக்கு மிகவும் நிலையற்றதாய் இருந்தாலும் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஊகித்து உணரலாம். அலெக்சாண்டர் படையெடுப்பின் எச்சங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட கிரேக்க-பாக்திரிய ராஜ்யங்களில் உருவான கிரேக்கப் பாணியை நான் இங்குக் குறிப்பிடுகிறேன். இது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளில் வடமேற்கு இந்தியா மற்றும் பஞ்சாப் பகுதியின் சிற்பக் கலை மரபை ஆழமாகப் பாதித்தது.
இந்தியச் சிற்பங்களும் இந்தியக் கட்டடங்களும் வெளிநாட்டு செல்வாக்கைப் பிரதிபலிப்பதால் தரம் தாழ்ந்தது என்று எண்ண வேண்டாம். அவை சுவாரஸ்யமானவை. ஐரோப்பாவில் எழுந்த மறுமலர்ச்சி காலப் புத்தெழுச்சியாக இதை நாம் அடையாளம் காணவேண்டும். சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், இவை எங்கள் நாட்டுக் கட்டடங்களை நினைவுபடுத்துகின்றன.
உண்மையில் நம்மைப் போன்ற ஒரு வெளிநாட்டு இனம்தான் பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்பட்டு புராதனத்தைப் பாதுகாக்க உகந்தவராய் இருக்க முடியும். வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவான இந்தக் கலைப் படைப்புகள் விரோத மனப்பான்மையாலும், போர்க்குணம் கொண்ட மன்னர் வம்சங்களாலும், குரோதங்களாலும், மத வேற்றுமையாலும் துண்டாடுவதை நாங்கள் விரும்பவில்லை.
எங்களைப் பொருத்தவரை புராதன முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றியல் சிறப்புப் பெற்ற, கலை நுணுக்கமுள்ள இந்து, முஸ்லிம், பௌத்த, பிராமணிய, சமணர்களின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் சரிநிகர்சமாய் கொண்டாடப்படுபவை. ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பிறிதொன்றை நலிந்து போகும்படி செய்ய மாட்டோம். ஒவ்வொரு படைப்பும் மனித சமூகத்தின் வெற்றிக் களிப்பை உறுதிசெய்த நம்பிக்கையின் எச்சம். ஒவ்வொரு படைப்பும் ஆங்கிலேய வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை நிரப்புகின்றது. ஆளும் அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இவையெல்லாம் பண்பாட்டு வரலாற்றின் ஓரம்சாரமான பகுதி என்று விளங்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்டுமானச் சின்னங்கள், ஸ்தூபிகள், கோயில்கள், அரண்மனைகள், கல்லறைகள், கோட்டைகள் எல்லாம் நன்கு ஆராயப்பட்டு, பூர்வாங்க ரீதியில் இந்தியத் தன்மையல்லாமல் வெளிநாட்டு தாக்கங்கள் தென்பட்டாலும், காலவரிசையில் மிகைப்படுத்தல் இல்லை. தவிரவும் எல்லாப் படைப்புகளும் உண்மையானவை.
இந்திய எச்சங்களை ஆய்வு செய்வதிலும், தொல்லியல் மேடுகளின் காலம் கணிப்பதிலும், பழம் நாகரிக இந்திய நகரங்களை அகழாய்வு செய்வதிலும், கல்வெட்டுகளைப் படியெடுத்து படிப்பதிலும் எதிர்வரும் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் பணி காத்திருக்கிறது. ஒருவேளை அவர்கள் பொய்கூடச் சொல்லலாம்.
இந்திய வரலாற்றின் பிற்பகுதி சாமானியரும் வாசிக்கும்படி வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் அதன் தொடக்க அத்தியாயங்கள் மூடுதிரைகள் போர்த்தி இருள் சூழ்ந்த பகுதியாய், ரஸமான புனைவுகளால் நிரம்பியுள்ளது. நாம் அதன் உண்மைத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். இதுவும் அரசாங்கத்தின் கடமைதான். கல்வெட்டு ஆராய்ச்சியைப் பாதுகாப்பின் பிண்ணனியில் அமல்படுத்தவேண்டும். இவையனைத்தும் புராதனப் பணி சார்ந்த அறிவியல் மயமான வேலையின் ஓர் அங்கம்.
அரசு ஒன்றை மட்டும் புரவல் செய்து, மற்றொன்றைக் கைகழுவிவிடும் என்போரின் கட்சி அல்ல நான். ஒரு கலைப்பொருளை அகழ்ந்து, கண்டுபிடித்து, வகைப்படுத்தி, மீட்டுருவாக்கம் செய்து, விளக்கம் கொடுத்து, நகலெடுத்து காட்சிப்படுத்துவதில் எல்லாவற்றிற்கும் சரிசமமான உரிமை வழங்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
இப்போதைக்கு மீட்டுருவாக்கம் பற்றி என்னால் பேச முடியாது. கலைப்பொருட்களைச் சட்டப்பூர்வமாக மீட்டுருவாக்குவது பற்றிப் பேசினால் இன்று மாலை நான் ஒதுக்கிய நேரத்தைவிட வெகுநேரம் தேவைப்படும். ஆனால் அரசாங்கத்தின் கடமைகள் கண்டு நான் விரக்தி அடையவில்லை. இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றி போதுமான மதிப்பீடு வழங்கியிருக்கிறேன் என்று நான் பேசியதிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இதுவரை எந்த மாதிரியான உதவிகளைச் செய்து வந்திருக்கிறது? இனி எந்த வகையில் உதவி செய்யப்போகிறது என்று யாரேனும் கேட்டால், என் பதில் சாதகமற்றதாய் இருக்கும். நான் அந்தக் கேள்வியை நுணுகி ஆராய்கிறேன். அறுபடாத சங்கிலியில் ஒரு புதிய தொடர்பைதான் நாம் உருவாக்குகிறோம்.
இந்த நாட்டில் ஊடுருவிய ஒவ்வொரு மதமும் தன் எதிரியைத் துவம்சம் செய்வதன் மூலம், தன்னை முன்னிலைப்படுத்த அரும்பாடுபட்டிருக்கின்றது. பிராமணர்கள் மலைமேல் இருக்கும் கோவில்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த அமர்ந்தகோல புத்தர் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள். குதுப் மினாரின் பக்கவாட்டில் உள்ள பிரம்மாண்ட மசூதியைக் கட்டிமுடிக்க, குத்புத்தீன் ஐபெக் இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தி அதன் மிச்சமீதிகளைப் பயன்படுத்திக் கொண்டார். செதுக்கி வைக்கப்பட்ட சமணச் சிற்பங்களைச் சாதகமாய் சிதைத்து தன் புதிய மசூதியை அலங்கரித்தார். உருவ வழிபாட்டை நிந்தித்து, அளவில்லாத சேட்டைகள் செய்த ஔரங்கசீப்பின் கொடுமைகளை இந்தியர்கள் யாரேனும் அறியாமல் இருப்பார்களா?
பெனாரஸ் ஆற்றங்கரையில் அவர் கட்டிய எழிலார்ந்த மசூதியை ரசிக்கும் எத்தனைப் பேருக்கு, அது விஸ்வேஸ்வரர் என்ற இந்துமதப் புனிதக் கோயிலை உடைத்து நொறுக்கிய எச்சங்களால் ஆனது என்று நினைவிருக்கிறது? நாதிர் ஷாவின் குறுகிய காலப் படையெடுப்பில் பெரும் அளவிலான சேதங்களை இந்தியா சந்தித்தது. அத்தனைக் குறைவான நாட்களில் நாதிர் ஷா இப்பேர்பட்ட பெரும் சாதனையைத் தன் வாழ்நாள் முழுக்க செய்தது கிடையாது.
மராத்திய வீரர்கள் வட இந்தியாவைக் கைப்பற்றியபோது அவற்றை இரக்கமின்றி வேண்டுமென்றே அழித்தார்கள். ரஞ்சித் சிங் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலைக் கட்டியபோது அங்கிருந்த முகமதியக் கட்டடங்களை ஆடம்பரமாகத் துப்பாக்கியில் சுட்டுத் தள்ளினார். சில நேரங்களில் தன் சொந்த வம்சத்தினரே, மூதாதையரின் கலைப் படைப்பைப் பாதுகாப்பதில்லை. மதங்களும் தன் ஆலயங்களைப் பாதுகாக்க பெரிதாய் மெனக்கெடவில்லை.
ஒரு வீரர் நிர்மாணிக்க விரும்பும் தலைநகரமோ, கோட்டையோ, சரணாலயமோ அவர் தன் வாழ்நாளுக்குள் முடிவு பெற்றால் ஒழிய நிலைத்து நிற்பதற்கு பெரிய சாத்தியக்கூறுகள் கிடையாது. அவரின் கனவுத் திட்டத்தை ஆட்சிக்கட்டில் ஏறும் அடுத்த தலைமுறை வாரிசுகள் தரைமட்டமாக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தில்லியின் சுற்றுப்புறம் வெறிச்சோடிய நகரங்களாலும், சீர்குலைந்த கல்லறைகளாலும் நிரம்பி இருக்கிறது. அந்நகரின் மீது படையெடுக்கும் இந்துவும் முகலாயனும் பதானும் இறந்துபோன தன் மூதாதையரின் கல்லறைமேல் சமர் செய்து சிரஞ்சீவிதனத்தை நிரூபிக்க முயல்கிறார்கள்.
அமைதி சூழ்ந்த காலப் பொழுதில் அக்பர் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார். பின்னர் ஃபத்தேப்பூர் சிக்ரியை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி செய்தார். ஜஹாங்கிரின் ஆட்சிக்காலத்தில் தில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே தலைநகரம் மாறிக்கொண்டே இருந்தது. இறுதியில் லாகூரைத் தேர்வு செய்தார். பின்னர் வந்த ஷாஜகான் ஆட்சியில் ஆக்ரா நகர் மெருகூட்டப்பட்டது. இறுதியில் மீண்டும் தில்லி நகருக்கே தலைநகர் படலம் திசை திரும்பலாயிற்று. ஔரங்கசீப் தெற்கு நோக்கி படையெடுத்து அங்கொரு புதிய தலைநகரை உருவாக்கினார். அவரின் பூதவுடலும் ஐதராபாத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடர் மாற்றங்கள் ஒரு சர்வாதிகாரியின் சபல புத்தியை அம்பலப்படுத்தினாலும், தொடர்ச்சியான கட்டடக் கலைக்கும் நிறைவான நகரக் கட்டுமானத்திற்கும் விரோதமாய் இருக்கின்றன. நல்லவேளையாய் பிரிட்டன் அரசு எவ்வித குறைபாட்டிலும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளவில்லை. மதவெறிப் பேச்சுக்கும், பேரரசின் மகிமைக்கும், தற்பெருமை பேச்சுக்கும் இடந்தராமல் இயங்கி வருகிறது.
ஆனால் இத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடந்தராமல், பிரிட்டன் அரசு தன்னை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். இது அவர்களின் கடமை. புதிய சகாப்தத்தைத் தொடங்குவதற்கு, சகிப்புத்தன்மையோட வாழ பிரிட்டிஷார்களுக்கு மேலதிக பொறுப்பு இருக்கிறது. கிழக்குவாசிகளுக்கு நாம்தான் இந்தப் பாடத்தை கற்பிக்க வேண்டும்.
அருமையான மொழியாக்கம் சதீஷ்…ஒரு நூற்றாண்டு கடந்தும் நம் சமூகம் இதனை உணரவில்லை. காலத்தின் தேவையான கட்டுரை….